Tuesday, January 19, 2021

"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்:"( சங்கீதம்.33:8)(தொடர்ச்சி)

"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்:"
( சங்கீதம்.33:8)
(தொடர்ச்சி)


ஜவுளிக் கடைக்குள் எட்டிப் பார்த்தேன்.

பெரிய கடை.

பயங்கர கூட்டம்.

மக்களுக்கு புத்தாடை மீது இவ்வளவு ஆசையா?

வருமானத்தில் பாதியை இங்கேயே போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

மெதுவாக உள்ளே நுழைந்தேன்.

நான் நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை.

நினைத்ததும் முதல் வரிசைக்கு வந்துவிட்டேன்.

அப்போதுதான் தெரிந்தது, அங்கு விற்பனை நடைபெறவில்லை.

 இரண்டு பையன்கள் காசு எதுவும் வாங்காமல் துணிகளை கேட்போருக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 ஒரு பையன், "அண்ணாச்சி நாம துணிகளைப் பூராவும் ஓசியா கொடுத்துக்கொண்டு இருக்கிறோமே,

 உங்க அப்பா பார்த்தா ஒன்றும் சொல்ல மாட்டாரா?"

" சொல்லுவார். நான் அதை பற்றி எல்லாம் கவலை பட போவதில்லை.

 வாரம் ஒருமுறை துணி கேட்போருக்கு எல்லாம் இலவசம். மற்ற நாட்களில் இருப்பதை விற்று விட்டு போகட்டுமே."

"நீங்கள் அவர் மகன், பிரச்சனை இல்லை.

 ஆனால் நான் வேலைக்கு நிற்பவன். என் வேலை போனாலும் போய்விடும்."

"அப்போ ஒன்று செய். நீ போய்விடு. நான் மட்டும் பார்த்துக்கிறேன்."

 பையன் போய்விட்டான். ஒருவன் மட்டும் துணிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறான். 

அப்போது பார்த்து ஒரு பெரியவர் நுழைகிறார்.

"ஏல, என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறாய். இது என்ன கடையா தர்ம கூடமா. 

எல்லோரும் போங்க."

"அப்பா ஒரே ஒரு நிமிசம் பொறுங்க, ஒரு நிமிசம்"

சொல்லிக்கொண்டிருக்கும்போதே துணிகளை மொத்தமாக அள்ளி கூட்டத்தை நோக்கி வீசுகிறான்.
 
"எடுத்துக் கொண்டு ஓடுங்கள்."

"யாரும் துணியை எடுத்தா நடப்பதே வேறு. பேசாம வெளியே போங்கள்."

ஆனால் அவர்கள் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டார்கள்.

 அப்பாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. மகனுக்கு செவிட்டில் ஒன்று கொடுத்தார்.

".அப்பா இதுக்கு காசு கிடையாதே. எத்தனை வேண்டுமானாலும் கொடுங்கள், வாங்கிக் கொள்கிறேன். நான் கொடுப்பதை தடுக்காதீர்கள்.''

"ஏலே, இது என் கடை."

"நான் உங்கள் மகன் தானே. எனக்கும் உரிமை உண்டுதானே. எனக்கு உரியதைக் கொடுக்கிறேன்."


"அப்படியா. இந்த வினாடி முதல் நீ என் மகனும் இல்லை. நான் உனது அப்பனும் இல்லை. வெளியே போ."

"இதுவரை எனக்கு விண்ணில் ஒரு தந்தையும், மண்ணில் ஒரு தந்தையும் ஆக இரு தந்தையர் இருந்தனர்.

 இந்த விநாடி முதல் நீங்கள் என்னை பிள்ளை இல்லை என்று சொல்லிவிட்டதை மனமார ஏற்றுக் கொள்கிறேன்.

 ஆனால் விண்ணகத் தந்தை எந்த காரணத்தை முன்னிட்டும் நான் மகன் என்பதை மறுக்கவே மாட்டார்.

 அவரை நம்பிதான் நான் வாழ்கிறேன். 

வணக்கம், ஐயா, சென்று வருகிறேன்."

"வர வேண்டாம், போ." 

"விண்ணகத் தந்தையே.

இனி நீர் மட்டுமே என் தந்தை."

பையன் கடையை விட்டு வெளியேறினான்.


"அண்ணாச்சி, இந்த அளவிற்கு உங்கள் அப்பா போவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

"நான் எதிர்பார்த்தேன். என்றாவது ஒரு நாள் என்னை வீட்டைவிட்டு துரத்துவார் என்று எனக்குத் தெரியும்.

 அதை இன்று செய்துவிட்டார். அவ்வளவுதான்.

நான் எனது தாய் வயிற்றில் உற்பவிக்கும் முன்னாலேயே,

 நித்திய காலமாக என்னை தனது மனதில் சுமந்து கொண்டிருக்கும் விண்ணக தந்தையே

 எனது உண்மையான தந்தை.

 எனக்கு மட்டுமல்ல உலகோர் அனைவருக்கும் அவரே உண்மையான தந்தை.

 நாம் வாழ்வது அவருக்காக மட்டும்தான்."


"இனி எங்கே சென்று வாழப் போகிறீர்கள்?"

"இயேசுவை சுவைத்துப் பார்த்திருக்கிறாயா?'

"புரியவில்லை"

"இயேசுவுக்கு பிடித்தமான உணவு எது தெரியுமா?"

'"சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்."

"வறுமை. வறுமை என்பது ஒரு சிறந்த ஆன்மீக உணவு.

வறுமையிலே பிறந்து, வறுமையிலே வாழ்ந்து, வறுமையிலே மரித்தவர் நம் ஆண்டவர் இயேசு.

அவர் சுவைத்த வறுமையை நாமும் சுவைத்து வாழ்ந்தால், 

அவரையே சுவைத்து வாழ்கிறோம்.

இயேசுவைத்தான் சுவைத்து வாழப் போகிறேன்.''


" இப்போது எங்கே போகப் போகிறீர்கள்?"

"எங்கே என்று கேட்காதே.

 என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேள்."

"என்ன செய்யப்போகிறீர்கள்?"

"தந்தைக்காக உழைக்கப் போகிறேன்.

இதுவரை வீடும் கடையும் என்னைக் கட்டிப்போட்டிருந்தன. இனி நான் ஒரு சுதந்திர பறவை."


 அவர் பறவை என்று சொன்னவுடனேயே ஒரு குருவி வந்து அவரது கையில் உட்கார்ந்தது. 

"பார்த்தியா, பார்த்தியா என் friend.

என்னடா பசியா இருக்கா?" 
 என்று கேட்டுக்கொண்டே கையை பக்கவாட்டில் நீட்டினார்.

 ஒரு சிறு பையன், பண்டம் தின்று கொண்டிருந்தவன், கையிலிருந்த கடலையை அவர் கையில் போட்டான்.

 அவர் அதை குருவி வாய் அருகே கொண்டுபோக, அது தின்ன ஆரம்பித்தது.

சிறு பையன் ஓடிவந்து இன்னும் வேண்டுமா அண்ணாச்சி என்றான்.

"பார்த்தாயா தம்பி, நான் கேட்காமலேயே தந்தை எனக்கும் குருவிக்கும் உணவு கொடுப்பதை?"

வழியே வந்து கொண்டிருந்த ஒரு பெரியவர் கேட்டார்,

"பிரான்சீஸ், உனது friend க்கு உணவு ஊட்டுவது போல் தெரிகிறது?"

" நான் ஊட்ட வில்லை. விண்ணக தந்தையே இந்த சிறுவன் மூலமாக ஊட்டுகிறார்."

சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.

கடையில் அவருக்கு உதவியாக இருந்த பையன் கேட்டான்,

 "அண்ணாச்சி நானும் உங்களோடு வரட்டுமா?"

"எதுக்கு?"

"உங்களுக்கு துணைக்கு."

"இனி வறுமை மட்டுமே எனக்குத் துணை."

"இரண்டு வறுமைகள் சேர்ந்தாலும், வறுமைதான். நானும் உங்களோடு சேர்ந்து தந்தைக்கு சேவை செய்யக் கூடாதா?"

"சரி. வா போவோம்."

அசிசி நகர் பிரான்சிஸ் வறுமை ஒன்றையே துணையாகக் கொண்டு

 எல்லாம் வல்ல இறைவனுக்கு பணியாற்ற புறப்பட்டு விட்டார்.

நானும் பின்னாலே சென்றேன்.  


பக்கத்தில் உள்ள பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்த புனித தமியானோ ஆலயத்துக்குச் சென்று பாடுபட்ட சுரூபத்தின் முன் முழந்தாள் படியிட்டு ஜெபம் சொல்ல ஆரம்பித்தார்.

திடீரென்று பாடுபட்ட சுரூபத்திலிருந்து குரல் ஒன்று கேட்டது.


“ பிரான்சிஸ், என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு!"

தன்னுடன் துணைக்கு வந்த பையனிடம்,


".தம்பி நமக்கு வேலை ஒன்று வந்திருக்கிறது." 

"அப்படியா? யாரிடமிருந்து?"

"பாடுபட்ட ஆண்டவரிடமிருந்து.

இந்த ஆலயத்தை பார்த்தாயா?"

"ஆமா. பாழடைந்து கிடக்கிறது."

"அதைச் செப்பனிட வேண்டும் என்று இறைவன் கட்டளை கொடுத்திருக்கிறார்."

"அதற்குரிய பணம் இல்லாமல் எப்படி செப்பனிடுவது?

 நாம் இருவருமே கையில் காசு இல்லாமல்தான் வீட்டைவிட்டு புறப்பட்டு வந்தோம்.

உங்கள் அப்பாவிடம் கேட்க முடியாது."


" விண்ணக அப்பாவிடம் தான் கேட்கப் போகிறேன்." என்று சொல்லிவிட்டு ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தெருவிற்கு வந்து நின்று,

வருவோர் போவோரிடம்,

"விண்ணகத் தந்தையின் வீட்டைப் புதுப்பிக்க வேண்டும்.

கல் இருப்போர் கல் தாரீர்.

செங்கல் இருப்போர் செங்கல் தாரீர்.

தண்ணீர் இருப்போர் தண்ணீர் தாரீர்.

சாந்து இருப்போர் சாந்து தாரீர் .


உழைப்பு இருப்போர் உழைப்பு தாரீர்.

எதுவும் அற்றோர் நல்ல சொல் தாரீர்.

நிறைய வேண்டாம்.  

ஆளுக்கு ஒரு கல்,

 ஒரு செங்கல்,

 கொஞ்சம் தண்ணீர்."

என்ற வசனங்களை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.

வருவோர் போவோர் இரக்கப்பட்டு போட்ட பொருட்கள் ஒரு வாரத்தில் நிறைய சேர்ந்துவிட்டன.

 அவர்களது நிலையை பார்த்து சிலர் அவர்களுக்கு உணவும் கொண்டு வந்து கொடுத்தனர்.

சிலர் தங்களது இலவச உழைப்பை கொடுத்தனர்.
'
பொருட்கள் வந்த ஒரு வாரத்திற்குள் ஆலயம் செப்பனிடப்பட்டுவிட்டது.


"அண்ணாச்சி, ஒரு பைசா கையில் இல்லாமல் ஆலய வேலை முடிந்துவிட்டது ஆச்சரியம்தான்."

"இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? 

வேலை நம்முடையது அல்ல. விண்ணக தந்தையுடையது.

அவரால் ஆகாதது எதுவும் இல்லை."

“ பிரான்சிஸ், என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு!"

என்று இயேசு சொன்னது திருச்சபை என்ற தனது வீட்டைத் தான் என்பதை புரிந்து கொண்டு

 பிரான்சிஸ் தன்னுடைய வறுமை என்ற ஆயுதத்தை பயன்படுத்தியே திருச்சபையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். 

வறுமையை சுவைத்ததின் மூலமே இயேசுவையே சுவைத்தார்.


புனித தமியானோ ஆலயத்திலிருந்து புறப்பட்ட கற்பனை வாகனம் கல்கத்தாவின் ஒரு சாலையோரத்தில் நின்றது.

தனது காரிலிருந்து இறங்கிய அன்னை தெரசா

 இறக்கும் தருவாயில் இருந்த ஒரு தொழுநோயாளியை நோக்கி நடந்து போய் கொண்டிருந்தாள்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment