Friday, September 24, 2021

'' ஒருநாள் இயேசு தனியே செபித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர்." (லூக்.9:18)

. '' ஒருநாள் இயேசு தனியே செபித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர்." (லூக்.9:18)


இந்த வசனத்தை வாசிக்கும் போது ஏதாவது மனதில் தோன்றுகிறதா?

வசனத்தின் முதல் பகுதியில் இயேசு தனியே செபித்துக் கொண்டிருந்தார் என்று இருக்கிறது.

இரண்டாவது பகுதியில் அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர் என்று இருக்கிறது.

வசனம் முடிந்து விடவில்லை. இவ்வாறு தொடர்கிறது.

"அவர் அவர்களை நோக்கி, "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்."

ஆக இயேசு ஒரே நேரத்தில் தனியாக செபித்துக் கொண்டிருக்கிறார், 

சீடர்களும் உடன் இருக்கிறார்கள்,

 அவர்களோடு பேசவும் செய்கிறார்.

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இயேசு சீடர்களோடு பேசிக் கொண்டிருப்பது மட்டுமே தெரியும்.

இப்போது கேள்வி:

சீடர்களோடு பேசிக்கொண்டிருக்கும் இயேசு

 அதே நேரத்தில் எப்படி தந்தையோடு தனியே செபித்துக் கொண்டிருக்க முடியும்?

இயேசுவைப்பற்றிய இறையியல் உண்மை தெரிந்தவர்களுக்கு இந்த கேள்வி எழாது.

அந்த இறையியல் உண்மையைத் தியானிப்பதோடு நாம் அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடத்தையும் தியானிக்க வேண்டும்.

இயேசு யார்?

இறைமகன்.

நித்திய காலமாய் 
தந்தை இறைவனோடு ஒன்றாக இருக்கும் ஒரே மகன்.

"நானும் தந்தையும் ஒன்றே."
(அரு. 10:30)

இந்த இணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. அவராலே கூட பிரிய முடியாது.

இறைமகன் மனுவுரு எடுத்தாலும்,

 மனித சுபாவத்தில் உலகத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தாலும்

அவர் தந்தையோடு ஒன்றாகவே இருக்கிறார். 

தந்தையோடு மட்டுமல்ல பரிசுத்த ஆவியோடும் ஒன்றாகவே இருக்கிறார்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

செபம் என்றால் என்ன?

இறைவனோடு இணைந்திருக்கும் நிலை.

இயேசு தேவ சுபாவமும், மனித சுபாவமும் உள்ள இறைமகன்.

 ஆகவே அவர் மனித சுபாவத்தில்  தனது சீடர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும்

தேவ சுபாவத்திற்கும், மனித சுபாவத்திற்கும் உரிய தேவ ஆளாகிய இறைமகன் தந்தையோடு தனியேதான் இருக்கிறார்.

பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆளாகிய இறைமகனுக்கு 

சுபாவங்கள்  இரண்டு இருந்தாலும் ஆள் பிரிக்க முடியாத ஒரு தேவ ஆள்தான்.

ஆகவேதான் அன்னை மரியாள் இயேசுவின் மனித சுபாவத்தை பெற்றாலும், அந்த சுபாவம் பிரிக்கமுடியாத இறை மகனுக்கு உரியதாகையால் அவளை இறைவனின் தாய் என்கிறோம்.


 "இயேசு தனியே செபித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர்."

சீடர்களால்  தந்தை, மகனின் தனிமையில் குறுக்கிட முடியாது.

தந்தையும் மகனும் ஒன்றாக இருப்பது இயல்பு.

By nature Father and Son are one.

தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்தான்.

இப்போது யாரோ கேட்கிறார்கள், "தந்தையையும், மகனையும் பற்றி தியானிப்பதில் நமக்கு என்ன பயன்?

நமக்குதான் பயன், அவர்களுக்கு அல்ல.

நாம் கடவுளைப்பற்றி தியானிப்பதாலும்,

 அவரை நோக்கி செபிப்பதாலும் 

அவருக்கு எந்த கூடுதல் பயனும் இல்லை.


அவ நித்திய காலமும் 
நிறைவானவர்.

அவரது நிறைவைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது.

ஆனால் நாம் அளவு உள்ளவர்கள்.
நமது அளவைக் கூட்டவும் செய்யலாம், குறைக்கவும் செய்யலாம்.

ஆகவே இறைவனால் பயன் பெறுகிறவர்கள் நாம்தான்.

இறைவனைத் தியானிப்பதால் நமக்கு என்ன பயன்?

இறைவன் நம்மை அவரது சாயலில் படைத்து விட்டார்.

அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 விலக்கப்பட்ட கனியைத் தின்றால் கடவுளைப் போல் ஆகி விடலாம் என்று  சாத்தான் ஏவாளிடம் கூறினான்.

 ஏவாள் சாத்தானிடம் என்ன கூறியிருக்க வேண்டும்?

"நான் ஏற்கனவே கடவுளின் சாயலில்தான் இருக்கிறேன். பழத்தைச் சாப்பிட்டால்தான்   அதற்கு பங்கம் ஏற்படும்."

ஆனால் அப்படி சொல்லாமல் ஏமாந்து போய் வாங்கி சாப்பிட்டாள்.

பாவமில்லாத சாயலை இழந்தாள்.

அதை மீட்க இறைவனே மனிதன் ஆக வேண்டியிருந்தது.

இறை மகனுக்கு மிகப் பெரிய ஆசை, நாமும் அவரது தந்தையைப் போல் ஆகிவிட வேண்டும் என்று!

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)


'நிறைவு' இறைவனுக்கு மட்டுமே உரிய பண்பு.

இதை படைப்புகளாகிய நாம் பெறவேண்டும் என்று இயேசு விரும்புவது அவரது தாராள குணம்.

நாம் தந்தையின் நிறைவை அடைவதற்கு ஒரு வழி இருக்கிறது.

நிறைவாக உள்ள தந்தையை நமது இதய சிம்மாசனத்தில் உட்கார வைத்து நாம் அவரோடு ஒன்றித்து விடுவதுதான்.

தந்தை இறைவன் எப்போதும் நம்மோடுதான் இருக்கிறார்.

நம்மோடு இருந்துதான் நம்மை பராமரித்து வருகிறார்.

நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவரை முழுமையான அன்புடன் ஏற்று, அவரோடு ஒன்றித்து இருப்பது.

தந்தையோடு  ஒன்றித்தால் நாம் எப்போதும் அவரது ஞாபகமாகவே இருப்போம்,

 அவர் நினைப்பதை நாமும் நினைப்போம்,

 அவர் ஆசைப்படுவதை நாமும் ஆசைப்படுவோம்,

 அவரது சித்தத்தை நிறைவேற்றுவோம்.

ஒரு குழந்தை அம்மா வீட்டில் இருக்கும்போது 

அது சுதந்திரமாக வீட்டில் விளையாடும்.

 அப்பப்போ அம்மாவை அழைக்கும்.

 அம்மா  குரல் கொடுத்தால் விளையாட்டை தொடரும்.

 அம்மாவின் குரல் கேட்காவிட்டால் அழ ஆரம்பித்துவிடும்.

 நமது விண்ணகத் தந்தையிடம் நாமும் இந்த குழந்தை போல்தான் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் எங்கு இருந்தாலும், என்ன செய்துகொண்டு இருந்தாலும், எப்படி இருந்தாலும் 

தந்தை நமது இதயத்தில் இருக்கிறார் எங்க உணர்வோடு இருக்க வேண்டும்.

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தந்தையை அழைக்க வேண்டும்.

அவர் உள்ளுணர்வுகள் (Inspirations) மூலம் நமக்குத் தனது ஆலோசனைகளை நல்குவார்.

நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும், என்ன நடந்தாலும், நாம் நம் தந்தையோடு தனியாக இருப்போம்.

என்ன பிரச்சனைகள் வந்தாலும், என்ன ஆபத்துக்கள் வந்தாலும் பயப்பட மாட்டோம்.

ஏனெனில் நமது இதயத்தில் வீற்றிருப்பவர் சர்வ வல்லவ கடவுள்.

'இயேசு இயல்பிலேயே (By nature) தந்தையோடு ஒன்றித்திருக்கிறார்.

நாம் தந்தையின் உதவியோடு அவரோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

பள்ளியில் மாணவர்கள் நடுவே பணிபுரிந்து கொண்டிருந்தாலும்,

அலுவலகத்தில் சக அலுவலர்களுடன் பணிபுரிந்து கொண்டிருந்தாலும்,

பயணிகளோடு பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் 

நாம் இதயத் தனிமையில் தந்தையோடு பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.

இன்பமோ, துன்பமோ,

மகிழ்ச்சியோ, வருத்தமோ,

வெற்றியோ, தோல்வியோ

நமது ஞாபகத்தில் எழ வேண்டியது விண்ணகத் தந்தை மட்டுமே.

தந்தையோடு தனிமையில் வாழ்பவர்களுக்கு 
தனிமையே இல்லை. 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment