Sunday, March 21, 2021

"என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்: அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை"(அரு.8:29)

"என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்: அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை"
(அரு.8:29)


   யூத குருக்கள் இயேசுவைக் கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்ததால், கூடாரத் திருநாளுக்கு இயேசு மறைவாகவே வந்தார்.

பாதித்திருநாள் முடிந்து, இயேசு கோவிலில் போதிக்க ஆரம்பித்த பின்புதான் இயேசு வந்திருப்பது அவர்களுக்குத் தெரியும்.

விழாவில் இறுதிநாளில் போதித்துவிட்டு, ஒலிவ மலைக்குச் சென்று திரும்பி வந்து, கோவிலில் போதிக்க ஆரம்பித்தார்.

அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைப் பிடிக்கவில்லை.

ஆனாலும் கேள்விகள் கேட்டு அவரைத் தொந்தரவு படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய கேள்விகளுக்கான பதிலில் பரிசுத்த தமதிரித்துவத்தில் அவருக்கும் தந்தைக்குமான உறவு பற்றி இயேசு பேசினார்.

தமதிரித்துவத்தில் ஆட்கள் மூவராயினும் மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்.

தந்தையின் சித்தமே தனது சித்தம் என்பதை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொன்னார்.

"என்னை நீங்கள் அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."17

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பண்பு என்பதால் அவரைப் பார்த்தவர்கள் தந்தையையும் பார்த்தவர்கள்தான்.


"என்னை அனுப்பியவர் உண்மையானவர்: நான் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகிற்கு எடுத்துச்சொல்லுகிறேன்."26

"என் தந்தை எனக்குக் கற்பித்ததையே நான் எடுத்துச்சொல்லுகிறேன்"28

''தந்தை நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேன் அதையே உங்களுக்கும் சொல்லுகிறேன்" என்று அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கிறார்.


29"என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்: அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை:"

"தந்தை மகனுள் இருக்கிறார், மகன் தந்தையிலுள் இருக்கிறார்."
என்ற தமதிரித்துவ உண்மையை இந்த வசனத்தில் கூறுகிறார்.

தந்தை, மகன், தூய ஆவி ஆட்கள் மூன்று. ஆனால் கடவுள் ஒருவர்.

தந்தை கடவுள்,

மகன் அதே கடவுள்,

தூய ஆவி அதே கடவுள்,

ஆகவே தந்தை இருக்கும் அதே இடத்தில் மகனும் இருப்பார், தூய ஆவியும் இருப்பார்.

ஏனெனில் மூவரும் அதே கடவுள்தான்.

நாம் தமதிரித்துவ கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.

நமக்குள்ளும், இறைவனோடும் நமக்குள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் விளக்கும்.

கடவுள் எங்கும் இருப்பதால் நாம் ஒவ்வொருவரும், எல்லோரும் கடவுளுக்கு உள்ளேதான் இருக்கிறோம்.

கடவுளும் நமக்குள் இருக்கிறார்.

தந்தை மகனுள்ளும் மகன் தந்தையுள்ளும் இருப்பது போலவே,

நாம் கடவுளுள்ளும், கடவுள் நம்முள்ளும் இருப்பதால்

நாம் கடவுளின் சாயலைப் பெற்றிருக்கிறோம்.     

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம். தந்தை நினைப்பதையே மகனும் நினைக்கிறார்.  தந்தை விரும்புவதையே மகனும் விரும்புகிறார்.   

நாம் தமதிரித்துவத்தின் சாயலாய் இருப்பதால் தந்தை விரும்புவதையே

 அதாவது மகன் விரும்புவதையே

 நாமும் விரும்ப வேண்டும்.

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருப்பம். Original.

தந்தை விரும்புவதையே நாமும் விரும்ப வேண்டும் Image

தந்தையும், மகனும் வெவ்வேறு விதமாக விரும்ப முடியாது. Impossible

நாம் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக விரும்பக் கூடாது. Possible, but should not.

விரும்பினால் இறைவனின். சாயலுக்கு தீங்கு செய்கிறோம்

தந்தையின் விருப்பத்தை அறிந்து அதன்படி நடக்க வேண்டும்.

தந்தையின் விருப்பத்தை அறிவது எப்படி?

1.இறைவனின் கட்டளைகளின் வழியாக.

2. பைபிள் வழியாக.

3. திருச்சபையின் போதனைகள் வழியாக.

4. மனசாட்சியின் வழியாக.

இவற்றுக்கு எதிராக நடந்தால் பாவம் செய்கிறோம்.

நமது வாழ்வில் நாம் செய்யும் எல்லா செயல்களையும், இவை கூறும் ஒழுக்க நெறிகளுக்கு கட்டு பட்டு செய்ய வேண்டும்.

ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது இவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கலாம்.


நாம் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எங்கு வாழ வேண்டும் போன்றவற்றை 

பைபிளும் சொல்லாது திருச்சபையும் சொல்லாது.

எப்படி செய்யவேண்டும் என்பதை மட்டும் அவை சொல்லும்.

நாம் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எங்கு வாழ வேண்டும் போன்றவற்றில் இறைவனின் சித்தத்தை எப்படி அறிவது?

இறைவன் எப்போதும் நம்முள் இருப்பதால் ஜெபத்தின் உதவியோடு அவளது சித்தத்தை அறிய முயற்சி செய்ய வேண்டும்.

உள் தூண்டுதல்கள்(Inspirations) மூலம் அவர் நமக்கு உதவுவார்.

இறைவன் நமக்குத் தந்துள்ள திறமைகளின்(Talents) அடிப்படையிலும், உள் தூண்டுதல்கள் மூலமும் இறைவனது சித்தத்தை அறிந்து கொள்ளலாம். 

 செயல்திட்டத்தை தமதிரித்துவத்தின் பெயரால்ஆரம்பித்து,  

 இறைவனின் வழி நடத்துதலின் படி நாம் செயலில் இறங்க வேண்டும்.

இரண்டு வழிகளில் இறைவன் நம்மை வழிநடத்துவார்.

திட்டத்தை செயல்படுத்த தேவையான சூழ்நிலையை அவரே உருவாக்கிக் கொடுப்பார்.

நாம் தவறு செய்ய நேர்ந்தால் தடைகளை ஏற்படுத்தி, நம்மைச் சரியான பாதையில் திருப்பி விடுவார்.

இறைவனோடு இணைந்து நாம் செயலில் இறங்கும்போது,

நமது திட்டப்படி நடக்கும் செயல்களும் இருக்கும்,

இறைவன் திட்டப்படி நடக்கும் செயல்களும் இருக்கும்.

நமது திட்டப்படி ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும் போது,

எதிர்பாராதவிதமாக நமக்கு ஒரு நோய் வருகிறது.

நோய் நமது திட்டப்படி வரவில்லை. அப்படியானால் அது இறைவன் திட்டப்படி வந்திருக்கிறது என்று அர்த்தம்.  

இறைவன் திட்டப்படி வந்திருப்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 புனித அந்தோனியார் வேத சாட்சியாக மரிக்க ஆசைப்பட்டு மொரோக்கோவுக்குப் பயணிக்கிறார்.

வழியில் நோய்வாய் படுகிறார்.

அது இறைவனின் திட்டம் என்பதை ஏற்றுக்கொண்டு திரும்புகிறார்.

அந்த திருப்பம்தான் அவரை கோடி அற்புதர் ஆக்கியது.

நமது விருப்பப்படி நடக்காதவை இறைவன் விருப்பப்படி நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டால் அதுவே நமது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

என்ன நடந்தாலும் இறைவன் திட்டப்படி தான் நடக்கிறது என்பதை ஏற்கும்போது,

இறைவன் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்கிறோம்.


இறைவன் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்ளும்போது நம்மிடம் இருக்கும் இறைவனின் சாயலுக்கு மதிப்பு அளிக்கிறோம்.


நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவைப் போலவே 

நமக்கும், நமது அயலானுக்கும் உள்ள உறவு இருக்க வேண்டும்.

நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர் மனதில் நாம் இருப்போம்,
 நமது மனதில் அவர் இருப்பார்.

இது நேசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.

நமது மனதில் இருக்கும் இறைவன் நமது நலனை மட்டும் மையமாக வைத்து செயல்படுவது போல

நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நமது மனதில் இருப்பதால் அவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் அவர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்.

கனவில் கூட நமது அயலானுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது.

அயலானுக்கு நன்மையை மட்டும் நினைத்தால்தான் நாம் இறைவனின் சாயலில் இருக்கிறோம்.

யாருக்காவது நாம் தீங்கு நினைத்தால் இறைவனின் சாயலை நாம் இழக்கிறோம்.

இறைவனின் சாயலை இழக்காமல் இறுதிவரை காப்பாற்றுபவர்கள் தான் விண்ணகம் செல்வர்.

இறை அன்புக்கும் பிறர் அன்புக்கும் எதிராக எதுவும் செய்யாதிருந்தால் நம்மிடம் பாவம் இருக்காது.

இறை அன்பிலும், பிறர் அன்பிலும் நாம் வளர்ந்தாள் புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

நம்மிடம் இருக்கும் தமதிரித்துவத்தின் சாயலை பத்திரமாக பேணி காப்போம்.

விண்ணகம் நம்மிடம் இருக்கும். விண்ணகத்தில் நாம் இருப்போம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment