Friday, March 26, 2021

வாருங்கள், இறைமகனை இறைத்தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுப்போம்.

வாருங்கள், 
இறைமகனை இறைத்தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுப்போம்.



இயேசு சீடருள் இருவரை அழைத்து,

"எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழையும்போது இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று யாராவது உங்களைக் கேட்டால், அவரிடம், "இது ஆண்டவருக்குத் தேவை" என்று கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்

அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட்டு, இயேசுவை ஏறச் செய்தனர்.

அவர் செல்லும்போது வழியில் தங்கள் போர்வைகளை விரித்தனர்.

சீடர் கூட்டமும் 

மறுநாள் திருவிழாவுக்கு வந்திருந்த பெருங்கூட்டமும் 

கையில் குருத்தோலைகளோடு அவரை எதிர்கொண்டுபோய், " தாங்கள் கண்ட புதுமைகள் அனைத்தையும்பற்றி மகிழ்ச்சியோடு, உரத்த குரலில்,

கழுதையின் மேல் அமர்ந்திருந்த இயேசுவை

கையில் குருத்தோலைகளுடன் புகழ்பாடி

"ஆண்டவர் பெயரால் அரசராக வருகிறவர் வாழி!

 வானகத்தில் அமைதியும் உன்னதங்களில் மகிமையும் உண்டாகுக!"  

 ஓசான்னா! 

ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! 
 
இஸ்ராயேலின் அரசர் வாழி! "

 என்று ஆர்ப்பரித்துச் சென்றனர். 

 ஆனால் இதை எதற்காக செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது.

இறைவனுக்கு பலி கொடுப்பதற்காக ஆடு வளர்ப்போர்
 
பலி கொடுக்கும் நாளில்
 அதை அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இன்னும் ஓரிரு நாட்களில் மக்களுக்காக பலியாகப்போகும் செம்மறி இயேசுதான். 

தான் பலியாக கொல்லப்பட போவதை பல முறை அவருடைய அப்போஸ்தலர்களுக்குச் சொல்லியிருந்தும் அவர்களால் அதைச் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

மக்களும் இயேசு அவர்களுக்காக செய்த பல புதுமைகளை எண்ணியே அவரை புகழ்ந்து கொண்டு போனார்களே தவிர

 தங்களை பாவத்திலிருந்து மீட்க தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்கப் போகிறார் என்ற உண்மையை அறியாதிருந்தார்கள்.

மற்ற நாட்களில் பரிசேயரும்
சதுசேயரும் அவரை கொல்வதற்காக அவரைச் சுற்றி சுற்றி வந்தபோது 

தனது நேரம் இன்னும் வரவில்லை என்பதற்காக அவர்களிடம் இயேசு அகப்படவே இல்லை.

ஆனால் இப்போது இயேசு தன்னையே அவர்களிடம் ஒப்படைக்கப் போகிறார்.

ஒப்படைப்பதற்காகத்தான் இந்த பலி ஊர்வலம்.

இந்த ஊர்வலத்தை இயேசு தானே ஏற்பாடு செய்து நடத்துகிறார்.

ஊர்வலத்திற்காக கழுதையைக் கொண்டுவரச் சொன்னவர் இயேசு தான்.

மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

அவரைப் பலியிடப் போகின்ற பரிசேயர்களுக்கும் 

அவரைப் பலியிடப் போகின்றோம்
என்ற உண்மை தெரியாது.

அவரை ஒழிக்கப் போவதாகத்தான் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இயேசு தனது தந்தையிடம் கூறியதுபோல அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்தார்கள்.

ஒருவகையில் மீட்பு பணியில் அவர்கள் இயேசுவுக்கு உதவியிருக்கிறார்கள்.

எப்படி நமது முதல் பெற்றோரின் பாவம் கடவுளை மனித ஒரு எடுக்க உதவியதோ

அதேபோல இவர்கள் செய்த பாவம் மனிதகுலம் மீட்புப் பெற உதவியது.

அப்படி செய்ததால் அவர்கள் செய்தது புண்ணியம் ஆகிவிடாது, பாவமே.

ஆனால் தீமையில் இருந்தும் கடவுளால் நன்மையை வரவழைக்க முடியும் என்ற அவருடைய வல்லமையை இது காட்டுகிறது.

இன்றும்கூட இறைவன் உலகில் தீமையை அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்தியாவிலிருந்து கிறிஸ்தவத்தையே ஒழித்து விட வேண்டுமென்று ஒரு கும்பல் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது இன்றைய தீமை.

இயேசு நினைத்தால் தீமையை நடக்கவே விடாமல் தடுக்கவும் முடியும்,

 தீமை செய்தவர்களை அழிக்கவும் முடியும்.

ஆனாலும் நடைபெறும் தீமையை இயேசு மிகவும் பொறுமையாக 
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்றைய தீமையிலிருந்து அவர் என்ன நன்மையை வரவழைக்கப் போகிறார் என்பது நாம் விண்ணகம் சென்ற பிறகுதான் நமக்குத் தெரியும்.

குருத்தோலை பவனியைத் தியானிக்கும் போது நமக்கு மற்றொரு உண்மையும் புரியவரும்.

குருத்தோலை பவனியில் அவரைப் புகழ்ந்து பாடிச் சென்றவர்களில் ஒருவர்கூட 

பிலாத்து இயேசுவுக்கு மரணத் தீர்வையிட்ட இடத்தில் இருந்ததாக தெரியவில்லை.

பவனியின்போது
"இஸ்ராயேலின் அரசர் வாழி!"
என்று வாழ்த்தினார்கள்.

ஆனால் பிலாத்துவின் விசாரணையின்போது இருந்த
தலைமைக்குருக்களும் காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்!'' என்று கத்தினர். 

அதை எதிர்த்து ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை.

இயேசுவை மறுதலிப்பதற்காக வாயைத் திறந்த இராயப்பர் கூட 

அவரைக் காப்பாற்றுவதற்காக வாயை திறக்கவே இல்லை.

அன்னை மரியாளுக்கு இயேசுவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது நன்கு தெரியும்.

தனது மீட்புத் திட்டத்தைப் பற்றி இயேசு தன் தாயிடம் கட்டாயம் கூறியிருப்பார்.

 மனுக்குலத்தின் மீட்பிற்காக அவள் தன் அன்பு மகனையே பலியாக ஒப்புக்கொடுத்தாள்.

மீட்புப் பணியில் தன் மகனோடு இணைந்து செயல் புரிந்தாள்.

அதற்காகத்தானே அவரைப் பத்து மாதம் சுமந்து, பெற்று, வளர்த்தாள்.

மீட்டவர் இயேசு மட்டும் தான், மரியாள் அல்ல.

 ஆனாலும் மீட்புப்பணியில் இறைவனின் அடிமையாக மரியாள் செயல்பட்டாள்.

இயேசுவின் காலத்தில் இயேசுவின்பால் நன்றியோடு வாழ்ந்தவர்கள் பாவிகள்.

குருத்தோலை பவனி அன்று அவரை புகழ்ந்தவர்கள் இயேசுவால் மன்னிக்கப்பட்ட பாவிகள்.

இயேசுவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று பெருமையோடு வாழ்ந்த 
பரிசேயரும், சதுசேயரும்.

நாம் யார் பக்கம்?

சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் அனைவரும் பாவிகள் என்று நமக்கு தெரியும்.

 நம்மை தேடித்தான் இறைமகன் மனுமகன் ஆனார் என்றும்

 நமக்காகத்தான் பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்றும் நமக்கு தெரியும்.

அன்னை மரியாள் எப்படி தன் மகனின் மீட்புப் பணியில் அவருக்கு உதவிகரமாய் இருந்தாளோ 

அதேபோல் நாமும் இருக்க வேண்டுமென்று மரியாளும் மைந்தனும் எதிர்பார்க்கிறார்கள்.

நாமோ பாவிகள், நம்மால் எப்படி இயேசுவுக்கு உதவ முடியும்?

மரியாள் எவ்வாறு சிலுவைப் பாதையில் நடந்து, இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தபோது,  அவரைப் பரம தந்தைக்கு அகில உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தாளோ,

அதேபோல நாமும் நமது செபத்தின் மூலம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

"பரம தந்தையே,

எங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக்கிய உமது அன்புத் திருமகன் இயேசு கிறிஸ்துவை 

நாங்கள் எங்கள் பாவங்களுக்கும் அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

அவர் தன்னையே ஒப்புக் கொடுத்தது போலவும்,

 அன்னை மரியாள் தன் அன்பு மகனை ஒப்புக் கொடுத்தது போலவும், 

ஒவ்வொரு நாளும் எங்கள் குருக்கள் திருப்பலியில் அவரை ஒப்புக் கொடுப்பது போலவும்,

 நாங்களும் எங்களால் இயன்ற வகையில் எங்களது செபத்தின் மூலம் உமது திருமகனை எங்களது பாவங்களுக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்."

நாம் சாதாரணமானவர்களாக இருக்கலாம்.

 ஆனால் நாம் ஒப்புக்கொடுக்கும் பலி சர்வ வல்லமையுள்ள இறைமகன் இயேசு,

இறை தந்தையின் ஏக குமாரன்.

ஒவ்வொரு முறை ஒப்புக்கொடுக்கும் போதும் இயேசு பட்ட பாடுகளின் பலன்கள் நம் மீதும் அகில உலகின் மீதும் இறங்கும்.

இயேசு தனது இரத்தத்தை எல்லாம் சிந்தி சம்பாதித்த பலன்களை எல்லாம் நாம் ரத்தம் சிந்தாமலேயே ஒரு நிமிட ஜெபத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

அந்த ஒரு நிமிடமும் நம்மை நாமே சிலுவையில் தொங்கும் இயேசுவுடன் ஐக்கியப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு முறை ஒப்புக்கொடுக்க ஒரு நிமிடமே ஆகும்.

ஒவ்வொரு நாளும் எப்பொழுதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பலியை ஒப்புக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


பாடுகளின் பலன்கள் நம்மீது மழைபோல் பெய்து கொண்டே இருக்கும்.

பலியாகத்தானே இறைமகன் மனுவுரு எடுத்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நாமே அவரைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுப்போம்.

அதோடு  நம்மையும் ஒப்புக் கொடுப்போம்.

நமது சிந்தனை, சொல், செயல் உட்பட நமது வாழ்க்கை முழுவதையும்  நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment