Saturday, March 6, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*20 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*20
(தொடர்ச்சி)


"இராயப்பரே, நான் இப்போ உடனே அம்மாவைப் பார்க்க வேண்டுமண்டும்."

"ஹலோ நீங்கள் அடிக்கடி வந்து என்னை தொந்தரவு செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.

உங்களுக்கு உலகத்துல வேலையே இல்லையா?"

"இப்போ அவசரமாக என்னுடைய வேலை அம்மாவை பார்ப்பதுதான்."

"உலகத்திலிருந்து அவர்களைக் கூப்பிட வேண்டியதுதானே!"

"நான் நேரில் பார்த்து பேச வேண்டிய சில விஷயங்கள் உள்ளன."

"பின்னால் திரும்பி பாருங்கள்."

"அம்மா! உங்களைத்தான் பார்க்க வந்தேன்.

இராயப்பர் கையில ஆண்டவர் சாவிகளை கொடுத்தாலும் கொடுத்தார்,

 ஒவ்வொரு முறை வரும்போதும் அவர் அனுமதி இல்லாமல் உள்ளே வர முடியவில்லை."

"அவர் கடமையைத்தான் அவர் செய்கிறார்."

"இந்த ஆளை உள்ளே கூட்டிக்கொண்டு போங்கள், அம்மா.

 அல்லது என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்."


"உள்ளே வாருங்கள். உட்காருங்கள்.
சொல்லுங்கள்."

"உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்.

சின்ன வயதிலிருந்தே மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்.

உங்களுக்கு மூன்று வயது ஆகும்போது உங்களது கற்பை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விட்டீர்கள்.

 கற்பைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது.

அதை பற்றி உங்களிடம் பேசுவதற்காக தான் பூமியிலிருந்து விண்ணை நோக்கி பறந்து வந்தேன்."  

"நீங்கள் கேளுங்க,  நான் பதில் சொல்கிறேன்.''

"அம்மா, வாழ்நாள் முழுவதும் கற்புடன், கன்னியாக இருப்பேன் என்று மூன்று வயதிலேயே வார்த்தைப்பாடு கொடுத்து விட்டீர்கள்.

 உலகத்திலும் நமது துறவிகளும்   
துறவற வாழ்க்கைக்குள் நுழையும்போது கற்பிக்கான வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள்.

விவரம் தெரியாத சாதாரண மக்கள்,

" கற்பு துறவிகளுக்கு மட்டும் உரியதா?

 எங்களுக்கு கிடையாதா?

 ஏன் அவர்கள் மட்டும் வார்த்தைப்பாடு கொடுக்க வேண்டும்?"

 என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் கூறவேண்டும்?"

"கற்பு துறவிகளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவானது.

மனிதனால் பிறந்த அனைவரும் கற்பு நெறி காக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்."


"அப்போ நீங்கள் மட்டும் ஏன் 
கற்பிற்கான வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறீர்கள்?"

" முதலில் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது ஆதி பெற்றோரைக் கடவுள் அவரே நேரடியாகப் படைத்தார்.

அதற்குப்பின் மனிதர்களின் ஒத்துழைப்போடு தான் புதிய மனிதர்களை படைக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

தீர்மானம் நித்தியகாலமாக எடுக்கப்பட்டது.

முதல் பெற்றோரைப் படைத்த பின்பு அது நடைமுறைக்கு வந்தது.

கணவனும் மனைவியும்தான் இறைவனின் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்கிறார்கள். 

அதற்கு ஏற்றபடி தான் அவர்களுடைய உடலை அமைத்தார்.

கணவனும் மனைவியும் உடலை உருவாக்குகிறார்கள், இறைவன் ஆன்மாவை நேரடியாக படைத்து உடலோடு சேர்க்கிறார்.

அது சம்பந்தமாக கணவனும் மனைவியும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை வகுத்துக் கொடுத்தார்.

அவர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் வகுத்துக் கொடுத்த ஒழுக்க நெறிகளின் படி வாழ்வதுதான் கற்புநெறி வாழ்க்கை.

கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் 
பிரமாணிக்கமாக இருப்பதாக திருமண நாளன்று கொடுத்த வாக்குறுதி தான் கற்பிற்கான வார்த்தைப் பாடு.

ஆக திருமணம் ஆனவர்களும் கற்புநெறிப் படிதான் வாழ வேண்டும்.

திருமணமாகாதவர்களுக்கு படைப்புத் தொழிலில் பங்கு இல்லை.

அவர்கள் தங்கள் உடலை பாவ மாசு இன்றி காத்துக் கொள்வதற்கும் ஒழுக்க நெறிகள் தரப்பட்டுள்ளன.

அந்த ஒழுக்க நெறிகள்படி வாழ்பவர்கள் கற்புடன் வாழ்கின்றார்கள்.

திருமணமாகாதவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் இறைவனின் ஆறாவது கட்டளையில் தரப்பட்டுள்ளன.

திருமணமானவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் இறைவனின் ஒன்பதாவது கட்டளையில் தரப்பட்டுள்ளன.


ஆக திருமணம் ஆகாதவர்களும் ஆனவர்களும் கற்புடன்தான் வாழ வேண்டும்.

கற்பு எல்லோருக்கும் பொதுவானது.

உடலை ஒழுக்க நெறிகளுக்கு மாறாக பயன்படுத்தாமலும்,

அதற்குரிய மனத் தூய்மையுடன் வாழ்வதும்தான் கற்புநெறி வாழ்க்கை.

உலக மக்களை இரு வகையாகப் பிரிக்கலாம்,

 திருமணம் ஆகாதவர்கள்,

 திருமணமானவர்கள்.

 இரண்டு சாராருக்கும் கற்புக்கான ஒழுக்க நெறிகள் தரப்பட்டுள்ளன.


இரண்டு சாராருமே கற்புக்கான ஒழுக்க நெறிகள்படிதான் வாழ வேண்டும்.

இப்போது சொல்லு .

கற்பு எல்லோருக்கும் பொதுவானதா? இல்லையா?"

"அம்மா கற்பு எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏற்றுக்கொள்கிறேன்.

திருமணம் ஆனவர்கள் தங்களது உரிமைகளை தவறாகப் பயன்படுத்தி, அதை நியாயப்படுத்தியும் பேசிக் கொண்டிருக்கிறார்களே, அதைப்பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் கூறுங்களேன்."

"உணவு உண்பது எதற்காக?"

"உடல் சக்தியும் வளர்ச்சியும் பெறுவதற்காக."

"உண்ட உணவு எங்கு சென்று ஜீரணமாகி சக்தியும், வளர்ச்சியும் கொடுக்கும்?"

"உணவு வாய் வழியே வயிற்றுக்கு செல்ல வேண்டும். அங்கேயேதான் ஜீரணமாகும்."

" இன்னும் அதிகமாக உணவு உண்ணவேண்டும் என்னும் நோக்கத்தோடு வயிற்றுக்குச் சென்ற உணவை வேண்டும் என்றே வாந்தி எடுப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"பைத்தியம் என்று நினைக்கிறேன்."

"அதே மாதிரிதான் திருமணமானவர்களிலும் சில பைத்தியங்கள் இருக்கின்றன. 

திருமண உரிமையைப் பயன்படுத்தி மனைவி கருத்தரித்த பின் அதை வேண்டுமென்றே அழிப்பது பயங்கரமான கொலைக் குற்றம்.

கருத்தரிக்கக் கூடாது என்பதற்காக செயற்கை முறை கர்ப்பத்தடை சாதனங்களை பயன்படுத்துவதும் இறைவனுக்கு விரோதமான பாவம்.

திருமணம் ஒரு திருவருட்சாதனம். அதன்மூலம் இறைவன் தந்துள்ள வாழ்க்கைத் துணைவியையோ, துணைவனையோ விவாகரத்து செய்வதும் இறைவனுக்கு வினோதமான பாவம்.

இறைவன் இணைத்ததைப் பிரிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

பிறர் தாரத்தை விரும்புவதும் பாவம்.

கற்பு இறைவன் நமக்குத் தந்த பொக்கிஷம், அதைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை."

"கற்பு எல்லோருக்கும் பொது தானே.

அப்புறம் நீங்கள் ஏன் கற்புக்காக 
specialஆ வார்த்தைப்பாடு எடுத்தீர்கள்?

துறவிகள் ஏன் எடுக்கிறார்கள்?"

"என்னையும் துறவிகள் பட்டியலில் சேர்த்துக்கொள்.

திருமணம் ஆகி இருந்தாலும்,

 நானும் துறவற வாழ்க்கைதான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தேன். 

உங்களுக்கு தெரியும்,
 திருமணம் ஆனவர்கள் தங்கள் உடலை எப்படி எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கடமைகளும் உரிமைகளும் உள்ளன.

இந்த கடமைகளும் உரிமைகளும் திருமணம் ஆகாதவர்களுக்குக் கிடையாது.

இந்த கடமைகளையும் உரிமைகளையும் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்பவர்கள் தான் துறவிகள்.

அவர்கள் திருமண வாழ்வையும், அதற்கான உரிமைகளையும் தியாகம் செய்கின்றார்கள்.

 அதற்காக அவர்கள் எடுக்கும் வார்த்தைப்பாடே கற்பிற்கான வார்த்தைப்பாடு.

குடும்ப வாழ்வை தியாகம் செய்து விட்டு முழுமையாக இறை பணிக்கு தங்களையே அர்ப்பணிக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவர்களுடைய கற்பிற்கான ஒழுக்க நெறி இவர்களுக்கு பொருந்தும்."
.
"உங்களையும் துறவிகள் பட்டியலில் கேட்கச் சொன்னீர்கள்.

ஆனால் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?"


"3 வயதில் இருந்தே கோவிலில்தான் நான் வளர்ந்தேன்.

மூன்று வயதிலேயே வாழ்நாள் முழுவதும் கன்னியாக வாழப் போவதாக இறைவனுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். 

இது எங்களது குரு சக்கரியாசுக்குத் தெரியும்.

14 வயதுக்கு மேல் கோவிலில் வாழ முடியாது.
கோவிலில் வளர்ந்தவர்களை 14 வயதில் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள்.

நான் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்ததனால், எனது கன்னிமைக்கு பங்கம் ஏற்படாமல் காப்பாற்றக்கூடிய ஒரு மாப்பிள்ளைக்கு

என்னை திருமணம் செய்து கொடுக்க சக்கரியாஸ் தீர்மானித்தார்.

மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்க வேண்டியவர் பரிசுத்த ஆவி.

ஆவியானவருடைய தூண்டுதலின் படி சக்கரியாஸ் என்னை மணக்க விரும்பும், மனைவியை இழந்தவர்களுக்கு (widowers) அழைப்பு விடுத்தார்.

வந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கோல் கொடுக்கப்பட்டது.

அதில் சூசையப்பர் கையிலிருந்த கோல் துளிர்விட்டது, ஒரு புறா வந்து அமர்ந்தது.

எனது கணவராக சூசையப்பரை பரிசுத்த ஆவியே தேர்ந்தெடுத்தார்.

நானும் என் பங்குக்கு சூசையப்பரிடம் எனது கன்னிமைக்கு பாதுகாவலராய் இருந்தால் மட்டுமே அவரை கணவராக ஏற்றுக் கொள்வதாகச் சொன்னேன்.

 அவரும் அதன்படி வாக்குக் கொடுத்தார்.

அதன்பிறகுதான் மண ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

போதுமா? மேலும் விபரம் வேண்டுமா?"

"பிரிவினை சகோதரர்கள் இயேசு பிறக்கும் வரைக்குமான தங்களது கன்னிமையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் கன்னி என்பதற்கு பைபிளில் ஆதாரம் இல்லையே

 திருச்சபை அதை எப்படி விசுவாச சத்தியமாக போதிக்கலாம் என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன பதில் கூறவேண்டும்?"

(அம்மா தொடர்வார்கள்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment