சிறுவயதில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு.
ஐந்து வயது இருக்கும்.
அப்பொழுதெல்லாம் சிறுவர்களிடையே பரவலாகக் காணப்படும் ஒரு நோய் சொரி சிரங்கு.
கையில் ஊறும். சொரிந்தால் சுகமாக இருக்கும்.
சொரிந்து கொண்டே இருக்கத் தோன்றும். ஆனால் சொரிந்த இடத்தில் சிரங்கு வெடிக்கும். வலிக்காது. ஆனால் ஊறும்.
எனக்கு இரண்டு கைகளிலும் சிரங்கு.
வெளியே கைகளைக் காண்பிக்க வெட்கமாக இருக்கும்.
சிரங்கு சுகமாக வேண்டுமென்றால் உவரி அந்தோரை யார் கோவிலுக்குப் போக வேண்டுமென்று ஐயா சொன்னார்.
உவரி என்று சொன்னவுடனே ஞாபகத்துக்கு வந்தது அந்தோனியார், கடல், மீன்.
மாட்டுவண்டி கட்டி கோவிலுக்குப் போனோம்.
குளிப்பதற்காக கடலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்.
கடலைப் பார்க்க ஆனந்தம். இறங்கி குளிக்க ஆசை, ஆனால் பயம்.
ஐயா என் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் போய் பிறகு இடுப்பில் எடுத்துக் கொண்டார்.
பின் அவரது மார்பளவு தண்ணீர் மட்டும் உள்ளே சென்றார்.
எனக்கு பயம் தொற்றிக் கொண்டது, ஆனால் நான் ஐயாவின் தோளைப் பற்றி கொண்டிருந்ததால் அவ்வளவு பயம் இல்லை.
அப்பொழுது நான் எதிர்பாராத ஒரு காரியத்தை ஐயா செய்தார்.
அவர் என்னை அவரது இரண்டு கைகளாலும் தூக்கி பிடித்துக் கொண்டு,
என்னிடம் "மூக்கை பொத்தி கொள்" என்றார்.
நான் எதற்கு என்று புரியாமல் மூக்கை பொத்திக்கொண்டேன்.
அடுத்த வினாடியே என்னை தண்ணீருக்குள் முக்கி பிடித்துக் கொண்டிருந்தார்.
என்னை பயம் முற்றிலும் பிடித்துக்கொண்டது.
நான் மூக்கை பிடித்த கையை எடுக்காமலேயே ஐயாவின் கால்களை பற்றி பிடித்துக் கொண்டிருந்தேன்.
அதற்குள் எனது கைகளில் இருந்த சிரங்குகளை மீன்கள் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.
அதேபோல் மூன்று முறை முக்கி முக்கி எடுத்தார்.
மூன்றாவது முறை பயம் போய்விட்டது. ஆனாலும் அவரைப் பற்றியதை விடவில்லை.
மீன்கள் சிரங்குகளை தின்றதால் கை விரல்களுக்கிடையேயிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
பிறகு கடலை விட்டு வெளியே வந்து, நல்ல தண்ணீரில் குளிச்ச ஊத்தி, கைகளைத் துடைத்து, எண்ணை போட்டு, அந்தோனியாருக்கு காணிக்கை போடச்சொன்னார்கள்.
வீட்டிற்குப் வருமுன் சிரங்கு குணமாகிவிட்டது.
அன்று போன சிரங்கு இன்னும் வரவில்லை.
இந்த அனுபவத்தில் எனது மனதில் ஆழ பதிந்தது,
கடலுக்குள் "முக்கும்போது" ஐயாவின் கால்களை இறுகப் பற்றிக்கொண்டிருந்த நிகழ்ச்சிதான்.
"முக்கும்போது" என்றேன். "முங்கும் போது" என்று சொல்லவில்லை.
ஏனெனில் நான் முங்க வில்லை. ஐயாதான் முக்கினார்.
நம்மைப் படைத்த கடவுளும் இப்படித்தான் நம்மை அடிக்கடி துன்பம் எனும் கடலுக்குள் முக்கி முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
நம்பிக்கையுடன் அவரை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
துன்பக் கடலுக்குள் நம்மை அவர் முக்கி எடுப்பது அவரது ஆனந்தத்திற்காக அல்ல,
நமது ஆன்மாவில் பாவம் என்னும் சிரங்கை அகற்றி நம்மை பரிசுத்தப் படுத்துவதற்காகத்தான்.
மருத்துவர் நமது கையில் ஊசி போடுவது நாம் துடிப்பதை பார்த்து சந்தோஷ படுவதற்காக அல்ல,
நமது நோய் குணமாக வேண்டும் என்பதற்காகத்தான்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்தி நம்மை அடிப்பது அவரது சந்தோஷத்திற்காக அல்ல, நமது சந்தோஷமான வாழ்க்கைக்காகத்தான்.
இது நமது நினைவில் இருந்தால் நமது பாசமுள்ள தந்தையாகிய இறைவன் நமக்கு துன்பங்களை அனுப்பும்போது முணுமுணுக்காமல் நன்றியோடு ஏற்றுக்கொள்வோம்.
பிள்ளை சுகம் இல்லாவிட்டால் தாய் பத்தியம் காப்பாள்.
மகன் படிக்க தந்தை உழைப்பார்.
நாம் நித்தியமும் வாழ்வதற்காகத் தான் இயேசு பாடுபட்டு தன் உயிரை விட்டார்.
அவர் நமக்காக பாடுபட்ட போது, நமக்காக நாம் பாடுபட ஏன் தயங்குகிறோம்?
துன்பங்கள் அதாவது சிலுவைகள் பல உருவங்களில் வரலாம்.
எவற்றையெல்லாம் நமது மனது ஏற்க மறுக்கிறதோ அவையெல்லாம் நமக்கு துன்பங்கள்தான்.
துன்பங்களை நாம் ஏற்றுக் கொண்டால் அவை சிலுவைகளாக மாறுகின்றன.
நல்ல மனதோடு நாம் சிலுவைகளைச் சுமந்தால் நாம் இயேசுவைப்போல் ஆகிறோம்.
இயேசுவைப்போல் சிலுவைகளைச் சுமந்தால் இயேசுவைப்போல் உயிர்ப்போம் .
நாம் நினைத்தபடி நடக்காதவற்றை ஏமாற்றங்கள் என்போம்.
ஏமாற்றங்களை இயேசுவுக்காக ஏற்றுக்கொண்டால் அவை நமக்கு வெற்றியைத் தரும் சிலுவைகள்.
துன்பங்கள் நோய் நொடிகள் உருவத்தில் வந்தால், நாம் முதலில் செய்யவேண்டியது
இயேசுவை இறுக பற்றிக் கொள்வது தான்.
அநேக சமயங்களில் நாம் அவரைத் தேடிப்போய் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்கு துன்பங்களை வரவிடுகிறார்.
அவரை இறுகப் பற்றிக்கொண்டு,
"என் ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுகமாக்கும்."
என்று வேண்ட வேண்டும்.
நமக்கு சரீர சுகத்தை விட ஆன்மீக சுகம்தான் முக்கியம்.
நாம் வாழ்வது ஆன்மீக ஈடேற்றத்திற்காக மட்டுமே.
ஆகவே நமது ஜெபம்,
"ஆண்டவரே, என்னுடைய உடல்நலம் ஆன்மீக நலனுக்கு உகந்ததாக இருக்குமானால் என்னை குணமாக்கும்."
என்றுதான் இருக்க வேண்டும்.
சுகமானாலும், ஆகாவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் அவரைப்
பற்றிய பற்றை விட்டுவிடக் கூடாது.
அவரை பற்றிக் கொண்டால்தான் இவ்வுலகை பற்றிய பற்று நீங்கும்.
இயேசு அவரது பொது வாழ்வின் போது அநேகரைச் சுகமாக்கினார்.
எதற்காக?
சுகம் பெற்றவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்துவதற்காக.
ஒவ்வொரு முறையும் குணமாக்கும் போதும்
" உனது விசுவாசம் உன்னை குணமாக்கிற்று"' என்றுதான் சொல்வார்.
முக்கியத்துவம் பெறுவது விசுவாசம்தான்.
இப்போதும் ஆண்டவர் நமக்கு துன்பங்களை வரவிட்டாலும்,
நாம் வேண்டும்போது அவற்றை நீக்கிவிட்டாலும்,
அல்லது
நீக்காவிட்டாலும்
அது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.
ஒரு குழந்தை அதன் அப்பாவை பார்த்து சொன்னதாம்,
''அப்பா, நான் உங்கள் தோள்ப்பட்டையில் அமர்ந்துகொண்டு, உங்கள் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே எனக்குப் பயமில்லை.
நீங்கள் உங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்."
நாமும் எப்போதும் இயேசுவை
இறுக்கப் பற்றிக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment