Monday, January 18, 2021

"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்:"( சங்கீதம்.33:8)(தொடர்ச்சி)

"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்:"
( சங்கீதம்.33:8)
(தொடர்ச்சி)


கற்பனை வாகனம் மனித குல ஆரம்பக் கட்டத்தை நோக்கத்தை நோக்கிப் பறந்தது.


வேகமாகப் பறந்து நொடிப் பொழுதில் ஏதோன் தோட்டத்திற்கு உள்ளேயே வந்துவிட்டது.

இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன்.

மிக ரம்மியமான தோற்றம்.

உலகின் மொத்த அழகும் அந்த தோட்டத்திற்குள்ளே இருந்தது.

இனிய பாடல் ஒன்று தேன்போல என் காதுகளில் பாய, அது வந்த திசையை ஏறெடுத்துப் பார்த்தேன்.

உலகின் முதல் பெண்மணி ஏவாள் ஆப்பிள் பழம் ஒன்றைக் கடித்துக் கொண்டே, ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வந்து கொண்டிருந்தாள்.

கையில் ஒரு பழம் இருந்தது.

ஆட்டம் பாட்டத்தோடு சென்று கொண்டிருந்த அவளைப் பின் தொடர்ந்தேன். 

அதோ ஆதாம் நின்று கொண்டிருக்கிரார்.

"ஏ, வா." தூய தமிழில் மனைவியை அழைத்தார்.

"இதோ வந்து விட்டேங்க."

"கையில் என்னடி? ஆப்பிள் மாதிரி தெரியுது!"

"தெரியுது மட்டுமல்ல. ஆப்பிளேதான். சுவைன்னா சுவை அப்படி ஒரு சுவை.

சுவைத்துப் பாருங்கள். உங்களுக்கும் ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்."

கையில் வாங்கியவன்,

"ஏடி, இது கடவுள் விலக்கி வைத்த ஆப்பிள் மாதிரி தெரியுது."

"தெரியுது என்ன தெரியுது. அதேதான். ரொம்ப சுவையா இருக்கு."


"ஏண்டி, தோட்ட முழுவதும் எக்கச் சக்கமா, விதவிதமான பழங்கள் மரங்களில தொங்குது. 

அதைப் பறியாம விலக்கப் பட்ட கனிய பரிச்சிட்டு வந்திருக்க.

இதச் சாப்பிட்டா செத்துப் போவோம்னு ஆண்டவர் சொல்லியிருக்கிறாரடி."

"இதோ! நான் சாகலிய!"

"ஏன் அதப் பறிச்ச?"


"நானா எங்க பறிச்சேன். ஒரு பெரிய பாம்புதான் இதச் சாப்பிட்டா கடவுள் போல ஆகிவிடலாம் என்று சொல்லிச்சு.

அதனால தான் பறிச்சேன்.


சாப்பிடுங்க. சாப்பிட்டு சுவையைப் பாருங்கள். அப்புறம் அந்த மரத்தை விட்டே வரமாட்டீங்க."

"ஏண்டி, கடவுள் நம்மைப் படைத்தாரா? பாம்பு நம்மைப் படைத்ததா?

யாருக்குக் கீழ்ப்படியணும்?

இல்ல. சாப்பிட மாட்டேன். இது கடவுள் சாப்பிடக்கூடாதுன்னு சொன்ன பழம். சாப்பிட்டா செத்து விடுவோம்."


"நீங்க சாப்பிடாவிட்டால் நான் செத்து விடுவேன். அப்புறம் தனியா கிடந்து அழுங்க."


"ஏடி, என்னமும் செஞ்சிடாத. உனக்காகச் சாப்பிடுகிறேன்."


பழத்தை ஒரு கடி கடித்தான்.

அவ்வளவுதான், என்ன தோன்றியதோ தெரியவில்லை.

 ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் கண்களை மூடிக்கொண்டு வெவ்வேறு திசைகளை பார்த்து ஓடினார்கள்.

திரும்பி வந்தபோது,


அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் உடுத்தியிருந்தார்கள்.

"ஆதாம், எங்கே இருக்கிறாய்?"

யாராக இருக்கும் இங்கு ஆதாமும் ஏவாளும் மட்டுமே இருந்தார்கள் நான் பேசவில்லை.

அப்போ கூப்பிட்டது கடவுள்தான்.

அவரது குரலை கேட்டதும் முதலில் ஒழிந்து கொண்டார்கள்

 பிறகு வெளியே வந்தார்கள்.

அவர் அவர்களிடம் விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்டது பற்றி விசாரித்தார்.

ஆதாம் ஏவாள் மீது பழியைப் போட்டார்.

ஏவாள் பாம்பின் மீது பழியைப் போட்டாள்.

செய்த குற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் அடுத்தவர் மீது பழியைப் போடும் வழக்கத்தை நமது முதல் பெற்றோரே ஆரம்பித்து வைத்து விட்டார்கள், அதுவும் கடவுள் முன்னிலையிலேயே!

ஏற்றுக் கொள்வதும், வருந்துவதும்தான் மன்னிப்புப் பெறுவதற்கான ஒரே வழி.

கட்டளையை மீறத் தெரிந்தவர்களுக்கு அது ஏனோ தெரியாமல் போய்விட்டது.

கடவுள் சர்வ வல்லவர். அவர் நினைத்திருந்தால் தனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை அன்றே ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கலாம்.

ஆனால் கடவுள் அளவு கடந்த அன்பும், இரக்கம் உள்ளவராயிற்றே.

அவர்களும் அவரால் படைக்கப்பட்ட பிள்ளைகள் ஆயிற்றே.

ஆசைப்பட்டு ஆக்கியவர்களை அழியவிட அவருக்கு விருப்பமில்லை.

 அவர் அன்பைப் போலவே அளவு கடந்த நீதியும் உள்ளவர்.

நீதிப்படி பாவம் செய்தவன் பரிகாரம் செய்தாக வேண்டும்.

அவரது அளவு கடந்த அன்பின் காரணமாக மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்யும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார்.

தான் படைத்த மனிதனின் வம்சத்திலேயே மனிதனாகப் பிறந்து அவனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் போவதாக அன்றே அவர்களிடம் வாக்களித்து விட்டார்.

வாக்களித்துவிட்டு அவர்களை ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி விட்டார்.


மெதுவாக வாகனத்தை தோட்டத்தின் வாயிலுக்கு விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் ஆதாமும் ஏவாளும் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு

 தோட்டத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஏவாளிடம் ஏதாவது பேச வேண்டும் போலிருந்தது.


"பாட்டி..''

ஏவாள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை.

 நடக்க ஆரம்பித்தாள்.
'
 நான் திரும்பவும் "பாட்டி.." என்றேன். 


"ஏங்க நீங்க ஏதாவது சொன்னீங்களா?" 

ஆதாமை பார்த்து கேட்டாள்.

 அவன் "இல்லையே" என்றான்.

 "யாரோ அம்மா கூட ஆகாத என்னைப் பாட்டி என்று கூப்பிட்டார்கள். யார் என்று தெரியவில்லை."

"தெரியாது. 

நான் கற்பனை வண்டிக்குள் இருக்கிறேன்.

 நீங்களும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

பாட்டி, நீங்கள் சுவைத்தது ஆப்பிள் பழத்தை அல்ல,

பாவத்தை.

பாவம் சுவைக்கும்போது இனிமையாக இருக்கும்."

"ஆனால், கடவுளை விட்டு பிரித்துவிடும். அப்படித்தானே சொல்ல வருகிறாய்."

"ஆமா."

"ஆனால் நான் செய்தது பாக்கியமான பாவம், தெரியுமா உனக்கு?"

"என்னது, பாக்கியமான பாவமா?"

"ஆமா! நான் பாவம் செய்ததினால் தானே கடவுள் என் குலத்தில் மனிதனாக பிறக்கப் போகிறார்!"

"பாட்டி, கடவுளுக்கு தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும்.

நாம் செய்கிற தீமைகளை கூட தனது திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள கடவுளால் முடியும்."


"அது சரி, நீ யாரு?"

"நான் யார் என்பது இப்போ முக்கியம் அல்ல.

விலக்கப்பட்ட பழத்தைச் சுவைத்த நீங்கள்,

உங்களைப் படைத்த கடவுளைச் சுவைத்துப் பாருங்கள்,

அவர் எவ்வளவு நல்லவர் என்பது உங்களுக்குப் புரியும்."

"கடவுளை எப்படிச் சுவைக்க முடியும்? அவர் ஆப்பிள் பழமா?"

"அவரது கட்டளையை மீறிய உங்களைக் கொல்லாமல், 

 உங்கள் வம்சத்திலேயே மனிதனாகப் பிறந்து

 நீங்கள் செய்த பாவத்திற்கு அவரே பரிகாரம் செய்யப் போவதாக சொல்லியிருக்கிறாரே,

அவர் எவ்வளவு நல்லவர்!

அவரது நன்மைத் தனத்தைச் சுவைத்துப் பாருங்கள்.

பாவத்தை நினைத்து, வருந்தி அழுங்கள்.

பாவத்திற்காக அழுவதும், கடவுளைச் சுவைப்பதும் ஒன்றுதான்.

வருகிறேன்."

வாகனத்தைப் பறக்க விட்டேன்.

வாகனம் ஒரு பெரிய ஜவுளிக்கடை முன் நின்றது.

உள்ளே.....

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment