Friday, March 5, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*19 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*19
(தொடர்ச்சி)

",கடவுள் எல்லாப் பண்புகளிலும் அளவு கடந்தவர்.

அவர் தனது பண்புகளை நம்மோடு தாராளமாகப் பகிர்ந்து கொண்டதால் தான் நாம் அவரது சாயலில் இருக்கிறோம்.


இப்போ ஒரு கேள்வி. அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட பண்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பண்பு எது?"


"அன்பு."

",இப்போ இன்னொரு கேள்வி.

கடவுள் தன்னிடம் இருக்கின்ற இன்னொரு பண்பினால்தான் அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அதாவது அந்தப் பண்பு மட்டும் இல்லாதிருந்திருந்தால் எந்த பண்பையும் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்க மாட்டார்.

அந்த பண்பு எது?"

"அப்படியானால் அந்தப் பண்பையும் நம்மோடு பகிர்ந்து கொண்டிருப்பார் அல்லவா?"

",நிச்சயமாக. அதையும் நம்மோடு தாராளமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தாராளமாக நம்மோடு பகிர்ந்துகொண்ட பண்பு எது?"

"பொடிவைத்து கேட்கிறீர்களோ?"

",பொடி வைக்கவில்லை. ஆனால் கேள்விக்குள்ளேயே விடையை வைத்திருக்கிறேன்."

''இன்னொரு முறை கேள்வியை கேளுங்கள்."

",தாராளமாக நம்மோடு பகிர்ந்துகொண்ட பண்பு எது?"

"இந்த கேள்விக்குள்ளா விடை இருக்கிறது? "

", ஆமா."


"ஆஆ! கண்டுபிடித்துவிட்டேன்! தாராள குணம். சரியா?'' 

",கரெக்ட். அவரது தாராள குணமும்
(Generosity) அளவு கடந்தது.

கடவுளுடைய அத்தனை பண்புகளும் அவருக்கு இயல்பாக உடையவை.

 யாரும் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கவில்லை.

 அவரது பண்புகளில் அவர் நிறைவு உள்ளவராக இருக்கிறார்.

 தனது பண்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை.

 இருந்தாலும் அவரது தாராள குணத்தின் காரணமாக தனது பண்புகளை பகிர்ந்து கொள்வதற்காகவே

 மனிதனைத் தன் சாயலில் படைத்தார். 

மனிதனைப் படைப்பதற்கு முன்பாகவே அவனுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக நாம் வாழும் பிரபஞ்சத்தையே படைத்தார். 

அவரது தாராள குணத்திற்கு அளவே கிடையாது.


"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.

45 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள்.

 அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். 

நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்."
(மத். 5:44, 45)

நமக்கு வேண்டியவர்களுக்கு அள்ளி கொடுக்கும் தாராள குணத்திற்கு பெருமை இல்லை.

 ஆனால் நம்மை பகைப்பவர்களுக்கும்,

 நமக்குத் தீமை செய்பவர்களுக்கும்,

 நமக்கு விரோதமாக செயல்படுபவர்களுக்கும்,

 அன்பையும், பொருள்களையும், உதவிகளையும் அள்ளிக் கொடுப்பதுதான் பெருமைக்குரிய தாராள குணம்.

நல்லவரான கடவுள் ,
 நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். 


நீதி உள்ளவரான கடவுள்,
நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்.

அதேபோல நாமும் பகைவர்கள், கெட்டவர்கள், நீதி அற்றவர்கள் என்று பார்க்காமல் 

நமது நண்பர்களுக்கு செய்வதையெல்லாம் அவர்களுக்கும் செய்ய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.


நம்மை நேசிப்பவர்களையே நாமும் நேசித்தால் அதில் பெருமை படுவதற்கு ஒன்றும் இல்லை.

நம்மை பகைபவர்களையும் நாம் நேசித்தால்தான் நமது நேசம் கடவுளுடைய நேசத்தை போன்று இருக்கும்."


"நமது ஆண்டவரின் தாராள குணத்தை கொஞ்சம் பாருங்கள்.

"அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள்."


நாம் கோடிஸ்வர தந்தையின் பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம்.

தெருவில் போய் அங்கு நடந்து கொண்டிருக்கும் பிச்சைக்கார பையன்களையும் வீட்டிற்கு அழைத்து வந்து,

"இனி என்னுடைய அப்பா உங்களுக்கும் அப்பாதான், அவருடைய சொத்துக்கெல்லாம் நீங்களும் வாரிசுகள்" என்று சொல்லுவோமா?

ஆனால் இயேசு நம்மைப் பார்த்து அப்படித்தானே சொல்லுகிறார்!


"என் தந்தை அவரது. பகைவர்களையும் நேசிக்கிறார்

நீங்கள் உங்கள் பகைவர்களை நேசித்தால் எனது தந்தையின் பிள்ளைகள் ஆவீர்கள். அவருக்கு உரிய விண்ணக வீடு உங்களுக்கும் உரியதாகும் "

என்று தன் தந்தையை நமது தந்தையாக்கி ,தனது வீட்டை நமக்கும் உரிமைக்கும் அளவுக்கு இயேசு தாராள குணம் உள்ளவர்.

பரிசுத்த ஆவியும் அத்தகைய தாராள குணத்தை நமக்கு இலவசக் கனியாக தந்திருக்கிறார்.

இயேசு வாய்ச்சொல் வீரர் அல்ல, செயல்வீரர்.

 இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது தனது பாடுகளுக்கு காரணமாயிருந்த அத்தனைபேரையும்  
 மன்னிக்கும்படி தந்தையிடமும் வேண்டுகிறார்.

இதைவிட யாரால் தாராள குணத்தோடு செயல் புரிய முடியும்!


"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத். 5:48)


இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)

தந்தை இறைவன் தன் நிறைவிலிருந்து தனது படைப்புகளுக்கு இலவசமாக அள்ளி வழங்கியிருக்கிறார்.

அவர் எவ்வளவு அள்ளி வழங்கினாலும் அவரது நிறைவுக்கு ஒருபோதும் குறையவே வராது.

இயேசு நம்மையும் தன் தந்தையைப் போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அவர் எவ்வாறு தன் நிறைவிலிருந்து எல்லோருக்கும் இலவசமாக வழங்கி இருக்கிறாரோ 

அதுபோல நாமும் நாம் இலவசமாக பெற்றதை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

தந்தை இலவசமாக எவ்வளவு வழங்கினாலும் அவரது நிறைவு குறையாது.

அதே போல நாமும் இலவசமாகப் பெற்றதை மற்றவர்களுக்கு எவ்வளவு வழங்கினாலும் நாம் பெற்றதில் குறைவு ஏற்படாதபடி இறைவன் பார்த்துக் கொள்வார்.

ஒரு சிறு உதாரணம்:

 நம்மிடம் இருப்பதை கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

உலக ரீதியாக பார்த்தால் இருப்பதிலிருந்து கொடுக்கும்போது இருப்பது குறையும்.

ஆன்மீக ரீதியில் பார்த்தால் நம்மிடம் இருப்பதிலிருந்து தாராளமாக மற்றவர்களுக்கு உதவினால் 

தொடர்ந்து உதவ இறைவன் தமது இருப்பை ஏதாவது ஒரு வழியில் அதிகரிப்பார்.

இந்த விசுவாச அடிப்படையில்தான் நமது துறவியர் நடத்தும் அனாதைகளுக்கான அன்பு இல்லங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.

இறைவன் மீது கொண்டுள்ள அசையாத விசுவாசத்தின் அடிப்படையில்தான் தங்களிடம் இருப்பதை வைத்து உதவி இல்லங்களை ஆரம்பிக்கிறார்கள்.

 அது தொடர்ந்து நடைபெற இறைவனது உதவி எப்போதும் இருக்கிறது.

 வருடக்கணக்காக இயங்கும் இல்லங்கள் இறைவனை நம்பியே நடத்தப் படுகின்றன.

அவற்றிற்கு நன்கொடைகள் கொடுத்து உதவ ஆட்களை இறைவனே ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.

தங்களுடைய வருமானத்திலிருந்து ஏழைகளுக்கு தாராளமாக உதவும் தனிப்பட்ட நபர்களின் வருமானம் கூட 

குறையாமல் இறைவன் பார்த்துக் கொள்கிறார்.

 நமது தாராள குணம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு இறைவனின் பங்கும் இருக்கும்.

நண்பரொருவர் தென்காசியிலிருந்து பாவூர்சத்திரத்துக்கு  பஸ்சுக்கு காத்துக்கொண்டிருக்கிறார்.

 அவருடைய சட்டைப்பையில் டிக்கெட்டுக்கான காசு மட்டும் இருக்கிறது.

நின்று கொண்டிருக்கும்போதே ஏழை ஒருவனின் வாடிய முகத்தைப் பார்த்து இரக்கப்பட்டு இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு பஸ்சுக்கு வைத்திருந்த காசை அவனிடம் கொடுத்து விட்டு,

நடக்க ஆரம்பித்தார்.

சிறிது தூரம் நடந்திருக்கும் போது அவர் எதிர்பாராத விதமாக நண்பர் ஒருவர் அவரது பைக்கில் lift கொடுத்தார்.

அது இறைவனின் ஏற்பாடு.

நம்மிடம் இருக்க வேண்டியது அசையாத விசுவாசம்.

இறைவன் படைத்த இயற்கையின் அமைப்பில் இருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

காற்றின் அழுத்தம் குறைந்த இடத்தை நோக்கி அழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்று வீசும்.

காற்று வீசினால் தான் மழை பெய்யும்.

அதற்காகவே இறைவன் அழுத்த மாறுபாடுகளைப் படைத்திருக்கிறார்.

தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி பாயும்.

மேடு பள்ளங்கள் இல்லாவிட்டால் ஆறுகள் ஓடாது. ஆறுகள் ஓடாவிட்டால் விவசாயம் நடக்காது. விவசாயம் நடக்காவிட்டால் சாப்பாடு கிடைக்காது.

இப்போது ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.

 மேடு பள்ளங்களை இறைவன் ஏற்படுத்தியிருப்பது நமது சாப்பாட்டிற்காகத்தான்.


அதேபோல்தான் சமூக அமைப்பிலும்  பிறர் அன்பு வளர வேண்டுமென்றால்,

கொடுப்பவரும் இருக்க வேண்டும் பெறுபவரும் இருக்க வேண்டும்.

இலவசமாக பெற்றதை இலவசமாக கொடுக்க வேண்டுமென்றால் கொடுத்ததை பெறுவதற்கும் ஆட்கள் இருக்க வேண்டும்.

சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை இறைவன் அனுமதித்திருப்பதே

 நாம் நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து 
விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வை ஈட்டுவதற்காகத்தான்.

சமூக ஏற்றதாழ்வுகளை இறைவன் அனுமதித்திருப்பதே

  நாம் அனைவரும்  ஆன்மீகத்தில் வளர வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவன் தாராளமாகத் தந்திருக்கிறார்.

தாராள குணத்தையும் தந்திருக்கிறார்.

 தாராளமாகக் கொடுப்போம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment