Tuesday, March 30, 2021

பெரிய வியாழன்.

        பெரிய வியாழன்.


"அண்ணே! ஒரு சின்ன சந்தேகம்."

"ஏண்டா, உனக்கு பெரிய சந்தேகமே வராதா?"

"வருமே. பெரிய சந்தேகமாக கேட்கட்டுமா?"

"கேள், கேள். பதில் தெரிந்தால் சொல்லப்போகிறேன், தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்ல போகிறேன். நீ கேளு."

"புனித வாரத்தில் வரும் வியாழக்கிழமையை
 ஏன் பெரிய வியாழன் என்று சொல்கிறோம்?"‍‍‍‍

"ஏன் இந்த வாரத்தை புனித வாரம் என்று சொல்கிறோமோ அதே காரணத்திற்காகத்தான்.

 வருடத்தின் எல்லாம் வாரங்களும் புனிதமானவைதான்.

 ஆனாலும் இந்த வாரத்தை மற்ற வாரங்களிலிருந்து பிரித்துக் காட்டவே அவ்வாறு சொல்கிறோம்.

கிறிஸ்துவின் வாழ்வு உச்சகட்ட (Climax) நிகழ்வுகளான 

திவ்ய நற்கருணையை ஏற்படுத்துதல்,

அப்போஸ்தலர்களுக்கு குருப்பட்டம் கொடுத்தல்,

இறைவனே மனிதர்களின் பாதங்களைக் கழுவுதல்,

கிறிஸ்துவின் பாடுகள்,

மரணம்,

உயிர்ப்பு

ஆகியவை சார்ந்த விழாக்கள் இந்த வாரம் வருவதால் இதை புனித வாரம் என்கிறோம்.

இந்த வியாழன் இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்திய நாளாக
 இருப்பதாலும்,

 அப்போஸ்தலர்களுக்கு குருப் பட்டம் கொடுத்த நாளாக இருப்பதாலும்

 ஆண்டின் மற்ற வியாழக்கிழமைகளிலிருந்து இதை  பிரித்துக் காட்ட பெரிய வியாழன் என்கிறோம்''

"இயேசு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அப்போஸ்தலர்களுக்கு குருப்பட்டம் கொடுத்தார்?"

''இயேசு "இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல்."

என்ற வார்த்தைகளின் மூலம் அப்பத்தை அவரது உடலாக மாற்றினார்.

'இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை."

என்ற வார்த்தைகளின் மூலம் திராட்சை ரசத்தை அவரது இரத்தமாக மாற்றினார்.

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் " 

என்ற வார்த்தைகள் மூலம் அதே அதிகாரத்தை தனது அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார்."

"நினைவாகத்தானே செய்யச் சொன்னார்.

அப்பமும் இரசமும் என் உடலாகவும் இரத்தமாகவும் மாறும் என்று சொல்லவில்லையே என்று சில பிரிந்த சகோதரர்கள் கூறுகிறார்கள்.

அவர்களுக்கு திவ்ய நற்கருணையில் நம்பிக்கை இல்லை.''
 

", இயேசு சொன்னது என்னிடமோ உன்னிடமும் அல்ல.

அப்போஸ்தலர்களிடம். அவர்கள் இயேசு சொன்னதை எப்படி புரிந்து கொண்டார்களோ அதுதான் உண்மையான புரிதல்.

இயேசு சொன்ன அதே வசீகர வார்த்தைகளை பயன்படுத்திதான் அப்போஸ்தலர்கள் திவ்ய பலி பூசை நிறைவேற்றினார்கள்.

திவ்ய பலி பூசைக்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தை "அப்பம் பிட்குதல்."

நமது திருச்சபை அப்போஸ்தலிக்க திருச்சபை.

அதாவது அப்போஸ்தலர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் திருச்சபை.

இயேசு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அப்பத்தைத் தன் உடலாகவும் ரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றினாரோ

அதே வார்த்தைகளைப் பயன்படுத்திதான் அப்போஸ்தலர்களும், அவர்கள் வழிவந்த குருக்களும் 

அதே நிகழ்வை நிகழ்த்துகிறார்கள்.

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
(அரு.13:20)

அப்போஸ்தலர்கள் செய்வதை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக்கொள்கிறார்கள்.

 "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
(மாற்று.16:15,16)

திருப்பலியை பற்றி அப்போஸ்தலர்கள் நமக்கு தந்ததும் நற்செய்திதான். அதை விசுவசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

விசுவசிக்க மனது இல்லாதவர்கள் இயேசுவின் வார்த்தைகளுக்கு இஷ்டம்போல் பொருள் கொடுத்து தங்கள் இஷ்டம் போல் வாழ்வார்கள்.

அப்போஸ்தலர்களின் வழி வந்த நற்செய்தியை விசுவசிப்பவர்கள் இயேசுவையே விசுவசிக்கிறார்கள்."

" புரிகிறது."

", என்ன புரிகிறது?"

"திருப்பலியின் போது அப்பமும் ரகமும் உண்மையாகவே இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன."


", இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தியதன் முக்கியமான நோக்கம் தனது உடலையும் இரத்தத்தையும் நமக்கு ஆன்மீக உணவாக தருவதற்காகத்தான்.

திரு விருந்தின்போது நாம் உண்மையிலேயே இயேசுவின் உடலையும் இரத்தத்தையும்
உண்கிறோம்.

அதாவது இயேசுவையே உண்கிறோம்."

"எதற்காக இயேசு அப்போஸ்தலர்களின் பாதங்களை கழுவினார்?"

",அப்போஸ்தலர்களுக்குத் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைப் போதிப்பதற்காக.

செயல் மூலம் போதித்தார்.

தாழ்ச்சி உள்ளவர்கள்தான் மற்றவர்களுக்கு சேவை செய்வார்கள்.

மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள் இறைவனுக்கே சேவை செய்கிறார்கள். ‌‌"

"இயேசுவையே உணவாக உண்டு அவருக்கும், அவர் பெயரால் அவரால் படைக்கப்பட்ட அனைவருக்கும் சேவை செய்வோம்."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment