Saturday, January 2, 2021

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்." (அரு.1::29)

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."
(அரு.1::29)


பழைய ஏற்பாட்டில் யூதர்கள் மத்தியில் பாவங்களுக்குப் பரிகாரமாக செம்மறியாட்டைப் இறைவனுக்குப் பலியாகச் செலுத்தும் பழக்கம் இருந்தது.

ஸ்நாபக அருளப்பர் யூதர், ஆகையால் உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக்க மனிதனாகப் பிறந்த இயேசுவை ஒரு செம்மறியாகச் சித்தரிக்கிறார்.

மனிதர் செய்த பாவங்களை செம்மறியின் மேல் சுமத்தி அதைப் பலியிட்டுவிட்டால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது அவர்களது நம்பிக்கை.

பலியிடப்பட்ட ஆட்டைப் பலியிட்டவர்களே சாப்பிட்டு விட வேண்டும்.

உலகின் பாவங்களைப் போக்குவதற்காக தன்னையே சிலுவை மரத்தில் பலியாக ஒப்புக்கொடுக்க மனிதனாக பிறந்த இயேசு,

அவர் பலியிடப்படுவதற்கு முந்திய நாளான வியாழக்கிழமை இரவு தன்னையே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.


"அவர் அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு அவர்களுக்கு அளித்தது, "இதை வாங்கிக்கொள்ளுங்கள்.
இது என் உடல்" என்றார். 


பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி அவர்களுக்கு அளிக்க, அதில் அனைவரும் பருகினர்.


 அப்போது அவர், "உடன்படிக்கைக்கெனப் பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம் இது."
(மாற்கு14:22-24)

அவர் பலியிடப்படப்போவது வெள்ளிக்கிழமை தான்.

ஆனால் அப்போது தன் உடலையும் இரத்தத்தையும் அப்போஸ்தலர்களுக்கு உணவாக கொடுக்க அவரும் உயிரோடு இருக்கமாட்டார், அப்போஸ்தலர்களும் அருகில் இருக்கமாட்டார்கள்.

ஆகவே பலியிடப்பட்ட தன்னை உணவாக கொடுக்கும் நிகழ்ச்சியை முந்திய நாள் இரவு உணவின்போது முடித்துக் கொள்கிறார்.

அப்பத்தை தன் உடலாகவும், இரத்தை இரத்தமாகவும் மாற்றி தன்னை சீடர்களுக்கு உணவாக கொடுக்கிறார்.

சீடர்கள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும்தான் உணவாக உண்டார்கள்.

அதுமட்டுமல்ல உலகம் முடியும் மட்டும் தன்னுடைய பலியைத் கொண்டாடுவதற்காக தன்னுடைய சீடர்களுக்கு குரு பட்டமும் கொடுத்தார்.

அதன்மூலம் அவர் கூறிய அதே வசீகர வார்த்தைகளை அவர்களும் கூறி அப்பத்தை அவரின் உடலாகவும், இரசத்தை இரத்தமாகவும் மாற்றும் வல்லமையை கொடுத்தார்.

அன்று திருச்சிலுவையில் ரத்தம் சிந்திய விதமாய் ஒப்புக் கொடுக்கப்பட்ட அதே திருப்பலி இன்றுவரை ரத்தம் சிந்தாத விதமாய் தினமும் பலிபீடத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இது உலகம் முடியும் மட்டும் தொடரும்.

இன்று பீடத்தில் பலியாக ஒப்பு கொடுக்கப்படுவது அன்று கல்வாரி மலையில் சிலுவையில் இரத்தம் சிந்தி பலியான அதே இயேசு தான்.

திருப்பந்தியின்போது நாம் உண்பது அன்று இரவு உணவின்போது சீடர்களால் உண்ணப்பட்ட அதே
 இயேசுவைத்தான்.


மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு பலியிடப்பட போகிறார் என்பதை குறிப்பிடவே ஸ்நாபக அருளப்பர்,

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."

என்று ஆண்டவர் பொது வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னரே மக்களுக்குச் சுட்டி காண்பிக்கிறார்.

மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்த ஸ்நாபக அருளப்பர்,

இயேசு தம்மிடம் வருவதைக் கண்டவுடன் , "இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்."
என்றார்.

ஸ்நாபக அருளப்பர் இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பிறந்துவிட்டார்.

இயேசு பிறந்தவுடன் அவரை கொல்லும் நோக்கத்தோடு ஏரோது மன்னன் இரண்டு வயதும் அதற்கு உட்பட்ட வர்களுமான குழந்தைகளை கொல்லும் படி உத்தரவிட்டபோது 

எலிசபெத்தம்மாள் தன்மகனை காப்பாற்றும் பொருட்டு அவரை பாலைவனத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டாள்.

 அருளப்பர் அங்கேயேதான் வளர்ந்தார்.

இயேசுவும் எகிப்துக்கு சென்றுவிட்டார்.

ஏரோது மன்னன் இறந்த பின்பு தான் ஊருக்கு திரும்பினார்.

அருளப்பர் பாலைவனத்திலும், இயேசு நசரேத்தூரிலும் வளர்ந்ததால், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

 அருளப்பர் இயேசுவை அதற்குமுன் பார்த்திருக்காவிட்டாலும் அவர்மேல் பரிசுத்த ஆவி இறங்கி நிற்பதை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார்.
(அரு.1:33,34)

இயேசு கடவுள் என்பதை சுட்டிக் காண்பிக்கவே, அருளப்பர் இயேசுவைப் பற்றி,

"அவர் எனக்குமுன்பே இருந்தார்." என்றார்.


மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில்,

36 இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். 

அருளப்பர் அவரை உற்றுநோக்கி, "இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.

37 சீடர் இருவரும் அவர் கூறியதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

அருளப்பர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் பெலவேந்திரர் ஒருவர்.

 அவர் சீமோன் இராயப்பரின் சகோதரர். (அரு1:35-37,40)

இயேசு கடவுளுடைய செம்மறி என்பதன் ஆழமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்கள். அவரை நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டியவர்கள். இயேசுவின் சாயல் நம்மிடம் முழுமை பெற வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 

அப்படியானால் இயேசுவைப்பற்றி சொல்லப்படுகின்ற ஒவ்வொன்றும் நம்மைப் பற்றியும் சொல்லப்பட வேண்டும்.

இயேசு இறைமகன். அவரது தந்தையை "நாமும் தந்தையே" என்றுதான் அழைக்கிறோம்.

அதுவும் இயேசு கற்றுத்தந்த படியே.

கடவுளின் பிள்ளைகள் என்ற பெயருக்குப் பொருத்தமாக வாழ வேண்டிய நாம்,

கடவுளுடைய செம்மறி என்ற பெயருக்கும் பொருத்தமாக வாழ வேண்டும் அல்லவா?

அவர் பாவப் பரிகாரப் பலிப்பொருள் என்றால்,

நாமும் பாவப் பரிகாரப் பலிப்பொருள்தானே!

அவர் நமது பாவங்களை தன் மீது சுமந்து சென்று நமக்காக பலியானார்.

நமது பாவங்களை நாம் தான் சுமந்து கொண்டிருக்கிறோம். அவற்றிற்காக நாம் பலியாக நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டியது அவசியம்தானே!

 நமது சுபாவமே உரிமைக்காக குரல் கொடுப்பதும் கடமையை கண்டால் ஒதுங்கி இருப்பதும் தானே.

இறைவன் தந்தை என்பதால் நமக்கு வேண்டியதை எல்லாம் உரிமையோடு கேட்போம்.

அதேசமயத்தில் இறைமகன் எப்படி பலிப்பொருளாக மாறினாரோ,

 அப்படியே நாமும் மாற வேண்டும் என்று சொல்வதை கேட்க தயக்கமாக இருக்கிறது.

திருப்பலிக்குச் செல்லும் போது குருவோடு சேர்ந்து நாமும் இயேசுவே தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுக்கிறோம்,

பலிப் பொருளை உணவாக அருந்தவும் செய்கிறோம்.

நம்மையும் இயேசுவோடு சேர்த்து பலியாக ஒப்புக் கொடுக்கிறோமா?

உண்மையிலேயே ஒப்புக்கொடுத்தால் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட பொருளை திரும்ப கேட்கக் கூடாது.

அதாவது கோவிலில் இருக்கும் போது நம்மையே தந்தை இறைவனுக்கு வழியாக ஒப்புக் கொடுத்து விட்டால் கோவிலை விட்டு வெளியே வரும்போது அதை பொருளாகத்தான் வரவேண்டும்.

ஆனால் நாம் பலிபொருளாக வருகிறோமா அல்லது பழைய நாமாகவே வருகிறோமா?

பலிபொருளாக வந்தால் அன்று நமக்கு வரும் கஷ்டங்களை எல்லாம் சிலுவைகளாக கருதி மகிழ்ச்சியுடன் சுமப்போம்.

 நாமாக வந்தால் கஷ்டங்களைக் கண்டு முணுமுணுப்போம்.

இயேசுவைப் போல நாமும் பலிப்பொருள் தான் 

ஒவ்வொரு வினாடியும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நம்மையே நாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் பலி நிகழ்வுதான் என்பதை நாம் உணர வேண்டும்.

உணர்கிறோமா?

நாம் இயேசுவாக மாற வேண்டும் என்றால் 

இயேசுவைப்போல் பலிப் பொருளாகவும் மாறவேண்டும்.

 மாறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment