(மத்.26:39)
இயேசு தன் பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு,
அப்போஸ்தலர்களுக்குத் தன் உடலையும் , இரத்தத்தையும் இரவு உணவாக அளித்த பின்பு,
தன்னுடைய எதிரிகளிடம் தன்னையே பலியிட ஒப்படைப்பதற்காக கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வருகிறார்.
சீடர்களிடம், "நான் அங்கே சென்று செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி,
இராயப்பரையும் செபெதேயுவின் மக்கள் இருவரையும் தம்மோடு அழைத்துச் செல்கிறார்.
"என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது.
இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்"
என்று கூறிவிட்டு
சற்று அப்பால்போய், குப்புறவிழுந்து, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று
செபிக்கிறார்.
இயேசுவின் இந்த ஜெபத்தை கேட்டவுடன் நமக்குள் ஒரு கேள்வி எழும்.
அவர் சர்வ வல்லமையும் ஞானமும் உள்ள கடவுள்.
எப்பெப்போ யார் யாருக்கு என்னென்ன நடக்கும் என்று அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.
தான் செய்ய வேண்டியதை நித்திய காலமாகவே திட்டமிட்டு தான் செய்கிறார்.
தனது திட்டத்துக்கு எதிராக எதையுமே செய்ய மாட்டார்.
மனிதனாக பிறக்க வேண்டும்,
பாடுகள் பட வேண்டும்,
சிலுவையில் மரணம் அடையவேண்டும்
மூன்றாவது நாள் உயிர்க்க வேண்டும்,
என்பது அவரது நித்திய கால திட்டம்.
தனது பொது வாழ்க்கையின் போது தனது பாடுகளைப் பற்றியும், உயிர்ப்பை பற்றியும்
தனது அப்போஸ்தலர்களுக்கு அடிக்கடி கூறியிருக்கிறார்.
ஒரு முறை இராயப்பர் அவரிடம் பாடுகள் படவேண்டாம் என்று கூறியபோது அவர்
இராயப்பரை நோக்கி,
"போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று கூறியிருக்கிறார்.
அதே இயேசு இப்போது தன்னையே எதிரிகளிடம் கையளிப்பதற்கு முன்பு,
"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்."
என்று ஜெபிக்கக் காரணம் என்ன?
இயேசு பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய இறை மகன்.
அவர் மனித உரு எடுப்பதற்கு முன்னால்
அவர் ஒரே ஆள் (தேவ ஆள்)
அவருக்கு ஒரே சுபாவம் (தேவ சுபாவம்)
ஆனால் பாடுபட்டு மரிப்பதற்காகவே அவர் மனித உரு எடுத்தபிறகு
அவர் ஒரே ஆள் (தேவ ஆள்),
ஆனால் இரண்டு சுபாவங்கள்
தேவ சுபாவம்
மனித சுபாவம்.
இயேசு முழுமையாகவே கடவுள்,
(Fully God)
முழுமையாகவே மனிதன்.
(Fully Man)
மனித சுபாவத்தில் பாவம் தவிர மற்ற எல்லா மனித தன்மைகளும் அவரிடம் இருந்தன. ஆகவேதான் அவர் முழுமையாக மனிதன்.
நம்முடைய பலவீனங்களையும் (Weaknesses) அவனர் ஏற்றுக்கொண்டார்.
பயம் நம்முடைய முக்கியமான பலவீனம்.
நாம் துன்பங்களைக் நினைத்து பயப்படுவது போலவே
அவரும் தான் படவிருக்கும் பாடுகளை நினைத்து பயப்பட்டார்.
நாம் எப்படி துன்பங்கள் வேண்டாம் என்று இறைவனிடம் வேண்டுகின்றோமோ
அதேபோல் தான் அவரும் முடிந்தால் தன் பாடுகளை
நீக்கும்படி தந்தையிடம் வேண்டுகிறார்.
தான் உண்மையாகவே, பாவம் தவிர, மற்ற எல்லா விதமான பலவீனங்களையும் உடைய
முழு மனிதன் என்பதை நமக்கு காண்பிப்பதற்காகத்தான் இத்தகைய பயத்தை ஏற்றுக்கொண்டார்.
பயம் அவருடைய மனித சுபாவத்துக்கு இயல்பானது.
நாமும் துன்பங்களை கண்டு பயப்பட்டாலும், இறைவனுக்கு சித்தமானால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நமக்கு செயல் மூலம் போதிப்பதற்காகவே,
"எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்"
என்றும் வேண்டினார்.
இங்கு ஒரு முக்கியமான இறையியல் உண்மையை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள், இருந்தாலும் அவர் ஒரே ஆள்தான், தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆள், தேவ ஆள்.
ஆகவே அவர் தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுள்தான்.
மூன்று ஆட்களுக்கும் ஒரே சித்தம்தான்.
தந்தையின் சித்தமே மகனின் சித்தம்.
தந்தையின் விருப்பமே மகனின் விருப்பம்.
"உமது விருப்பப்படி" என்றாலும் "எனது விருப்பப்படி" என்றாலும் ஒன்றுதான்.
இந்த செபம் அவர் தானாகவே ஏற்றுக்கொண்ட மனித பலவீனத்தின் வெளிப்பாடு.
தான் உண்மையிலேயே மனிதன் என்ற இறையியல் உண்மையை நமக்கு வெளிப்படுத்துவதற்காக அவராகவே ஏற்றுக்கொண்ட மனித பலவீனத்தின் வெளிப்பாடு.
பலவீனம் உள்ள மனிதன் செய்த பாவத்திற்கு பலவீனம் உள்ள மனிதன் தானே பரிகாரம் செய்ய வேண்டும்!
அதற்காகவே அவராகவே ஏற்றுக் கொண்ட மனித பலவீனத்தின் வெளிப்பாடு.
எப்படி மனித வலியையும், வேதனையையும், மரணத்தையும் ஏற்றுக் கொண்டாரோ,
அதே போல் தான் மனித பயத்தையும்
ஏற்றுக் கொண்டார்.
இது அவர் நம்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு.
இயேசுவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் நமக்கு ஒரு நற்செய்தியை போதிப்பதாகத்தான் இருக்கும்.
இந்த செபத்திலிருந்து நாம் அறியவேண்டிய நற்செய்தி:
1. சர்வவல்லவராகிய கடவுள்
நம் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக நம்மை அவர் நிலைக்கு உயர்த்துவதற்காக நம் நிலைக்கு இறங்கி வந்து
பாவம் தவிர
நமது மற்ற பலவீனங்களை எல்லாம் தனது பலவீனங்களாகவே ஏற்றுக்கொண்டார்.
2. நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் நாம் இறைவனது சித்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு போதிப்பதற்காக தான்
அவர் "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்"
எந்து ஜெபித்தார்.
3. நமது பலவீனங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும் என்பதை நமக்கு காண்பிப்பதற்காகத்தான்
நமது பலவீனத்தை தன் பலவீனமாக ஏற்றுக் கொண்டார்.
நமது பலவீனங்களை அவர் அறிவதால்தான் நம் மீது அளவற்ற இரக்கம் கொண்டுள்ளார்.
4."கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.
ஆனால், தம்மையே வெறுமையாக்கி,
அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார்.
மனித உருவில் தோன்றி,
தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."
(பிலிப்.2:6,7,8)
என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகள் நம் மட்டில் இறைவன் கொண்டுள்ள மட்டில்லா அன்பை உணர்த்தும்.
மாம்பழத்தை சாப்பிட்டால் அதன் இனிப்பு ருசியை சுவைத்து தான் ஆகவேண்டும்.
பாகற்காயைச் சாப்பிட்டால் அதன் கசப்பு ருசியை சுவைத்து தான் ஆகவேண்டும்.
மிளகாயைச் சாப்பிட்டால் அதன் உறைப்பு ருசியை சுவைத்து தான் ஆகவேண்டும்.
கடவுளை ஏற்றுக் கொண்டால் அவரது சித்தத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒருவன் அவரது சித்தத்தை ஏற்று நிறைவேற்றாவிட்டால் கடவுள் இருக்கிறார் என்று ஏற்று என்ன பயன்?
ஆகவே,
"இறைவா, என் சித்தம் அல்ல,
உமது சித்தமே என்னில் நிறைவேறட்டும்."
என்ற சிறு செபமே நமது ஒரே செபமாக இருக்கட்டும்.
லூர்து செல்வம்.