Wednesday, January 6, 2021

ஆண்டவர் தந்ததை வீணாக்கலாமா ?

http://lrdselvam.blogspot.com/2021/01/blog-post_6.html


         ஆண்டவர் தந்ததை வீணாக்கலாமா ?


ஒரு கல்யாண வீட்டு விருந்து.

வகை வகையாக உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.

எல்லோரும் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"அண்ணாச்சி, சாப்பாடு."

" இலையில சாப்பாடு இருக்க."

"நீங்க வைங்க, அண்ணாச்சி. அதை எல்லாம் சாப்பிட்டு விடுவேன்."

வைத்து விட்டுப் போனார்.

"சாம்பார் ஊற்றுங்க."

ஒருவர் ஊற்றிவிட்டுப் போனார்.

கொஞ்சம் பொறுத்து,

"அண்ணாச்சி, சாப்பாடு."

"தம்பி, இலையில சாப்பாடு இருக்க."

"இப்ப வத்தக் குழம்புக்கு."

" சாம்பார் ஊற்றினதை சாப்பிட்டு முடி."

"அது எனக்குத் தெரியும். வைக்க சொன்னால் வைக்க வேண்டியது தானே. சாப்பிட எனக்கு தெரியாதா?"


வைத்து விட்டுப் போனார்.

"வத்தக் குழம்பு."

ஒருவர் ஊற்றிவிட்டுப் போனார்.

"சாப்பாடு.."

 "தம்பி, இலையில சாப்பாடு இருக்க."

"அது எனக்கு தெரியும் இப்போ ரசத்துக்கு."

"தம்பி முதலில் சாம்பார் ஊத்தின சாப்பாட்டையும், வத்த குழம்பு ஊத்தின சாப்பாட்டையும் சாப்பிட்டு முடி. அப்புறம் சாப்பாடு வைக்கிறேன்."

'"அது எனக்கு தெரியும். வைக்கச்சொன்னால் வைக்க வேண்டியதுதானே."


"தம்பி, சாப்பாட்டை வீணாக்கக்கூடாது. வைத்ததை சாப்பிட்டு முடி, அப்புறம் வைக்கிறேன்."

"ஏன்யா, உங்க அப்பன் வீட்டு சாப்பாடா? வைக்கச்சொன்னால் வைக்க வேண்டியதுதானே."

"ஆமா, இது எங்க அப்பன் வீட்டு சாப்பாடு தான். இது இலையில் இருப்பதை சாப்பிட்டு முடி. அப்புறம் எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கிறேன்."

"யோவ், சாப்பாடு வைக்கப் போறியா? அல்லது நான் 
கத்தட்டுமா?"

வேறு வழியில்லாமல் வைத்துவிட்டுப் போனார்.

 கொஞ்சம் பொறுத்து சாப்பிட்ட பையன் எழுந்துவிட்டான். இலையில் சாப்பாடு நிறைய மீதம் இருந்தது.

"தம்பி, இது என்ன?"

ஒரு முழி முழித்து விட்டு போய்விட்டான்.


கோவிலில்.

பதினாறு வயசு மதிக்கத்தக்க ஒரு பையன் திவ்யநற்கருணை முன்னால் முழங்காலில் இருந்தான்.

அவனது கண்கள் நற்கருணை பேழையின் மேல் இருந்தன.

கோவிலில் வேறு யாரும் இல்லை.

"ஆண்டவரே,"

"ம். சொல்லு."

சுற்றும் முற்றும் பார்த்தான்.

 யாருமே இல்லை சப்தம் எங்கிருந்து வருகிறது?

"ஆண்டவரே,"

"கேட்கிறேன். சொல்லு."


திரும்பி பின்னால் பார்த்தான்.
 யாரும் இல்லை.

"தம்பி, முன்னால். பார்."

இப்போது முன்னால் பார்த்தான்.

இயேசு புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தார்.

"ஆண்டவரே,நீங்கள் எப்போது" வந்தீர்கள்?"

"என்னை தேடி தானே வந்திருக்கிறாய்.

 நான் 24 மணி நேரமும் இங்கேதான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று உனக்கு தெரியும் அல்லவா.

எப்போது" வந்தீர்கள் என்று கேட்கிறாய்?"

"ஆண்டவரே மன்னியுங்கள்." 

"சரி. வந்த விஷயத்தை சொல்லு."

"ஆண்டவரே, நாளைக்கு S.S.L.C Exam."

"எனக்குத் தெரியும்."

"நான் தேர்வு எழுத வேண்டும்."

"அதுவும் எனக்குத் தெரியும்."

"நான் நல்ல முறையில் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற உங்களது உதவி எனக்கு வேண்டும்."

".நீ அதைக் கேட்கத்தான் வந்திருக்கிறாய் என்பதுவும் எனக்கு தெரியும். 

ஆனால் நான் உனக்கு இதுவரை செய்த உதவிகளை ஒழுங்காக பயன்படுத்தியிருக்கிறாயா?"

"எந்த உதவியை சொல்கிறீர்கள்?"

"ஏன், கேட்டபின் செய்வது மட்டும்தான் உதவியா? கேட்காமலே செய்வது உதவி இல்லையா?"

"எந்த உதவியை சொல்கிறீர்கள்?"

"S.S.L.C தேர்வுக்குத் தயாரிப்பதற்காக ஒரு வருடம் கொடுத்திருந்தேன்.

நீ அன்றன்றைய பாடத்தை அன்றன்றே ஒழுங்காக படித்திருக்க வேண்டும்.

நீ ஆண்டு முழுவதையும் Cell phone ஐ நோண்டியே வீணடித்தாய்.

இப்போ ஆண்டு முடியப்போகும் போது வந்து உதவி கேட்கிறாய்."

"ஆண்டவரே இனிமே ஒழுங்காக படிப்பேன்."


"இனிமேன்னா எப்போ? படிக்க வேண்டிய வருடம் முடிந்து விட்டது."

"ஆண்டவரே 11வது வகுப்பிலிருந்து ஒழுங்காக படிப்பேன்.

 இந்த ஆண்டு மட்டும் உதவி செய்யுங்கள்."


"ஹலோ, யாருக்கு உதவி செய்ய வேண்டும்?"

இயேசுவை காணவில்லை,
 பங்கு சுவாமியார் நின்று கொண்டிருந்தார்.

"சுவாமி, நீங்கள் எப்போது வந்தீர்கள்?

 நான் ஆண்டவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

 திடீரென்று அவரை காணவில்லை"


"அப்படியா? என்ன பேசிக் கொண்டிருந்தாய்?"


"நாளைக்கு தேர்வு. ' நன்கு எழுத உதவி செய்யுங்கள்' என்று கேட்டேன்.

 அவர் 'ஆண்டு முழுவதையும் செல்போன் நோண்டியே வீணடித்துவிட்டு இப்போது வந்து உதவி கேட்கிறாய்' என்று சொல்கிறார்"

"அவர் சொல்லுறது சரிதானே."

"உண்மைதான். நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்."

சுவாமியிடம் சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டான்.

இயேசு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

"ஆண்டவரே ஏன் திடீரென்று இங்கு வந்து விட்டீர்கள்?"

''.இதுதானே நீ போகும் வழி."

"ஆண்டவரே.''

"நம்பிக்கையோடு போய்விட்டு வா"

"ஆண்டவரே! இது போதும், நன்றி அப்பா, வருகிறேன்."



அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளி படுக்கையின் மேல் அமர்ந்து கொண்டு:

"ஆண்டவரே அடியேனைக் கண் நோக்கியருளும்."

"இதோ உன் அருகில்தான் அமர்ந்து இருக்கிறேன்."


"ஆண்டவரே எப்போது வந்தீர்கள்?"

"நான் வரவில்லை. இங்கேதான் இருக்கிறேன். உன்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்."

".நான் இங்கு வந்து ஒரு மாதம் ஆகிறது.

தினமும் உங்களை நோக்கி வேண்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.

 ஆனால் உங்களை ஒருபோதும் நான் பார்க்கவில்லையே."

"நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நான் உன் அருகில்தான் இருக்கிறேன்."

"கேளுங்கள் தரப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

 நானும் இங்கு வந்த நாளிலிருந்து எனக்கு நல்ல சுகம் தரும்படி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

 நீங்கள் எனது ஜெபத்தை கேட்டதுபோல் தெரியவில்லை."


"வாயால் கேட்கிற நீ நான் சொன்னதை ஏன் கேட்கவில்லை?"

"என்ன சொன்னீர்கள்? எப்போது கேட்கவில்லை?"

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(மத். 16:24)
என்று நான் சொன்னது கேட்கவில்லையா?"

"இதோ சுமந்து கொண்டிருக்கிறேனே!"

கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஜெபமாலையில் இருந்த பாடுபட்ட சுரூபத்தை காண்பித்தான்.


"ரொம்ப சந்தோஷம். நான் சொன்னது இந்த சிலுவையை அல்ல. நான் சுமந்த சிலுவையை."

"அவ்வளவு பெரிய மரச் சிலுவையை எப்படித்தான் சுமந்தீர்களோ? என் மேல் ஏற்றினால் நான் நசுங்கி செத்துப் போவேன்."

"நான் சொல்வது என்னுடைய துன்பங்களாகிய சிலுவையை."


"நான் ஒரு மாதமாக அனுபவிப்பது வியாதியாகிய துன்பத்தை தானே, ஆண்டவரே."


"அனுபவிப்பது வேறு, சுமப்பது வேறு.

விருப்பமோ, விருப்பம் இல்லையோ, அனுபவிப்பதை அனுபவித்தான் ஆக வேண்டும்.

 ஆனால் சுமப்பதை இஷ்டம் இருந்தால் சுமக்கலாம், அல்லது இறக்கிவைத்து விடலாம்.

  நீ வேறு வழி இல்லாமல் துன்பத்தை 
அனுபவித்திருக்கிறாய்.

 அனுபவிக்க உனக்கு இஷ்டம் இல்லாததினால் தான் அதை நீக்கும்படி என்னிடம் 
வேண்டியிருக்கிறாய்.


 ஆனால் வியாதி என்கிற துன்பத்தை சிலுவையாக நினைத்து, நீ மனதார மகிழ்ச்சியோடு சுமந்தால் நீ என் சீடனாகத் தகுதி பெறுவாய்.   

"அப்படியானால் வியாதி குணமாக வேண்டும் என்று வேண்டக் கூடாதா?"

" வேண்டலாம். நான் கூட என் தந்தையிடம் வேண்டினேன்.

"தந்தையே, உமக்கு விருப்பமானால், 

இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:

 எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்றுதானே வேண்டினேன்.

அது உனக்கு முன்மாதிரி காட்டத்தானே.

என் சீடனாக நீ இருக்க விரும்பினால் என் 
முன்மாதிரிகையை பின்பற்ற வேண்டும்.

"இயேசுவே, உமக்குச் சித்தமிருந்தால் இந்த வியாதியிலிருந்து என்னை குணமாக்கும்"
என்று வேண்யிருக்க வேண்டும்.

 குணம் ஆகாமல் இருந்தால் துன்பத்தை ஏற்று அதை எனக்கு ஒப்புக்கொடுத்திருக்க வேண்டும்.

அப்படி ஒப்புக்கொடுத்திருந்தால் விண்ணகத்தில் உனக்கு நிறைய சம்பாவனை சேர்ந்திருக்கும்.

இப்போது நீ அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தால் உனக்கு எந்த ஆன்மீக பயனும் இல்லை."

"இப்போ நான் என்ன செய்ய வேண்டும்?" 

"துன்பத்தையே எனக்கு ஒப்புக் கொடுத்து விட்டு நம்பிக்கையுடன் இரு.

உன் வியாதி சீக்கிரம் குணமடையும்."

"நன்றி ஆண்டவரே!"


லூர்து செல்வம்
.

No comments:

Post a Comment