"மரியாளின் வழியே மைந்தனிடம் செல்வோம்."
"To Jesus Through Mary."
""மரியாளின் வழியே மைந்தனிடம் செல்வோம்."
"To Jesus Through Mary."
எப்படி?
தாயைப் போல் பிள்ளை என்பார்கள்.
மரியாளைப் பொறுத்தமட்டில்:
பிள்ளையைப் போல் தாய்.
உலகியலில்
தாய் --> பிள்ளை.
தாயிடம் பிள்ளை உண்டாகிறது. ஆகவே தாயின் குணங்கள் பிள்ளையிடம் இருக்கின்றன.
மரியாளியலில்
இறைமகன் --> தாய் --> மனு மகன்.
இறைமகன் மரியாளைப் படைத்தார்.
மரியாள் தன்னைப் படைத்த இறைமகனை மனுமகனாகக் கருத்தரித்து, பெற்றாள்.
இயேசு ஒரு ஆள் - தேவ ஆள்.
சுபாவங்கள் இரண்டு,
தேவ சுபாவம், நித்தியகாலமாய்.
மனித சுபாவம், மரியின் வயிற்றில் கருத்தரித்த நேரத்திலிருந்து.
இறைமகனாகிய தேவ ஆள்தான் மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.
ஆகவேதான் மரியாள் தேவதாய்.
இறைமகன் தன் தாயைப் படைக்கும்போதே பாவமாசு இல்லாதவளாக, தன்னுடைய பண்புகளோடு படைத்தார்.
தன் தாயோடு அவர் பகிர்ந்து கொண்ட, முக்கியமான பண்பு இறை சித்தத்திற்கு முற்றிலும் பணிதல். (Total Submission to the will of God)
இயேசு
"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"
என்ற வார்த்தைகள் மூலம் தனது தந்தையின் சித்தத்திற்கு முற்றிலும் பணிந்தது போலவே,
அன்னை மரியாளும்,
"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்"
என்ற வார்த்தைகள் மூலம் இறைத் தந்தையின் சித்தத்திற்கு முற்றிலும் பணிந்தாள்.
ஆகவேதான் மரியாளைப் பற்றி கூறும்போது "பிள்ளையை போல் தாய்" என்கிறோம்,
பரிசுத்த தம திரித்துவத்தின் முதல் ஆளாகிய இறைத் தந்தையின் மகளாகிய மரியாள்,
அவரின் சித்தத்தை கபிரியேல் தூதர் மூலம் அறிந்தபின்
இயேசுவின் தாய் ஆகிறாள்
இறைவனை மனிதனாகப் பெற்றெடுத்த மரியாள்,
எந்த நோக்கத்திற்காக இறைவன் மனிதன் ஆனாரோ
அந்த நோக்கத்தை நிறைவேற்ற தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒத்துழைத்தாள்.
கருத்தரித்த நாளிலிருந்து கல்வாரி வரை மட்டுமல்ல,
அதன் பிறகும் அவளது பணி தொடர்ந்தது,
இன்றும் தொடர்கிறது,
நாளையும் தொடரும்.
அன்று இயேசுவுக்கு தாயாக இருந்த அதே மரியாள்
இன்று இயேசுவின் திருச்சபைக்கு தாயாக இருக்கிறாள்.
அன்று பாலன் இயேசுவை ஏரோதுவின் கையிலிருந்து காப்பாற்றிய அதே மரியாள்
இன்று திருச்சபையை அதன் எதிரிகளின் கையில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறாள்.
மரியாளின் வழியேதான் இயேசு நம்மிடம் வந்தார்.
ஆகவே நாம் மரியாளின் வழியே இயேசுவிடம் போவது சிறந்தது.
சில நண்பர்கள்,
" நாங்கள் இயேசுவிடம் நேரடியாக போவோம். மரியாள் வேண்டாம்." என்று சொல்கிறார்கள்.
நேரடியாகப் போகின்றவர்களை நாம் தடுக்க வில்லை. ஆனால் மரியாளை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? அதுதான் புரியவில்லை.
இயேசு இறுதிவரை தன் தாயின் அன்பின் அரவணைப்பில் தான் இருந்தார்.
பிறந்தவுடன் தாயின் மடியின் மேல் இருந்த இயேசு
கல்லறைக்கு போகும் முன்னாலும் தாயின் மடியில் தலை வைத்து விட்டுத்தான் போனார்.
சிலுவையில் மரிப்பதற்கு முன் தனது தாயை அருளப்பர் மூலமாக நமது தாயாக தந்திருக்கிறார்.
தாய்ப் பற்று இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.
நாம் தாய்ப் பற்று உள்ளவர்கள்.
தாய் வழியாக மைந்தனிடம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
இயேசுவின் உடலில் ஓடியது அவருடைய தாயாகிய மரியாளின் இரத்தம்.
அதைத்தான் நமது மீட்பிற்காக சிலுவையில் சிந்தினார்.
மரியாளை மறுப்பவர்களால் இதை மறுக்க முடியுமா?
இயேசு தன்னுடைய தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களை தன்னுடைய தாய்க்கு ஒப்பிட்டார்.
அதன் அடிப்படையில் மரியாள் இயேசுவை பெற்றதால் மட்டுமல்ல, இறைத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றியதாலும் இயேசுவின் தாயாகிறாள்.
உண்மையில் மனிதர்களில் இறைவனை மிக அதிகமாக அறிந்திருந்ததில் மாதாவை மிஞ்ச யாருமே இல்லை.
ஒரு புதிய இடத்திற்கு tour போகும்போது அந்த இடைத்தைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு ஆளை guide ஆக வைத்துக் கொள்கிறோம்.
இறைவனிடம் செல்ல அவரை நன்கு அறிந்திருக்கும் அன்னை மரியாளை guide ஆக வைத்துக்கொள்வது எப்படி தவறாகும்?
"அன்னையே எங்களை வழிநடத்தி ஆண்டவனிடம் சேர்த்து விடுங்கள்"
என்று மாதா விடம் நம்மை ஒப்படைத்து விட்டால் இறைவனை எளிதில் அடைவது உறுதி.
மாதாவிடம் ஒப்படைத்து விடுவது என்றால் வெறும் வாயளவில் அல்ல, செயல் அளவில்.
செயல் அளவில் மாதா பக்தனாக இருப்பது சொல்வது போல் அவ்வளவு எளிது அல்ல.
நம்மில் அநேகர் நினைக்கிறார்கள், மாதா பக்தி ஜெபம் சொல்வதிலும் ஜெபமாலை சொல்வதிலும் மட்டும் அடங்கி இருக்கிறது என்று.
ஜெபம், ஜெபமாலை கட்டாயம் தேவை.
ஆனால் அதைவிட முக்கியம் நாம் நமது சிந்தனை, சொல், செயலில் அதாவது நமது வாழ்க்கையில்
மாதாவின் உயிருள்ள Xerox copy யாக மாற வேண்டும்.
இயேசு நம்மை தன் தாயோடு பார்க்கும் போது
உண்மையிலேயே யார் தனது தாய் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணர வேண்டும்!
அந்த அளவுக்கு நாம் மாதாவாக மாற வேண்டும். அதுதான் உண்மையான மாதா பக்தி.
மாதாவாக மாறும்போது இயேசுவாகவும் மாறியிருப்போம்.
அன்னை மரியாள் ஏழ்மையை ஏற்றுக்கொண்டாள்.
இறைவனுக்கு அடிமையாக வாழ்வதை ஏற்றுக்கொண்டாள்.
வாழ்நாள் எல்லாம் வியாகுல மாதாவாக வாழ்வதை ஏற்றுக்கொண்டாள்.
தன் மகன் நமக்காக மரிப்பதை ஏற்றுக்கொண்டாள்.
நமது வாழ்வும் மாதாவின் வாழ்வை போல மாறினால் இயேசு நம்மை மனம் உவந்து ஏற்றுக்கொள்வார்.
இதற்கு பெயர்தான் மரியாளின் வழியாக இயேசுவிடம் செல்லுதல்.
அன்பின் வழி நடந்து அன்னையாக மாறுவோம்.
அன்னை வழி நடந்து ஆண்டவன் பாதம் சேருவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment