Thursday, March 25, 2021

பெரிய வெள்ளிக் கிழமை இல்லாவிட்டால், உயிர்ப்பு ஞாயிறு இல்லை.

பெரிய வெள்ளிக் கிழமை இல்லாவிட்டால், உயிர்ப்பு ஞாயிறு இல்லை.


""மனுமகன் பாடுகள் பல படவும்.

 மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு,

 கொலையுண்டு

 மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" 
(லூக். 9:22)


இறைமகன் மனிதனாகப் பிறந்ததே பாடுகள் படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாள் உயிர்க்கவும்

இதன் மூலம் மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்கவும்தான்.

நோக்கம்: மனித குல மீட்பு.
வழிமுறை : பாடுகள், மரணம், உயிர்ப்பு.

உயிர்ப்பு மகிமை என்றால்,
மரணம் மகிமைக்கான வழி.

"நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை."
(அரு.14:6)

நாம் மீட்பு அடைந்து விண்ணகத் தந்தை இடம் செல்ல வேண்டுமென்றால் இயேசு ஒருவரே வழி.

மீட்புப் பெற வேண்டுமென்றால், '

இயேசுவைப் போல பாடுகள் படவேண்டும்.

இயேசுவைப் போல மரணம் அடைய வேண்டும்.

இயேசுவைப் போல உயிர்க்க வேண்டும்.

ஆரம்ப பள்ளியில் வாய்ப்பாடு படிப்பது நமது மனப்பாட சக்தியை வளர்த்து கொள்வதற்காக அல்ல.

மேல் வகுப்புகளில் கணக்கு பயிலும்போது அவற்றை பயன்படுத்துவதற்காக தான் வாய்ப்பாடு படிக்கிறோம்.

கணக்கு செய்யும்போது அவற்றை பயன்படுத்தாவிட்டால் அவற்றைப்
படித்தும் பயனில்லை.

தினமும் பைபிள் வசனங்களை வாசிப்பது வாசிப்பு பயிற்சிக்காக அல்ல, வாழ்க்கையில் பயன்படுவதாக.

பைபிளில் நாம் வாசித்தது போல நமது வாழ்க்கையில் ஏதாவது நடைபெற்றது என்றால் அதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலையில் மூழ்கக் கூடாது.

இயேசு ஏழ்மையில் பிறந்தார்.

நமது வாழ்வில் ஏழ்மை இருந்தால் இயேசு தேர்ந்தெடுத்த வாழ்வு நமக்கும் கிடைத்திருக்கிறதே என்று நாம் பெருமைப்பட வேண்டும்.

இயேசு நற்செய்தி அறிவித்த பொது வாழ்வின் போது எல்லோரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாவிகளும் நோயுற்றவர்களும் அவரை ஏற்றுக்கொண்டார்கள். 

ஆனால் தங்களையே பரிசுத்தவான்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த

 பரிசேயரும், சதுசேயரும் அவரை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல

 அவரை கொல்வதற்கு நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாம் நமது கடமைகளை ஒழுங்காக செய்தாலும் நம்மை நம்மோடு இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால்,

நம்மைப் பற்றி குறை சொல்லிக்கொண்டே இருந்தால்

நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்,

 ஏனெனில் இயேசுவின் அனுபவத்தை நாமும் பெற நமக்கு கொடுத்து வைத்திருக்கிறது. 

நமது வாழ்க்கையில் துன்பங்கள் வரும் பொழுது நாம் பாக்கியவான்கள், ஏனெனில் இயேசுவும் துன்பப்படுவதற்காகவே பிறந்தார்.

நாம் மற்றவர்களிடம் அவமானப் பட நேர்ந்தால்,

"இயேசுவே உமக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்வதற்காக நான் உனக்கு நன்றி சொல்கிறேன்.

நீர் கடைப்பிடித்த பொறுமையை எனக்கும் தாரும் " 

என்று நன்றி ஜெபம் சொல்ல வேண்டுமே தவிர அவமானங்களுக்காக முணுமுணுக்கக் கூடாது.

மற்றவர்கள் நம்மேல் சிலுவையை சுமத்தும் போது நாம் இயேசுவின் சீடர்களாக இருக்கப் பெற்ற பாக்கியத்திற்காக இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.


"கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை"

 என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

கூழ் குடிப்பவர்களுக்கு மீசை இருந்தால் கூழ் குடிக்கும்போது கூழ் அதில் ஒட்டவே செய்யும்.

"துன்பப் படவும் கூடாது, இயேசுவின் சீடனாகவும் இருக்க வேண்டும்"
 என்பது நடைபெற முடியாத ஆசை.

இயேசுவைப்போல் நாம் இறுதிநாளில் உயிர்க்க வேண்டுமென்றால்

இயேசுவைப்போல் நாமும் துன்பத்தையும், மரணத்தையும் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் கிறிஸ்தவர்கள் என்றும் விசுவாசிகள் என்றும் நம்மையே அழைத்துக் கொள்ளும் நாம் 

துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோம்,

 மரணத்தை நினைத்தாலே பயப்படுகிறோம்.

விண்ணக வாழ்வைத் தேடாதவர்கள் துன்பத்தைக் கண்டும் மரணத்தை கண்டும் பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.

"விண்ணக வாழ்வு வேண்டும், ஆனால் மண்ணகத்தில் துன்பப் படக்கூடாது,"

என்று நினைப்பது,

"வெற்றி வேண்டும், ஆனால் பந்தயத்தில் கலந்து கொள்ள கூடாது"

என்று நினைப்பதற்குச் சமம்.

பெரிய வெள்ளிக்கிழமையன்று இயேசு மரணம் அடைந்ததால்தான்,

 மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தார்.

மரணம் அடைந்ததால்தான் உயிர்த்தார்.

"மரணமின்றி உயிர்ப்பு இல்லை"

என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மரணத்தை நினைத்து பயப்பட மாட்டார்கள்.

நோய்நொடிகள் வரும்போதும் மற்ற துன்பங்கள் வரும் போதும் அவற்றை நீக்க இறைவனிடம் வேண்டுவது தவறா?

நிச்சயமாக தவறு இல்லை. அதற்கும் இயேசுவே தனது ஜெபத்தில் முன்மாதிரிகை காண்பித்திருக்கிறார் கெத்சமனே தோட்டத்தில்

 இயேசு தந்தையிடம் 

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.


நாமும் துன்பங்கள் நீங்க தந்தையிடம் பிள்ளைகள் என்ற உரிமையோடு ஜெபிக்கலாம்.

 ஆனால் துன்பப்பட வேண்டும் என்பது தந்தையின் விருப்பமானால் அதை அவருக்காக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாமும், "தந்தையே, உமக்கு விருப்பமானால் எனக்கு இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை தாரும்.

 விருப்பம் இல்லாவிட்டால் துன்பத்தை உமக்காக தாங்கக்கூடிய சக்தியை தாரும்." என்று வேண்டுவோம்.

இறைவன் சித்தத்திற்கு பணிந்திருப்போம்.

எந்த காரணத்தை முன்னிட்டும் துன்பத்தை கண்டும், மரணத்தை நினைத்தும் பயப்படக்கூடாது.

தனது பொது வாழ்வின் போது எத்தனையோ பேருக்கு நோயிலிருந்து இயேசு விடுதலை கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பருக்கு வாத நோய் வந்தபோது அவருக்கு இயேசு குணம் அளிக்கவில்லை.

இயேசுவின் மடியிலேயே சூசையப்பர் உயிரை விட்டார்.

அவரை நல்ல மரணத்தின் பாதுகாவலராக திருச்சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

விண்ணுலகம் செல்லும் பாதை மலர் தூவப்பட்ட மெத்தை அல்ல.

முட்கள் நிறைந்த பாதை.

இயேசு கல்வாரி மலைக்கு சிலுவையை சுமந்து சென்ற பாதையைப் போல் கரடு முரடான பாதை.

விண்ணக பாதை சிலுவைப்பாதை. மரணம் விண்ணகத்தின் நுழைவு வாசல்.

 இதை ஏற்று சிலுவைப்பாதை வழிநடந்து, மரணம் வழியே நித்திய பேரின்ப வாழ்விற்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment