"பன்னிருவரையும் அழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு அளித்தார்.
2 இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்கவும் நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்." (லூக்.9:1,2)
இயேசு தனது சீடர்களைப் போதிக்க அனுப்பும்போது இரண்டு வல்லமைகளைக் கொடுத்தார்.
1.பேய்களையெல்லாம் அடக்க.
2. நோய்களைக் குணமாக்க.
இரண்டு பொறுப்புகளைக் கொடுத்தார்.
1.இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்க.
2.நோயாளிகளைக் குணமாக்க.
நாமும் இயேசுவின் சீடர்கள்தான்.
இயேசு கொடுத்த வல்லமைளும், பொறுப்புகளும் நமக்கும் பொருந்தும்.
1. சாத்தான் நமது முதல் பெற்றோரை சோதனை மூலம் பாவத்தில் விழுத்தாட்டிய நாளிலிருந்து தனது சோதனை வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது.
அவர்களைப் போலவே ஏமாந்து பாவத்தில் விழுந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
விழாமல் தப்பிப்பவர்களும் இருக்கிறார்கள்.
பசாசின் சோதனைகளில் விழாதபடி நம்மை நாம்பாதுகாத்து கொள்ள வேண்டும்.
சோதனைகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
1.என்ன நல்ல செயல் செய்ய வேண்டும் என்றாலும் முதல் முதலில் தேவை இறைவனின் உதவி.
சாத்தான் ஏவாளை சோதித்தபோது அவள் இறைவனின் உதவியை நாடவில்லை.
சோதித்த உடன் இறைவனின் உதவியை நாடியிருந்தால் அவள் பாவத்தில் விழுந்திருக்க மாட்டாள்.
இறைவனின் உதவி இன்றி எந்த நல்ல காரியத்தையும் நம்மால் செய்ய இயலாது.
அதனால்தான் இயேசு நமக்கு செபம் சொல்ல கற்றுத் தந்த போது,
"எங்களை சோதனையில் விழவிடாதேயும்."
என்று தந்தையை நோக்கி செபிக்க கற்றுத் தந்திருக்கிறார்.
ஆகவே நமக்கு வரும் சோதனைகளை வெல்ல தேவையான அருள் வரங்களைத் தரும்படி இறைவனிடம் அடிக்கடி வேண்ட வேண்டும்.
2.சோதனை வரும்போது நாம் முதல் முதல்.நினைக்க வேண்டியது இறைவனைத்தான்.
இறைவனை நினைத்தவுடன் சோதனை தனது பலத்தை இழந்து விடும்.
தொடர்ந்து செபித்தால் சோதனை காணமல் போய்விடும்.
நமது மனம் செபத்தில் ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்போது மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றாது.
3.சோதனைக்கான சந்தர்ப்பங்களை விலக்க வேண்டும்.
ஏவாள் விலக்கப்பட்ட மரத்தின் அருகே சென்றதால்தான் சாத்தான் அவளைச் சோதித்தான்.
குடியிலிருந்து விடுதலை பெற விரும்புகிறவன் Wine shop வணக்கம் போகக்கூடாது, குடிகாரர்களோடு நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது.
சாத்தானின் பிடியிலிருந்து தப்பிக்க விரும்புவோர் சாத்தான் குடியிருக்கும் இடத்தை தேடிப் போகக் கூடாது.
நவீன கண்டுபிடிப்புகளான T.V, Smart phone போன்ற சமூக தொடர்பு சாதனங்கள் சாத்தானின் நிரந்தர குடியிருப்புகளாக மாறிவிட்டன.
அங்கிருந்து கொண்டு அவற்றை தேடி வரும் வாலிப உள்ளங்களை பாவக் குழிக்குள் வீழ்த்துக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் சில நல்ல விஷயங்களும் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
ஆகவே அவற்றை பயன்படுத்தும்போது நமது கண்களையும், கருத்துக்களையும் சாத்தான் பக்கம் திரும்பாத படி மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
4.எப்போதும் இறைவனுடைய பிரசன்னத்தில் வாழ வேண்டும்.
இறைபிரசன்னத்தில் வாழ்ந்தால் சாத்தான் நம்மை அணுகாது.
இறைபிரசன்னத்தில் வாழ்வதென்றால் எப்போதும் இறைவன் நம்முடனே இருக்கும் உணர்வோடு வாழ வேண்டும்.
அப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு விரோதமாக நாம் எதையும் செய்ய மாட்டோம்.
5.எப்போதும் நம்மோடு இருக்கும் காவல் சம்மனசோடு செபத்தின் மூலமாக அடிக்கடி பேச வேண்டும்.
நாம் பாவ சோதனைகளில் அகப்பட்டு கொள்ளாத படிக்கு நமக்கு வேண்டிய உதவிகள் செய்ய அவரை வேண்ட வேண்டும்.
அவர நமக்காக இறைவனை வேண்டி, வேண்டிய அருள் வரங்களை பெற்றுத் தருவார்.
6.ஒவ்வொரு நாளும் படுக்க போவதற்கு முன்னால் ஆன்மப் பரிசோதனை செய்து, அன்றைய பாவங்களுக்கு மனஸ்தாபப்படும் பழக்கம் உள்ளவர்களையும் சோதனைகள் ஒன்றும் செய்யாது.
7.அடிக்கடி திருப்பலியிலும்,
திருவிருந்திலும் உண்மையான ஈடுபாட்டோடு கலந்து கொள்பவர்கள் சோதனைகளை வெல்வது எளிது.
8.ஒவ்வொரு செயலையும் சிலுவை அடையாளத்தோடு துவங்குகிறவர்கள் அருகில் சாத்தான் நெருங்காது.
ஆண்டவர் தனது சீடர்களுக்கு நோய்களை குணமாக்கும் வல்லமையை கொடுத்தார்.
நாம் இப்போது ஆன்மீக தியானம் செய்து கொண்டிருப்பதால் ஆன்மீக நோய்களை பற்றிதான் பேசப்போகிறோம்.
மிக முக்கியமாக ஆன்மீக நோய் பாவம்தான். பாவத்திலிருந்து குணம் பெற நம் ஒவ்வொருவருக்கும் போதுமான வல்லமையை இறைவன் தந்திருக்கிறார்.
ஆன்ம பரிசோதனை செய்யவும், பாவங்களுக்காக மனஸ்தாபப் படவும், பாவசங்கீர்த்தனம் செய்யவும் நமக்கு போதுமான வல்லமையை இயேசு தந்திருக்கிறார்.
அந்த வல்லமையைப் பயன்படுத்தி,
நாம் பாவ நோய்க்குள் விழ நேரும்போது நோயை உடனே குணப்படுத்தி விட வேண்டும்.
பாவசங்கீர்த்தனம் என்னும் வல்லமையை அடிக்கடி பயன்படுத்த தயங்க கூடாது.
அது இயேசு இலவசமாக தந்த வல்லமை.
பாவ சேற்றுக்குள் விழாதடி நம்மை காப்பாற்ற இயேசு தந்திருக்கும் ஒரு மிக முக்கியமான ஆயுதம் நம்முடைய பங்குக் குரு.
அவரை நமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆன்மீக வாழ்வை நடத்தினால் பாவ நோய்க்குள் நாம் விழாபடி நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஆன்மீகப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்ம வழிகாட்டி கட்டாயம் தேவை.
அதற்காகவே தாய்த் திருச்சபை நமக்கு ஒரு பங்கு குருவை தந்திருக்கிறது.
அவரை வெறும் நிர்வாகியாக பயன்படுத்தாமல் நமது ஆன்மீக மருத்துவராகவும் வழிகாட்டியாகவும் பயன்படுத்திக் கொண்டால் நமது விண்ணக பயணம் வெற்றிகரமாக இருக்கும்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment