"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே"
(லூக்.4:12)
மனித குலத்தை மீட்க வந்த இறைமகன் இயேசு தான் இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளின் ஒவ்வொரு விநாடியும் நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக வாழ்ந்து காண்பித்தார்.
அவர் போதனையாளராக மட்டுமல்ல சாதனையாளராகவும் வாழ்ந்தார்.
அவர் ஏழையாகப் பிறந்தது, ஏழையாக வளர்ந்தது,
ஏழையாக வாழ்ந்தது,
ஏழையாக மரித்தது எல்லாம்
ஏழ்மையின் மகத்துவத்தை நமக்கு செயல் மூலம் போதிப்பதற்காக தான்.
சர்வ வல்லமை உள்ள கடவுள் சக்தி இல்லாத மனிதராகப் பிறந்து நம்மைப் போலவே வாழ்ந்தது நமக்கு செயல் மூலம் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தை போதிப்பதற்காகத்தான்.
சென்ற இடமெல்லாம் மனிதருக்கு நன்மைகள் செய்தே வாழ்ந்தது நமக்கு பிறர் சிநேகத்தை எவ்வாறு செயலாக்க வேண்டும் என்பதை செயல் மூலம் காண்பிப்பதற்காகத் தான்.
கடவுளாகிய அவர் நித்திய காலமும் தன்னோடு உரையாடிக் கொண்டு தான் இருக்கிறார்.
ஆயினும் இவ்வுலகில் செபத்திற்காக அவர் நேரத்தை ஒதுக்கியது
ஜெபத்தின் முக்கியத்துவத்தை நமக்கு செயல் மூலம் காண்பிப்பதற்காகத்தான்.
தன்னையே பாடுபடுவதற்கும், சிலுவை மரணத்திற்கும் உட்படுத்தியது
நம்மை மீட்பதற்காக மட்டுமல்ல,
நாம் நமது வாழ்வில் துன்பங்களையும், மரணத்தையும் எவ்வாறு பாவ பரிகார செயல்களாகவும்,
தியாகச் செயல்களாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை காண்பிப்பதற்காகவும்தான்.
அவர் கடவுள், ஆகவே ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
ஆயினும் அதையும் நமக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகத்தான் ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறேதான் பொதுவாழ்க்கையில் ஈடுபட ஆரம்பிப்பதற்கு முன்னால் 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.
பொதுவாழ்வில் ஈடுபடும் போது நமக்கும் சோதனைகள் வரும் என்பதை தெரிவிப்பதற்காகவும்,
சோதனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு போதிப்பதற்காகவும்
தன்னையே பசாசினால் சோதிக்கப்படுவதற்கு உட்படுத்திக் கொண்டார்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும், என்னென்ன குணங்கள் இருக்க கூடாது என்பதை நமக்கு போதிப்பதற்காகத்தான் மூன்று வகையான சோதனைகளுக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டார்.
உபவாச நாட்களில் அவர் ஒன்றும் உண்ணவில்லையாகையால்
அந்த நாட்கள் கழிந்ததும், அவருக்குப் பசியெடுத்தது.
தனது வல்லமையை கல்லை அப்பமாக மாற்றி உண்ண பயன்படுத்த வேண்டும் என்று பசாசு அவரைச் சோதிக்கிறான்.
ஒன்றும் இல்லாமையிலிருந்தது உலகத்தை படைத்த அவருக்கு கல்லை அப்பமாக மாற்றுவது ஒரு பெரிய காரியமே இல்லை.
ஆயினும் இயேசு, "மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று" என எழுதி இருக்கின்றதே" என்றார்.
இந்த சோதனையை எதிர்கொண்ட விதத்திலிருந்து நமக்கு என்ன பாடத்தை இயேசு கற்பிக்கிறார்?
பொதுவாழ்வில் ஈடுபடுவோர் இறைவனுக்காக வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்துக்
கொள்பவர்கள்.
இவர்களது வாழ்வின் ஒரே குறிக்கோள் இறைவார்த்தையை செயல்படுத்த உழைக்க வேண்டும் என்பதுதான்,
உண்ண உணவும்,
உடுக்க உடையும்,
இருக்க இடமும்
இன்னோரன்ன சகல வசதிகளும் இலவசமாக கிடைக்கும் என்பதற்காக பொது வாழ்வில் தங்களை ஈடு படுத்தக் கூடாது.
பொதுவாழ்வு தங்களுக்கு வாழ்க்கை வசதிகளை சம்பாதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் அல்ல.
வாழ்க்கை வசதிகளைப் பற்றி கவலைப்படாமல், இறைப் பணிக்காக மட்டும்
(இரைப் பணிக்காக அல்ல)
அர்ப்பணித்து வாழ்வதே பொதுப்பணி.
அரசியல் வாழ்வு கூட ஒரு பொதுப் பணி தான். அதை நம்மவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும்,
எப்படி எல்லாம் வாழக்கூடாது என்பதற்கு உதாரணமே இக்காலத்திய அரசியல் வாழ்வு தான்.
இறைப்பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள விரும்புகிறவர்கள்
வாழ்க்கை வசதிகளை எதிர்பார்க்க கூடாது.
இயேசு எவ்வாறு ஏழ்மையாக வாழ்ந்தாரோ அதேபோன்று ஏழ்மையாக வாழ வேண்டும்.
"இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்."
(லூக்.9:58)
இப்பாடத்தை இறைபணியினர் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இயேசு முதல் சோதனைக்கு தன்னை உட்படுத்தினார்.
"பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலக அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,
6 "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
"என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.
7 எனவே நீர் தெண்டனிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவை ஆகும்" என்றது.
இரண்டாவது சோதனை அதிகாரத்தையும், அதன் மகிமையையும் பற்றியது.
அதிகாரத்தையும், மகிமையையும் குறிக்கோளாகக் கொண்டு யாரும் இறைப்பணியிலோ, மற்றப் பொதுப்பணிகளிலோ ஈடுபடக்கூடாது,
இயேசு தனது பொதுவாழ்வின் போது யார் மீதும் அதிகாரம் செலுத்தவில்லை.
தனது அப்போஸ்தலர்களைக்கூட தனது நண்பர்களாகத்தான் கருதினார்.
"உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்:
ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது.
ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்:" (அரு.15:15)
கடவுளாகிய அவர் மீது எந்த அதிகாரமும் இல்லாத பிலாத்துவின் அதிகாரத்துக்கு கூட இயேசு கட்டுப்பட்டு தன்னையே சிலுவை மரணத்திற்கு உட்படுத்தினார்.
மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாம், அதிகாரம் செய்வதினால் தங்களுக்கு புகழ் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் பொது வாழ்விற்கு வரக்கூடாது.
கடைசி இரவு உணவின்போது இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவும்போது
அவரிடம் என்ன மனநிலை இருந்ததோ அதே நிலை பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு இருக்க வேண்டும்.
"உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்."
"நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்."
(லூக்.22:26,27)
"பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்."
"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்."
(அரு.13 : 5, 14)
அதிகாரத்தையும் சுய புகழையும் விரும்புகிறவன் இறைப்பணிக்கு ஏற்றவன் அல்ல,
அடுத்து மூன்றாவது சோதனையாக:
"பின்னர் அலகை அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனானால் இங்கிருந்து கீழேகுதியும்.
10 ஏனெனில், " உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் " என்றும்,
11 "உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்" என்று எழுதியுள்ளது" என்றது."
(லூக்4: 9-11)
கோயில் முகட்டிலிருந்து கீழே குதிப்பதனால் உறுப்படியாக ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.
பயனற்ற சாதனை புரிவதில் பெருமை கொள்பவர்கள் தான் இத்தகைய காரியங்களை செய்வார்கள்.
இறைப் பணியில் ஈடுபடுவோர் ஆன்மாக்களுக்கு பயன்படத்தக்க காரியங்களில் தங்களது கவனத்தை முழுவதும் செலுத்த வேண்டுமே தவிர
ஆன்மீக ரீதியாக பயனில்லாத உலக ரீதியாக பெருமை தேடித் தரக்கூடிய செயல்களில் நேரத்தை வீணாக்கக்கூடாது.
ஆண்டவர் இறைப் பணியினரிடம் "எத்தனை கட்டடங்கள் கட்டினீர்கள்,
எத்தனை விழாக்கள் கொண்டாடினீர்கள் " என்று கேட்கப்போவதில்லை,
"எத்தனை ஆன்மாக்களை மனம் திருப்பினீர்கள்" என்றுதான் கேட்பார்.
மூன்றாவது சோதனையிலிருந்து நாம் இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆண்டவர் தனது பொது வாழ்வின் போது நிறைய புதுமைகள் செய்தார்.
எதற்காக?
மக்களது விசுவாசத்தை அதிகப் படுத்துவதற்காக.
அவர்களது உடல் நோயையும் ஆன்மீக நோயையும்
குணப்படுத்துவதற்காக.
அவரை மெசியா என்று மக்கள் அறிந்து கொள்வதற்காக.
தனக்கு புதுமைகள் செய்ய தெரியும் என்று பீற்றிக் கொள்வதற்காக அல்ல.
"நான் அவற்றைச் செய்தால்,
என்னை விசுவசிக்காவிட்டாலும், என் செயல்களையாவது விசுவசியுங்கள்:
இங்ஙனம், தந்தை என்னிலும், நான் தந்தையிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்,"
(அரு.10:38)
மேலும் ஒரு பார்வை:
"நீர் கடவுளின் மகனானால்"
என்று சாத்தான் முதலாவது மூன்றாவது சோதனைகளில் குறிப்பிடுகிறது.
சாத்தானுக்கு புத்தி கொஞ்சம் கம்மி.
உலக மீட்பர் பிறந்திருக்கிறார் என்று செய்தி வானத்திலிருந்து பூமிக்கு வந்த உடன்,
உலக மக்கள் மீட்பு அடையாமல் இருப்பதற்காக,
அவரை கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானித்தது.
அதற்காக ஏரோதுவின் மூலம் முயன்றது.
முயற்சி பயனளிக்கவில்லை.
எகிப்திலிருந்து இயேசு திரும்பியவுடன் 30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு வாழ்ந்தார்.
பொது வாழ்விற்காக வெளியே வந்தவுடன் இயேசுவைக் கண்காணிக்க ஆரம்பித்தது.
அவர் இறைமகன் தானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக இயேசுவை சோதித்தது.
ஆகவேதான் "நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்".
"நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்."
என்று சோதித்தது.
ஆனால் மூன்றாவது சோதனையின்போது,
"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே"
என்று இயேசு சொன்னவுடன் அவர் கடவுள் என்பதை உறுதி செய்து கொண்டது.
"சாத்தானுக்கு புத்தி கொஞ்சம் கம்மி" என்று சொன்னேன். அதற்கு காரணம் இருக்கிறது.
இயேசுவைக் கொன்றுவிட்டால் மக்களை மீட்பு அடையாமல் செய்துவிடலாம் என்பது அதன் திட்டம்.
ஆனால், ஐயோ பாவம், அவர் தனது உயிரை கொடுத்துதான் மக்களை மீட்க போகிறார் என்ற விவரம் அதற்கு தெரியாமல் போய்விட்டது!
தன் தலையிலேயே தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல
அவரை யூதர்களின் மூலம் கொன்று
எல்லா மக்களுக்கும் மீட்பு கிடைக்க சாத்தானே உதவியாக இருந்தது!
கடவுள் சாத்தானை தோற்கடிக்க சாத்தானையே பயன்படுத்திக்கொண்டார்!
"இதை எல்லாம் சொன்னது யார்?" என்று கேட்கக்கூடாது.
சூழ்நிலையை வைத்து நாம் கணிக்கக் கூடிய ஒரு கணிப்பு, அவ்வளவுதான்.
அது இயேசுவை மட்டுமல்ல,
இன்றும் அவரை பின்பற்றுகிற நம்மையும் தொடர்ந்து சோதித்து கொண்டுதான் இருக்கிறது.
நாம் நம்மை முழுவதும் இயேசுவின் கரங்களில் ஒப்படைத்து விட்டால்,
சாத்தானின் சோதனைகளிலிருந்து நமக்கு வெற்றி மேல் வெற்றியை இயேசு பெற்றுத்தருவார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment