Tuesday, January 12, 2021

என்ன என்பதை விட, எவ்வளவு என்பதை விட, எப்படி என்பதே முக்கியம்.

என்ன என்பதை விட, எவ்வளவு என்பதை விட, எப்படி என்பதே முக்கியம்.



1955

 தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளி, மதுரை.

பள்ளிக்கூட ஆண்டு விழாவில் முக்கிய நிகழ்வு இறுதியில் நடை பெற்ற நாடகம்.

நாடக முடிவில் அதில் முதல் தரமாக நடித்த மாணவனுக்கு பரிசு கொடுப்பது வழக்கம்.

நாடகத்தில் வீர வசனம் பேசி கை தட்ட வைத்தவர்கள்,

சோக வசனம் பேசி அழ வைத்தவர்கள்,

நகைச் சுவை நடிப்பால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்கள்,

தத்துவ வசனங்கள் பேசி சிந்திக்க வைத்தவர்கள் ......

இப்படியாக பல ரகத்தினர்கள் பார்வையாளர்களை வரவசப்படுத்தினர்.

இறுதியில் முதல்தர நடிகருக்குப் பரிசு கொடுப்பதற்காகத் தலைவர் மேடையில் ஏறினார்.

பார்வையாளர்களில் ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கு ஏற்ப ஒரு நடிகரை முதல் நடிகராக தேர்ந்தெடுத்து வைத்திருப்பது வழக்கம்.

தாங்கள் தேர்ந்தெடுத்த நடிகருக்கு முதல் பரிசு கிடைக்கிறதா என்பதை ஆவலுடன் பார்வையாளர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருப்பதும் வழக்கம்.

தலைவர் மைக் நின் நின்றவுடன் பார்வையாளர்களின் மனதில் 'திக் திக்' ஒலி ஒலித்துக் கொண்டிருந்தது, அவரவர் தேர்வு சரியா என்பதை அறிய.

தலைவர்: "நாடகத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்த மாணவனுக்கு முதல் பரிசு கொடுக்கப்படும்."

பார்வையாள மாணவர்களின் கண்கள் அனைத்தும் தலைவரது வாய்மேலேயே இருந்தன.

 " வீர வசனம் பேசி அரங்கத்தையே அதிர வைத்த மன்னனுக்கு அருகில்,

 கையில் வாள் ஏந்தி, ஆடாமல், அசையாமல் நின்ற சேவகன் இந்த நாடக நடிப்பிற்கான முதல் பரிசைப் பெறுகிறான்."

எல்லோருக்கும் ஏமாற்றம். யாரும் கைகளை ஓங்கி தட்டவில்லை.

 ஏதோ பேருக்குத் தட்டினார்கள். 

நன்றி கூறும்படி பரிசு பெற்றவன் மைக் முன் நின்றான்.

பார்வையாளர்களின் முகக் குறிப்பை கவனித்திருப்பான் என்று எண்ணுகிறேன்.

"அனைவருக்கும் வணக்கம். நான் கூட எனக்கு பரிசு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.

நாடகத்திற்கு பழகும்போது இயக்குனர் சாரிடம்,

" சார் எனக்கு ஒரு நகைச்சுவை பாத்திரம் கொடுங்க, சார்"

 என்று கேட்டேன்.

 அவர்,

 "ஏல, கிடைக்கிற பாத்திரத்தில ஊத்தினத குடில." என்று சொல்லிவிட்டார்.

ஒன்று புரிகிறது.

இவ்வுலகில் இறைவனைத் திருப்திப்படுத்த வேண்டுமானால், அவர் தந்திருக்கும் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

நன்றி. வணக்கம்."

இப்போ கை தட்டல் விண்ணைப் பிழந்தது.


"அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட,

 மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக்.15:7)

இதை வேறு விதமாக சொன்னால்,

பாவசங்கீர்த்தனம் கேட்டு பாவங்களை மன்னிக்கும் குருவானவரால் விண்ணுலகில் ஏற்படும் மகிழ்ச்சியை விட,

 அவரால் மன்னிக்கப்பட்ட பாவியின் பொருட்டு விண்ணுலகில் அதிக மகிழ்ச்சி ஏற்படும்.

பாவிகளாகிய நாம் பாக்கியவான்கள், ஏனெனில் நம்மைத்தான் விண்ணகமே கவனித்துக் கொண்டிருக்கிறது.

 பாவிகள் என்று சொல்லும்போது
தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக்கொண்டு,

 தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தும் பாவிகளைக் குறிப்பிடுகிறோம்,

தாங்கள் பரிசுத்தவான்கள், மற்றவர்கள் பாவிகள் என்று எண்ணிக் கொண்டு திரிந்த வெளிவேடக்காரர்களான பரிசேயர்களைப் போன்றவர்களை அல்ல.

தங்கள் தாழ் நிலையை ஏற்றுக் கொள்பவர்கள், விண்ணுலகில் மேல் நிலையை அடைவார்கள்.


Less luggage, more comfort என்று புகைவண்டிகளில் விளம்பரங்கள் போட்டிருப்பார்கள்.

சுமை குறைவாக இருந்தால் சுமப்பது எளிது.

நமது ஆன்மீக பயணத்தின் போது நாம் சுமக்க வேண்டிய சுமையை ஆண்டவரே கொடுக்கிறார்.

 சிலருக்கு கனம் குறைந்த சுமையையும்,   

 சிலருக்கு கனம் அதிகமான சுமையையும் அவரே கொடுக்கிறார்.

 அவரவர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட சுமையை நல்ல மனதுடன் சுமக்க வேண்டும்.

 இறைவன் நம்மிடம் இறுதிநாளில் கணக்கு கேட்கும் போது
'
 எவ்வளவு சுமை சுமந்தோம் என்றல்ல

 எப்படி சுமந்தோம் என்று தான் கேட்பார்.

நான் இங்கு சுமை என்று குறிப்பிடுவது நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை.

ஒரு சாதாரண கிறிஸ்தவனுக்கு இருக்கும் பொறுப்புகளை விட பங்குக் குருவுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும்.

பங்குக் குருவுக்கு இருக்கும் பொறுப்புகளை விட, ஆயருக்கு அதிக பொறுப்புகள் இருக்கும்.

ஆயருக்கு இருக்கும் பொறுப்புகளை விட, 
பாப்பரசருக்கு அதிக பொறுப்புகள் இருக்கும்.

கடவுள் யார்யார் அவரவருக்கு உரிய பொறுப்புக்களை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்றுதான் பார்ப்பார்.

God will take into account only the quality of our work, not its quantity.

ஒரு சாதாரண கிறிஸ்தவனுக்கு எழுத வாசிக்க தெரியாமல் இருக்கலாம்.

ஆகவே பைபிள் வாசிக்க முடியாமல் இருக்கலாம்.

 ஆனால் குருவானவர் கோவிலில் கொடுக்கின்ற பிரசங்கத்தை ஒழுங்காக கேட்டு அவர் கூறுகிறபடி நடந்தானானால்,

அவனுக்கு உன்னதத்தில் கிடைக்கும் பரிசு 

அதிகம் படித்தவர்களுக்கு கிடைக்கும் பரிசை விட பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உலகம் ஒருவருடைய சாதனையின் அளவை வைத்து அவரை மதிப்பிடுகிறது.

இறைவன் சாதிக்கிறவனுடைய மனநிலையின் தரத்தை வைத்து மதிப்பிடுகிறார்.

உலகில் ஒரு அலுவலகத்தில் வாயில் காப்பவனுக்கு (Watchman)
கிடைக்கும் சம்பளத்தைவிட, நிர்வாகிக்கு (Manager) அதிக சம்பளம் கிடைக்கிறது.

ஆனால் விண்ணகத்தில் நிர்வாகியை விட வாயில் காப்பவன் அதிக சம்பாவனை பெற வாய்ப்பு இருக்கிறது.

ஏனெனில் வாயில் காப்பவன் தனது சிறிய வேலையை
 நிறைவாக செய்திருப்பான்.


நிர்வாகியின் பெரிய வேலையில் சிறுசிறு குறைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உலகில் பலதரப்பட்ட அந்தஸ்து (staus) உள்ளவர்கள் வாழ்கிறார்கள்.

எல்லோரும் சம அந்தஸ்து உள்ளவர்களாக இருக்க முடியாது.

உலகில் உயரிய அந்தஸ்து உள்ளவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது.

 குறைந்த அந்தஸ்து உள்ளவர்களுக்கு மரியாதை கிடைக்காமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது.

"குறைந்த அந்தஸ்து உள்ள குடும்பத்தில் பிறந்து விட்டேனே, உயர்ந்த அந்தஸ்து உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்,"

 என்று யாரும் எண்ணி வருந்தத் தேவை இல்லை.

யார் யார் எந்த குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று திட்டமிடுவது இறைவன். 

எங்கே நாம் வாழ வேண்டும் என்று இறைவன் திட்டமிட்டிருக்கிறாரோ, அதே இடத்தில் வாழ்ந்து,


 என்ன திறமைகளை பயன்படுத்த வேண்டும் என்று நமக்கு இறைவன் தந்திருக்கிறாரோ அவற்றைத் திறம்பட பயன்படுத்தி,

 என்ன பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறாரோ அவற்றைத் திறம்பட செய்து வந்தாலே போதும்

இறைவனின் திருச் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு.

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் நம்முடைய நல்ல மனதைத்தான்.

ஒரு இயந்திரத்தின் எல்லா உறுப்புகளும் ஒரே வேலையை செய்வது இல்லை.

அததன் வேலையை அததது ஒழுங்காக செய்தால் முழு இயந்திரம் திறம்பட வேலை செய்யும்.

ஒரு வாகனத்தின் சக்கரங்கள் உருள்வதைப் பார்த்து, பிரேக்கும் உருண்டு விட்டால், வாகனத்தின் கதி என்ன?

நமது கால்கள் நடப்பதை பார்த்து தலையும் நடக்க ஆரம்பித்தால் நமது கதி என்ன?

நமது திருச்சபை என்னும் அமைப்பிலும் ஒவ்வொரு அங்கத்தினரும் அவரவருக்கென்று இறைவனால் குறிக்கப்பட்ட கடமைகளை அவரவர் திறம்பட செய்தாலே போதும்.

மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக அல்ல,

இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும்

மூச்சு விடுவது உட்பட,

நமது ஒவ்வொரு செயலையும் நாம் செய்ய வேண்டும்.

என்ன செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் என்பதை விட,

யாருக்காக செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

இறைவன் நமக்கு கொடுத்த வேலையை,

இறைவனுக்காக மட்டும்,

நல்ல மனதுடன் செய்வோம்.

நன்மனதோருக்கான சமாதானம் நம்மை விண்ணகம் சேர்க்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment