(லூக்.5:5)
இராயப்பரும், வியாகப்பரும், அருளப்பரும் கெனேசரேத்து ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
மீன்கள் கிடைக்கவில்லை.
படகை விட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது ஏரிக்கரையில் நின்று கொண்டிருக்கிற இயேசு இராயப்பரின் படகைக் கரையிலிருந்து சற்றே தள்ளச் சொல்லி,
படகில்
அமர்ந்து கொண்டே கூட்டத்திற்குப் போதித்துக் கொண்டிருக்கிறார்.
போதித்து முடிந்ததும் இராயப்பரிடம், "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்று கூறுகிறார். .
இராயப்பர், "குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை:
ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்கிறார்.
இராயப்பர் பிறப்பிலேயே ஒரு மீனவர். ஆனால் இயேசு ஒரு தச்சர்.
ஆனாலும் இயேசு சொன்னதற்கு அப்படியே கீழ்ப்படிகிறார்.
ஏனெனில் இராயப்பருக்கு இயேசு மெசியா என்பது ஏற்கனவே தெரியும்.
இராயப்பர் இயேசுவைச் சந்திப்பதற்கு முன்னாலேயே
அவருடைய சகோதரராகிய பெலவேந்திரர் அவரை சந்தித்து, அவரோடு தங்கி, அவர் மெசியா என்பதை அறிந்து கொண்டார்.
அவர்தான் இராயப்பரிடம் "மெசியாவைக் கண்டோம்" என்று கூறி இயேசுவிடம் அழைத்துவந்தார்.
இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார்.
கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.
முதல் சந்திப்பிலேயே இயேசு அவருக்கு இராயப்பர் என்று பெயரிட்டதிலிருந்து,
அவரைத்தான் திருச்சபையின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே இயேசு தீர்மானித்துவிட்டது தெரிகிறது.
அதன் பிறகு நடந்தது தான் இந்த ஏரிகரை சந்திப்பு.
இப்போது இயேசு இராயப்பரது படகில் இருந்து தான் மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தார்.
நமது தாய் திருச்சபைக்கு 'இராயப்பர் படகு' என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு.
மீனே கிடைக்காமல் வலைகளை அலசிக் கொண்டிருந்த இராயப்பரிடம் இயேசு
"ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்"
என்று சொல்கிறார்.
இரவு முழுவதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்காவிட்டாலும் இயேசு சொன்ன ஒரே காரணத்திற்காக கடலில் சென்று வலையை வீசுகிறார்.
ஏராளமாக மீன்கள் கிடைக்கின்றன.
அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவரை தாழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டன.
ஏற்கனவே அவருக்கு இயேசு மெசியா என்று தெரியும்.
இயேசுவை சந்திக்கும் முன்னாலேயே பெலவேந்திரர் மூலம் அறிந்துகொண்ட செய்தி அது.
தான் கடவுளின் முன்னால் நிற்கக்கூட தகுதியற்ற ஒரு பாவி என்பதை மனமாற ஏற்றுக் கொள்கிறார்.
ஆகவேதான்,
"ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்று கூறுகிறார்.
இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான புண்ணியம் தாழ்ச்சி.
"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."
(லூக்.14:11)
என்பது இயேசுவின் போதனை.
தன்னைத் தானே தாழ்மையாக நினைத்துக்கொண்டிருந்த இராயப்பரைத் திருச்சபையில் மிக உயர்ந்த பதவிக்கு இயேசு உயர்த்துகிறார்.
அதற்கு ஆரம்ப கட்டமாகத் தான் இராயப்பரை நோக்கி,
"அஞ்சாதே, இன்று முதல் நீ மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்"
என்கிறார்.
அவர்கள் படகுகளைக் கரைச் சேர்த்ததும், யாவற்றையும் துறந்து அவரைப் பின்தொடர்கிறார்கள். .
இயேசுவின் ஒவ்வொரு செயலும் அவரது நித்திய திட்டத்தின்படி தான் நடக்கின்றது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.
இந்த நிகழ்ச்சி இராயப்பரின் மிக ஆழமான விசுவாசத்தையும் காண்பிக்கிறது.
இயேசு சொல்வது கட்டாயம் நடக்கும் என்று இராயப்பர் உறுதியாக நம்பினார்.
அந்த நம்பிக்கைக்கு ஆதாரம் இயேசுதான் மெசியா என்ற
விசுவாசம்.
விசுவாசத்தினால் ஆகாதது எதுவுமில்லை என்ற ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் பைபிள் வாசிப்பதற்கும்,
மற்ற வரலாற்று நூல்களையோ அல்லது செய்தி தாள்களையோ வாசிப்பதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.
வரலாற்று நூல்களில் வரும் வரலாற்று மனிதர்களும்,
வரலாற்று நிகழ்ச்சிகளும்,
செய்தி தாள் விசயங்களும்
நமது அறிவுக்கு (knowledge) நல்ல விருந்து.
அவற்றிலிருந்து சில பாடங்களைக் கூட கற்றுக் கொள்ளலாம்.
வரலாறு நமது மூளையை தொடும் அளவிற்கு நம்முடைய இருதயத்தை தொடாது.
ஆனால் பைபிள் வரலாற்றை கற்பிப்பதற்காக தரப்பட்டது அல்ல.
அதில் அடங்கியுள்ள வரலாற்றை விட, அது தரும் செய்தியே (message) நமக்கு முக்கியம்.
பைபிளில் இருந்து நாம் பெறும் செய்தி இறைச்செய்தி. (Divine message)
அது தொட வேண்டியது நம்முடைய மூளையை அல்ல, நம்முடைய இதயத்தை.
இதயத்துடிப்பு தான் நமது வாழ்விற்கு ஆதாரம்.
இறைச்செய்திதான் நமது ஆன்மீக வாழ்விற்கு ஆதாரம்.
இயேசு ஒரு வரலாற்று நாயகர்.
ஆனால் அவரது வரலாற்றை விட அவரது போதனைதான் நமக்கு முக்கியம்.
நற்செய்தி நூலில் உள்ள ஒரு நிகழ்வை நாம் வாசிக்கும்போது அந்நிகழ்வு நமக்கு தரும் செய்தியை நாம் கிரகிக்க
வேண்டும்.
கிரகிக்கப்பட்ட செய்தி நமது ஆன்மீக வாழ்வை இயக்க வேண்டும்.
மாறாக அது நாம் தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கும்,
பட்டிமன்றங்களில் பேசுவதற்கும்,
கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும்,
சொற்பொழிவு ஆற்றுவதற்கும்,
விவாதங்கள் செய்வதற்கும்
மட்டும் பயன்பட்டு,
நமது வாழ்க்கையை இறைவனுக்காக வாழ பயன்படா விட்டால்
நாம் நற்செய்தி வாசித்தும் பயனில்லை.
நாம் வாசித்த ஏரிக்கரை நிகழ்ச்சியிலிருந்து
நாம் பெறும்,
நமது இதயத்தை தொட்டு இயக்க வேண்டிய இறைச்செய்தி எது?
இராயப்பரின் விசுவாசம், தாழ்ச்சி.
இரவு முழுவதும் தேடியும் மீன் கிடைக்காத அதே ஏரிப் பகுதியில் வலையை வீசும் படி இயேசு சொல்கிறார்.
இயேசு சொன்ன ஒரே காரணத்திற்காக விசுவாசத்தோடு வலையை வீசுகிறார்.
வலை கிழியக்கூடிய அளவிற்கு மீன் அதிகமாக கிடைக்கிறது.
இராயப்பரிடம் இருந்த அதே அளவு விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா?
இயேசு நம்மோடு இருந்து
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நம்மை வழிநடத்துகிறார் என்ற விசுவாசம் நம்மிடம் இருந்தால்
நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் சிறிது கூட நம்மிடம் இருக்காது.
உண்மையான விசுவாசம் இருந்தால்
.
மருத்துவரீதியாக குணமாக்க முடியாத ஏதாவது நோய் நமக்கு வந்தால் கூட
இறைவன் கையில் பாரத்தைப் போட்டுவிட்டு அச்சமின்றி வாழ்வோம்.
இவ்வுலகில் வாழ்ந்தாலும்,
மறு உலகில் வாழ்ந்தாலும்
நாம் வாழ்வது இயேசுவுடன் தான் என்ற விசுவாசம் நமக்கு இருந்தால் மரணத்தை கண்டு பயப்பட மாட்டோம்.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வெற்றிகளும், தோல்விகளும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது.
ஏனெனில் இரண்டுமே இயேசுவின் கைகளிலிருந்துதான் வருகின்றன.
ஆழ்ந்த விசுவாசம் உள்ளவன் தன் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் இயேசுவுக்கு நன்றி சொல்வான்.
''இயேசுவை விசுவசித்தும் எனக்கு துன்பங்கள் வருகின்றனவே,"
என்று ஒருவன் எண்ண ஆரம்பித்தால் அவனிடம் விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்.
"நான் பாவி, இயேசுவின் முன் நிற்கவே தகுதியற்றவன்"
என்று எண்ண துவங்கிய அந்த வினாடியே இயேசுவின் முன் நிற்க முழுத் தகுதியையும் பெற்று விடுகிறார் இராயப்பர்.
அந்த தாழ்ச்சிதான் அவரை திருச்சபையின் தலைவர் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.
ஆனால் திருச்சபையின் தலைவராக வேண்டும் என்பதற்காக தாழ்ச்சியாய் இருக்கவில்லை.
தாழ்ச்சிக்குக் கிடைத்த பரிசு தலைமை பதவி.
நாமும் உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தாழ்ச்சியாய் இருக்கக் கூடாது.
தாழ்ச்சி இயேசுவுக்கு பிடித்தமான புண்ணியம் என்பதற்காக, இயேசுவுக்காக,
தாழ்ச்சியாய் இருக்க வேண்டும்.
மற்றவர்கள் நம்மை கேவலமாக நடத்தும்போது நாம் அதை மனமாற ஏற்றுக் கொண்டு,
பிலாத்துவின் முன்னும் ஏரோதுவின் முன்னும் அவமானமாக நடத்தப்பட்டாலும் நமக்காக அதை ஏற்றுக்கொண்ட,
இறைமகன் இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
அவரைப்போல நடத்தப்படுவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு இயேசுவுக்கு நன்றி கூற வேண்டும்.
வாசிப்போம்,
யோசிப்போம்
விசுவசிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment