*அறிவோம், வாழ்வோம்.*
"ஹலோ! மிஸ்டர்! கோவிலுக்குப் போய்விட்டு வருகிறீர்களா?"
"ஆமா."
"கையில் பைபிள் இருக்க, அதுதான் கேட்டேன்."
"ஹலோ! என்னிடம் இருப்பது ஒரு பைபிள்தான்! அதை உங்ககிட்ட தந்துவிட்டு நான் எங்கே போவேன்!"
"மிஸ்டர்! நான் உங்க பைபிளைக் கேட்கல. கையில் பைபிள் இருக்கிறதினாலே கோவிலுக்குப் போய்விட்டு வருகிறீர்களான்னு கேட்டேன்."
"ஏன், பைபிள் இல்லாம கோயிலுக்குப் போகக் கூடாதா?"
" போகலாமே! கத்தோலிக்கர்கள் பைபிளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்.
ஆகவேதான் உங்கள் கையில் பைபிளை பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது."
"என்ன கேள்விப்பட்டீர்கள்?"
"பைபிளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று."
"உண்மைதான்."
"உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி."
"முழு பதிலையும் கேட்டால் அப்புறம் நன்றியை வாபஸ் பெற்றுக் கொள்வீர்கள்."
"அது என்ன முழு பதில்?"
"பைபிளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதை வாழ்வதற்கு அதிக கொடுக்கிறோம்."
"அப்போ நாங்கள் வாழவில்லையா?"
"நான் உங்களைப் பற்றி ஒன்றும் பேசவே இல்லையே! நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அவ்வளவுதான்."
"பைபிள் வாசிக்காமல் எப்படி அதன்படியே வாழ முடியும்?"
"நான் வாசிக்க கூடாது என்று சொல்லவில்லையே. வாசிப்பதை விட வாழ்வுதான் முக்கியம் என்று சொன்னேன்.
சாப்பிடுவதை விட சாப்பிட்டது ஜீரணிப்பது தான் அதிக முக்கியம் என்று சொல்வது மாதிரி.
ஜீரணிக்கும்படியாக சாப்பிட வேண்டும்.
அதேபோல் வாழும் படியாக பைபிளை வாசிக்க வேண்டும்."
"நாங்கள் வாசிக்கும் அளவிற்கு நீங்கள் வாசிப்பது இல்லை. அதுதான் உண்மை."
"உண்மைதான்."
"நாங்கள் பைபிளை cover to cover thorough ஆக வைத்திருக்கிறோம்.
எதைப்பற்றி கேட்டாலும் அது பைபிளில் எங்கே இருக்கிறது அல்லது இல்லை என்று உடனே சொல்லிவிடுவோம். உங்களால் முடியுமா?"
"முடியாது."
''முடியாது என்று சொல்வதற்கு வெட்கமா இல்லை?"
"உண்மையை ஒத்துக் கொள்வதற்கு எதுக்குங்க வெட்கம்?
இறுதிநாளில் கடவுளிடம் கணக்கு கொடுக்கும்போது
அவர் என்னிடம்
"எத்தனை முறை பைபிள் வாசித்திருக்கிறாய்?
எத்தனை வசனங்கள் மனப்பாடமாகத் தெரியும்?
எந்தெந்த வசனம் எங்கெங்கே இருக்கிறது என்று தெரியுமா?
பைபிளை பற்றி உன்னால் எவ்வளவு நேரம் பேச முடியும்?"
என்று என்னுடைய பைபிள் அறிவைப் பற்றி எல்லாம் கேட்க மாட்டார்.
" உனது அயலானை எப்படி நேசித்தாய்? யார் யாருக்கு உதவி செய்தாய்"
என்று எனது அன்பு செயல்களை பற்றி மட்டும்தான் கேட்பார்."
"அப்படி என்றால் பைபிள் அறிவு முக்கியம் இல்லை என்று சொல்கிறீர்களா?"
"அப்படிச் சொல்லவில்லை.
அறிவைவிட வாழ்க்கைதான் முக்கியம் என்று சொல்கிறேன்.
ஆகாய விமானத்தில் பிரயாணம் செய்தால் தான் அமெரிக்காவிற்கு போக முடியும்.
ஆனாலும் ஆகாய விமானத்தைவிட அமெரிக்காதான் முக்கியம்.
கட்டளைப்படி வாழ்ந்தால்தான் கடவுளிடம் போகமுடியும்,
ஆனாலும்
கட்டளையை விட கடவுள்தான் முக்கியம்.
ஒரு விஷயம் தெரியுமா?
நம்மைவிட சாத்தானுக்கு பைபிளைப் பற்றிய அறிவு மிக அதிகம்."
"அப்போ நாங்கள் எல்லாம் சாத்தான்களா?"
"ஹலோ! நான் நம்மைவிட என்றுதான் சொன்னேன்.
எங்களைவிட என்று சொல்லவில்லை.
சொல்லாததை எல்லாம் சொன்னதாக கற்பனை செய்யக்கூடாது.
அறிவை விட வாழ்க்கை முக்கியம் என்பதை விளக்க அந்த ஒப்புமையை சொன்னேன்.
கிராமங்களில் படிப்பறிவே இல்லாத பாமர மக்களில் அனேகர் படிப்பறிவு உள்ளவர்களை விட அதிக பக்தியாக வாழ்கின்றார்கள்.
அறிவு மூளை சம்பந்தப்பட்டது.
வாழ்க்கை அன்பு சம்பந்தப்பட்டது.
இரண்டுக்கும் காரண, காரிய தொடர்பு இல்லை.
அறிவே இல்லாதவன் கூட அன்பு உள்ளவனாக இருக்கலாம்.
நாம் பைபிள் வாசிக்க வேண்டியது அறிவை பெருக்கிக் கொள்வதற்காக அல்ல.
அன்பை பெருக்கிக் கொள்வதற்காக மட்டுமே."
"சரி, அதை விடுங்க நீங்கள் பைபிளை எப்படி வாசிக்கிறீர்கள்?"
"தாய்த் திருச்சபையை தந்திருக்கிற வாசக குறிப்புகளின்படி அந்தந்த நாளுக்கு குறிக்கப்பட்டிருக்கிற வாசகங்களை வாசிக்கிறேன்."
"அதாவது அதிகார வாரியாக வாசிப்பது இல்லை, சரியா?"
"சரி."
"நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்தால் நிறைய வாசிக்கலாமே!
எதற்காக ஒவ்வொரு நாளும் சில வசனங்களை மட்டும் வாசிக்க வேண்டும்?"
"பள்ளிக்கூடத்திற்கு போயிருக்கிறீர்களா?"
"எதற்காக சம்பந்தம் இல்லாத கேள்வி?"
"பள்ளிகூடத்தில் படித்திருந்தால் ஒவ்வொரு வகுப்பிலும் அதற்கு குறிப்பிடப்பட்ட பாடத்திட்டத்தின்படி தான் படிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள்."
"எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்?"
"உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமே, அதற்காகத்தான்.
அந்தந்த நாளைக்கான வாசக குறிப்புகளின் படி நாம் ஒழுங்காக வாசித்தாலே
மூன்று வருடங்களுக்குள் நற்செய்தி நூல்கள் முழுவதையுமே படித்திருப்போம்.
வீட்டில் உணவு இருக்கிறது என்பதற்காக
காலை உணவையும்,
மதிய உணவையும்,
இரவு உணவையும்
இடைவெளி விடாமல் யாரும் சாப்பிடமாட்டார்கள்.
சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதற்கு இடைவெளி வேண்டும்.
அன்றன்று வாசிக்கிற வாசகங்கள் படி அன்றன்று வாழ்ந்தாலே போதும்."
"நிறைய வாசிப்பவர்கள் அதன்படி வாழ மாட்டார்கள் என்கிறீர்களா?"
"அப்படிச் சொல்லவில்லை.
உங்கள் மனைவி வீட்டில் ஒரு டின் நிறைய முறுக்கு செய்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
தினம் ஒன்றோ இரண்டோ சாப்பிடுவீர்களா?
அல்லது தொடர்ந்து டின் காலியாகும் வரை சாப்பிட்டு கொண்டே இருப்பீர்களா?"
"யாருமே பைபிளை மொத்தமாக படிக்கக் கூடாது என்கிறீர்களா?"
"தேர்வுக்காக தயாரிப்பவர்கள் படிக்கலாம், படிக்க வேண்டும்.
அவர்களும் அன்றன்றய வாழ்வுக்கு அன்றன்றய வாசகங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்."
"தேர்வுக்காக தயாரிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பைபிளை முழுமையாக வாசிக்க கூடாதா?"
"வாசிக்கலாம். வாசித்தால் உங்களைப் போன்றவர்கள் கேள்விகள் கேட்கும்போது பதில் கூற வசதியாக இருக்கும், உதவியாகவும் இருக்கும்.
ஆனால் என்னை போல சாதாரணமானவர்களால் உங்களைப் போன்ற முற்றிலும் கற்றவர்களோடு வாதாட முடியாது."
"கிண்டலா? நான் முற்றிலும் கற்றவன் என்று உங்களிடம் சொன்னேனா?"
"அப்போ பைபிளை முற்றிலும் கற்க வில்லையா?"
"வாசித்திருக்கிறேன். வாதாடுவதை விட்டுவிடுகிறேன். பைபிளை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லுங்கள்."
"பைபிள் என்றால் இறை வாக்கு.
நாம் கையில் வைத்திருக்கும் பைபிள் அதன் எழுத்து வடிவம்.
இறைவாக்கு நமக்கு தரப்பட்டிருப்பது அதை அறிந்து நாம் வாழ்வதற்காகத்தான்.
வாழப்படாத பைபிள் அறிவினால் யாருக்கும் பயன் இல்லை.
இறைவாக்கை அறிவோம்.
அதன்படி வாழ்வோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment