Friday, September 10, 2021

உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பார்ப்பதேன்?"(லூக்.6:41)

"உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பார்ப்பதேன்?"
(லூக்.6:41)

"தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். கண்டனம் செய்யாதீர்கள், கண்டனம் பெறமாட்டீர்கள்."
(லூக்.6:37)

" உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்தெறி: பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க நன்றாய்க் கண்தெரியும்."
(லூக்.6:42)


இயேசுவின் அறிவுரைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

அவரால் முன்னுக்குப் பின்  முரணாக பேச முடியாது.

அவர்  மொழிந்த இந்த மூன்று வசனங்களின் அடிப்படையில் தியானிப்போம்.

இயேசு உலகிற்கு வந்தது மக்களிடையே உள்ள வேண்டாத குணங்களை நீக்கி அவர்களை நல்வழி படுத்துவதற்காகத் தான்.

அதாவது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை விண்ணக பாதையில் வழி
 நடத்துவதற்காகத்தான்.

அதற்காகவே அவர் மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார்.

அவர் அறிவித்தது மட்டுமல்ல அவரது நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று நமக்கும் கட்டளை தந்திருக்கிறார்.

நற்செய்தி என்றாலே நல்லதைப் புகுத்தும் பொருட்டு, நல்லவை அல்லாதவற்றை நீக்க உதவும் செய்திதான். 

நல்லவை அல்லாதவை எவை என்று தெரிந்தால்தானே அவற்றை நீக்க முடியும்?


பிறருக்கு நற்செய்தி அறிவிக்கும் போது 

அவர்களிடம் என்னென்ன நல்லவை அல்லாதவை உள்ளன என்பதை அறிந்து
 அவற்றை நீக்கவும், 

நல்லவற்றை ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறோம்.

பிறரிடம் நல்லவை அல்லவை உள்ளவை எவை என்று அறிவது அவற்றை திருத்துவதற்கே 

அவர்களைத் தீர்ப்பிடுவதற்கு அல்ல.

இறைமகன் மனுமகன் ஆனது மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்கே, தீர்ப்பிடுவதற்கு அல்ல.

ஆகவேதான் இயேசு,

"யாரையும் தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்."


மற்றவருடைய குறைகளை நாம் அறிவது அவர்களைத் திருத்துவதற்கே கண்டிப்பதற்கு அல்ல.

ஆகவேதான் இயேஇயேசு,

",கண்டனம் செய்யாதீர்கள், கண்டனம் பெறமாட்டீர்கள்."

என்கிறார்.

திருத்துவதற்காக மற்றவர்களிடம் உள்ள குறைகளை காண்பதில் தவறு ஒன்றும் இல்லை.

 ஆனால் நம்மிடம் குறைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மிடமுள்ள பெரிய குறைகளை திருத்தாமல் மற்றவர்களிடம்  உள்ள சிறிய குறைகளை பட்டியல் போடுவது நகைப்புக்கு உரியது.

குருடனால் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியாது.

நமக்கே வழி தெரியாமல் இருக்கும்போது அதை எப்படி  மற்றவர்களுக்கு காண்பிக்க முடியும்?

மற்றவர்களுக்கு வழி காண்பிக்க முன்பு நாம் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறுதான் திருத்துவதற்காக மற்றவர்களிடம் உள்ள குறைகளை சுட்டிக் காண்பிக்குமுன்பு நம்மிடம் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

குடிகாரன் மற்றொரு குடிகாரனை திருத்துவதற்கு முன்பு தான் குடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆரம்பிக்க முன்பு தான் அந்த பாடத்தை நன்கு கற்றிருக்கவேண்டும்.

இயேசு கடவுள். குற்றம் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்.

" வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

நாம் நல்லவர்களாக இருந்தால்தான் மற்றவர்களின் குறைகளைக் கண்டு அவற்றை திருத்த முடியும்.

" உன்னை நேசிப்பது போல உனது பிறரையும் நேசி"
என்ற இறைவாக்கின்படி நம்மை நாம் நேசிக்காமல் மற்றவர்களை நேசிக்க முடியாது.

  நம்மை நாம் நல்லவர்களாக வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களை நல்லவர்களாக மாற்ற முடியாது..

.சகதித்தண்ணீரால் சகதியை கழுவ முடியுமா?

சுத்தமான கண்ணீரால்தான் அசுத்தத்தை கழுவ முடியும்.

சுத்தமான தண்ணீரோடு சகதி கலக்கும் போது தான் அது சகதித் தண்ணீராக மாறுகிறது.

நற்செய்தி பரிசுத்தமானது. ஆனால் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் நாம் அசுத்தமானவர்களாக இருந்தால் நமது அறிவிப்புக்கு பலன் இருக்காது.

முதலில் நாம் நற்செய்தி படி நடந்தால்தான் நற்செய்தி அறிவிக்கும் தகுதி நமக்கு இருக்கும்.


நாம் இஷ்டப்படி நடந்து கொண்டு நமது வாயினால் எப்படி நற்செய்தியை அறிவிக்க முடியும்?

 நமது வாழ்க்கையால் எப்படி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்?

நாம் நற்செய்தியின்படி வாழ்ந்தாலே நம்மில் நற்செய்தியை உலகிற்கு கொண்டு வந்த கிறிஸ்துவை மற்றவர்கள் பார்ப்பார்கள்.

 அவரே பார்ப்பவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து விடுவார்.

நல்லபடியாக வாழாத பெற்றோருக்கு தங்களது பிள்ளைகளின் குறைகளை சுட்டி காண்பிக்கவும் தகுதி இல்லை.

சிலர் சமூகத்தைக்   குறை சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்கிறோம்.

அவர்கள் ஒரு உண்மையை மறந்து விடுகிறார்கள்.

யாராக இருந்தாலும் பிறப்பதும் வளர்வதும் குடும்பங்களில் தான்.

குடும்பங்கள் திருந்திவிட்டால் சமூகம் திருந்திவிடும்.

குடும்பங்கள் திருந்திவிட்டால்
அரசியல் திருந்திவிடும்.

குடும்பங்கள் திருந்திவிட்டால்
பள்ளிக்கூடங்கள் திருந்திவிடும்.

அடிப்படை பெற்றோர்கள்தான்.

பெற்றோர்கள் திருந்திவிட்டால் பிள்ளைகள் திருந்தி விடுவார்கள்.

உலகமே பெற்றோர்களாலும் பிள்ளைகளாலும் ஆனதுதான்.

ஆகவே மற்றவர்கள் மீது தீர்ப்பு சொல்வதையும், மற்றவர்களைக் கண்டிப்பதையும் விட்டு விட்டு நம்மை நாமே திருத்திக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment