( சங்கீதம்.33:8)
(தொடர்ச்சி)
புனித தமியானோ ஆலயத்திலிருந்து புறப்பட்ட கற்பனை வாகனம் கல்கத்தாவின் ஒரு சாலையோரத்தில் நின்றது.
சாலையின் ஒரு புறத்தில் சாகும் தருவாயில் ஒரு தொழு நோயாளி ஒரு மரத்தடியில் தரையின் மீது படுத்திருந்தான்.
சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று தொழு நோயாளி படுத்திருந்த இடத்திற்கு நேராக sudden brake போட்டு நின்றது.
அதிலிருந்து அன்னைத் தெரெசா இறங்கிக் கொண்டிருந்தாள்.
கழுகு ஆகாயத்தில் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும்
பூமியில் அதற்கு வேண்டிய உணவு எங்கே இருந்தாலும் அதன் கூர்மையான கண்களுக்குத் தெரியும்.
உணவைக் கண்டவுடன் அது வந்த வேகத்திலேயே உணவை நோக்கி இறங்கி வந்து, உணவை கௌவிக் கொண்டு அதே வேகத்தில் பறந்து செல்லும்.
இறை அன்பிற்காகவும் பிறருக்காகவும் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த அன்னை தெரசாவின் கண்களுக்கு
அவளது உதவி தேவைப்படக் கூடிய நபர் எங்கிருந்தாலும் தெரியும்.
தொழு நோயாளியைப் பார்த்த அன்னை தெரெசா காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி நடந்தாள்.
உடல் எல்லாம் தொழு நோயால் அழுகிக் கொண்டிருந்தது.
உயிர் எப்போது போவோம் என்று துடித்துக் கொண்டிருந்தது.
சாதாரணக் கண்களால் பார்க்க சகிக்காத தோற்றம்.
அன்புக் கண்களுக்கு அதுதான் உணவு.
அன்னை நோயாளி அருகே வந்ததும் குனிந்து,
தாய் தன் பிள்ளையைத் தூக்குவது போல தூக்கி, மார்போடு அணைத்துக் கொண்டு காருக்கு எடுத்துச் சென்றார்கள்.
கார் பின் Seat ல் நோயாளியைக் கிடத்தி, அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.
கார் வேகத்தில் என் வாகனமும் சென்றது.
மருத்துவ மனைக்குச் சென்றவுடன், நோயாளியை எடுத்துக் கொண்டு போய், தொழு நோய்ப் புண்களை எல்லாம் நன்கு துடைத்து, மருந்து போட்டார்கள்.
செத்துக் கொண்டிருக்கும் நோயாளியின் முகத்தை அன்னை அன்பு பொங்க பார்த்தார்கள்.
அவனும் அதே அன்பைத் திரும்பக் கொடுத்தான்.
மரணம் அவனை அரவணைக்க ஒரு சில நிமிடங்களே இருக்கும்.
அன்னையின் அன்பு வெறும் அன்பல்ல, இறையன்பு.
மரிக்கிறவனை இறைவனிடம் சேர்க்கும் அன்பு.
விண்ணக மகிமைக்குள் அவனைச் சேர்க்கும் அன்பு.
மிச்சம் இருக்கும் ஒருசில நிமிடங்களில், அவனை விண்ணக வீட்டிற்கு அனுப்ப என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் செய்தார்கள்.
அவனை இயேசுவின் மீட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்தார்கள்.
இறுதியில் அவனது நெற்றியில் முத்தமிட்டு, அவனது ஆன்மாவை இறை இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள்.
அவர்களது நற்செய்திப் பணியைப் பார்த்து என் கண்களில் நீர் ததும்பியது.
இயேசு என்றால் அன்பு.
அன்பைச் சுவைத்ததின் மூலம் இயேசுவையே சுவைத்தார்கள்.
அவர்களது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும், ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அன்னையின் கரங்களினால் ஜென்மப் பாவமும், வாழ்நாளில் செய்த அத்தனை கர்மப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட கடவுளின் மகன் (இனி அவன் நோயாளி அல்ல)
காலமான வினாடியே நித்திய வாழ்விற்குள் புகுந்து விட்டான்.
அதே வினாடி என் வாகனம் இராயப்பர் முன் நின்றது.
"ஹலோ! மிஸ்டர்! இப்போ உங்களுக்கு இங்கே என்ன வேலை?"
"இப்போது நான் கற்பனையில்தான் இங்கு வந்திருக்கிறேன்."
"ஆமா, ஆமா. கற்பனையில் ஆதாம் ஏவாளையே பார்த்துவிட்டு வந்தவர்தானே.
இங்கே யாரைப் பார்க்க வேண்டும்."
"புனித கல்கத்தா தெரெசாவைப் பார்க்க வேண்டும்."
நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அன்னை என் முன் நின்றார்கள்.
"அம்மா, இறைவனுக்கு நன்றி. உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."
"சொல்லுங்கள்."
"அம்மா, உங்களைப் பற்றி மக்கள் இரண்டு விதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் பூவுலகில் உங்களது சேவை மனிதாபமான சேவை என்று சொல்கிறார்கள்.
சிலர் நீங்கள் செய்தது நூற்றுக்கு நூறு மறைபரப்பும் சேவை என்கிறார்கள்.
எந்த பார்வையில் உங்கள் சேவையைப் பார்க்க வேண்டும்."
"நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"நூற்றுக்கு நூறு மறைபரப்பும் சேவை என்பது தான் என் கருத்து.
கொஞ்சம் முன்புதான் நீங்கள் சாகக் கடந்த தொழுநோயாளியை அழைத்து வந்து அவனை விண்ணகப் பயணத்திற்குத் தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
ஆனாலும் தங்கள் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளவே இங்கு வந்தேன்."
"மனிதாபமான சேவை, மறைபரப்பும் சேவை இரண்டும் ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்றொடர்கள்.
இறைவன் இன்றி மனிதன் இல்லை.
இறையன்பு இன்றி மனித அன்பு இல்லை.
இறைவன் மேல் அன்பு உள்ளவனால்தான் அவரால் படைக்கப்பட்ட மனிதன் மேலும் அன்பு கொள்ள முடியும்.
கிறிஸ்தவ மறை என்றாலே கிறிஸ்தவ அன்பு என்று தான் பொருள்.
"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.""
(அரு.13:35)
கிறிஸ்தவ அன்பைப் பரப்புவது தான் கிறிஸ்தவ மறையைப் பரப்புவது.
நான் இறையன்பை, அதாவது, இறைமறையை, மனிதரிடையே பரப்புவதைத்தான் எனது முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தேன்.
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."
என்று தான் இயேசு சொன்னார்.
எப்படி அறிவியுங்கள் என்று சொல்லவில்லை.
சிலர் வாய்மொழி மூலம் அறிவித்தார்கள்.
சிலர் எழுத்துமூலம் அறிவித்தார்கள்.
சிலர் தங்களது முன்மாதிரியான வாழ்க்கை மூலம் அறிவித்தார்கள்.
சிலர் இயேசுவுக்காக உயிரை கொடுத்ததன் மூலம் அறிவித்தார்கள்.
சிலர் பிறரன்பு செயல்கள் மூலம் அறிவித்தார்கள்.
சிலர் தங்கள் ஜெபத்தின் மூலம் அறிவித்தார்கள்.
சிலர் இவை எல்லாவற்றின் மூலமும் அறிவித்தார்கள்.
சவேரியார், அருளானந்தர் போன்றோர் நாடுவிட்டு நாடு போய் அறிவித்தார்கள்.
'
சிறுமலர் தெரசா தன்னுடைய மடத்தில் இருந்த படியே ஜெபத்தின் மூலம் மறைபணி ஆற்றினார்."
" அப்படியானால்
அன்னை தெரசா கல்கத்தாவில் இருந்து கொண்டு கிறிஸ்தவ மறை பரப்பும் பணியை செய்தார் என்று துணிந்து சொல்லலாம், அல்லவா?"
"துணிந்து சொல்லக்கூடிய அளவிற்கு அவ்வளவு கடினமான கூற்றா?"
"கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மனிதாபிமானம் பற்றி பேசுகிறார்களே!"
"பேசட்டும், அதனால் நமக்கு என்ன இழப்பு?
கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதாபிமானம் முழுக்க முழுக்க இவ்வுலகைச் சார்ந்தது.
அதற்கு விண்ணகத்தில் மதிப்பு இல்லை.
இறைவனை சார்ந்த மனிதாபிமானத்திற்கு மட்டும்தான் இறைவனிடம் மதிப்பு உண்டு.
நாம் வாழ்வது இறைவனுக்காக மட்டுமே.
நாம் உலகில் வாழ்ந்தாலும் உலகிற்காக வாழவில்லை.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கு முக்கியம் அல்ல.
இறைவன் என்ன சொல்கிறார் மட்டுமே முக்கியம்.
புரிகிறதா?"
"நன்றாகவே புரிகிறது. இன்னும் ஒரே ஒரு கேள்வி.
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பார்ப்பது எப்படி?"
"இறைவனது அன்புக் கட்டளைகளை வாழ்வாக்குங்கள், இறைவன் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பார்ப்பீர்கள்."
" உங்களது சுவையான பதில்களுக்கு நன்றி. வருகிறேன்.
இராயப்பரே, மீண்டும் சந்திப்போம். வருகிறேன்."
"வாருங்கள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment