Saturday, January 30, 2021

கிறிஸ்துவின் அன்பில் வளர்வோம்.

கிறிஸ்துவின் அன்பில் வளர்வோம்.



கிறிஸ்துவாக வாழாதவன்
 தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

கிறிஸ்துவாக வாழ்வது எப்படி?

"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
(அரு.13:35)

கிறிஸ்துவின் அன்பினால் இயங்கினால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

கடவுள் = கிறிஸ்து = அன்பு.

அன்பே கடவுள்.
கிறிஸ்து கடவுள்.

ஆக நமது வாழ்வு கிறிஸ்துவினால் இயக்கப்பட்டால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

அதாவது அன்பினால் இயக்கப்பட்டால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்துவின் அன்பு எப்படிப்பட்டது?

கிறிஸ்துவின் அன்பு நிபந்தனைகள் அற்றது.

அன்பு செய்வது அவரது இயல்பு.

அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

நித்திய காலமாக தன்னையே அன்பு செய்கிறார்.

 தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.

அவரால் படைக்கப்பட்ட சம்மனசுக் களையும் மனிதர்களையும் அவர் நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

அவர் மாறாதவர், ஆகவே அவரது அன்பும் மாறாதது.

உதாரணத்திற்கு,

Lucifer என்ற சம்மனசை படைத்தவர் அவர் தான்.

Lucifer தான் தன்னை இறைவனுக்கு சமமாக நினைத்த அகம்பாவத்தினால் சாத்தானாக மாறினான்.

 Luciferமாறி இருக்கலாம். ஆனால் இறைவனின் அன்பு மாறவில்லை.


Lucifer ஐ எப்படி அன்பு செய்தாரோ அதே போல்தான் சாத்தானையும் அன்பு செய்கிறார்.

இறைவன் ஒளி மயமானவர்.

ஒளி மாறவில்லை.

ஆனால் சாத்தான் அந்த ஒளியை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகவே தான் இருளாக இருக்கிறான்.

"அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்."
(மத்.5:45)

இறைவன் அவரை ஏற்றுக் கொள்ளும் நல்லவர்களையும்,

 ஏற்றுக்கொள்ளாத தீயவர்களையும் அன்பு செய்கிறார்.

நல்லவர்கள் அவரது அன்பை ஏற்றுக் கொள்வதால் பயன் அடைகிறார்கள்,

 தீயவர்கள் அவளது அன்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் பயன் அடைவதில்லை.

நாம் நல்லவர்களையும் கெட்டவர்களையும்,

 நமக்கு நன்மை செய்கின்றவர்களையும், தீமை செய்கின்றவர்களையும்,

 நம்மை நேசிக்கின்றவர்களையும், வெறுப்பவர்களையும்,

  ஒன்று போல் அன்பு செய்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

"உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
28 உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசிகூறுங்கள். உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள்."
(லூக்.6:27, 28)

"உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? 
பாவிகளும் தமக்கு அன்பு செய்பவர்களுக்கு அன்பு செய்கின்றனரே."
(லூக்.6:32)

ஆக நிபந்தனை எதுவும் விதிக்காமல்

 சகோதரனை அன்பு செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அன்பு செய்ய வேண்டும். 

நாம் எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று நம் ஆண்டவர் கூறியிருக்கிறார்?

 "உன்னை நீ அன்பு செய்வது போல் உனது அயலானையும் அன்பு செய்."

 ஆக, நாமே நம்மை அன்பு செய்வது அன்பின் துவக்கம்.

 அதன்பின் அதே அன்பை மாற்றம் இல்லாமல் மற்றவர்கள் மேலும் செலுத்துவது.

Charity begins at home.

நம்மை நாமே அன்பு செய்யும்போதுதான் அன்பு என்றால் என்ன என்பது நமக்குத் தெரியும். எப்படி செய்ய வேண்டும் என்பதுவும் தெரியும்.

நமக்கு நாமே நல்லதை விரும்புவோமா?
தீயதை விரும்புவோமா?

அன்பு நன்மையைத்தான் விரும்பும்.

ஆகவே நம்மை நாம் அன்பு செய்வதுபோல் அயலானை அன்பு செய்தால் 

அயலானுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கோடுதான் செய்வோம்.

நம்மிடம் குற்றம் குறைகள் இருந்தாலும்

 மற்றவர்கள் அதை பொருட்படுத்தாது

 நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவோம்.

அதேபோல்

மற்றவர்களிடம் குற்றம் குறைகள் இருந்தாலும்

  அவற்றைப் பொருட்படுத்தாது

 அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வுலக வாழ்வின் இறுதியில் நாம் விண்ணகம் செல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

அந்த ஆசையை நம்மோடு நிறுத்திக் கொள்ள கூடாது.

அனைவரும் இவ்வுலக வாழ்வின் இறுதியில் விண்ணகம் செல்ல வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்பட வேண்டும்.

அதுதான் உண்மையான அன்பு.

ஆசையை செயலாக்க வேண்டும்.

அதாவது மற்றவர்கள் விண்ணகம் செல்ல உதவியாக 

அவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

 அது நமது அன்பின்பாற்பட்ட கடமை.

நற்செய்தியை நமது வாழ்வின் மூலமும், வார்த்தையின் மூலமும், செயலின் மூலமும் அறிவிக்க வேண்டும்.

நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பது நமக்காக மட்டுமல்ல

 நம்மை சார்ந்து இருப்பவர்கள் காகவும் சேர்த்துதான்.

நாம் நல்லவர்களாக வாழ்ந்தால்,

நம்மை சார்ந்து இருப்பவர்களும் நம்மை பின்பற்றியே நல்லவர்களாக வாழ்வார்கள்.


ஒரு நறுமணமுள்ள ரோஜா மலரை பீரோவில் உள்ள நமது ஆடைகளோடு வைத்தால்,  ரோஜாவின் மணம் நமது ஆடைகளையும் சேர்ந்துவிடும்.

நாம் அவற்றை அணிந்தால் நமது அருகில் இருப்பவர்களுக்கும் அந்த மணம் இலவசமாக கிடைக்கும்.

மனிதன்  ஒரு சமூகப் பிராணி.

தான் பெற்ற இன்பத்தை பிறரும் பெறவேண்டும் என்று ஆசைப்படுபவன்.

நாம் பெறப்போகும் மோட்ச இன்பத்தை மற்றவர்களும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட வேண்டாமா?

நாம் மற்றவர்களோடு பேசும்போது அரட்டை அடிப்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் விசுவாச அனுபவங்களை பகிர்ந்து 
கொள்ளலாமே!

விசுவாச அனுபவங்கள் மூலம் நமது விசுவாசத்தை பகிர்ந்து கொள்வதால் நமது விசுவாசத்தால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள்.

 அன்புச் செயல்கள்( good works) மூலமும் நாம் நற்செய்தியைப் பரப்பலாம்.

செயல் இல்லாத அன்பு செத்த அன்பு என்பார்கள்.

பசியாக உள்ளவன் அருகே அமர்ந்து,

"நான் உன்னை மிகவும் அன்பு செய்கிறேன்" 

என்று கூறிக்கொண்டே ,

அவனோடு பகிர்ந்து கொள்ளாமல் நாம் மட்டும் உணவைத் தனியாக உண்டு கொண்டே இருந்தால்.

 நமது செயல் அவனது மனதில் என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும்?

உண்மையான அன்பு தன்னையும் பகிர்ந்து கொள்ளும், தனது உடமைகளையும் பகிர்ந்து கொள்ளும்.

இறைவன் தனது அன்பின் காரணமாக நம்மை படைக்கும்போது தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.


ஒரு கோடீஸ்வரன் தனது ஏழை நண்பர்களுடன் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த வசதிகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் அவன் பெரிய பணக்காரன்.

ஆனால் அவன் தனது ஏழை நண்பனுடைய வசதிகள் இல்லாத கஷ்டங்கள் நிறைந்த வாழ்வில் பங்கெடுக்க ஆசைப்படுவது தான் அதிசயம்.

அதே போன்றது தான் சர்வ வல்லப கடவுள் தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதோடு நில்லாமல்,

மனிதர்களாகிய நமது பண்புகளை தான் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதும்.  

அவர் நித்தியர், துவக்கமும் முடிவும் இல்லாதவர். காலத்திற்கு அப்பாற்பட்டவர்.

நாம் காலத்தில் வாழ்கின்ற துவக்கமும் முடிவும் உள்ள மனிதர்கள்.

நமக்கு அவரது நித்திய வாழ்வில் பங்கு தருவதற்காக நமது அநித்திய வாழ்வில் அவர் பங்கெடுத்துக் கொண்டார்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர் 

நம்மை போல பிறந்து இறப்பதற்கு ஆசைப்பட்டு 

நம்மை போல மனிதனாக பிறந்து, காலத்தில் வாழ்ந்து, பிறந்த 33-வது வயதில் இறந்தார்.

 அவர் மனிதனாக பிறந்தாலும்

 கடவுள் மரியாளின் வயிற்றில் பிறந்தார், 

கடவுள் சிலுவையில் மரித்தார் என்றுதானே சொல்கிறோம்!

 பிறப்பும் இறப்பும் மனித சுபாவத்திற்கு உரியவை.

 ஆகவே பிறப்பதற்கும் இறப்பதற்குமென்றே கடவுள் மனித சுபாவத்தை ஏற்றுக் கொண்டாரே!

கடவுளால் வளர முடியாது, ஏனெனில் அவர் முழுமையானவர். முழுமைக்கு வளர்ச்சி கிடையாது.

நாம் குறைவானவர்கள். நமக்கு வளர்ச்சி உண்டு.

நம்மை போல வளர வேண்டும் என்று ஆசைப்பட்டது குறைவுள்ள மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்டாரே!

"இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்."
(லூக்.2:52)

கடவுள் கஷ்டப்பட முடியாது. கஷ்டங்கள் மனித சுபாவத்திற்கு உரியவை.

நம் மீது கொண்ட அன்பின் காரணமாக நம்மைப்போல கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகவே மனித சுபாவம் எடுத்தாரே!

கடவுள்தான் பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்தார்!

கடவுள்தான் கைது செய்யப்பட்டார்!

கடவுள்தான் பிலாத்துவினாலும் ஏரோதுவினாலும் அவமானப்படுத்தப்பட்டார்! 

கடவுள்தான் பாரமான சிலுவையை சுமந்தார்!

கடவுள்தான் சிலுவையில் அறையப்பட்டார்!

தேவசுபாவத்தில் கஷ்டப்பட முடியாத காரணத்தால் கஷ்டப்படுவதற்காகவே நம்மைப்போல் மனிதன் ஆனார்!

நம்மைப் போல் கஷ்டப்பட்டு சாக வேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம் வந்தது?

அவரது அன்பின் ஆழமும், வேகமும் அப்படி அவரை செய்ய செய்தது!


இதேபோன்ற அன்பினால் தான் நாம் நமது அயலானை அன்பு செய்ய வேண்டும்.


இயேசு நமக்காக   கஷ்டப்பட்டதுபோல் நாமும் நமது அயலானுக்காக கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும்.

அன்னை தெரெசாவையும், Stan Swamy யையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

கிறிஸ்துவின் அன்பில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment