Thursday, September 2, 2021

"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்." (அரு.14:14)

"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்." (அரு.14:14)

நாம் யாரிடமாவது உதவி கேட்கச் சென்றால். அவருக்கு மிகவும் பிடித்தமான ஆளின் பெயரைச் சொல்லி கேட்டால்

 கேட்ட உதவி உறுதியாக கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம்.

அது உண்மைதான்.

இவ்வுலகில் நாம் யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து நின்று வாழ முடியாது.

முதலில் நம்மை படைத்தவருடைய உதவி இன்றி ஒரு வினாடி கூட இவ்வுலகில் வாழ முடியாது.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் சிலுவை அடையாளம் வரைந்து 

நாளில் பணிகளை ஆரம்பிக்கின்றோம்.


தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒரே கடவுள்.

தந்தை என்று சொல்லும்போது எந்த கடவுளைக் குறிக்கிறோமோ

 அதே கடவுளைத்தான் 

மகன் என்று சொல்லும் போதும்,

 பரிசுத்த ஆவி என்று சொல்லும்போதும் குறிக்கிறோம்.

ஒரு வேலையை தந்தையின் பெயரால் ஆரம்பித்தாலும்,

 மகனின் பெயரால் ஆரம்பித்தாலும்,

 பரிசுத்த ஆவியின் பெயரால் ஆரம்பித்தாலும், 

பரிசுத்த தம திரித்துவத்தின் பெயரால் ஆரம்பித்தாலும்

ஒன்றுதான்.

 மனித உரு எடுத்து தனது மரணத்தினால் நமக்கு மீட்பைத் தருகிறவர் இரண்டாம் ஆளாகிய மகன், இயேசு.

இயேசு சொல்கிறார்,

"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்." என்று.

Jesus is the most powerful name in the world.

இயேசுதான் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெயர்.

ஏனெனில் அது சர்வவல்லப கடவுளின் பெயர்.

இயேசுவின் பெயரால் என்ன நினைத்தாலும் நடக்கும்.

இயேசுவின் பெயரால் தந்தையிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.


" தந்தையிடம் எதைக் கேட்டாலும்,

 அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்.

இதுவரையில் என் பெயரால் நீங்கள் எதையும் கேட்டதில்லை.

 கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்:"
(அரு. 16:23, 24)


"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்."
 
என்று இயேசு சொல்லும்போது  அதில் இருக்கும் மிக முக்கியமான ஒரு இறைச் செய்தியை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

 முதலாவது இயேசுவின் பெயரால் எதையும் தந்தையிடமோ,

அல்லது, அவரிடமோ

 கேட்க வேண்டுமென்றால் நாம் அவருக்குப் பிரியமானவர்களாக வாழ வேண்டும்.

 அடுத்து இயேசுவின் மேல் நமக்கு அசைக்கமுடியாத, மிக ஆழமான விசுவாசம் இருக்க வேண்டும்.

 அடுத்து இயேசுவின் பெயரால் நாம் கேட்பது எதுவும் இயேசுவின் விருப்பத்திற்கு விரோதமாக இருக்கக் கூடாது.


இயேசுவுக்கு பிரியமில்லாத பாவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அவரது பெயரால் தந்தையிடம் கேட்டால்,

தந்தை என்ன சொல்வார்?

''இயேசு எனது அன்பார்ந்த ஒரே மகன்.

 அவர் மனதை புண்படுத்தும் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அவர் பெயராலேயே உதவி கேட்டால், எப்படி கிடைக்கும்?

 முதலில் உனது வாழ்க்கையை திருத்து. அப்புறம் வந்து கேள்.''

என்றுதான் சொல்வார்.

ஆகவே இயேசுவின் பெயரால் தந்தையிடம் ஏதாவது கேட்க ஆசைப்பட்டால் முதலில் இயேசுவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ வேண்டும்.


இயேசுவின் மேல்  ஆழமான விசுவாசம் இல்லாதவர்கள் அவர் பெயரால் எதையும் கேட்க முடியாது.

விசுவாசம் என்றால் நம்பிக்கையை
அடிப்படையாகக்கொண்ட அர்ப்பண வாழ்வு.

இயேசுவின் பணியில் தங்களை அர்ப்பணித்து வாழ்பவர்கள் தான் அவர் பெயரால் தந்தையிடம் எதையும் கேட்க முடியும்.

இயேசுவுக்குப் பணி புரியாமல் ஏனோதானோ என்று வாழ்பவர்கள் எப்படி இயேசுவின் பெயரால் உதவி கேட்க முடியும்? 


இயேசுவுக்கு பிடிக்காத ஒரு காரியத்திற்கு உதவி செய்ய அவர் பெயராலேயே தந்தையைக் கேட்கலாமா? மகனுக்கு பிடிக்காததை செய்ய தந்தை எப்படி உதவி செய்வார்?

ஆக இயேசுவின் பெயரால் தந்தையிடமோ 

அல்லது 

அவரிடமோ  ஒரு உதவி கேட்போர்

 இயேசுவுக்குப் பிரியமான, அர்ப்பண வாழ்வு வாழ வேண்டும்.

எப்படி , 

"விண்ணரசு நெருங்கிவிட்டது"

  என்று சொன்னால் , அதற்குள் "மனந்திரும்புங்கள்" என்ற அழைப்பு அடங்கி இருக்கிறதோ,

 அதேபோல

"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்."

என்று சொல்லும்போது, 

" அதற்கு ஏற்றபடி  பரம தந்தையின் நல்ல பிள்ளைகளாக வாழுங்கள்."

என்ற  இயேசுவின் அழைப்பும் அடங்கி இருக்கிறது.

 இதை உணர்ந்து

 இறைவனுக்கு ஏற்றவாறு வாழ்வோம்.

இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் முயற்சி எடுக்கும்போது 

அவ்வாழ்வில் வெற்றி பெற நாம் எதைக் கேட்டாலும் இயேசு தருவார்.

விண்ணகம் நோக்கிய நமது ஆன்மீக பயணத்தில் நாம் வெற்றி பெற 

இயேசுவின் பெயரால் எதை கேட்டாலும் அவர் நமக்குத் தருவார்
என்பதை உணர்ந்து 

ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான எல்லாவற்றையும் இயேசுவிடம் கேட்போம், 

உறுதியாக கேட்டதைப் பெறுவோம்.

ஆன்மீக வாழ்வுக்கு  இடைஞ்சலாக இருக்கக்கூடிய எதைக் கேட்டாலும் இயேசு தரமாட்டார் என்பதையும் நினைவில் கொள்வோம்.

விண்ணகத்தை நோக்கி பயணிக்கவே உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதற்கு தேவையானவற்றை மட்டும் இயேசுவிடம் கேட்போம்.

பெறுவோம். நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment