(தொடர்ச்சி)
சுனாமியால் ஏற்பட்ட அலைகள் முட்டி  மோதி எழுந்து அகப்பட்டதை எல்லாம் மூழ்கடித்து கொண்டிருக்கும் பரந்த கடலைப் போல 
நவீன சுனாமியால் பழமைகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் உலகமாகிய கடலில்தான் இராயப்பர் படகு பயணித்துக் கொண்டிருக்கிறது.
அன்று காற்றாலும் கடல் அலைகளாலும்  பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்த
படகில் பயணித்த அப்போஸ்தலர்களின் நிலையில்தான்  இன்று நாம்   இருக்கிறோம்.
இயேசு நம்மோடு தான் பயணிக்கிறார்.
ஆனாலும் நாம் அப்போஸ்தலர்கள் கத்தியது போலவே
"குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" எங்கு கத்திக் கொண்டிருக்கிறோம்.
அந்த அளவிற்கு புதுமை அலைகள்   நம்மை தாக்கிக் கொண்டிருக்கின்றன.
இராயப்பர் படகுக்கு எந்தவித ஆபத்தும் வராது என்பது நமக்குத் தெரியும்.
 ஏனெனில் அதில் நம்மோடு பயணித்துக் கொண்டிருப்பவர் சர்வ வல்லபராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து .
ஆனாலும் நமது விசுவாசப்   பற்றாக்குறை காரணமாக அப்போஸ்தலர்களிடம் நிலவிய அதே பயம் நம்மிடமும் நிலவுகிறது.
அன்று படகிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது போலவே 
நமது படகிற்குள்ளும்  புதுமை என்னும் தண்ணீர் புகுந்திருக்கிறது.
ஆகவேதான் பழமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்   நம்மவர்களிடையே நிலவுகிறது.
கத்தோலிக்க திருச்சபை ஆரம்பத்திலிருந்தே பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம்  கொடுக்காததினால்தான் நமது பிரிவினை சகோதார்கள் ஆயிரக்கணக்கான சபைகளாக சிதறுண்டு கிடக்கின்றனர்.
 நாம் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் உலகம் முழுவதும் ஒரே சபையாக இயங்கி வருகிறோம்.
ஆனாலும் நம்மிடையேயும் புதுமை விரும்பிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மாற்றங்கள் அவசியம்தான்.
 கடவுள் ஒருவரே மாறாதவர். அவர் நிறைவானவர், ஆகவே அவரால் மாற முடியாது.
 ஆனால் நாம் குறைவானவர்கள். வளர வேண்டும். மாற்றங்கள் ஏற்படாமல் வளர முடியாது.
 ஆனால் மாற்றங்களால் தளர்ச்சியும் ஏற்பட முடியும். 
ஆகவே நாம் செய்யும் மாற்றங்கள் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றனவா, தளர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றனவா என்று என்று கண்டுபிடிக்கும் திறன் நமக்கு வேண்டும்.
ஒரு உதாரணத்துக்கு
திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே  பிரசன்னமாய் இருக்கிறார்.
 திவ்ய நற்கருணை இயேசுதான்.
முன்பு கோவிலில் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு செல்லும்போது,
 திவ்ய நற்கருணைக்கு நேராக வரும்போது,
 முழங்கால் படியிட்டு (Genuflect)ஆராதனை செய்ய வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. 
முழங்கால் படியிட்டு ஆராதிக்கும் போது திவ்ய நற்கருணையை கடவுள் என்று ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் இப்போது முழங்காலில் இருந்து எழுதுவதற்குப் பதிலாக
 குனிந்து அவரை தலை வணங்கினால் போதும் என்று நமது பழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
முன்பு முழங்காலிலிருந்துதான் திவ்ய நற்கருணையை நாவில் வாங்க வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. 
 இப்போது நின்றுகொண்டு கையில் வாங்கினால் போதும் என்று மாற்றி இருக்கிறோம்.
முன்பு எழுந்தேற்றத்தின் போது மக்கள் அனைவரும் 
"என் ஆண்டவரே, என் தேவனே'' என்று பக்தி பரவசத்தோடு சொல்லுவது வழக்கம்.
ஆனால் இப்போது அந்த சமயத்தில் அமைதி காத்து மனதுக்குள்ளாகவே சொல்லிக் கொள்கிறோம்.
இவை திவ்ய நற்கருணை பக்தியின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மாற்றங்களா?
சிந்தித்து பார்ப்பதில் தவறு இல்லை.
நமது மக்கள் பிரிவினைச் சபையினர் நடத்தும்  ஆவிக்குரிய கூட்டங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
நம்மவர் நடத்தும் ஜெப கூட்டங்களுக்கும் வருவார்கள்.
இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மக்களுடைய   மனப்பக்குவம் மாறிவிட்டது!
நமது ஜெப கூட்டங்களுக்கு ஒழுங்காக வரும் ஒரு பெண்மணி
 தன் மகளை பிரிவினை சபையைச் சேர்ந்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டாள்.
" ஏனம்மா இந்த விபரீதம்?" என்று கேட்டேன்.
 அவர் சொன்ன ஒரே பதில்,
 "இரண்டு பக்கமும் ஒரே இயேசு ஆண்டவர்தானே இருக்கிறார்!"
நாம் பிரிவினை சபையார் நம்மோடு இணைய வேண்டும் என்பதற்காக அவர்களோடு நட்பு பாராட்டுகிறோம்.
 ஆனால் அவர்கள் நமது நட்பை தவறாகப் பயன்படுத்தி நம் மக்களை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். 
பாரம்பரியத்திற்கு திருச்சபை முக்கியத்துவம்  கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது.
 ஆனாலும் நவீனமும் உள்ளே நுழைந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.
நம்மை வழி நடத்துபவர்களில் கூட 
நிறைய பேர் புதுமை விரும்பிகளாக  (Progressives)
மாறிவிட்டார்கள்.
அவர்களுக்கும் பழமை விரும்பிகளுக்கும் (Conservatives) இடையில்   ஒரு மவுன போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சாதாரண மக்களிடையேயும் இரண்டு வகையினரும் இருக்கிறார்கள்.
எதைப்பற்றியும் கவலைப்படாத மூன்றாவது  வகையினரும் இருக்கிறார்கள்.
கீழப்பாவூரில் பிறந்த ஒருவர் சென்னையில் குடியேறினால்
அவரிடம்,
 "என்ன காரணத்திற்காக சென்னையில் குடியேறி இருக்கிறீர்கள்?" என்று கேட்கலாம்.
ஆனால்  அவர் பிறந்த ஊரிலேயே குடியிருந்தால்
 அவரிடம்,
 "ஏன் வேறு ஊருக்குச் சென்று குடியேறவில்லை?"
 என்று கேட்கக் கூடாது.
அதுபோல்,
திருச்சபையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருபவர்களைப் பார்த்து,
 "தங்கள் மாற்றங்களுக்கான சரியான காரணம் என்ன?"
என்று நாம் கேட்கலாம்.
 அவர்கள்  காரணத்தை விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
ஆனால் பாரம்பரியப்படி வாழ்பவர்களைப் பார்த்து
 "நீங்கள் ஏன் புதுமைக்கு மாறவில்லை"
 என்று கேட்க முடியாது.
புதுமை விரும்பிகள் கொண்டுவரும் புதிய மாற்றங்களால் திருச்சபைக்கு  ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை.
 ஏனெனில் திருச்சபை பரிசுத்த ஆவியானவரின் பாதுகாப்பில் இருக்கிறது.
 பரிசுத்த ஆவியானவருக்கு ஏதாவது ஆபத்து வந்தால்தான் திருச்சபைக்கும் ஆபத்து வர வாய்ப்பு இருக்கும்.
ஆனால் பரிசுத்த ஆவி சர்வ வல்லப கடவுள், ஆகவே அவருக்கு ஆபத்து எதுவும் வர முடியாது.
 ஆகவே திருச்சபைக்கும் ஆபத்து எதுவும் வர முடியாது.
நாமும் எந்த பயமும் இல்லாமல்
 திருச்சபையின் பாரம்பரிய போதனைப்படி
 விசுவசிப்போம்,
 நம்புவோம்,
அன்பு செய்வோம்,
 தேவ திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெறுவோம்,
நல்ல கிறிஸ்தவர்களாய் வாழ்வோம்,
நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது.
நம்மைச் சுற்றி உள்ளவர்களையும்  வாழவைப்போம்.
தண்டின் மேல் உள்ள விளக்கு சுற்றிலும் ஒளி தருவது போல நமது விசுவாச வாழ்வின் ஒளி மற்றவர்கள் மேலும் வீசும்படி வாழ்வோம்.
நாம் மட்டுமல்ல, அனைவரும் மீட்பு அடையவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.
இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment