Saturday, January 16, 2021

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்."(மாற்கு.2:14)

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்."
(மாற்கு.2:14)


மத்தேயு சுங்கத்துறையில் வரி வசூலித்துக் கொண்டிருக்கிறார்.

யூதனாகிய அவர் யூதர்களிடமிருந்து வரி வசூலித்து உரோமையருக்குக் கொடுப்பவர்.

பொதுவாக வரி வசூலிப்பவர்களை எல்லாம் யூதர்கள் பாவிகள் என்றே கருதினர்.

பொதுமக்களால் பாவி என்று கருதப்பட்ட மத்தேயுவை,

"என்னைப் பின்செல்"

என்று இயேசு அழைக்கிறார்.


அவரும் மறு சிந்தனைக்கு இடமில்லாமல் உடனே எழுந்து அவரைப் பின்சென்றார்.

அதுவரை பணம்தான் பிரதானம் என்று எண்ணி வரி வசூலித்துக் கொண்டிருந்தவர்

இயேசுவின் கண்பட்டவுடன் மனம் மாறி அவர் சொல்லுக்கு உடனே கீழ்ப்படிகிறார்.

அந்த வினாடியிலிருந்து தனது வாழ்க்கையை முழுவதும் இயேசுவின் சேவைக்கு அர்ப்பணித்து விடுகிறார்.

தன் வீட்டில் இயேசுவுக்கு விருந்தும் வைக்கிறார்.

 இயேசுவின் பார்வையும் வார்த்தைகளும் மத்தேயுவின் மனதைத் தொட்டதோடு,

 வாழ்க்கையையே மாற்றி விட்டன.

நாம் வாசித்த இந்த நிகழ்ச்சி நமது மனதை தொட்டிருக்கிறதா?

தமிழ் வாழ்நாளில் செய்தித்தாள்கள் மூலமாகவோ, நேரிலோ நிறைய நிகழ்ச்சிகளை சந்திக்கிறோம்.

".ஐயோ பாவம் விவசாயிகள்!"

" சரியாவுள்ள மழை!"

"பிரசங்கம் super!"

"சாப்பாடு செம taste!"

போன்ற பரிதாப அல்லது வியப்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அளவிற்குத் நிகழ்சிகள் நம்மைத் தொட்டிருக்கும்.

நம்மையே, நமது வாழ்க்கையையே மாற்றக் கூடிய அளவிற்குத் தொட்டிருக்கிறதா?

கல்கத்தா சேரி வாழ் மக்கள் நிலை அன்னைத் தெரசாளைத் தொட்ட அளவிற்குத் தொட்டிருக்கிறதா? 

கல்கத்தா, அன்னைத் தெரசாளைப் புனித கல்கத்தா தெரசாளாக மாற்றக் கூடிய அளவிற்குத் தொட்டிருக்கிறது.

இயேசுவின் பார்வையில் மாறினார் மத்தேயு.

அதே இயேசு தானே நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ளும்போது நமது உள்ளத்திற்குள் வருகிறார்.

அவர் நம் கையைத் தொட்டு, நாவைத் தொட்டுத் தானே நமது உடலோடும், இரத்தத்தோடும் கலக்கிறார்.

நம் மனதைத் தொட்டிருக்கிறாரா?

நமக்கு மிகவும் வேண்டிய ஆள் நம் வீட்டிற்கு வந்தால் அவரை அன்புடன் வரவேற்று, அவருடன் அமர்ந்து மனம் திறந்து பேசிக் கொண்டிருப்போம்.

ஆனால் வேண்டாத ஆள் வந்தால், வேண்டா வெறுப்பாக அவரை உட்கார வைத்து விட்டு நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அவர் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு போய்விடுவார்.

இயேசுவை வாங்கி, வாய்வழியாக வயிற்றுக்குள் அனுப்பட்டு,

அருகில் இருக்கும் ஆளோடு பேசிக் கொண்டிருந்தாலோ, வேறு எதையாவது கற்பனை செய்து கொண்டிருந்தாலோ

நாம் அவரை கூட்டிக் கொண்டு வந்து அவமதிப்பது போல் ஆகிவிடும்.

இயேசுவின் வாழ்வு நம்மை தொட்டிருந்தால் நமது வாழ்க்கையையே மாறியிருக்க வேண்டுமே?

நற்கருணை வாங்குவதற்கு முன்பு இருந்த நிலையே வாங்கிய பின்னும் நீடித்தால் அவரை அவமதிப்பது போல் ஆகிவிடாதா? 


 வீட்டிற்குள் நுழையுமுன் காலைக் கழுவி விட்டு நுழைகிறோம்.

சாப்பிடு முன் கையைக் கழுவி விட்டு சாப்பிடுகிறோம்.

நமது வீட்டுக்கும், சாப்பாட்டுக்கும் கொடுக்கிற மதிப்பை இயேசுவுக்கு கொடுக்கிறோமா?

நன்மை வாங்குபவர்களில் எத்தனை பேர் தங்களது ஆத்துமத்தை முதலில் சுத்தம் செய்துவிட்டு அப்புறம் நன்மை வாங்குகிறார்கள்?

பாவசங்கீர்த்தனம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்து விட்டது.

பைபிளை வாசிப்பதனால் மட்டும் நமக்கு மீட்பு கிடைத்துவிடாது.

வாசித்ததை வாழ்க்கை ஆக்கினால் மட்டும் மீட்பு கிடைக்கும்.

நற்கருணையை வாங்குவதால் மட்டும் நம் ஆன்மாவில் மாற்றம் ஏற்பட்டு விடாது.

உரிய தயாரிப்போடு நற்கருணை வாங்க வேண்டும்.

இயேசுவின் வருகை நமது உள்ளத்தை தொட வேண்டும்.

நற்கருணை நாதருடன் மனம்திறந்து பேச வேண்டும்.

நமது குறைகளை நிவர்த்தி செய்வதாக அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

அதற்கு அவருடைய உதவியை கேட்க வேண்டும்.

ஒவ்வொரு முறை இயேசுவை வாங்கும் போதும் நமது ஆன்மாவில் வளர்ச்சியை நோக்கி மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இயேசுவை பார்த்தவுடன் எப்படி மத்தேயுவின் வாழ்க்கை மாறியதோ, அதேபோல,

இயேசுவை அவருடைய உடலோடும் இரத்தத்தோடும் நமது உள்ளத்தில் வரவேற்கும் போது நமது வாழ்க்கை மாற வேண்டும்.

இறைவன் ஒருவரே மாறாதவர்.

 நாம் அவரை நோக்கி மாறிக்கொண்டே இருக்க வேண்டியவர்கள்.

நற்கருணை வாங்கும்போது மட்டுமல்ல,

ஒவ்வொரு முறை செபிக்கும் போதும், தவ முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் நாம் மாற வேண்டும்.

ஜெபமாலை ஆரம்பிக்கும்போது இருந்த நிலையே ஜெபமாலையை சொல்லி முடித்தவுடன் இருந்தால்

 ஜெபமாலை ஜெபித்ததினால் என்ன பயன்?

ஒருசந்தி இருக்க ஆரம்பிக்குமுன் இருந்த நிலையே ஒருசந்தி முடிந்த பிறகும் இருந்தால் நாம் ஒரு ஒருசந்தி இருந்ததனால் என்ன பயன்?

காலையில் இருந்த நிலையே மாலையில் இருந்தால் அன்று வாழ்ந்ததனால் என்ன பயன்?

நமது வாழ்க்கையே ஒரு செபமானால் நமது வளர்ச்சியும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

மாறாதவர் உதவியுடன்

மாறிக்கொண்டே இருப்போம் நிறைவை நோக்கி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment