Friday, January 1, 2021

"இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.." (லூக்.2:8)

http://lrdselvam.blogspot.com/2021/01/28.html



"இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச்
 சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.." (லூக்.2:8)





இயேசு பிறந்த அன்று

" இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.


ஆண்டவருடைய தூதர் அவர்களுக்குத் தோன்ற, விண்ணொளி அவர்களைச் சூழ்ந்து சுடர்ந்தது. 

மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.


வானதூதர் அவர்களை நோக்கி, " அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."

பெத்லகேமில் இயேசு பிறந்த விபரத்தை கீழ்த்திசை ஞானிகள் அவர்களுடைய முயற்சியால் கண்டறிந்தார்கள்.

ஆனால் ஞானத்திற்கு அர்த்தம் புரியாத 
சாதாரண ஏழை இடையர்களுக்கு இயேசு பிறந்த செய்தி விண்ணகத்திலிருந்து தேவ தூதர்கள் மூலம் நேரடியாக அறிவிக்கப்பட்டது.  

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இறைவன் முன் பாமர மக்கள் படித்தவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல.

மனிதர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் இறைவன்தான். அதை வைத்து அவர்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்.

பாமர மக்களை பாமர மக்களாக படைத்தவர் இறைவன் தான். அவர்களால் சுயமாக அறிய முடியாததால் இறைவனே இறங்கி வந்து நேரடியாக அவர்களுக்கு அறிவிக்கிறார்.

இறைவனே தான் மனிதனாகப் பிறப்பதற்கு ஒரு ஏழையைத்தான் தன் தாயாகத் தெரிந்து கொண்டார்.

மாடுகள் அடையும் தொழுவைத்தான் தான் பிறப்பதற்கு உரிய இடமாக தெரிந்து கொண்டார்.

இங்கு வேறொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.


"இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்."

என்று இறைவாக்கு கூறுகிறது.

வெறுமனே இடையர் என்று கூறவில்லை.

"வெட்டவெளி " மார்கழிப் பனியிலிருந்து தங்களை பாதுகாக்க முடியாத திறந்த வெளி. 

இரவு முழுதும் தூங்காமல் தங்கள் ஆடுகளை காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள்.


தங்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டாலும் தங்கள் ஆடுகளுக்கு பாதுகாப்பாக விடியவிடிய உறங்காமல் காத்திருந்த இடையர்கள்.

இயேசு உலகிற்கு செய்ய வந்த பணியை இடையர்களை பற்றிய விளக்கம் தெளிவாக்குகிறது.

தமது பொது வாழ்வின் போது தன்னை ஒரு நல்ல ஆயன் என்றே குறிப்பிடுவார்.

இடையர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அல்ல, அவர்களது ஆடுகளின் பாதுகாப்பிற்காக விடிய விடிய காத்திருந்தார்கள்.

 அதேபோல,

நல்ல ஆயன் என்று தன்னையே கூறிக்கொண்ட இயேசுவும் தன் உயிரைப் பாதுகாக்க அல்ல,

 பாவிகளின் ஆன்மாவை பாதுகாக்கவே உலகிற்கு வந்தார்.

பாவிகளின் ஆன்மாவை மீட்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்தார்.

புத்தகம் எழுதுவோர் முன்னுரையில் நாங்கள் எழுதப் போவதைப் பற்றி குறிப்பிடுவார்கள்.

ஒருவகையில் ஆயர்களைப் பற்றிய விபரம் இயேசுவின் வாழ்க்கைக்கு ஒரு முன்னுரை என்று கருதலாம். 

ஆயர்கள் தங்களுடைய ஆடுகளில் பாதுகாப்பிற்காக தங்களையே தியாகம் செய்து கொண்டிருந்தார்கள்.

நல்ல ஆயன் ஆகிய இயேசு தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களின் ஆன்மாக்களைப் பாதுகாப்பதற்காக தன்னையே தியாகம் செய்தார்.


விண்ணிலிருந்து மற்றொரு வாழ்த்துரையையும் வானதூதர்கள் பூமிக்கு கொண்டு வந்தார்கள் 

"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமை, பூவுலகில் நன்மனதோர்க்கு சமாதானம்."

நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் என்று வானதூதர்கள் வாழ்த்தினார்கள்.

தான் செய்த பாவத்தினால் மனிதன் இறைவனோடு தனக்கிருந்த சமாதான உறவை முறித்துக் கொண்டு வெளியேறினான்.

மனிதன் இழந்த சமாதான உறவை மீட்டுக் கொடுக்கவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

இயேசு விண்ணிலிருந்து கொண்டு வந்த சமாதானத்தை பெற மனிதருக்கு என்ன தகுதி வேண்டும்?

நல்ல மனது.

ஆன்மீக வாழ்வின் அடிப்படை நல்ல மனது.

 புனிதர்கள் ஆன்மீக வாழ்வில் சாதனை படைத்தவர்கள்.

புனிதர்கள் புரிந்த சாதனைகளை எல்லோராலும் செய்ய முடியாமல் போகலாம்.

சாதனை புரிய ஆசைப்பட எல்லோராலும் முடியும்.

உண்மையிலேயே ஆசைப்பட வேண்டுமென்றால் நல்ல மனது இருக்க வேண்டும்.

நல்ல மனது இருந்தாலே இறைவனது சமாதானம் நமக்கு கிடைக்கும்.

நல்ல மனது உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவு சாதனைகள் படைக்க முயற்சி செய்வார்கள்.

சாதனைகள் படைக்க முடியாவிட்டாலும் அவர்களுடைய நல்ல மனதிற்கு இறைவன் சன்மானம் அளிப்பார்.

இடையர்களிடம் நல்ல மனது இருந்தது.

அவர்களது நல்ல மனதுக்கு சன்மானமாக இறைவன் மனிதனாக பிறந்த செய்தி முதல் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

உலகப் பார்வையில் இடையர்கள் ஏழைகள்.

இரவில் அவர்களது வீடு வெட்டவெளிதான்!

அவர்களுடைய சொத்து ஆடுகளும், அவற்றின் மேல் உள்ள அன்பும்தான்.

ஆனால் ஆன்மீகப் பார்வையில், அவர்களது நல்ல மனதின் காரணமாக,

இப்பிரபஞ்சத்தின் உரிமையாளருக்கு நெருக்கமானவர்கள்.

ஆன்மீகத்தின் மிகப் பெரிய சொத்து நல்ல மனதுதான்.


Switch ஐப் போட்டால் தான் light எரியும்.

நலல மனது இருந்தால்தான் ஆன்மீக வாழ்வை ஆரம்பிக்கவே முடியும்.

ஆன்மீகம் என்ற light எரிய வேண்டுமென்றால், நல்ல மனது என்ற Switch ஐப் போடவேண்டும்.


நல்ல மனதுடன் என்ன செய்தாலும் இறைவனுக்குப் பிடித்ததாகத்தான் இருக்கும்.

நல்ல மனது இல்லாமல் கோடிகோடியாய் அள்ளி தர்மம் செய்தாலும், இறைவன் முன் அதற்கு மதிப்பே இல்லை.

நல்ல மனதுடன் ஒரு ஏழைச் சிறுவனுக்கு தாகம் தணிக்கக் கொடுக்கப்படும் ஒரு தம்ளர் தண்ணீருக்கு உள்ள மதிப்பு,


சுய விளம்பரத்துக்காக கோடிக்கணக்காய் செலவழித்து ஊருக்கே ஒரு பெரிய ஆலயம் கட்டிக் கொடுப்பவனின் செயலுக்கு இல்லை.

இறைவனின் சன்மானம் செயலுக்காக இல்லை, அதற்குக் காரணமான மனதுக்காகத்தான்.

நன்மனது + செயல் = நற்செயல்

நமக்கு நல்ல மனது இருந்தால்,

 இடையர்களுக்குத் தன்னைத் தெரியப் படுத்தியது போல,

இறைவன் நமக்கு தனது சித்தத்தைத் தெரிவித்துக் கொண்டேயிருப்பார்.   

நாம் அதைச் செயல் படுத்திக்கொண்டே யிருக்கலாம்.

இடையர்கள் உடனே செயல்பட்டது போல நாமும் செயல்பட வேண்டும்.

வரமாக நல்ல மனது வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.

நல்ல மனது கிடைத்துவிட்டால் விண்ணகமே கிடைத்தது போல் தான்.

நல்ல மனது என்று செடியிலிருந்துதான்
சமாதானம் என்ற மலர் மலரும்.

நல்ல மனது நமக்கு இருந்தால்

 இடையர்கள் தங்களது ஆடுகளின் பாதுகாப்பிற்காக தங்களையே தியாகம் செய்து வாழ்ந்தது போல,

 இறைமகன் இயேசு ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக தன்னையே தியாகம் செய்தது போல,
 
நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்காக நம்மையே தியாகம் செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment