Thursday, March 18, 2021

"நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று." (அரு.5:36)

"நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று." (அரு.5:36)

முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் பிணியுற்றிருந்த ஒருவனை இயேசு குணமாக்கி,

'எழுந்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு நட"
என்றார்.

இயேசு ஓய்வுநாளில் அவனை குணமாக்கியதோ, அவன் தனது படுக்கையை தூக்கிக்கொண்டு நடந்ததோ யூத மதத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.


இயேசு இதை ஓய்வுநாளில் செய்ததற்காக யூதர்கள் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.

இயேசு அவர்களிடம், "என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.

அவர் கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று சொன்னதற்காக அவர் மீது மேலும் கோபமாக இருந்தார்கள். 

அவரைக் கொல்ல வேண்டுமென்று மேலும் உறுதிபூண்டனர்.

அவர் செய்த புதுமைகளிலிருந்து அவர் இறைமகன் என்பதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு அவர் செய்த நல்ல செயல்களிலும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

யூதர்கள் செய்த அதே தவற்றை நாமும் அநேக சமயங்களில் செய்து கொண்டிருக்கிறோம்.

நமது ஒவ்வொருவர் வாழ்விலும் இயேசு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

செயல்களைப் பார்க்கிறோம்.

 ஆனால் செய்பவர் இயேசுவே என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். .

அனேக செயல்கள் ஏதோ தற்செயலாக நமது வாழ்வில் நடந்து வருவதாக எண்ணுகிறோம்.

 ஆனால் தற்செயல் என்பதே நமது வாழ்வில் இல்லை.


 ஒன்று நமது விருப்பப்படி நடைபெறும் செயலாக இருக்கும்.

 அல்லது இறைவன் விருப்பப்படி நடைபெறும் செயலாக இருக்கும்.

நமது விருப்பப்படி நடைபெறும் செயல் நமக்கு நன்மையையும் விளைவிக்கலாம் தீமையும் விளைவிக்கலாம்.

ஆனால் இறைவன் விருப்பப்படி நடைபெறும் செயல் நமக்கு நன்மையை மட்டுமே விளைவிக்கும்.

கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் நமது கடந்தகால வாழ்வில் நடைபெற்ற  செயல்களை நினைத்துப் பார்ப்போம்.

நமது திட்டத்திற்கு அப்பாற்பட்டு நடந்த எல்லா செயல்களுக்கும் மறைமுகமாக ஒரு தொடர்பு இருப்பது புரியும். 

ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மையமாக கொண்டு நடை பெற்றிருப்பதும் புரியும்.

அவை இறைவனின் திட்டத்தின்பாற் பட்டவை.
 

நண்பர் ஒருவர் 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 23ஆம் தேதி நடந்த அரியலூர் இரயில் விபத்தின்போது அவரது வாழ்வில் நடந்த நிகழ்வை என்னோடு பின்னொருநாள் பகிர்ந்து கொண்டார்.

அவர் ஆழ்ந்த மாதா பக்தர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபமாலை சொல்லிக்கொண்டே இருப்பவர்.

தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் சென்னையில் ஏறியவர் இரவு முழுவதும் ஜெபமாலை செபித்துக் கொண்டுதான் இருந்தார்.

எக்ஸ்பிரஸ் அரியலூரில் வந்து நின்றபோது இன்னும் விடியவில்லை.


கையில் ஜெபமாலையை வைத்திருந்தவர் ஜன்னல் வழியே கையை நீட்டினார்.

எதிர்பாராதவிதமாக ஜெபமாலை கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது .

வேகமாக ரயிலை விட்டு இறங்கினார்.

ஜெபமாலை பிளாட்பாரத்தின் ஓரத்தில் விழுந்து நழுவி தண்டாவாளத்தின் அருகே விழுந்து விட்டது.

ரயில் நிற்கும்போது ஜெபமாலையை எடுக்க முடியாது.

ஜெபமாலையை எடுக்கும்போது ரயில் போய்விடும்.

ஜெபமாலை வேண்டுமா, ரயிலில் போக வேண்டுமா, உடனடியாக முடிவு எடுத்தாக வேண்டும்.

ஜெபமாலை இல்லாமல் ரயிலில் ஏற மனது வரவில்லை.

ரயில் போகுமட்டும் காத்திருந்து போனபின் இறங்கி ஜெபமாலையை எடுத்து அதற்கு ஒரு முத்தம் கொடுத்தார்.

"அம்மா, நீங்கள் என்ன செய்தாலும் எனது நன்மைக்காகத்தான் இருக்கும். இந்த ரயிலில் போனால் அடுத்த ரயில். நீங்கள் என்னோடு இருந்தால் போதும்."

சொல்லிக்கொண்டே அங்கிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து, ஜெபமாலை சொல்ல ஆரம்பித்தார்.

முக்கால் மணி நேரம் கூட ஆகியிருக்காது, அந்த செய்தி வந்த போது.

இவரை இறக்கிவிட்டு போன ரயில் 
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக உடைந்திருந்த மருதயாற்றின் (Maruthaiyar) பாலத்தின் மேல் பயணிக்கும்போது முதல் ஐந்து பெட்டிகளும் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கிவிட்டன.

நண்பர் பயணித்தது இரண்டாவது பெட்டி.

ஜெபமாலையின் மேல் முத்தமாரி பொழிந்தார்.

தன்னை ஆற்றிற்குள் விழாதபடி காப்பாற்றுவதற்காக கீழே விழுந்த ஜெபமாலை!

ஜெபமாலை கீழே விழும்போது சங்கடமாக இருந்தது.

அது தன்னை காப்பாற்றுவதற்காக மாதா செய்த புதுமை என்று எண்ணியபோது அவரது நெஞ்சமெல்லாம் நன்றிப் பெருக்கால் ஓடியது.

நம் வாழ்வில் எது நடந்தாலும் நமது நன்மைக்காகவே நடக்கும்,

 இறைவனின் பராமரிப்பின்படியே நடக்கும் என்ற ஆழமான விசுவாசம் இருந்தால் 

நமது வாழ்வு எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

பெற்றோர் என்ற முறையில் நாம் குழந்தைகளை வளர்க்கும் போது நமது இஷ்டம் போல் தான் அவர்களை செயல்பட வைக்கிறோம்.

தங்கள் இஷ்டப்படி செயல்பட முடியவில்லையே என்பதற்காக அவை அழுதாலும் நாம் கண்டுகொள்வதில்லை.

நாம் செய்வது குழந்தையின் நல்லதுக்காகத்தான் என்பது நமக்குத் தெரியும்.

குழந்தை ஏதாவது ஆசைப்பட்டு கேட்டாலும் அது அதற்கு நன்மை பயக்கும் என்று தெரிந்தால் தான் வாங்கி கொடுப்போம்.

 நன்மை பயக்காது என்று தெரிந்தால் அது எவ்வளவு அடம் பிடித்தாலும் வாங்கி கொடுக்க மாட்டோம்.

  குழந்தைக்கு நம்மீது கோபம் கூட வரும். நாம் அதையும் கண்டுகொள்வதே இல்லை.

 நமக்கு முக்கியம் குழந்தையின் நலன்.

 இதேபோல்தான் நம்மை இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும் படிப்பு வரவில்லை, தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை என்று எண்ணுகிறவர்கள் புனித ஜான் மரிய வியான்னியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வியான்னி பக்தியுள்ள பையன், ஆனால் படிப்பு வரவில்லை.

குருவானவர் ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டு குருமடத்தில் சேர்ந்தார்.

கஷ்டப்பட்டு படித்தும்அவரால் தேர்வுகளில் வெற்றி பெற புரியவில்லை.

பொறுப்பில் உள்ளவர்கள் அவருக்கு குருப் பட்டம் கொடுக்க தயங்கினார்கள்.

ஆனால் அவரது பக்தி ஒன்றுக்காக குரு பட்டம் கொடுக்க ஒத்துக் கொண்டார்கள்.

குருவானவர் ஆனபின்,

ஆர்ஸ் நகர பங்கு குருவாக நிியமிக்கப்பட்டார்.

அவர் அறிவு சார்ந்த எதையும் சாதிக்கவில்லை.

ஆனால் அவரது பக்தி மக்களை கவர்ந்தது.

திருப்பலி நேரம் போக நாள் முழுவதும் பாவசங்கீர்த்தனம் கேட்பது மட்டுமே அவரது பணி.

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட பாவசங்கீர்த்தனம் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

வெளிநாடுகளில் இருந்துகூட பாவசங்கீர்த்தனம் செய்வதற்காகவே அவரைத் தேடி வந்திருக்கிறார்கள்.

ஒரு பெண் தன்னுடைய கணவர் தற்கொலை செய்துகொண்டதால் அவரது ஆன்மாவின் நிலை பற்றி மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள்.

நமது புனிதர், "கவலைப்பட வேண்டாம்.
 தங்களது கணவர் உயிர் பிரியும் முன் மனஸ்தாபப்பட்டு விட்டதால் இரட்சிக்கப்பட்டு விட்டார்."
 என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

அவரது பக்தி அவரை இறைவனோடு மிகவும் நெருக்கமாக்கியிருந்தது.

ஆகவே கடவுள் நமக்கு படிப்பை தரவில்லையே என்று யாரும் கவலைப்பட தேவை இல்லை.

நமக்கென்று ஒரு வாழ்க்கை முறையை அவரே அமைத்து வைத்திருப்பார்.

 எழுத வாசிக்க தெரியாத ஒருவர் ஒரு கோவிலில் மணி அடிக்கும் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

நேர்காணலின் போது உங்களது email விலாசத்தையும் கொடுத்துவிட்டு போங்கள் என்றார்களாம்.

அப்படின்னா என்னவென்றே தெரியாது என்றாராம்.

அப்படியானால் வேலை இல்லை என்று விட்டார்களாம்.

அவர் மனம் தளராமல் ஒரு பலசரக்குக் கடையில் வேலைக்கு சேர்ந்தாராம்.

சில வருடங்களில் கிடைத்த சம்பளத்தை மிச்சம் பிடித்து ஒரு பெட்டிக்கடை வைத்தாராம்.

பெட்டிகடை பெரிய கடையாகி நிறைய பணம் சம்மதித்தாராம்.

ஒரு வங்கியில் கணக்கு திறக்க போனாராம்.

email விலாசம் கேட்டார்களாம்.

"அது தெரிந்திருந்தால் இன்னும் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு மணி அடித்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்.

நல்லவேளை அது தெரியவில்லை" என்றாராம்.

ஆண்டவர் சித்தம் இருந்தால் அறியாமை கூட ஆசீர்வாதமாக மாறும். 

நாம் ஒவ்வொரு முறை கர்த்தர் கற்பித்த ஜெபம் சொல்லும் போதும் தந்தை இறைவனை நம்முள் வர அழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

", எங்களுக்கு அன்றாட உணவை தாரும்."

"எங்கள் பாவங்களை மன்னியும்."

"எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்."

"எங்களைத் தீமையிலிருந்து இரட்சியும்."

என்று நாம் அவரிடம் வேண்டும்போது நம்முள் இருந்துதான் நமது வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவில்லை.

 செயல் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்.

அதை நாம் உணர வேண்டும்.

நமது திட்டத்திற்கு மாறாக நம்மில் நடக்கின்ற ஒவ்வொரு செயலும் அவரது திட்டப்படியே நடக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். 

ஒரு ஆளை பார்க்க ஒரு அலுவலகத்திற்கு செல்கிறோம். இது நமது திட்டம்.

ஆனால் பார்க்க முடியவில்லை. இது தந்தையின் திட்டம்.

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க நாம் முயற்சி செய்கிறோம். இது நம்முடைய திட்டம்.

ஆனால் அதன் இரண்டாவது அலை ஆரம்பித்துவிட்டது. இது தந்தையின் திட்டம்.

நமது ஒவ்வொரு திட்டத்திற்கும் காரணம் இருப்பது போலவே,

  தந்தையின் ஒவ்வொரு திட்டத்திற்கும் காரணம் இருக்கும்.

இதை நாம் ஏற்றுக்கொண்டு தந்தையின் திட்டப்படி என்ன நடந்தாலும் நன்றி கூறுவோம்.

 மன அமைதியுடன் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment