Saturday, March 13, 2021

மணவாழ்வு ஆன்மீக வாழ்வு.3

மணவாழ்வு ஆன்மீக வாழ்வு.3


"திருமண மக்கள் இவ்வுலகில்தான் வாழ்கின்றார்கள். இவ்வுலகின் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றார்கள்.

அவர்களது வாழ்வு ஆன்மீக வாழ்வாக ஆவது எப்படி?"


''விசுவாசத்தின் அடிப்படையில் வாழ்வதுதான் ஆன்மீக வாழ்க்கை.

திருமண மக்கள் தங்களது மணவாழ்க்கையை இறைவன்பால் தங்களுக்கு இருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் வாழ்வதுதான் திருமண ஆன்மீகம்.

திருமணம் இறைமகன் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அருள் அடையாளம்.

அருள் அடையாளங்கள் ஏழுமே 
இறைவன் என்ற ஏரியில் இருந்து
 வயல் ஆகிய நமக்கு 
அருள் வரமாகிய தண்ணீரைக் கொண்டு வரும் வாய்க்கால்கள்.

இறையருளை மணமக்கள் மேல் மழைபோல் பொழிய வைப்பதற்காக ஏற்பட்ட அருள் அடையாளமே திருமணம்.


ஆகவே மணவாழ்வு இறை அருளால் நடைபெறும் ஆன்மீக வாழ்வு.

இறையருளால் இயங்கும் ஒரு ஆன்மீக அமைப்பே கத்தோலிக்க திருமணம்.

கத்தோலிக்க மணமக்கள் இறை அருளின் ஒளியிலேயே தங்களது மணவாழ்வின் கடமைகளை ஆன்மீக விதமாக நிறைவேற்றுகின்றனர்.

மணமக்கள் கிறிஸ்துவோடு தங்களுக்கு இருக்கும் ஆன்மீக உறவினை பற்றிய நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது நற்செய்தி அறிவிப்பாளராக மாறுகின்றனர்.

அவர்களது ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு அறிவிக்கின்றது. .

திருமண ஆன்மீகம் திருமண வாழ்க்கையைப் பற்றிய அவர்களது மனப்பான்மையை ஒழுங்குபடுத்துகிறது.

அதாவது திருமண வாழ்வின் நோக்கம்,

 நோக்கத்தை அடைய வாழவேண்டிய முறைகள் ஆகியவற்றை அறிவுறுத்துகிறது.

ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாத இருவரது இல்லற சிற்றின்பத்திற்கும் 

 ஆன்மீகத்தால் இயக்கப்படும் இருவரின் சிற்றின்பத்திற்கும் இடையில் பாரதூர வேறுபாடு இருக்கிறது.

ஆன்மீகம் இல்லாதவர்களின் இல்லற இன்பம் உலகத்தோடு முடிந்துவிடும்.

ஆனால் ஆன்மீகவாதிகளின் இல்லற இன்பம் அவர்களது விண்ணக வாழ்வின்போது நித்திய பேரின்பமாக மாறும்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையில் மணவாழ்க்கையை வாழ்வதற்கு ஆன்மீகம் மணமக்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.

கிறிஸ்து தான் ஏற்படுத்திய ஏழு திருவருட்சாதனங்கள் வழியாக தம்மையே உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

திருமணம் என்ற திருவருட்சாதனம் மூலமாகவும் கிறிஸ்து தன்னை உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

ஆக மணமக்கள் தங்களது ஆன்மீக வாழ்வின் மூலம் கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்கும் நற்செய்தியாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.

மணமக்கள் கிறிஸ்துவின் அன்பின் வழியில் தாங்கள் வாழ்வதன் மூலம் தங்களிடம் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

"இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

(மத்.18:20)

மணமக்கள் எங்கு இருந்தாலும் அங்கே அவர்களோடு கிறிஸ்துவும் இருக்கிறார்.


மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருப்பதால் மனித மொழியில் திருத்துவம் ஒரு சமூகம் என்று சொல்லலாம்.

மணமக்கள் இருவரும் ஒரே குடும்பமாய் இருப்பதால் குடும்பம் ஒரு சமூக அமைப்பு.

Just as God is a Trinity of persons–a community–marriage also is communitarian. 

ஆகவேதான் குடும்பத்தை 
தம திரித்துவத்தின் சாயல் என்கிறோம்.

மணமக்கள் நிரந்தரமாக வாழ்வளிக்கும் ஒரு சமூக வாழ்வு ஆன்மீக விதமாக வாழ்கிறார்கள்.

உலகமாகிய சமூகத்தின் அலகு (Unit) தான் குடும்பம்.

 கிறிஸ்து ஏற்படுத்திய அருள் அடையாளத்தால் உருவான மணமக்கள்(Sacramental couples) 

இறைவன் தங்கள் மேல் பொழிந்த ஆசீர்வாதங்களை உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இறைவன் அருளால் இருவர் ஒருவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ மணமக்கள் 

உலகிற்கு குடும்ப ஒற்றுமைக்கான உதாரணமாய் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பார்த்து மற்ற குடும்பங்களும் இறைவனில் எப்படி ஒற்றுமையாக வாழ்வதென்று கற்றுக் கொள்கிறார்கள்.

கணவன் மனைவியின் நலனுக்காக தன்னையே அர்ப்பணிக்கிறான்.

மனைவி கணவன் நலனுக்காக தன்னையே அர்ப்பணிக்கிறாள்.

இருவரும் இணைந்து தங்களையே இறைப் பணிக்காக அர்ப்பணிக்கிறார்கள்.

உலக சமூகமும் இத்தகைய அர்ப்பண வாழ்வையே வாழ வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னையே இறைவனுக்காகவும், சமூக 
நலனுக்காகவும் அர்ப்பணித்து வாழ வேண்டும் என்பதற்கு கிறிஸ்தவ குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு.

இப்பொழுதெல்லாம் உலகில் முழுமையான அர்ப்பண வாழ்வு என்பது அரிதாகிக்கொண்டு வருகிறது.

ஆனால் அதை வாழ முடியும் என்பதை *அர்ப்பண வாழ்வு வாழும் கிறிஸ்தவ குடும்பங்கள்* நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.


அர்ப்பண வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு இறைவன் தரும் மிக பெரிய ஆசீர்வாதம் குழந்தைகள்.

திருமண இன்பத்தை
 அனுபவிப்பவர்கள் மணமக்கள். அவர்களுக்கு குழந்தைகளை தருபவர் இறைவன்.

இன்பத்தை அனுபவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் இறைவன் தரும் குழந்தைகளைப் பெறாமல் தடுக்க அவர்களுக்கு உரிமை சிறிதுகூட இல்லை.

திருமண இன்பத்தின் முதல் நோக்கமே குழந்தை பேறுதான்.

குழந்தைகளை தருவதும், தராததும் இறைவன் விருப்பம்.

 ஆனால் நாம் தடை போட்டால் அது பாவம்.

செயற்கைமுறை கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது நமக்கு இறைவனோடு உள்ள உறவை முறித்து விடும்.

 நமக்கு இறைவனிடமிருந்து வர வேண்டிய அருள் வரங்களை தடுத்துவிடும்.

இறைவனது திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டால் இறைவனது ஆசீரை இழக்க நேரிடும்.

இறைவன் தாராள மனதோடு தருபவற்றை மணமக்கள் தாராள மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் எதைத் தந்தாலும் அது நமக்கு ஆசிர்வாதம் தான்."

"தராவிட்டாலும் ஆசிர்வாதம் தான்."

"நூற்றுக்கு நூறு உண்மை.

அவர் தரும் குழந்தைகளை வளர்க்கவேண்டிய அருள் வரத்தையும், பொருள் வளத்தையும் அவரே தருவார்.

வாழ்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும் இலாபத்திலும், நட்டத்திலும் 

இணைந்திருக்க வாக்குக் கொடுத்திருக்கும் மணமக்கள், எல்லா வகையிலும் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாய் இருக்க வேண்டும்.

கணவனுக்கு ஒரு துன்பமா? மனைவி அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

மனைவிக்குஒரு துன்பமா?
கணவன் அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

இருவருக்கும் துன்பமா?

இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டும்.


இருவரும் சேர்ந்து தங்களை சுற்றியுள்ள மற்ற அருள்அடையாள சமூகங்களுக்கு
 (sacramental communities) உதவிகரமாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும்.


சிறிய இறை சமூகங்கள் பல சேர்ந்து பெரிய இறை சமூகமாக மாறுகிறது.

சிறிய அருள் வகையாக குடும்பங்கள் பல சேர்ந்துதான் கிறிஸ்தவ சமுதாயம்.

கிறிஸ்தவ சமுதாயதத்தின் மற்றொரு பெயர் கிறிஸ்துவின் ஞான சரீரம்.

ஞான சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடொன்றும், கிறிஸ்துவோடும் நேரடி தொடர்புடையது.

ஞான சரீரத்தின் இதயம் கிறிஸ்துவே.

கிறிஸ்துவின் உயிர் அளிக்கும் இரத்தம்தான் ஞான சரீரத்தின் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதயத்தினால் உடல் இயங்கிக் கொண்டிருப்பது போல கிறிஸ்துவினால் இறை சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அருள் அடையாள திருமணங்கள் (Sacramental marriages)

தாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

இது அவர்களது நற்செய்திப் பணி.

கிறிஸ்துவின் அன்பின் ஒளி எங்கிருந்தாலும் மறைவாய் இருக்காது.

ஒளியின் இயல்பு அது.

அவ்வொளியைத் தாங்கும் கிறிஸ்தவ குடும்பங்கள் தாங்கள் செல்லுமிடமெல்லாம் அதைப் பரவ செய்து கொண்டிருக்கின்றன.

நற்செய்தியின் விழுமியங்களை
(Gospel values)‌உள்வாங்கி,

அவற்றை தங்களது வாழ்வாக்கும் குடும்பங்கள் தங்களது முன்மாதிரிகையான வாழ்க்கையால்  

உலகிற்கு நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

தாங்களும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன."

"திருமண வாழ்வின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகின்றீர்களே, 

அதில் பிரச்சனைகளே இல்லையா?"

(பிரச்சனைகள் தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment