Tuesday, March 30, 2021

பாதாளம் நோக்கி ஒரு பவனி.

‌பாதாளம் நோக்கி ஒரு பவனி.


"அண்ணே! இன்று புனித வெள்ளி தானே!"

",ஆமா, அதிலென்ன சந்தேகம்?"

"ஆண்டவர் சிலுவையில் மரித்த நாள் தானே!"

",அதிலென்ன சந்தேகம்?"‌

"அப்படியானால் நமக்கு இது துக்கப் பண்டிகை தானே!"

",ஆமாப்பா ஆமா. ஒரே விஷயத்தை எதற்காக திரும்பத் திரும்ப கேட்கிறாய்?

உனக்கு என்ன வந்தது?"

"நாம் இங்கே நமது துக்கத்தைக் காட்டும் வகையில் 

ஒருசந்தியிலிருந்து, 

சுத்த போசனம் அனுசரித்து,

 சிலுவைப் பாதையில் ஆண்டவரது பாடுகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதோ பாருங்கள். விண்ணில் ஒரு மகிழ்ச்சிகரமான பவனி!

இவ்வளவு மகிழ்ச்சிகரமான பவனியை என் வாழ்நாளில் ஒரு போதும் பார்த்ததில்லை,

கற்பனையில் கூட பார்த்தது இல்லை."

", கோடிக்கணக்கான சம்மனசுக்கள்
மகிழ்ச்சி கீதம் இசைத்துக் கொண்டு முன்னால் செல்ல,

கடைசியில் மிக்கேல் அதிதூதரோடு ஆண்டவர்!

ஒரு பெரிய போரில் வெற்றி அடைந்த மகிழ்ச்சி மிக்கேல் அதிதூதருக்கு! 

ஆண்டவருடைய முகத்தைப்பார்!
அளவுகடந்த மகிழ்ச்சியால் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது!"

"பவனி பாதாளத்தை நோக்கிப் போவதுபோல் தெரிகிறது. வாருங்கள் நாமும் பின் தொடர்வோம்" 

", அதோ பார். லூசிபெர் தலைமையில் ஒரு கூட்டம் ஆண்டவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.."

"லூசிபெருடைய கையில் ஏதோ இருக்கிறது! பத்திரம் மாதிரி தெரிகிறது.

கூர்ந்து பாருங்கள். என்ன செய்கிறான் என்று பார்ப்போம்."

", லூசிபெர் கூனிக் குறுகி நின்று கொண்டு கையில் வைத்திருப்பதை மிக்கேல் அதிதூதரிடம் கொடுக்கிறான். 

அவர் அதை வாங்கி ஆண்டவரிடம் கொடுக்கிறார்.

இப்போது பார், லூசிபெரையும் அவன் .கூட்டத்தையும் காணவில்லை.

லூசிபெர் கொடுத்தது என்னவாக இருக்கும்?"
.
"நமது முதல் பெற்றோர் பாவம் செய்த போது அவன் கையில் விழுந்த மனுக்குலத்தை 

ஆண்டவர் அவன் கையிலிருந்து மீட்டதற்கான அடையாளமாக இருக்கும்."

",அப்படித்தான் இருக்கும். இதோ பார். பவனி தொடர்கிறது."

"ஆண்டவர் பவனியாக எங்கே போகிறார்?"

",ஆண்டவர் தன் இரத்தத்தையும், உயிரையும் விலையாகக் கொடுத்து மனுக்குலத்தை சாத்தானின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டிருக்கிறார்.

மீட்புக்காக பாதாளத்தில் காத்துக் கொண்டிருக்கும் பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களை மோட்சத்திற்கு அழைத்துவர வானவர் படை சூழ மகிமையின் ஆண்டவர் செல்கிறார்!

நமக்கு உலகில் ஆண்டவர் மரித்த துக்க தினம்.

ஆனால் பாதாளத்தில் இன்று மகிழ்ச்சி தினம்.

அதோ பார். பழைய ஏற்பாட்டு ஆன்மாக்கள் மீட்பரின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ விண்ணவர் பவனி அவர்களை நெருங்கிவிட்டது.

எல்லா ஆன்மாக்களும் மீட்பரின் வருகையைக் கண்டு மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்கிறார்கள்.

சம்மனசுக்களின் மகிழ்ச்சிக் கீதம் விண்ணைப் பிளக்கிறது!

ஆண்டவர் எல்லா ஆன்மாக்களையும் இருகரம் விரித்து வரவேற்கிறார்."

"முதலில் வருவது யாராக இருக்கும்?"

",ஆபேலாக இருக்கும். அவன்தானே எல்லாரையும் விட அதிகமான காலம் காத்துக் கொண்டிருக்கிறவன்!

மனுக்குலத்திலேயே முதலில் இறந்தவன் அவன்தானே!

எல்லா ஆன்மாக்களும் வந்து விட்டார்கள்.

அதோ பார். ஒருவர் ஆண்டவரைத் தழுவி முத்தமழை பொழிகிறார்!"

"சூசையப்பர்! தான் வளர்த்த மகனின் மடியிலேயே உயிரை விட்டவர்!

அந்த மகனாலேயே மீட்கப்பட்டவர்!

அவர் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!"

"இருக்காதா பின்னே.

தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இயேசுவை வளர்ப்பதற்காகவே அர்ப்பணித்தவர் ஆயிற்றே!" 

பவனி திரும்புகிறது.

பாதாளத்திலிருந்து பவனி விண்ணகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 மீட்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களும் வானவர்களோடு மகிழ்ச்சி கீதத்தில் கலந்து கொள்கிறார்கள்!


"அதோ பாருங்கள், விண்ணக வாயில் திறந்துவிட்டது.

பவனி மகிழ்ச்சி கீதம் இசைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறது.

அங்கே பார், தந்தை இறைவனின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!

இயேசு நேராக தந்தையிடம் செல்கிறார்.

லூசிபெரிடமிருந்து பெற்ற மீட்புப் பத்திரத்தை தந்தையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்.

தந்தை மகனை அரவணைத்துக் கொள்கிறார்.

உள்ளே நுழைந்த அனைவரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப் படுகின்றார்கள்!

இனி அவர்களுக்கு என்ன கவலை?

நித்திய காலமும் ஆண்டவரோடு தான்!"

", ஹலோ, தம்பி, எழுந்திரு. இன்னுமா தூக்கம்!!"

"அண்ணே, காட்சி எப்படி?"

",என்னடா காட்சி எப்படி? கனவு கினவு கண்டியா?"

"கனவா? இருவரும் சேர்ந்துதான் அண்ணே பார்த்தோம், விண்ணவர் பவனியை!"

",என்னது? விண்ணவர் பவனியையா?"

"ஆண்டவர் இறந்தவுடனே

 பாதாளத்திற்குச் சென்று

 அங்கு அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களை அழைத்துக்கொண்டு

 பவனியாக விண்ணகம் சென்ற காட்சியை இருவரும் சேர்ந்து தானே பார்த்தோம்!"

",கோவிலில் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது.

 எழுந்தவுடன் கோவிலுக்கு வா என்று சொல்லிவிட்டுத்தானே நான் சென்றேன்.

 நீ வருவாய் வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

 இங்கு காட்சி கண்டு கொண்டு இருக்கிறாய்!

சரி, எழுந்து புறப்படு. கோவிலுக்குப் போவோம்."

"அண்ணே, நாம் எப்போது   விண்ணகத்திற்குப்  பவனியாகப் போவோம்?"

", விண்ணகத்திற்குப் போக ஆசையாக இருக்கிறதா?''

"ஆமாண்ணே!" 

"நமக்கு சிலுவைப் பாதைதான் விண்ணகத்திற்கு ஒரே வழி!"

"சிலுவைப் பாதையின் இறுதியில் ஆண்டவர் மரணம் அடைந்து விடுவாரே! நானும் அதேபோல் மரணம் அடைய வேண்டுமா?"

",ஆண்டவர் தனது சிலுவை மரணத்தின் மூலம் மரணத்தையும்,  அதற்கான பயத்தையும் வென்று விட்டாரே!"

"எப்படி?"

", மரணத்தை விண்ணகத்தின் நுழைவு வாசலாக மாற்றி விட்டாரே!"

"இப்போதுதான் புரிகிறது கெத்சமனி தோட்டத்தில் ஏன் சிலுவை மரணத்தை நினைத்து பயப்பட்டார் என்று.

அந்த பயத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டார்!

இனி மரணத்தை நினைத்து பயப்பட 
மாட்டேன்!

விசுவாசப் பிரமாணத்தில் வருகின்ற 'பாதாளங்கங்களில் இறங்கி' என்ற சொற்றொடரைத் தியானிக்கும் போது தான் பவனி காட்சியை கண்டேன்.

இனி துணிந்து ஆண்டவரின்
 மரணத்தைப் பற்றி தியானிப்பேன்!

வாருங்கள், போவோம் சிலுவைப் பாதைக்கு!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment