Sunday, March 14, 2021

திருமண வாழ்வில் பிரச்சனைகளே இல்லையா? 4

திருமண வாழ்வில் பிரச்சனைகளே இல்லையா? 4


"இறைவன் நமது பெற்றோரை தனது சாயலில், அதாவது,
தமதிரித்துவத்தின் சாயலில் படைத்தார்.

பிரச்சனைகளே இல்லாத,

 பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட குடும்பத்தில்

 எப்படி பிரச்சனைகள் புகுந்தன?"


"இறைவன் தாராள மனதுடன் தன்னுடைய முக்கியமான பண்பாகிய சுதந்திரத்தை தனது 
படைப்போடு பகிர்ந்து கொண்டார்.

நமது முதல் பெற்றோர் தங்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதால்தான் பிரச்சனைகள் அவர்களுக்குள் நுழைந்தன.

ஏவாளுக்கு இறைவனுக்கு அடுத்த படி ஒரே உறவு ஆதாம்தான்.

இருவருக்கும் ஒரே உறவு இறைவன் மட்டும்தான்.

சாத்தானுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

குடும்பத்தில் சம்பந்தமே இல்லாத ஒருவனின் ஆலோசனையை கேட்டு தனது கணவனை ஏவாள் வழிநடத்தியதால் தான் பாவமும், பிரச்சனையும் புகுந்தன.

குடும்பத்தின் தலைவனாகிய ஆதாம் மூன்றாவது நபரின் ஆலோசனையைக் கேட்ட மனைவியை கடிந்து கொள்ளாமல் அதன்படி நடந்ததால் அவன் பாவம் செய்தான்.

இறைவன் கொடுத்த கட்டளையில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர்கள் இறைவனைத்தான் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். 

அதை விட்டு விட்டு சம்பந்தம் இல்லாதவனுடைய ஆலோசனையைக் கேட்டு நடந்தால் பிரச்சனை தவிர வேறு என்ன வரும்?


அடுத்து நமது முதல் பெற்றோர் செய்த மற்றொரு தவறான காரியம்
கடவுளின் குரலொலியைக் கேட்டவுடன் இருவரும் இன்ப வனத்து மரங்களிடையே ஒளிந்து கொண்டது.

இறைவனுக்குத் தெரியாமல் எதையும் செய்ய முடியாது, அவரிடமிருந்து எங்கும் ஒளியவும் முடியாது.

 அடுத்து அவர்கள் செய்த மிகப்பெரிய தப்பு குற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒருவர் மேல் ஒருவர் பழியைப் போட்டது.

அவர்களுடைய பிள்ளைகள் தானே நாம்.

அவர்களுடைய குணம் நம்மையும் தொற்றிக்கொண்டது."

"உண்மைதான். மணமக்கள் அவர்களுக்கு இடையிலான உறவை பற்றி அவரவர் பெற்றோரிடம், அல்லது நண்பர்களிடம், பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய குற்றம்.

அனேக பெற்றோர் அல்லது நண்பர்கள் சாத்தான் போல செயல்பட ஆரம்பிக்கின்றார்கள்.

விளைவு மணமக்களுக்கு உள்ளே பிரச்சனைகள்."


", மண மக்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இருக்கும்.

ஆனால் அவர்களாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.

சமாதான உறவை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளால் எந்த பிரச்சினையும் வராது.

கடவுள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையை கொடுத்திருக்கிறார்.

 ஆகவே எல்லோருடைய கருத்துக்களும் ஒரே மாதிரியாக இருக்காது.

 மணமகன் மணமகளுடைய கருத்துக்களோடு அவளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 மணமகள் மணமகனை அவனுக்குரிய கருத்துக்களோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அவரவருக்குரிய குறை நிறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டால்

 பிரச்சினைக்கே இடமில்லை."

"நிறைகளோடு ஏற்றுக் கொள்ளலாம்.
குறைகளோடு எப்படி ஏற்றுக்கொள்வது?"


", இப்போது என் தலையில் முடியே இல்லை. மொட்டையாக இருக்கிறது இருக்கிறது.

எனது மொட்டைத் தலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை?

உன் வாயில் இரண்டு பற்களைக் காணவில்லை. வாயைத் தூரவா எறிந்து விட்டாய்?"


"கரெக்ட். கடவுளுக்குப் பாவத்தை பிடிக்காது, ஆனாலும் பாவம் செய்கிற நம்மை ரொம்ப பிடிக்கும்.

இதே கொள்கையை மணமக்களும் பின்பற்றினால் அவர்களுக்குள் அன்பு குறையாது, பிரச்சனையும் வராது."

", தப்பு செய்தால் ஏற்றுக்கொண்டு திருந்த வேண்டுமே தவிர பழியை மற்றவர் போடக்கூடாது.

ஒருவருக்கொருவர் பழி போட ஆரம்பித்தால் ஒற்றுமை எப்படி இருக்கும்?''

                         ****

"தயவுசெய்து மன்னிச்சிடுங்க."

"எதுக்கடி?"

"இன்றைக்கு சாப்பாடு ருசியாக இருந்திருக்காது. சமையல் செய்யும்போது நான் ஏதோ தப்பு செஞ்சிருக்கேன்.மன்னிச்சிடுங்க."

           
"அதுக்கு நீ ஏண்டி மன்னிப்பு கேக்குற. நான் தான் மன்னிப்பு கேக்கணும். சமையல் பொருட்கள் வாங்கி வந்தது நான் தானே. நான் வாங்கியதில் ஏதோ தவறு இருந்திருக்கிறது.
 மன்னிச்சுக்கோ."

                ****

"இந்த இரண்டு பேருக்குள் பிரச்சனை வருமா?"

",அடுத்து குடும்பங்களில் நிலவும் முக்கியமான பிரச்சனை போதிய வருமானம் இன்மை.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"வருமானம் இன்மை என்று சொல்வதை விட வரவுக்குள் செலவு செய்ய தெரியாமை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

மணமகள் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்திருப்பாள்.

 கை நிறைய செலவழித்து பழகியிருப்பாள்.

 ஆனால் மணமகனின் குறைந்த வருமானம் அவளது செலவுக்கு பற்றாக்குறை ஆகும்போது பிரச்சனை கிளம்பும்.

நாம் பேசுவது ஆன்மீகமாக இருப்பதால் வருமானத்தினால் பிரச்சினைகள் வரும்போது திருக் குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.7:20)
இவை இயேசு தம் சீடரை ஏறெடுத்துப் பார்த்துக் கூறிய வார்த்தைகள்.

உலகத்தையே படைத்த இறைமகன் தான் மனிதனாகப் பிறந்தபோது தன்னை வளர்ப்பதற்காக ஒரு ஏழை தச்சுத் தொழிலாளியைத் தேர்ந்தெடுத்தார்.

குறைந்த வருமானம் உள்ளவர்கள் எல்லாம் உண்மையில் திருக்குடும்பத்தின் சாயலைப் பெற்றவர்கள்.

இந்த ஆன்மீக உணர்வு இருந்தால் வருமானம் எந்த காரணத்தை முன்னிட்டும் பிரச்சினைக்கு காரணமாக இருக்காது.

திருக்குடும்பத்தின் சாயலைப் பெற்றவர்கள் யாருடைய அறிவுரையும் இல்லாமலேயே தங்களுடைய செலவை தங்கள் வருமானத்துக்குள் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வார்கள்.''

",அப்போ வருமானம் குறைந்தவர்களின் பிரச்சனைகளுக்கு திரு குடும்பத்தில் வளர்ந்த இயேசுதான் தீர்வு என்கிறீர்கள்!" 


"அவைகளுக்கு  மட்டுமல்ல. எல்லா பிரச்சனைகளுக்கும் இயேசு தானே தீர்வு!
 
இயேசுவை நினைத்து வாழ்பவர்களுக்கு நோய்நொடிகள் துன்பங்கள் கூட ஒரு பிரச்சனையே இல்லை.

உண்மையில் துன்பங்கள் வரும் பொழுது நாம் இயேசுவுக்கு ஒப்பாகிறோம்.

இயேசுவைப்போல் சிலுவையைச் சுமப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு இயேசுவுக்கு நன்றி கூற வேண்டுமே தவிர வருத்தப்படக்கூடாது."

", துன்பங்கள் நீங்கும்படி இறைவனிடம் வேண்ட கூடாதா?"


 "தாராளமாக வேண்டலாம். அதற்கும் இயேசுவே முன்மாதிரிகை.


"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:"

 என்று இயேசுவே தன் தந்தையிடம் செபித்திருக்கிறார்!


 "எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்றும் அவரே செபித்தார்!

நாம் இயேசுவின் முன்மாதிரிகையை பின்பற்ற வேண்டும்.

குடும்பத்தை பொறுத்தமட்டில் இயேசு தரும் சிலுவையை மணமக்கள் இரண்டு பேரும் சேர்ந்து சுமக்க வேண்டும்.

சிலுவையின் கனம் குறையும்."

", துன்பங்கள் வருவது நமது பாவத்திற்கான தண்டனை என்று சிலர் கூறுகிறார்களே அது உண்மையா''

"இறைவன் அன்பு மயமானவர்.

 அவருக்கு நேசிக்க மட்டும் தெரியும், தண்டிக்கத் தெரியாது.

 தெரிந்திருந்தால் உலகம் என்றோ அழிந்து போயிருக்கும்.

''ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று அவருடைய சீடர் அவரை வினவினர்.

3 இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.
(அரு. 9:2,3)

இந்த வசனங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்,
கடவுளுடைய செயல்கள் நம்மில் மட்டில் வெளிப்படும் பொருட்டே
நமக்கு துன்பங்கள் வருகின்றன என்று.

துன்பங்கள் வரும்போது,

 "இறைவா என் மூலம் உம்மை நீர் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதற்கு உமக்கு நன்றி!"

என்று இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்."

",அப்படியானால் துன்பங்கள் வரவேண்டுமென்று இறைவனிடம் ஜெபிக்க வேண்டுமா?"

"தேவை இல்லை. நாம் கேட்காமலேயே இறைவன் நமக்கு தரும் வரங்களில் ஒன்றுதான் சிலுவை."

", குடும்பத்தில் குழந்தைகள் அதிகமாக பிறப்பது ஒரு பிரச்சனை என்று கூறுபவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?"

"அதை ஒரு ஆசீர்வாதம் என்பேன்.

சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு குடும்பத்திலேயே அவர்களுக்கு பயிற்சி கிடைக்கும்.

ஆற்றில் கூழாங்கற்களை பார்த்திருக்கிறீர்களா?

அவை பளபளப்பாக இருக்கும்.

காரணம்?

பல கற்கள் ஒன்றோடு ஒன்று உரசி தங்களையே பளபளப்பாக்கிக் கொள்கின்றன.

ஆனால் எந்தக் கல்லோடும் உரசாமல் பாறையிலிருந்து தனியே உடைத்துப் போடப்பட்ட கல் கரடுமுரடாக இருக்கும்.

இது இயற்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்."
(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment