(மத்.1:24)
கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்வதற்கு முன்னால் தன் வயிற்றில் மெசியா மனுவுரு எடுப்பார் என்ற உண்மை தெரியாது.
சூசையப்பருக்கும் தெரியாது.
ஆகவே அவள் கருத்தாங்கியிருப்பதாகத் தெரிந்ததும் அவருக்கு சந்தேகம் வந்தது இயற்கை.
ஆனாலும் நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.
ஆயினும் ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, உண்மையை சொன்னதும் மறுபேச்சின்றி அப்படியே ஏற்றுக்கொண்டார்.
தூதர் சொன்னதையும் ஏற்றுக்கொண்டார்,
மரியாளையும் ஏற்றுக்கொண்டார்.
இப்போது ஒரு கேள்வி எழும்.
எப்படி மறைவாக விலக்கிவிடுவது?
தண்ணீருக்குள் உட்கார்ந்துகொண்டு ரகசியமாக யாருக்கும் தெரியாமல் மூச்சு விட முடியுமா?
நிச்சயமாக முடியாது எனவே மூச்சு குமிழ்கள் (bubbles) காட்டிக் கொடுத்துவிடும்!
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
"நீங்கள் என் மனைவி இல்லை" என்று மரியாளிடம் சொல்லாமலேயே திருமண ஒப்பந்த நிலையிலேயே அவர்களோடு சகோதரனாக வாழ்வது.
ஆனாலும் மரியாளின் வயிற்றில் வளர்வது இறைமகன் என்பது அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்
கபிரியேல் தூதர் அவருக்கு கனவில் தோன்றி உண்மையைச் சொன்னார்.
சூசையப்பரும் தூதர் சொன்னதை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
இறைவனிடமிருந்து வரும் செய்திகளை மறு கேள்வி கேட்காமல் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு சூசையப்பர் ஒரு முன்மாதிரிகை.
பிள்ளையை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு போகச் சொன்னபோதும் சரி,
திரும்ப வரச் சொன்னபோதும் சரி கீழ்ப்படிதலில் தயக்கம் காட்டவில்லை.
சூசையப்பரின் இந்த கீழ்ப்படிதலைத்தான் இன்றைய துறவற சபையினர் ஒரு வார்த்தைப்பாடாக எடுத்துக் கொள்கின்றனர்.
சூசையப்பரின் இந்த கீழ்ப்படிதலை எத்தனையோ முறை பைபிளில் வாசித்திருக்கிறோம், தியானித்திருக்கிறோம்.
ஆனால் நமது வாழ்வில் ஒரு முறையாவது கடைபிடித்திருக்கிறோமா?
இப்போது சூசையப்பர் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டிலிருந்தாவது அன்றன்றைக்கு நாம் வாசிக்கும் இறைவாக்கை அன்றன்று நமது வாழ்வாக்க கற்றுக்கொள்வோம்.
இறைவாக்கு நம் ஆன்மாவிற்கான
இரைவாக்கு. நம் ஆன்மாவின் உணவு அதுதான்.
ஆன்மாவிற்குள் அது சீரணமானால்தான் ஆன்மா ஆன்மீகத்தில் வளரும்.
இதுவரை எத்தனையோ முறை கோவிலுக்குப் போயிருப்போம்!
எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகளில் சாமிமாரின் பிரசங்கங்களைக் கேட்டிருப்போம்!
எத்தனையோ தியானங்களுக்கு போயிருப்போம்!
இதுவரை கோவிலில் கேட்ட பிரசங்கங்களில் குறைந்தபட்சம் ஒரு புத்திமதியையாவது நமது வாழ்வில் முழுமையாக கடைப்பிடித்திருக்கின்றோமா?
At least போன ஞாயிற்றுக்கிழமை சாமியார் வைத்த பிரசங்கத்தில் ஒரு வரியாவது ஞாபகத்தில் இருக்கிறதா?
நமக்கு நாமே ஒரு சின்ன test வைத்துப் பார்ப்போமே!
ஒரு மார்க் கிடைத்தாலும் pass தான்!
உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு முறை மூன்று நாள் தியானம் முடிந்த மறுநாள்
தியானம் கொடுத்த சுவாமியார் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்:
"மூன்று நாள் தியானத்தையும் பற்றி ஒரே வரியில் யாராவது கூற முடியுமா?"
ஒரு குசும்பன் எழுந்து சொன்னான்,
"சுவாமி, கடவுளிடம் ஆரம்பித்து நரகத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்."
அந்த காலத்தில் ஒவ்வொரு மூன்று நாள் தியானத்திலும் கடைசிப் பிரசங்கம் பாவ சங்கீர்த்தனத்திற்கு மனஸ்தாபப்படுவதற்கு உதவியாக நரகத்தைப் பற்றி இருக்கும்.
இப்போதெல்லாம் நரகத்தைப் பற்றி யாருமே பேசுவதில்லை.
பயப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.
அப்போது நரகத்தைப் பற்றிய ஒரு பிரசங்கம் அந்த வருடம் முழுவதும் ஆன்மாவிற்கு உதவியாக இருக்கும்.
வருடம் முழுவதும் ஞாபகத்தில் இருக்கும்.
இப்பொழுது ஒரு மனப்போக்கு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
"கடவுள் இரக்கமுள்ளவர். நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அவர் கண்டுகொள்ள மாட்டார்.
கடவுளது இரக்கத்தை தவறாகப் புரிந்து கொண்ட மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆகையினால்தான் பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
"பாவசங்கீர்த்தனம் செய்தீர்களா?"
"என் பாவங்கள் எல்லாம் கடவுளுக்கு நான் சொல்லாமலே தெரியுமே."
"மன்னிபாவது கேட்கிறீர்களா?"
"எங்களையெல்லாம் மன்னிக்கச் சொல்லி இயேசு தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டாரே!"
"விசுவசித்து ஞானஸ்நானம்
பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
"நான் ஞானஸ்நானம் பெற்றுவிட்டேன், ஆகவே இரட்சிக்கப்பட்டு விட்டேன்."
இப்படி தப்புத் தப்பாக புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
இயேசு நமது பாவங்களுக்காக தனது மரணத்தின் போது பரிகாரம் செய்து விட்டார்.
நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு குருவிடம் சங்கீர்த்தனம் செய்து மன்னிப்பு பெற வேண்டியது நாம் தான்
நாமும் பரிகாரம் செய்ய வேண்டும்.
இதை மக்கள் உணர வேண்டும்.
இறைவன் பல வழிகளில் மூலமாக நம்மோடு பேசுகிறார் திருவிவிலியம் (Bible)
குருவானவர் (Spiritual Father)
நண்பர்கள் (Friends)
இயற்கை (Nature,)
உள் தூண்டுதல் (Inspiration)
ஞான வாசகம் (Spiritual reading)
எதன் மூலம் பேசினாலும் இறைவனது ஆலோசனையை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
எப்பொழுதும் நமது சிந்தனை, சொல், செயலில் நாம் இறைவனின் சந்நிதானத்தில் இருந்தால் இறைவனின் குரல் தெளிவாக கேட்கும்.
இறைவனின் குரலை கேட்டு அதனை உடனடியாகச் செயல் படுத்துவோம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம்.
கொரோனா அலை அடித்துக் கொண்டிருந்த நேரம்.
அமெரிக்காவிலிருந்து இந்தியா
வர டிக்கெட் எடுத்தாகிவிட்டது.
கொரோனாக்களின் ஊடே நுழைந்து வர வேண்டியதுபோல ஒரு பய உணர்வு.
அருகில் இருந்த நாற்காலியில் யாரையும் உட்கார விடாதபடி எனது நான்கு வயது பூட்டி தடுத்துக் கொண்டிருந்தாள்.
ஏன் என்று கேட்டதற்கு, "நாற்காலியில் அந்தோணியார் இருக்கிறார்" என்று பதில் சொன்னாள்.
கொஞ்சம் பொறுத்து அவளே ஏறி அமர்ந்தாள்.
" நீ மட்டும் எப்படி ஏறி உட்காரலாம்" என்று கேட்டேன்.
அதற்கு அவள் சொன்ன பதில்,
"நான் நாற்காலியில் உட்காரவில்லை. அந்தோணியார் மடியில் உட்கார்ந்து இருக்கிறேன்."
இது இறைவனின் குரல்.
"இந்தியாவிற்கான பயணத்தின்போது நீ பயப்படாமல் என் மடியில் அமர்ந்து கொள்!"
கொரோனா பயம் இருந்த இடம் தெரியவில்லை.
இறைவனின் மடியில் பயணிக்க ஏன் பயப்பட வேண்டும்?
பயமின்றி பயணித்து ஊர் வந்து சேர்ந்தேன்.
இறைவன் குரல் யார் மூலமாக வேண்டுமானாலும் நமக்கு வரும்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment