Wednesday, September 8, 2021

"மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்." (மத். 1:20)

'' மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்." (மத். 1:20)

ஒரு நாள் மூன்று பேர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

"நாங்கள் இயேசுவுக்கு ஒரு ஆலயம் எழுப்பத் தீர்மானித்துள்ளோம். உங்களால் இயன்ற நன்கொடை தாருங்கள்."

அவர்களோடு தொடர்ந்து பேசியதில் அவர்கள் கத்தோலிக்கர் அல்ல, தனியாக சபை நடத்துபவர்கள் என்பது தெரிந்தது.

நான் அவர்களோடு விவாதம் எதுவும் செய்யாமல்,

"என்னோடு சேர்ந்து அருள்நிறைந்த மரியே செபம் சொல்லுங்கள்.

செபம் சொல்லி முடித்தவுடன் என்னால் இயன்றதைத் தருகிறேன்."  என்று சொன்னேன்.

அவர்கள் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று எண்ணிதான் அப்படி சொன்னேன்.

நான் நினைத்தபடியே மூவரில் இரண்டு பேர் உடனே எழுந்து போய்விட்டார்கள்.

ஒருவர் மட்டும் இருந்தார்.

"நன்கொடைக்கும்  செபத்துக்கும் என்ன சார் சம்பந்தம் இருக்கிறது?"

", செபம் சொல்வதில் என்ன சார் தவறு?"

"செபம் சொல்வதில் தவறு இல்லை . நாங்கள் அந்த செபத்தை ஏற்றுக் கொள்வதில்லை."

", ஏன்? நீங்கள் இயேசுவுக்கு தானே ஆலயம் கட்டப் போகிறீர்கள். மரியாள் இயேசுவைப் பெற்ற அன்னைதானே. மகனை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் தாயை ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சனை?"

"இயேசுவின் தாய் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதான்.
செபம் எல்லாம் சொல்ல முடியாது. அது இயேசுவுக்கு மட்டும்தான்."

அவரும் எழுந்து போய்விட்டார்.

பிரிவினை சகோதரர்கள் மரியாள் பெயரை சொன்னால் ஏன் இப்படி எதிர்வினை (Reaction) ஆற்றுகிறார்களோ தெரியவில்லை.

இப்போது நமது தியானம் அதைப் பற்றி அல்ல. நம்மை பற்றி.

நாம் மரியாளை ஏற்றுக் கொள்கிறோம்.

இயேசுவின் தாயாக மட்டுமல்ல நமது தாயாகவும் ஏற்றுக் கொள்கிறோம்.

நமக்காக தன் மகனிடம் பரிந்து பேசக்கூடிய அன்னை என்றும் ஏற்றுக் கொள்கிறோம்.

அவளை நோக்கி ஜெபிக்கிறோம். அவளுக்காக விழாக்கள் எடுக்கிறோம்.

மாதாவின் மேல் நமக்கு இருக்கும் பக்திக்கும் பாசத்திற்கும் குறைவில்லை.

ஆனால்,

நாம் உண்மையிலேயே இறை அன்னையை நமது அன்னையாக ஏற்றுக் கொள்கிறோமா?

அல்லது

உதட்டளவில் ஏற்றுக் கொள்கிறோமா?

வகுப்பு ஆரம்பிக்கும்போது வாத்தியார் Attendance எடுக்க  பெயர் வாசிப்பார்.

பெயருக்கு உரிய மாணவன் எழுந்து,
" உள்ளேன் ஐயா"  என்பான்.

சில மாணவர்களது உடல் மட்டுமே வகுப்பில் இருக்கும். உள்ளம் எங்கோ இருக்கும்.

அதே போல் தான் அனேகர் பேசும்போது வார்த்தைகள் உதட்டில் இருக்கும்,

வார்த்தைகளுக்கு உரிய,  பொருள் எங்கோ இருக்கும்.

அனேகருக்கு உதடு ஏற்றுக் கொள்வதை உள்ளம் ஏற்றுக் கொள்ளாது.

ஒரு நோயாளி மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவரை தேடி செல்கிறான்.

அவர் அவனை பரிசோதித்துவிட்டு வியாதி குணம் ஆவதற்கான மருந்து கொடுக்கிறார்.

மருந்தை சாப்பிடுகிறான்.'

சாப்பாட்டை போலவே மருந்தும் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

அவன் சாப்பிட்ட மருந்தை அவன் உடம்பு ஏற்றுக்கொண்டதா? இல்லையா?

வயிறு ஏற்றுக்கொண்டதால் மட்டும் உடல் ஏற்றுக் கொண்டது என்று சொல்ல முடியாது.

அவனது உடம்பில் உள்ள வியாதி முற்றிலும் குணமானால்தான் உடம்பு மருந்தை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.

வியாதி குணம் ஆகாவிட்டால் மருந்து அவன் உடலுக்கு ஒத்து வரவில்லை என்று தான் சொல்வோம்.

அதே போல் தான், அன்னை மரியாளை நமது அன்னையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று வாயினால் சொல்வதாலோ,

அவளுக்கு விழாக்கள் எடுப்பதாலோ,

அவளிடம் வேண்டுதல்கள் சமர்ப்பிப்பதாலோ,

அவளைப் புகழ்ந்து பேசுவதாலோ

அவளை நமது அன்னையாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை.

என்று அவளுடைய பண்புகளை நமது பண்புகளாக ஏற்றுக் கொண்டு,

தாயைப் போன்று பிள்ளையாக வாழ்கிறோமோ

அன்றுதான் நாம் அவளை நமது அன்னையாக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.

காந்தியை போன்று கதர் வேட்டியும் கதர் துண்டும் அணிவதால் மட்டும் ஒருவன் காந்தியவாதி  ஆகிவிட முடியாது.

என்று காந்தியை போன்று சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறானோ அன்று தான் அவன் காந்தியவாதி.

சிலுவையை சுமக்க மனம் இல்லாதவன் எத்தனை முறை இயேசுவே, இயேசுவே என்று சொன்னாலும் இயேசுவின் சீடன் ஆகிவிட முடியாது.

"இதோ ஆண்டவருடைய .
அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு  ஆகக்கடவ து."

இவ்வாக்கியத்தின் செயல் வடிவம்தான் முழுமையான அன்னைமரியாள்.

மரியாளை நமது அன்னையாக ஏற்றுக்கொண்டால் நாமும் அவளைப் போலவே முழுக்க முழுக்க ஆண்டவரின் அடிமையாக மாறுவோம்.

ஆண்டவரின் சித்தத்தை மட்டுமே நிறைவேற்றுவோம்.

அவள் வாழ்நாள் முழுவதும் சிலுவையை சுமந்து வியாகுல மாதா என்ற பெயர் எடுத்தாள்.

என்று நமக்கு வரும் சிலுவைகளை வேண்டாம் என்று சொல்லாமல் முழுமையாக ஏற்றுக்கொண்டு,

வாழ்நாளில் நமக்கு ஏற்படும்
வியாகுலங்களை மகிழ்ச்சியாக முழுமனதோடு கொள்கிறோமோ

அன்றுதான் நாம் மரியாளின் பிள்ளைகள்.

மனுவுரு  எடுத்த இறைமகன் ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே மரிக்க திட்டமிட்டிருந்தார்.

நமது அன்னையும்  முழுமனதோடு ஏழையாகவே வாழ்ந்தாள்.

தனது வயிற்றில் இருந்தவர் கடவுள் என்று தெரிந்திருந்தும்,

அவர் எல்லாம் வல்லவர் என்று அறிந்திருந்தும்,

தனக்கு ஒரு வசதியான வாழ்க்கையைக் கேட்டு அவள் விண்ணப்பிக்கவில்லை.

கலிலேயாவிலுள்ள நாசரேத் ஊரில் சொந்தமாக வீடு இருந்தும்,

பேறுகாலத்திற்காக யூதேயாவிலுள்ள பெத்லகேமிற்குச் செல்லவும்,

அங்கு ஒரு மாட்டுத் தொழுவத்தில் மாட்டுச் சாண நாற்றத்தைத் தாங்கிக் கொண்டுதான்

தான் பிறக்க வேண்டும் என்ற இயேசுவின் திட்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவள் மரியாள்.

மூன்று ஆண்டுகள் எகிப்து நாட்டில்        குழந்தை இயேசுவோடும், சூசையப்பரோடும்

நாடோடியாக வாழவிருந்த
வாழ்க்கையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார், அது இறைவனது சித்தம் என்பதால்.

இயேசுவுடனே சிலுவைப் பாதையில் நடந்து அவர் பட்ட கஷ்டங்களையும்,

இயேசுவின் சிலுவை மரணத்தையும்

பார்த்த தாயுள்ளம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

அந்த கஷ்டத்தை நமது இரட்சிப்புக்காக மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவள் நமது அன்னை,

நமக்கு வரும் துன்பங்களையும் என்று இயேசுவுகாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வருகிறதோ அன்றுதான் நாம் மரியாளை நம் அன்னையாக ஏற்றுக் கொள்கிறோம்.

அதுவரை நம்மிடம் இருப்பது உதட்டளவு பக்தியே.

முழுமையாக அன்னையின் பிள்ளைகளாக மாறாமல் நாம் அன்னையின் பெயரால் எடுக்கும் விழாக்கள் அன்னைக்கு மகிழ்ச்சியைத் தராது.


நமது  உள்ளத்தில் அன்னையின் பண்புகள் இல்லாவிட்டால்

அவர் பெயரால் நாம் சப்பரங்கள் எடுத்தால் பெருமை சப்பரங்களுக்குதான், அன்னைக்கு அல்ல.

உள்ளத்தில் அவளது பண்புகள் இல்லாமல் உதடுகளால் அவள் புகழ் பாடினால் பெருமை பாட்டுக்கு மட்டும் தான், அவளுக்கு அல்ல.

பரிசுத்தத்தனம், தாழ்ச்சி, பொறுமை, அர்ப்பண வாழ்வு, துன்பங்களை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற சகல நற்பண்புகளிலும் நாம் நமது அன்னையைப் போன்று வாழ்ந்தால்தான்

நாம் அன்னையின் பக்தர்கள்.

அன்னையாக நாம்  வாழ்ந்தால்தான் நம்மால் அன்னைக்குப் பெருமை .

அன்னையைப்போல் வாழ்ந்து அவள் புகழ் பரப்புவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment