Sunday, March 28, 2021

இவர்களுக்குமா பாராட்டுக்கள்?

இவர்களுக்குமா பாராட்டுக்கள்?


1.சாத்தான்:
இறைமகன் மனுவுரு எடுத்து நம்மோடு தங்க முதல் முதல் உதவி செய்தவன் சாத்தான் தான்.

அவன் ஏவாளைச் சோதித்திருக்காவிட்டால் இறைமகன் மனிதனாக வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இயேசுவை யூதர்களிடம் காட்டிக் கொடுக்கும் வழி யூதாஸைத் தூண்டியவனே அவன்தான்.

அவன் ஒரு முட்டாள். அறிவிலி.

மனிதர் மீட்புப் பெறுவதையோ விண்ணகம் செல்வதையோ விரும்பாதவன் அவன்.

இயேசு மனிதர் மீட்பு பெறுவதற்காகவும்,

 அவர்களை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவும்தான் சிலுவையில் பலியானார்.

உண்மையிலேயே அவனுக்கு மூளை இருந்திருந்தால் இயேசுவின் நோக்கம் அவனுக்கு புரிந்திருக்கும்.

புரிந்திருந்தால் அவரை கொல்லும்படி யூத மதகுருக்களை ஏவி இருக்கவும் மாட்டான். 

அவரைக் காட்டிக்கொடுக்கும்படி யூதாசை தூண்டியிருக்கவும் மாட்டான்.

இயேசுவைக் கொன்று நமக்கு மீட்பு பெற்றுத்தந்த சாத்தானின் முட்டாள் தனத்திற்கு பாராட்டுக்கள்!

 

2.யூதாஸ்: உண்மையிலேயே இயேசுவை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் யூதாசுக்கு இல்லை.

இருந்திருந்தால் அவருக்குதீர்ப்பு கிடைத்தவுடன் சந்தோஷப்பட்டிருப்பான்.

ஆனால் அவன் மாசில்லாத இரத்தத்தை காட்டிக் கொடுத்ததற்காக மனம் வருந்தினான்.

முப்பது வெள்ளிக் காசை வீசி எறிந்தான்.

நான்டுகொண்டு செத்தான்.

 ஏழ்மையின் அரசரைக் காட்டிக்கொடுத்து நாம் மீட்புப் பெற உதவிய யூதாசின் பண ஆசைக்கு பாராட்டுக்கள்!

3: இயேசு பொதுவாழ்வில் நுழைந்ததிலிருந்து இயேசு நமக்காக சிலுவையில் பலியாக காத்துக் கொண்டிருந்தவர்கள் யூதமத குருக்கள்.

இயேசு பலியாக காத்துக் கொண்டிருந்தார்.

யூதமத குருக்கள் அவரை ஒழிக்க என்று நினைத்துக்கொண்டு பலியாக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் மீது அவர்களுக்கு இருந்த பொறாமைதான் அதற்கு காரணம்.
அவர்களுடைய பொறாமைக்கும் நமது பாராட்டுக்கள்!

4. வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பார்கள்.

ஆதித் திருச்சபையின் கிறிஸ்தவர்கள் சிந்திய இரத்தம்தான் உலகில் திருச்சபை வேகமாக வளர உதவியது.

அவர்களது ரத்தத்தைச் சிந்தி திருச்சபை வளர உதவிய ரோமையை ஆண்ட கொடுங்கோலர்களுக்கு நமது பாராட்டுக்கள்!

5.நமது இன்றைய எதிரிகள்:

"உங்கள் எதிரிகளை நேசியுங்கள். உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்."

 என்ற இயேசுவின் அறிவுரையை பின்பற்ற நமக்கு உதவுபவர்கள் நம்மைப் பகைப்பவர்கள்தான்.

நம்மை அழிக்க நினைப்பவர்கள் நிலைவாழ்வு பெற அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை.

நம்மை அதாவது கிறிஸ்தவத்தை அழித்தே தீருவோம் என்ற உறுதியோடு ஒரு கும்பல் நாட்டில் உலவிக் கொண்டிருக்கிறது.

 அவர்கள் நமக்கு இரண்டு விதத்தில் உதவி செய்கிறார்கள்.

 முதலாவது நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மால் வாழ முடியும் என்ற உண்மையை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

 இரண்டாவது அவர்களுக்காக நாம் கடவுளிடம் மன்றாட வேண்டும் என்ற ஆசையை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பகைவர்களை நேசியுங்கள் என்ற கிறிஸ்தவின் ஆசையை நிறைவேற்ற நமக்கு உதவிக் கொண்டிருக்கும் 
அவர்களுக்கும் பாராட்டுக்கள்!


ஒவ்வொருவரும் அவரவர் கடந்த கால வாழ்வில் நடந்த அவர்களுக்கு பிடிக்காத நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தால் இன்று அவற்றிற்காக இறைவனுக்கு நன்றி கூறத் தோன்றும்.

ஏனென்றால் ஒவ்வொரு வேண்டாத நிகழ்ச்சியும் நமக்கு ஏதாவது ஒரு நன்மையை விளைவிக்கத் தான் நடந்திருக்கும்.

எனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

அப்பொழுது ஆவுடையானூர் R.C நடுநிலைப்பள்ளியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.

P.U.C தேர்வு எழுத D.E.O வின் அனுமதியைப் பெற வேண்டும்.

எனது தலைமை ஆசிரியரும் அதே முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதற்காக விண்ணப்ப படிவத்தில் நாங்கள் இருவரும் தென்காசி உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் கையெழுத்து பெற்று விட்டு

 அங்கிருந்து D.E.O வின் கையெழுத்தைப் பெற திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்தில் ஏறுவதற்காக 

தென்காசி பேருந்து நிலையத்தில் Exit gate வழியே உள்ளே நுழைகிறோம்.

நாங்கள் நுழைந்து கொண்டு இருக்கும்போது திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து நகர்ந்து Exit gateக்கு வந்துவிட்டது.

அதை நிறுத்துவதற்காக இருவருமே கை அசைத்தோம்.

'ஆனால் அது நில்லாமலே போய் விட்டது.

"பார்த்தீங்களா, சார், driver கொழுப்ப?  

இருவரும் கை அசைத்தும் நிறுத்தாமல் போகிறான்."


"போகட்டும் போகட்டும். என்ன அவசரமோ? 

அடுத்த பேருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில்."

ஒரு மணி நேரம் காத்திருந்து அடுத்த பேருந்தில் ஏறி பயணிக்கிறோம்.

ஆலங்குளத்தைத் தாண்டி சென்றபோது நாங்கள் கண்ட காட்சி எங்களுக்கு அதிர்ச்சியளித்தது.

எங்களை விட்டு விட்டு போன பேருந்து புளியமரம் ஒன்றில் மோதி Accident ஆகி நின்றது.

Driver sideல ஒரு ஆறு பேருக்கு கால் கை முறிவு.

சிலருக்கு காயம்.

அவர்கள் மருத்துவமனையில்.

"பார்த்தீங்களா, சார், driverக்கு கொழுப்பு இல்லை சார்.

நம்மை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பேருந்தில் ஏற்றாமல் விட்டுவிட்டு வந்து இருக்கிறான். கடவுளுக்கு நன்றி கூறுவோம்."

"நம்மை ஏற்றாமல் வந்தவனுக்கும் நன்றி கூறுவோம்."


எங்களுக்கு அடுத்த வீட்டில் டாக்டர் ஒருவர் இருந்தார். ஒரு சகாய மாதா பக்தர். எனது நண்பர். தாமஸ் ஜான்
அவர் பெயர்.

"Good evening, Doctor."

"Good evening. உட்காருங்கள்."

"மாதா படத்தை சட்டைப்பையில் தான் வைத்திருப்பீர்கள். இப்பொழுது கையில் வைத்து இருக்கிறீர்கள்?"

"அம்மாவுக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறேன்."

"என்ன விசயம்?"

"இன்று காலையில் எனக்கு விருப்பம் இல்லாத செயல் ஒன்றை நடத்தி என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஒரு பத்து மணி அளவில் சுரண்டையிலிருந்து பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன்.

 பின்னால் வழக்கம்போல வாசலுக்கு எதிர்த்த இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

வழியில் ஒரு ஆள் பஸ்ஸில் ஏறினார்.

"டாக்டர், கொஞ்சம் எழுந்து முன்னால் வந்து உட்கார முடியுமா?"

"ஏன்? நான்தான் ஏற்கனவே உட்கார்ந்திருக்கிறேனே?"

"நீங்கள் எந்த ஊருக்கு போகவேண்டும்?"

"இது தேவையற்ற கேள்வி. நான் எந்த ஊருக்குப் போனால் உங்களுக்கு என்ன?''

".பரவாயில்லை. கொஞ்சம் முன்னால் வாருங்கள். உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."

எனக்கு கோபம் வந்தது. எழக்கூடாது என்று எண்ணினேன்.

ஆனாலும் ஏதோ ஒரு எண்ணம் எழு என்றது.

எழுந்து முன்னால் போய் அவருடனே உட்கார்ந்துவிட்டேன்.

குருங்காவனத்தைத் தாண்டி பஸ் வந்து கொண்டிருந்தது.

Driver கட்டுப்பாட்டையும் மீறி பஸ் இடது பக்கம் சாய்ந்து விட்டது. 

நான் ஆட்களோடு ஆளாக உள்ளே மாட்டிக் கொண்டேன்.

வாசல் தரைப்பக்கம். அதன் வழியே வெளியேற முடியாது.

பஸ்ஸில் முன்புற பின்புற கண்ணாடிகளை உடைத்து எங்களை ஒவ்வொருவராக வெளியே எடுத்தார்கள்.

ஒரு சில சிராய்ப்புகள் தான். வேறு பெரிய காயம் ஒன்றும் ஏற்படவில்லை. மாதா அதிசயமான விதமாய் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள்."

"எப்படி?"

"நான் முதலில் இருந்த இருக்கை வாசல் பக்கம்.

என்னை முன்னால் அழைத்திருக்காவிட்டால் பஸ் சாயும்போது முதலில் வெளியே விழுந்திருப்பேன்.


என் மேலே பஸ் விழுந்திருக்கும் நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது."

"அப்புறம்?''

என் பையில் எப்போதும் மாதா படம் இருக்கும்.

இன்றும் இருந்தது.

மாதா தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்.

மாதாவுக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறேன்."

"உங்களை முன்னால் அழைத்த ஆளுக்கு நன்றி கூறினீர்களா?"

"கூறாமல் இருந்திருப்பேனா?

என்னை காப்பாற்ற மாதா அவரைத் தானே பயன்படுத்தி இருக்கிறார்!"

"கடவுளுடைய வழிமுறைகள் அதிசயமானவை."

ஒவ்வொருவர் வாழ்விலும் இதேமாதிரி சிறுசிறு நிகழ்வுகள் நடந்திருக்கும்.

அவற்றை நினைத்துப் பார்த்து இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment