Sunday, March 7, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*21 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*21
(தொடர்ச்சி)


"கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொன்னதிலிருந்து இயேசுவின் முப்பதாவது வயது வரை நடந்த எல்லா சம்பவங்களுக்கும் நானும் சூசையப்பரும் மட்டுமே சாட்சிகள்.

நற்செய்தியை எழுதியவர்களுக்கு நான் சொல்லி இருக்காவிட்டால், அந்த விவரங்கள் எப்படி தெரியும்? 

இயேசு வாழ்ந்த காலத்திலும் சரி இறந்த பின்பும் சரி அவருடைய அப்போஸ்தலர்களை எனது பிள்ளைகளாக எண்ணி வாழ்ந்தவள் நான்.

இயேசு அப்போஸ்தலர்களை என் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுதான் இறந்தார்.

அவர் விண்ணகம் எய்திய பின் நான் அப்போஸ்தலர்களின் 
தாயாகவும், ஆலோசனைகள் கூறுபவராகவும் எனது வாழ்நாள் முழுவதும் இருந்தேன்.

என்னைப் பற்றிய, இயேசுவின் பிறப்பை பற்றிய செய்தி உட்பட எல்லா விவரங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டவள் நான்.

அப்போஸ்தலர்களுக்கு நான் முக்காலமும் கன்னி என்ற உண்மை நான் சொன்னதால் தெரியும். 

நான் அவர்களோடு பகிர்ந்து கொண்ட செய்திகளில் சில நற்செய்தி நூல்களிலும் இடம் பெற்றுள்ளன,

இடம் பெறாதவை அப்போஸ்தலர்கள் மூலம் வாய்மொழியாக நேரடியாக மக்களை சென்று அடைந்திருக்கின்றன.

நான் முக்காலமும் கன்னி என்ற உண்மை உட்பட,

 என்னைப் பற்றிய அனைத்து உண்மைகளும் அப்போஸ்தலர்கள் மூலமே மக்களைச் சென்றடைந்துள்ளன" 


''அம்மா, அவங்க எதைச் சொன்னாலும் பைபிளில் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு புரிய வைப்பது எப்படி?"

"மகனே, கொஞ்சம் கவனி.

அருளப்பர் யார்?"

''.இயேசுவுக்கு பிரியமான சீடர்."

"அவர் இயேசுவின் பிறப்பு வளர்ப்பு பற்றி மக்களிடம் போதித்திருப்பாரா மாட்டாரா?"

"கட்டாயம் போதித்திருப்பார். இயேசுவைப் பற்றி போதிக்க ஆரம்பிக்கும்போது எப்படி அவரது பிறப்பை பற்றியே கூறாதிருக்க முடியும்?"

"ஆனால் அவர் அதைப்பற்றி நற்செய்தியில் எழுதவே இல்லையே?

அவருடைய போதனையை கேட்டவர்கள் அவரிடம் வந்து

"உங்களின் நற்செய்தி நூலில் இல்லாததை நாங்கள் நம்ப மாட்டோம்" என்று சொல்லியிருந்தால் அவர் என்ன பதில் கூறியிருப்பார்?"

"அதைத்தான் அவருடைய நற்செய்தி நூலின் கடைசி அதிகாரத்தில் கூறிவிட்டாரே!

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு. 21:25)

" சூசையப்பரும், நானும் குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்துக்குச் சென்ற விபரத்தை மூன்று நற்செய்தியாளர்கள் எழுதவில்லையே.
 அப்படியானால் எகிப்துக்குப் போகவில்லை என்று அர்த்தமா?

இயேசு எத்தனை ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார்?"

"மூன்று ஆண்டுகள்."

"எத்தனை நாட்கள்?"

"365 x 3 = 1,095 நாட்கள்."

"அவர், ஓய்வு நாட்கள் உட்பட, தினமும் நற்செய்தியை அறிவித்தார்.

தினமும் மக்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்தது.

சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்.

1,095 நாட்களிலும் எத்தனை புதுமைகள் செய்திருக்க வேண்டும்?"

"தினமும் பலர் 
குணமடைந்திருப்பார்கள்.

 அப்படி கணக்கு பார்த்தால், எண்ணற்ற புதுமைகள் செய்திருக்க வேண்டும்."

"ஆனால் நற்செய்தி நூல்களில் மொத்தம் எத்தனை புதுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?"

"நிச்சயமாக அத்தனை புதுமைகளும் பதிவுசெய்யப்படவில்லை."

"இயேசு போதித்தவைகளும் முழுமையாக நற்செய்தி நூல்களில் பதிவு செய்யப்படவில்லை.

 பதிவு செய்யப்பட்டவை போக மீதி உள்ளவற்றை அப்போஸ்தலர்கள் வாய் மொழியாக மட்டும் போதித்தார்கள்.


 அவர்கள் வாய் மொழியாக போதித்தவை திருச்சபையின் பாரம்பரியத்தில் உள்ளன."


"அதாவது பாரம்பரியத்தில் இருப்பவை எல்லாம் இயேசுவின் போதனைகளே.

எங்களுக்குப் புரிகிறது

ஆனால், அம்மா, நம்பாதவர்களை எப்படி புரியவைப்பது?"

"மகனே தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது.

 அவர்களுக்கும் புரியும், ஆனால் புரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 புரிந்ததை ஏற்றுக்கொண்டால் இராயப்பரின் தலைமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்குமே!"

"அது உண்மைதான். இராயப்பரின் தலைமையையும் ஏற்றுக்கொண்டால் திருச்சபையின் கட்டளைகளுக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டி இருக்கும்.

பைபிளுக்கு தங்கள் இஷ்டம் போல் பொருள் கொடுக்க முடியாது.

நான் உங்களை பார்க்க வந்தது கற்பு நெறி பற்றி சில அடிப்படை உண்மைகளை தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல.

உங்களிடம் சில வேண்டுதல்களை சமர்ப்பிப்பதற்காகவும்தான்.

கடவுள் உலகைப் படைத்தது அது மனிதனின் ஆன்மீக வாழ்வில் அவனுக்கு உதவிகரமாக இருப்பதற்காகத்தான்.

ஆனால் மனிதன் இறைவன் கொடுத்த புத்தியைப் பயன்படுத்தி இந்த உலகை ஆன்மீக வாழ்விற்கு எதிராக எவ்வளவு கெடுக்க வேண்டுமோ அந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறான்.  

குறிப்பாக பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய கற்பாகிய செல்வத்தைத் திருட 

அதை பாதுகாக்க வேண்டிய மனிதனே திருடர்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்.

எந்தப் பக்கம் நோக்கினாலும் இந்த திருட்டுக் கும்பல் தான்.

தனது விஞ்ஞான அறிவை இறைவனது ஞானத்தைத் தேடுவதற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக 

அதற்கு எதிராகவே பயன்படுத்தி கொண்டிருக்கிறான்.

சமூகத்தின் நன்மைக்காக என்று கூறிக்கொண்டு அவன் கண்டுபிடித்துள்ள சமூக தொலைத்தொடர்பு சாதனங்கள் (Social communication media)

கற்பாகிய செல்வத்தைத் திருடுவதிலேயே குறியாக இருக்கின்றன.

எந்த சாதனத்தைத் திறந்தாலும்

கற்புநெறிக்கு எதிரான காட்சிகள்தான்.

பொழுதுபோக்குக்காக என்று கூறிக்கொண்டு அவன் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள், சீரியல்கள், நாடகங்கள், பாடல்கள், எல்லாமே கற்புக்கு எதிரான காட்சிகளை சுமந்து கொண்டுதான் வருகின்றன.

அவற்றை பார்த்து ரசிப்பவர்களால் எப்படி தங்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள முடியும்?

Facebook, whatsapp போன்றவைகளையும் சாத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இப்பொழுதெல்லாம் சாத்தான் Smartphone மூலமாக எங்கள் சட்டைப் பைக்குள்ளே வந்துவிட்டான்.

பிறந்த குழந்தை கூட அதை பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பிக்கிறது.

கோவிலில் சிறுபிள்ளைகள் சேட்டை பண்ணாது இருப்பதற்குக் கூட நம்மவர்கள் அதைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு ஆறுதலான விஷயம் நம்மவர்கள் அதே சாதனங்களை நற்செய்தியை பரப்புவதற்காக தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இருப்பதுதான்.

 அதைக்கண்டு நாம் ஓரளவிற்கு ஆறுதல் அடைந்தாலும்

 எதிரிகளால் வீசப்படும் வலைகளை நோக்கி தான் மீன்கள் பாய்ந்து கொண்டிருக்கின்றன என்ற வருத்தமான செய்தியையும் மறுக்க முடியாது.

நம்மவர்களும் அவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை

 திருப்பலிக்கு வரும் சிலரின் ஆடை அலங்காரங்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மற்றவர்களுடைய கண்கள் கெட்டுப்போவதற்கு காரணமாக இருப்பதுவும் கற்புக்கு எதிராக பாவம்தான்.

கற்புக்கு எதிரான சோதனைகளிலிருந்து எங்கள் அனைவரையும் காப்பாற்ற உங்கள் திருமகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்."

"கவலைபடாதீர்கள், என்மேல் உண்மையான பக்தி வைத்திருப்பவர்கள் எந்த சோதனைக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு வினாடியும் உங்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்."

"மிகவும் நன்றி, அம்மா."

"ஹலோ! செல்வம்! அம்மாவுடன் பேசி முடித்தாய் விட்டதா?"

"திரும்பவும் வருவேன், உங்களோடு பேச."

" என்னோடு பேசவா? எதைப்பற்றி?"

"வரும்போது சொல்கிறேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment