Monday, September 20, 2021

"ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவவார்த்தையைக் கேட்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."(லூக்.8:18)

"ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவவார்த்தையைக் கேட்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."
(லூக்.8:18)

இயேசு விதை விதைப்பவனுடைய உவமையைக் கூறியபின் இவ்வார்த்தைகளைக் கூறுகிறார்.

விதை இயேசு அளிக்கும் நற்செய்தியை, அதாவது, இறைவாக்கைக் குறிக்கிறது.

நமது மனதில் வந்து விழும் நற்செய்தி நமது மன நிலையைப் பொறுத்து பலன் தருகிறது.

நமது மனது மக்கள் நடந்து செல்லும் பாதையை போலவோ, 

 வேரூன்ற முடியாத பாறையைப்  போலவோ, 

முட்செடிகளைப் போன்ற உலக கவலைகள் நிறைந்ததாகவோ இருந்தால் நற்செய்தி நமக்கு எந்த பலனும் தராது.

விதைப்பதற்கு என்று பக்குவப்படுத்தப்பட்ட நல்ல நிலம் போல 

நமது மனம் இருந்தால் நற்செய்தி நமது மனதில் ஒன்றுக்கு நூறாய் பலன் தரும்.

நற்செய்தி அதை அறிவிக்கும் போதகர்கள் மூலமாகவோ,

வேதாகமத்தை வாசிப்பதில் மூலமாகவோ நமது மனதில்  விழுகிறது.

இறைவன் தரும் அருள் உதவியால் நற்செய்தியை தியானிப்பவர்களுக்கு அதிகப்படியான இறையருள் வந்து சேரும்.

இறைவன் எல்லோருக்குமே அருளை இலவசமாக தருகிறார்.

கிடைத்த அருளைக் கொண்டு.      நற்செய்தியைத் தியானிக்க வேண்டும்.

தியானித்து நற்செய்தியை நமது வாழ்வாக்கும் போது இன்னும் அதிகமான இறையருள் கிடைக்கும்.

இப்படி கிடைக்கப்பட்ட இறையருளை நற்செய்தியை தியானித்து வாழ்வாக்க பயன் படுத்திக்கொண்டேயிருந்தால் நமக்கு மேலும் மேலும் அருள் வந்த வண்ணமாக இருக்கும்.

நம்மால் பயன்படுத்தப்படும் அருள் நமது மனதில் இருக்கும்போது அதன் அளவு அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப  அதிகரித்துக்கொண்டே செல்லும்.

 ஆனால் முதலில் கொடுக்கப் பட்ட அருளைப் பயன்படுத்தாமல் வீணடித்தால், முதலில் இருந்த சொஞ்ச அருளும் திரும்ப எடுத்துக் கொள்ளப் படும்.

அதனால்தான்

"உள்ளவனுக்கு கொடுக்கப்படும்.

 இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."

கிடைத்த அருளை பயன்படுத்தும் மனம் உள்ளவனுக்கு மேலும் மேலும் அருள் கொடுக்கப்படும்.


கிடைத்த அருளை பயன்படுத்தும் மனம் இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
.
விதை நிலத்தில் விழுந்தால் மட்டும் போதாது,

 அது வேர் விட்டு,

தளிர் விட்டு வளர வேண்டும்.

 செடியாகவோ, கொடியாகவோ, மரமாகவோ விதையின் தன்மைக்கு ஏற்ப வளர்ந்து 

பூத்து, காய்த்து, பழுத்து பலன் தரவேண்டும். 

அப்போதுதான் விதை விழுந்ததன் பலன் கிடைக்கும். 

அதேபோல,

நற்செய்தி என்ற விதையும் தளிர்த்து, 

வாழ்க்கை என்ற தாவரமாகி

 சிந்தனை ஆகிய பூ பூத்து

 சொல்லாகிய காய்த்து,

 நற்செயல்கள் ஆகிய பழங்கள் தரவேண்டும்.

நற்செய்தி என்ற விதை வாழ்க்கை என்னும் மரமாகி  நற்செயல்கள் ஆகிய பழங்கள் தர

தேவையான அருள் என்ற தண்ணீரை இறைவனிடம் கேட்டுக் கொண்டேயிருக்கவேண்டும்.

 அவரும் நம் மனதில் அருளை ஊற்றிக் கொண்டேயிருப்பார்.

நம் மனது ஒரு ஆன்மீக பழத் தோட்டமாக மாறும்.

இறைவன் தரும் அருளை , 

நமது மனதிலிருந்து  உலக ஆசை, உலக கவலைகள் ஆகிய முட்செடிகளை அப்புறப்படுத்தவும்,  

அதை நற்செய்தியாகிய விதையை விதைக்க ஏற்றபடி பக்குவப்படுத்தவும், 

அதில்  விழுந்த நற்செய்தியை தனது வாழ்வாக்கவும்  

முயல்கிறவனுக்கு,

இறைவன் தனது அருட்செல்வத்தைக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்.

இறைவன் தரும் அருளை வாழப் பயன்படுத்துவோம்.

அருள் செல்வந்தராக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment