Saturday, January 30, 2021

இறைக் குடும்ப உறவு.

இறைக் குடும்ப உறவு.


"ஹலோ, சார், ஒரு நிமிஷம்."

"ம்...சொல்லுங்க."

"கால் உளைகிறது உட்காருங்கள்."

"உங்களுக்கு கால் உளைந்தால் நீங்கள்தான் உட்கார வேண்டும்."

"நின்று கொண்டே பேசினால் உங்களுக்கும் கால் உளையும்."

"ஹலோ! நான் 36 ஆண்டுகள் நின்றுகொண்டே பாடம் நடத்தியவன்."

"அது அப்போ! இப்போ நீங்கள் Retired! அங்க வார்த்தையிலேயே tiredஇருக்கிறது பார்த்தீர்களா!

நிறைய கேள்விகள் வைத்திருக்கிறேன் உங்களிடம் கேட்பதற்கு."

"சரி, உட்கார்ந்தாச்சு. கேளுங்க."

"நம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியுமா. தெரியாதா?"

"தெரியும்."

"நமது தேவைகளைப் பற்றி?"

"தெரியும்."

"நம்மைக் கேளாமல்தானே நம்மைப் படைத்தார்?"

"ஆமா."

"நம்மைக் கேளாமல்தானே நமக்குத் தேவையானவற்றைத் தந்தார்?"

"ஆமா."

"இன்னும் தருவாரா? தரமாட்டாரா?"

"தருவார்."

"பிறகு ஏன் அவரிடம் அதைத் தாரும், இதைத் தாரும் என்று கேட்டு தொந்தரவு படுத்துகிறோம்?"

"என் பதில் இருக்கட்டும். நீங்கள் கடவுளிடம் கேட்கிறீர்களா? இல்லையா?"

"கேட்கிறேன்."

"ஏன் கேட்கிறீர்கள்?"

"சார் கேள்வி கேட்டது நான்."

"தெரியும், இப்போது கேட்பது நான். சொல்லுங்கள், நீங்கள் ஏன் கடவுளிடம் வேண்டியதைக் கேட்கிறீர்கள்?"

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு தானே சொன்னார்.
 அதனால் தான் கேட்கிறேன்."

"உங்கள் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள் என்னை விடுங்கள். வேலை இருக்கிறது."

"ஏன் அப்படி சொன்னார் என்றுதான் கேட்கிறேன்."

"நீங்கள். ஒரு பெண்ணை நேசிக்கிறீர்கள்."

"ஹலோ அபத்தமாக ஏதாவது சொல்லாதீர்கள். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்."

"நான் இல்லை என்று சொன்னேனா? பெண்ணை என்று தானே சொன்னேன். உங்கள் மனைவி ஒரு பெண் இல்லையா?"

"என் மனைவி மட்டுமல்ல அம்மாவும் ஒரு பெண்தான், மகளும் ஒரு பெண்தான், எல்லோரையும் நான் நேசிக்கிறேன். 

ரைட். சொல்லுங்க."

"நீங்கள் நேசிப்பவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்?'

 "அவர்களும் என்னை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்." 

"உங்களது மனைவி உங்களிடம் ஒரு நாள் பேசாமல் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?"

 "கவலையா இருக்கும்."

" ஏன்?"

"நாம் நேசிப்பவர்கள் நம்மிடம் பேசாவிட்டால் எங்கே நமது உறவுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று பயம் வரும்.

ஒரு நண்பனை
வழியில் சந்தித்தால் கூட,

 அவனிடம் பேச எதுவும் இல்லாவிட்டாலும், சும்மாவாவது

" எப்படி இருக்க? தூரமா போற?" என்று ஏதாவது பேசுவோம்."

"அப்போ உரையாடல் உறவை வளர்க்கும்."

"ஆமா."

"கடவுளுடன் நமக்குள்ள உறவு வளர வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?"

"அவரோடு நாம் பேசவேண்டும்."

"அப்போ உங்கள் கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிகிறது.

 நேரம் போவதற்காக என்னை உட்கார வைத்து ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அப்படித்தானே?"

"அப்படி இல்லை.

 கடவுள் நம்மோடு பேசுகிறார், நாமும் அவரோடு பேச வேண்டும் என்று எனக்கு தெரியும்.

 ஆனால் நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருக்கும் போது

 ஏன் நம்மை பார்த்து

" எங்களுக்கு அன்றன்றுள்ள உணவை இன்று தாரும் என்று கேட்கச் சொன்னார்?

கேட்காதவர்களுக்கும் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்!"

"குழந்தை ஏன் அம்மாவிடம் பால் கேட்டு அழுகிறது?"

"பசி."

"Suppose, ஒவ்வொரு முறையும் அது அழுமுன்னே நீங்களே அதற்கு வேண்டிய பாலை பாட்டில் மூலமாக கொடுத்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்."

" குழந்தை என்னை மட்டும் தேடும். அம்மாவைத் தேடாது."

"குழந்தை மட்டுமல்ல பெரியவர்களாகிய நாமும் அப்படித்தான்.

 நாம் கடவுளிடம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்படாவிட்டால் காலப்போக்கில் நாம் கடவுளையே மறந்து விடுவோம்.

நீங்கள் சுவாசிப்பதற்கென்றே கடவுள் நிறைய பிராணவாயுவைப் படைத்து உலகத்தில் பரவ விட்டிருக்கிறார்.

 என்றாவது சுவாசிப்பதற்கு பிராணவாயு தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறி இருக்கிறீர்களா?"

"இல்லை." 

"Supposeசில நிமிடங்கள் பிராண வாயுவே இல்லாமல் போய்விட்டது என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்வீர்கள்?"

"'ஆண்டவரே காப்பாற்றும்' என்று அவரிடம்தான் கேட்போம்."

"Correct. உங்களுக்கு இப்போ புரிந்திருக்கும்

 நம்மை அவரிடம் உதவி கேட்கும் படியான சூழ்நிலையை அவர் உருவாக்குவது நாம் அவருடன் கொண்டுள்ள உறவை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு தான்.

கடவுள் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் உறவுடன்தான் இருக்கிறார்.

நாம் கேளாமலேயே நமக்கு அவரால் தந்து கொண்டே இருக்க முடியும். 

தந்து கொண்டே இருக்கவும் செய்கிறார். 

ஆனாலும் சில சமயங்களில் நம்மிடம் தேவைகளை உருவாக்குவது 

நாம் அவரைத் தேடி போய்,

 அவரிடம் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். 

நாம் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது அவர் நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருப்பதற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளைப் புகழவேண்டும், போற்றவேண்டும், ஆராதிக்க வேண்டும்."

"இவ்வளவு நேரமும் நீங்கள் சொன்னது சரிதான்.

ஆனால் கத்தோலிக்கர்கள் ஆகிய நீங்கள் வேண்டாத ஒன்றையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
'
 கடவுளோடு பேசுவது சரி, அவரிடம் நமக்கு வேண்டியதை கேட்பது சரி.

அவர் நம்மை தனக்காகத்தான் படைத்தார். இவ்வுலக வாழ்வு முடிந்ததும் நித்திய காலமும் அவரோடு தான் வாழ வேண்டும். ஆகவே அவருடன் நமது உறவை வளர்ப்பது சரி.

ஆனால் நம்மோடு வாழ்ந்து, மரித்த,

 நம்மைப் போன்றவர்களாகிய புனிதர்களோடு உறவை வளர்க்க பாடு படுகிறீர்களே, அதுதான் எதற்கு என்று எனக்கு புரியவில்லை."

"அங்கோடு சுற்றி, இங்கோடு சுற்றி
இங்கேதான் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

நீங்கள் இவ்வளவு நேரம் போட்டது இதற்கான முன்னுரையைத்தான் என்று எனக்கு தெரியும். 

நானும் இதற்காகத்தான் காத்திருந்தேன்.

என்ன சொன்னீர்கள்?

'ஆனால் நம்மோடு வாழ்ந்து, மரித்த,
நம்மைப் போன்றவர்களாகிய புனிதர்களோடு ...'

நம்மோடு வாழ்ந்தவர்களை மரித்த உடன் மறந்துவிட வேண்டும் என்கிறீர்களா?"

"உலக ரீதியாக அவர்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறோம்,

 அவர்களுடைய வரலாற்றை கூட எழுதுகிறோம்,'

அவர்களைப் பற்றி பெருமையாக பேசுகிறோம்.

 அதெல்லாம் சரி. ஆன்மீக ரீதியாக நமக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு?"

"உங்களதுஅயலானை நீங்கள் நேசிப்பது உலக ரீதியாகவா ஆன்மீக ரீதியாகவா?"

"உங்கள் கேள்வி புரியவில்லை."

"புரியாது. ஏனெனில் உங்களுக்கு அது புரிய வேண்டும் என்று விருப்பம் இல்லை."

"யார் சொன்னது?"

"நான்தான் சொல்கிறேன். இங்கு உங்களோடு நான் மட்டும்தானே இருக்கிறேன்.

ஆரம்பத்திலேயே 'வேண்டாத ஒன்றை' என்று நீங்கள் பேச ஆரம்பிக்கும் போதே எனக்கு புரிந்து விட்டது 

நான் சொல்லப் போவது உங்களுக்கு புரியாது என்று.

புரிந்து கொள்ள ஆசை இருந்தால் தொடர்ந்து பேசுவோம்.

புரிய கூடாது என்ற தீர்மானத்தோடு பேசுபவர்களிடம் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. வருகிறேன்."

"ஹலோ, உட்காருங்கள். கேள்வியை கொஞ்சம் மாற்றிக் கேளுங்கள்."

"நமது அயலானோடு நாம் கொண்டிருப்பது ஆன்மீக உறவா? உலகியல் உறவா?"
.

".இரண்டும் தான்."

"நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகமா லெளகீகமா?"

"ஆன்மீகம்தான்."

"இறைவனோடு கொண்டுள்ள உறவு மட்டுமல்ல ,

அவரால் படைக்கப்பட்ட நமது அயலானோடு கொண்டுள்ள உறவும் ஆன்மீக உறவுதான்.

"உன்னை போல் உன் அயலானையும் நேசி," இந்த கட்டளையை கொடுத்தது உலகம் அல்ல. 

இறைவன். 

இது ஆன்மாக்களுக்கு இடையிலான உறவு,

 ஆகவே அயலாரை நேசிப்பது ஆன்மீக உறவு.

 ஆன்மா அழிவதில்லை, ஆகவே ஆன்மீக உறவும் அழியாது.

 இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகிலும் தொடரும்.

 ஒரு குடும்பத்தில் ஒரு நபர் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் குடும்பத்தினரே,

  விண்ணில் இருப்பவர்களும் மண்ணில் இருப்பவர்களும் ஒரே தந்தையின் பிள்ளைகளே.


இறைத் தந்தையின் குடும்பத்தை சேர்ந்தவர்களே.

வெளிநாட்டிலுள்ள உங்களது உறவினரோடு நீங்கள் உரையாடுவது இல்லை?

அதே போல்தான் நாம் விண்ணிலுள்ள நமது சகோதரர்களோடு உரையாடலாம்.

அவர்கள் நமது தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசலாம்.

பரிந்து பேச முடியாது என்பவர்கள் இறைவனை தந்தையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

பட்டப்பகலில் கண்ணை மூடிக்கொண்டு 'இருட்டி விட்டது' என்று கூறுபவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்."

".ஏற்றுக்கொள்கிறேன். 
ஆனாலும்......."

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment