Thursday, March 4, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*18(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*18
(தொடர்ச்சி)

",சிலருடைய குணம் சுவர் கடிகாரத்தின் பெண்டுலம் போன்றது. கடிகாரம் ஓடாது இருக்கும்போது பெண்டுலம் ஆடாது, அசையாது இருக்கும்.

ஓட ஆரம்பித்தால் இரண்டு கடைசி எல்கைகளுக்கும் போய்விட்டு வரும். நடுவில் நிற்காது. 

பெண்டுலத்தைப் போன்றவர்களால் நிதானமாக இருக்க முடியாது.

ஒன்று அளவுக்கு மீறிய சந்தோஷத்தில் இருப்பார்கள், அல்லது, அளவுக்கு மிஞ்சிய வருத்தத்தில் இருப்பார்கள்.

ஒன்று படுவேகமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள், அல்லது, ஒரேயடியாகப் படுத்து விடுவார்கள்.

அமைதியாக இருக்கும் கடல் திடீரென்று சுனாமியாக மாறி கடற்கறை மக்கள் குடியிருப்புகளை விழுங்கி ஏப்பம் விட்டு விடுவது போல.

Virtue stands in the middle.

நற்குணத்தின் அடையாளம் நிதானம்.

சாந்தம் ஒரு நற்குணம். அதன் அடையாளமும் நிதானம்தான்.

இயேசு சர்வ வல்லப கடவுள்.

ஆனால் அவரைத் கொல்ல முயற்சி எடுத்தவர்களிடம் அவர் எவ்வளவு நிதானமாக நடந்துகொண்டார்!

ஒரு முறை அவரை மலை உச்சியில் இருந்து உருட்டி விடுவதற்காக தள்ளிக் கொண்டே போனார்கள். 

அவர்களை எதிர்த்து அவர் போராடவும், இல்லை பயந்து ஓடவும் இல்லை.
.
அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்.
(லூக்.4:28-30)


பரிசேயர்கள் சென்ற எல்கைக்கு இயேசுவும் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அவர்கள் அழிந்து போயிருப்பார்கள்.

அவரது பாடுகளின் போது அவர் காட்டிய நிதானத்தை நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

அவரோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த ஒரு சீடன் அவரைக் காட்டிக் கொடுத்த போது அவனை எவ்வளவு சாந்தமாக "நண்பனே" என்று அழைத்தார்!

அவரது எதிரிகள் அவரைக் கொல்வதற்காக அழைத்துச் சென்றபோது பலியிடப்படுவதற்காக செல்லும் ஆட்டைப் போல எவ்வளவு அமைதியாக சாந்தமாக நடந்து சென்றார்!

அவரைக் கல் தூணில் கட்டிவைத்து, சாட்டையால் அடித்தபோதும்,

தலையில் முள்முடியைச் சூட்டி அவமானப்படுத்திய போதும்  

ஒரு வார்த்தை கூட பேசாமல் அவ்வளவு அவமானத்தையும் அமைதியாக தாங்கிக் கொண்டாரே!

சிலுவையில் உயிர் விட்ட கடைசி நொடி வரை அவர் பட்ட வேதனைகளை எல்லாம் 

எவ்வளவு சாந்தமாக நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தந்தையிடம் ஒப்புக்கொடுத்தார்!


இயேசுவின் சாந்தத்தில் ஒரு துளியாவது நம்மிடம் இருக்க வேண்டாமா?"

''இயேசுவின் பாடுகளை ஒரு நிமிடம் தியானித்தால் கூட அவருடைய சாந்தத்தில் கொஞ்சமாவது பங்கு கிடைக்கும்.

இன்றைய உலகில் நடைபெறும் எல்லா தீமைகளுக்கும் காரணம் மனிதன் சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுத்து செயலில் இறங்குவதுதான்.


நமது வாழ்நாளில் உணர்ச்சிவசப்பட்டு காரியங்களில் இறங்குவதற்கு ஒவ்வொரு வினாடியும் காத்துக்கொண்டிருக்கிறது.

தந்தையின் உணர்ச்சிவசப்பட்ட முடிவால் தான் அநேக பிள்ளைகள் குடும்பத்தைவிட்டே ஓடிப்போய் விடுகிறார்கள்.

அவர்கள் தவறு செய்யும்போது தகப்பனார் சாந்தமாக அவர்களிடம் பேசி அவர்களுடைய தவறை அவர்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் திருந்துவதோடு தந்தையோடு சமாதானமாகவும் இருப்பார்கள்.

நிர்வாகிகளின் அவசர உணர்ச்சிகரமாக முடிவுகளால்தான் அலுவலகமே 
பாதிக்கப்படுகிறது.

முன்கோபம் உள்ளவர்கள் சிறு தவறுகளை பார்த்தால்கூட கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள்.

அளவுக்கு மிஞ்சிய கோபத்தினால் ஏற்படும் எதிர் விளைவுகளை சமாளிக்க அவர்களால் முடியாத போது தான் தங்களது முன்கோபம் தவறானது என்பதை உணர்வார்கள்.

சாந்தகுணம் உள்ளவர்களிடம் கோபத்திற்கான அடையாளமே இருக்காது.

சிறு தோல்விகளைக் கூட தாங்க முடியாதவர்கள்தான் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அடுத்து முயற்சிகள் செய்வதையும் கையைவிட்டு விடுகிறார்கள்.

விளைவு?

வாழ்க்கையே தோல்வியில் முடிகிறது.

ஆனால் சாந்தகுணம் உள்ளவர்களிடம் விரக்தி நெருங்க முடியாது.


எத்தனை முறை தோற்றாலும் அமைதியாக ஆரவாரமின்றி தோல்வியின் காரணத்தை ஆய்ந்து கண்டுபிடித்து முயற்சிகள் செய்து வெற்றிக்கனியை பறிப்பார்கள்.

அவர்களை பொறுத்த மட்டில் தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு.

இயேசு பாரமான சிலுவையைச் சுமந்துகொண்டு போகும்போது பல முறைகள் சுமை தாங்கமாட்டாமல் கீழே விழுந்தார்.

 ஆனால் விழுந்தவர் விழுந்தே கிடக்க வில்லை.

 எழுந்து சிலுவை மரத்தில் உயிர் விடும் வரைப் பாடுகளைத் தொடர்ந்தார்.

 இயேசு தனக்கான பாடுகளை அவரேதான் தேர்ந்தெடுத்தார். 

ஏன் விழ வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்தார்?

 நமக்கு முன்மாதிரிகை காட்டுவதற்காகத்தான்.

 ஆன்மிகத்திலும் எத்தனை முறை விழுந்தாலும் மனம் தளராமல் எழுந்து நடைபோட வேண்டும் 

மனித பலகீனத்தை நன்கு அறிந்திருந்ததால்தான் பாவசங்கீர்த்தனம் என்ற திரு அருள் சாதனத்தை இயேசு ஏற்படுத்தினார்.

பாவத்தில் விழுவது மனித பலகீனம். 

எழ உதவுவது இறைவனின் திரு அருள்சாதனம்.

எவ்வளவு மோசமான பாவத்தில்,
எத்தனை முறை விழுந்தாலும், எவ்வளவு காலம் விழுந்து கிடந்தாலும் 

ஒரு வினாடி உத்தம மனஸ்தாபத்தாலும்,

பாவ சங்கீர்த்தனத்தாலும்

ஒரே நொடியில் எழுந்திருந்து ஆண்டவரின் அருள் வரத்தால் ஆன்மீகப் பாதையில் வீர நடை போடலாம்! 

புனித அகுஸ்தினார் 30 ஆண்டுகள் பாவச் சேற்றில் அமிழ்ந்து கிடந்தவர்தான்.

 நொடிப்பொழுதில் எழுந்து திருச்சபையின் மிகப்பெரிய புனிதர்களுள் ஒருவராக வளர்ந்தார்.

Slow but steady என்பார்கள்.

பிறந்த குழந்தை ஒவ்வொரு நொடியும் நிதானமாக வளர்ந்துதான் பெரிய மனிதன் ஆகிறது.

ஆன்மீகத்திலும் வளர்ச்சி மெதுவாக இருக்கலாம் ஆனால் நிலையானதாக இருக்க வேண்டும்.

சாந்த குணம் உள்ளவர்கள் எப்போதுமே நிதானமாக இருப்பார்கள்.

மிகவும் சுகமாக இருந்தாலும் சரி,
 மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் சரி,

ஆசைப்பட்ட வழி வாழ்க்கை அமைந்தாலும் சரி, 
ஆசைக்கு எதிரான வாழ்க்கை அமைந்தாலும் சரி,


வாழ்க்கையில் இன்பங்கள் நிறைந்து இருந்தாலும் சரி, 
துன்பங்கள் நிறைந்ததாக இருந்தாலும் சரி,

நிதானமாகவே இருப்பார்கள்.

எப்பொழுதும் அவர்கள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு இருக்கும்.

அலைகளால் அலைக்கழிக்கப்பட்ட கடல் நடுவே படகில் பயணிக்கும் போது அப்போஸ்தலர்கள்,

பயந்துபோய்,

 உணர்ச்சிவசப்பட்டு 

"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்"
(மத்.8: 25)
என்றார்கள்.

ஆனால் சாந்த குணம் உள்ள இயேசுவோ நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

அலைகடலை படைத்தவரே அருகில் இருக்கும் போது ஏன் அப்போஸ்தலர்கள் பயத்தில் விழுந்தார்கள்?

தங்களைப் படைத்த சர்வ வல்லவர் தங்களோடு இருப்பதை நினைத்து பார்த்திருந்தால் அவர்கள் பயப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

"ஏன் பயத்தில் கத்துகிறீர்கள்? ஆண்டவர் நம்முடன் தானே இருக்கின்றார். அவர் நம்மைக் கைவிடமாட்டார்"

என்று இராயப்பராவது சொல்லி இருக்கலாம்.

 ஆனால் சொல்லவில்லை. 

அவரும் பயந்து போய்தான் இருந்திருப்பார்.


நாமாவது ஆண்டவரது சாந்த குணத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.

"என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்."
(மத்.11:29)"
 
(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment