மாங்கொட்டை கற்பிக்கும் பாடம்.
நன்கு பழுத்த மாம்பழம் ஒன்றை மரத்திலிருந்து, பறித்து பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை கையில் வைத்திருக்கிறேன்.
மாங்கொட்டையின் வயது என்ன?
யாராலும் அளவிட முடியாது.
எப்போது இறைவன் மாமரத்தை படைத்தாரோ அன்றிலிருந்து அதன் வயது ஆரம்பம் ஆகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளா? கோடிக்கணக்கான ஆண்டுகளா? தெரியவில்லை.
முதல் மரத்தின் விதை பூமியில் விழுந்து, முளைத்து, மரமாகி, பூத்து, காய்த்து, பழுத்து,
அப்பழம் பூமியில் விழுந்து, முளைத்து, மரமாகி, பூத்து, காய்த்து, பழுத்து,
இவ்வாறாக கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற, இன்னும் வாழப் போகிற மாமர வம்சத்தில் இருந்து கிடைத்த மாங்கொட்டை.
முதல் மரத்தில் உண்டான மாங்கொட்டையின் அத்தனை குணங்களும் இதில் நூற்றுக்கு நூறு அப்படியே இருக்கின்றன.
ஆரம்ப காலம் முதல் இன்றைய வரை கோடிக் கணக்கான ஆண்டுகளில் பூமி எத்தனையோ வகை மாற்றங்களை சந்தித்திருக்கும்.
ஆனால் மாறிக்கொண்டே இருக்கும் பூமியில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மாமர வம்சம் ஈன்றெடுத்த இந்த மாங்கொட்டை
தனது குணங்களில் ஆரம்பநிலையில் இருந்தது போலவே இன்றும் இருக்கிறது. இன்னும் இருக்கும்.
மாமரம் தன்னுடைய வேர்களை பூமிக்குள் ஆழமாக செலுத்தி தனக்கு வேண்டிய உணவை உரம் வாயிலாக பெற்றுக் கொண்டிருக்கிறது.
பூமியில் மாற்றத்திற்கு ஏற்ப உரங்களின் தன்மை மாறலாம்.
ஆனால் மாமரம் அந்த உரத்தை உணவாக்கும் போது அதை தனதாக்கிக் கொள்கிறது.
அதாவது மரம் உரத்திற்கு ஏற்ப மாறவில்லை, உரம்தான் மரமாக மாறுகிறது.
ஆகவேதான் கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் மாங்கொட்டையின் குணம் ஆரம்ப நிலையில் உள்ளது போலவே இன்னும் இருக்கிறது.
எதற்காக இந்த மாங்கொட்டை கதை?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இயற்கையிலிருந்து
1 அதைப் படைத்த இறைவனைப் பற்றி அறிகிறோம்.
2 அதை நமது வாழ்வுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம்.
3நமது இறை வழிபாட்டில் அதை பயன்படுத்திக் கொள்கிறோம்..
4 அதன் மூலம் நமது வாழ்க்கைக்கான பாடத்தை கற்றுக் கொள்கிறோம்.
1 இயற்கைக்கு வயது இருக்கிறது. ஆரம்ப காலம் என்று ஒன்று இருக்கிறது. அது தானாக தோன்றி இருக்க முடியாது. அதற்கான காரண கர்த்தா ஒருவர் வேண்டும். அவர்தான் காரணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கடவுள்.
Causeless Cause.
2. கடவுள் நம்மை படைப்பதற்கு முன்னால் இயற்கையை படைத்தார். அதை நாம் பயன்படுத்தி அவருக்காக வாழ்வதற்காகப் படைத்தார்.
நமக்கு வேண்டிய உணவை தருவது இயற்கை.
உடையைத் தருவது இயற்கை.
இருப்பிடத்தைத் தருவது இயற்கை.
நமது உலக வாழ்விற்கான அனைத்தையும் தருவது இயற்கை.
3.நாம் இறைவனை வழிபடும் போது அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக
அவர் நமது பயன்பாட்டிற்குக் தந்திருக்கும் இயற்கைப் பொருள்களை அவருக்கு காணிக்கையாக ஒப்புக்கொள்கிறோம்.
4.இயற்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மிகப்பெரிய பாடம்:
இயற்கை மாறிக் கொண்டே இருந்தாலும் மாறாத விதிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.
இறைவன் அதைப் படைக்கும்போது என்ன விதிகளைக் கொடுத்திருந்தாரோ அதே விதிகளை இன்னும் மாற்றமில்லாமல் கடைபிடித்து வருகிறது.
காலத்தின் நோக்கில் இயற்கை விதிகள் மிகவும் பழமையானவை.
பழமையாக இருந்தாலும் அவற்றை அப்படியே கடைப்பிடித்து வருவதால்தான் இயற்கையின் இயக்கத்தில் எந்தவித குழப்பமும் ஏற்படவில்லை.
பழமையை விரும்பாதவர்களுக்கு இது கற்பிக்கும் பாடம் இதுதான்.
கத்தோலிக்க திருச்சபையின் பழமை அதாவது பாரம்பரியம் அதை நிறுவிய நமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவில் ஆரம்பிக்கிறது.
இயேசு கடவுள்,
கடவுள் மாறாதவர்.
ஆகவே இயேசுவும் மாறாதவர்.
அவர் தந்த வாழ்க்கை விதிகளும் மாறாதவை.
அவர் நமக்கு கற்பித்த வேத சத்தியங்களும் மாறாதவை.
புகைவண்டி அசைந்து ஓடவேண்டுமானால் அது எதன் மேல் ஓடுகிறதோ அது, அதாவது, தண்டவாளம் அசையாமல் இருக்க வேண்டும்.
கொடி அசைந்து ஆடி பறக்க வேண்டுமென்றால் கொடிக்கம்பம் அசையாமல் இருக்க வேண்டும்.
நாம் வீட்டிற்குள் ஓடி ஆடி விளையாட வேண்டுமென்றால் வீட்டின் அஸ்திவாரம் அசையாமல் இருக்க வேண்டும்.
அதே போல்தான் கிறிஸ்தவர்களாகிய நாம் ஆன்மீக வாழ்வில் மாற்றங்களோடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால்,
கிறிஸ்துவின் போதனையின் பொருள் மாறாமல் இருக்க வேண்டும்.
ஒரு உதாரணத்திற்கு:
திருமணம் ஒரு தேவ திரவிய அனுமானம்.
கிறிஸ்துவின் போதனையின் அடிப்படையில் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவ ஆண் மற்றொரு ஆணை திருமணம் செய்வது இயற்கைக்கு மட்டுமல்ல,
கிறிஸ்துவின் போதனைக்கும் எதிரானது.
கிறிஸ்துவின் போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ திருமண உறவை முறிக்க சட்டத்திற்கு அதிகாரம் இல்லை.
கிறிஸ்தவ சட்டங்களின் அடிப்படையில் திருமணமான ஒருவன் அரசாங்க நீதிமன்றத்தில் திருமண முறிவு பெற்றாலும் கிறிஸ்தவ விதிப்படி அது செல்லாது.
அப்படிப்பட்டவன் உலக விதிப்படி மறுமணம் செய்து கொண்டால் அவன் வாழ்வது விபச்சார வாழ்க்கை.
செயற்கைக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதும் , வயிற்றில் இருக்கும் குழந்தைகளை அழிப்பதும் கிறிஸ்தவ போதனைக்கு எதிரான செயல்கள்.
(ஒரு முறை குமுதம் பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்:
"குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?"
அவருக்கு ஆசிரியரின் பதில்:
"ஒன்றுமே செய்ய வேண்டாம்!"
இதுதான் இயற்கையான முறை.)
கிறிஸ்தவ மறைக்கு எதிரான செயல்களை அரசாங்கம் அனுமதித்தாலும், இறைவன் அனுமதிப்பது இல்லை.
நாம் கீழ்ப்படிய வேண்டியது இறைவனுக்கு.
இயேசுவின் போதனைகளைத் தான் அவருடைய சீடர்கள் மக்களுக்கு போதித்து அவற்றின்படி மக்களை வாழ வைத்தார்கள்.
உலகெங்கும் போய் கிறிஸ்துவின் போதனைகளைப் போதித்தார்கள்.
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சமூக கலாச்சார பழக்க வழக்கங்கள் இருக்கும்.
இயேசுவின் போதனையை ஏற்றுக்கொண்ட மக்கள் தங்கள் சமூக கலாசார பழக்க வழக்கங்களை கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டார்கள்.
அதாவது அவர்களது கலாசாரத்தை கிறிஸ்தவ கலாச்சாரமாக மாற்றி கொண்டார்கள்.
கிறிஸ்துவின் போதனைகளை கலாசாரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவில்லை.
நாம்தான் கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்ப வாழ வேண்டுமே தவிர,
கிறிஸ்துவின் போதனைகளை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற கூடாது.
எப்படி பூமியின் மேல் இருக்கும் மாமரம்,
தனது வேர்களை பூமியின் ஆழத்தில் செலுத்தி,
அங்குள்ள உரத்தை உணவாக மாற்றி உண்டு வளர்ந்து பலன் தருகிறதோ,
அதேபோல்
கிறிஸ்துவின் போதனைகளின் மேல் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நாம்
நமது விசுவாச வேர்களை கிறிஸ்துவின் போதனைகளுக்குள் ஆழமாக வளர விட்டு,
அங்கிருந்து மாறாத கிறிஸ்துவின் போதனை ஆகிய உணவை உட்கொண்டு வளர்ந்து பலன் தர வேண்டும்.
நமது வாழ்க்கையாகிய மரத்தில் புதிய தளிர்கள் விடலாம்,
ஆனால் அவையெல்லாம் பழைய, மாறாத கிறிஸ்துவின் போதனைகளை உயிராகக் கொண்டவையாய் இருக்க வேண்டும்.
விஞ்ஞானம் நமது உலகியல் வாழ்வில் எண்ணற்ற நன்மையான மாற்றங்களை புரிந்திருக்கலாம்.
ஆனால் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நமது மெய்ஞான வாழ்வின் குறுக்கே வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை திருப்பலி கண்டு, சுவாமியின் பிரசங்கத்தைக் கேட்டு, இயேசுவை உணவாக உட்கொண்டு பக்தி உணர்ச்சியோடு வீட்டுக்கு வருவோம்.
உணவு உண்டவுடன் பொழுது போவதற்காக டிவியை போடுவோம்.
அவ்வளவுதான், டிவியில் வரும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை மனநிலையையே முழுமையாக மாற்றி விடும்.
பக்தி இருந்த இடத்தை கேளிக்கை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
விஞ்ஞானத்தின் விளைவான டிவி நமது மெய்ஞானத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடும்!
YouTube ல் திருப்பலியை பார்க்க எண்ணி உள்ளே நுழைவோம்.
பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதற்கு அருகில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும்,
கொஞ்சம் இறங்கி நாமும் அதற்குள் எட்டிப் பார்ப்போம்.
பிறகு திருப்பலியை விட்டுவிட்டு பட்டிமன்றங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகளை, அரசியல் நிகழ்ச்சிகள், எல்லாம் சேர்ந்து நமது நேரத்தை சாப்பிட்டு விடும்.
ஏறக்குறைய எல்லோருமே ஒரு பேயை நமது பாக்கெட்டில் தூக்கிக் கொண்டு அலைகிறோம், smart phone என்ற பெயரில்!
இந்த விஞ்ஞானத்தின் விளைவுகள் எல்லாம் முற்றிலும் தவறானவை என்று சொல்ல வரவில்லை.
இவற்றை சரியாக பயன்படுத்தினால் இவை மிகச்சிறந்த நற்செய்தி பரப்பும் கருவிகளாகப் பயன்படும்.
ஆனால் நாம் இவற்றைச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றால்
விசுவாசத்தில் நன்கு வேர் ஊன்றியவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது நவீனம் கலவாத விசுவாசத்தில்.
ஒருவர் மாதாவின் சுரூபத்தின் முன், மாதாவை நோக்கி நின்றுகொண்டு கரம் குவித்து பக்தி பாடல் ஒன்று பாடுகிறார்.
இன்னொருவர் அதே பாடலை பூங்கா ஒன்றில் நடனம் ஆடிக்கொண்டு பாடுகிறார்.
முந்தியது பழமை.
பிந்தியது புதுமை.
நின்றுகொண்டு கரம் குவித்துபாடும் போது நமது கவனம் பாட்டில் இருக்கும்.
ஆடிக் கொண்டு பாடும் போது நமது கவனம் ஆட்டத்தில் இருக்கும்.
சில பக்தி பாடல்களை இயற்கை காட்சிகளை பின்னணியாக வைத்து அதில் ஆடுபவர்களை பாட வைத்திருப்பார்கள்.
பார்வையாளர்களின் ரசனையை நடனமும் இயற்கை காட்சிகளும் பாடல்களும் பங்கு வைக்க வேண்டியிருக்கும்.
திருப்பலி நிறைவேற்றும் பீடத்தைக் கூட அளவுக்கு மீறி அலங்கரிக்க கூடாது என்று சொல்வார்கள்.
ஏனென்றால் திருப்பலி காண்பவர்களின் கவனம் சிதறும்,
பழமைவாதிகள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்,
நவீன வாதிகள் ரசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..
திருமண வீட்டில் பெண்ணை பார்ப்பவர்கள் அவளது முகத்தை பார்ப்பதைவிட நகைகளையும் ஆடை அழகையும்தான் அதிகம் பார்ப்பார்கள்.
பெண்ணைப் பற்றி யாரும் விசாரிக்க மாட்டார்கள்.
"எத்தனை பவுன் நகை போட்டிருப்பார்கள்?"
"சேலை என்ன விலை இருக்கும்? " போன்ற கேள்விகளைத் தான் மற்ற பெண்கள் கேட்பார்கள்.
நவீன முறையில் பாடப்படும் பக்தி பாடல்களுக்கும் இது பொருந்தும்.
புதுமை விரும்பிகள் நான் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆனாலும் மனதில் பட்டதைக் கூறுகிறேன்:
பழமையிலிருந்து துளிர்விடும் புதுமைதான் விசுவாசத்தைக் காக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment