Tuesday, January 12, 2021

பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள்.


 இறைவா! உமக்கு எங்கள் நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

சகல விதமான இயற்கை வளங்களைப் படைத்த பின்புதான் அவற்றைப் பயன் படுத்தி வாழ எங்களைப் படைத்தீர்.

ஆனால் நன்றி மறந்து உமது கட்டளையை மீறிப் பாவம் செய்தோம்.

எங்களது பாவத்தின் கனா கனத்தை எங்களுக்குப் புரிய வைப்பதற்காக,

"உண்ண வேண்டாமென்று நாம் விலக்கியிருந்த மரத்தின் கனியைத் தின்றதினாலே 

உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்: 

நீ உழைத்துத் தான் உன் வாழ்நாளெல்லாம் அதன் பலனை உண்பாய்.

அது உனக்கு முட்களையும் முட்செடிகளையும் விளைவிக்கும்: பூமியின் புல் பூண்டுகளை நீ உண்பாய்:


நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்பாய்."

என்று அன்று நீர் கூறினாலும், எங்களைக் கைவிடவில்லை.

எங்களுக்கு நீர் வளத்தையும், நில வளத்தையும் கொடுத்து,

  உழவுத் தொழில் மூலம் உலகோர் அனைவருக்கும் தேவையான உணவையும் கொடுத்து வருகின்றீர்.

இப்போது அறுவடை காலம்.

நீர் கொடுத்த காலம்.

இறைவா! உமக்கு நன்றி சொல்லும் விதமாக இன்று பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இறைவா! உமக்கு எங்கள் நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

ஏற்றுக்கொண்டு, அடியோரை ஆசீர்வதித்தரளும்.

ஆமென்."

நண்பர் ஒருவர் ஒரு பாலை வனத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

பசி எடுத்தது.

உண்பதற்கு கைவசம் ஏதும் இல்லை.

பாலை வனத்தைக் கடந்தால்தான் ஊர் வரும், உணவும் கிடைக்கும்.

ஆனால் அது வரை உயிர் காத்துக் கொண்டிருக்குமா?

கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய பொட்டலம் கிடந்தது.

யாராவது சுமக்க முடியாமல் போட்டு விட்டுப் போயிருக்கலாம்.

உள்ளே உணவு பொருள் ஏதாவது இருக்கலாம்.

ஆவலுடன் அதை நோக்கி முடிந்தமட்டும் வேகமாக நடந்தார். அதை எடுத்துப் பிரித்து பார்த்தார்.  

நிறைய தங்க நாணயங்கள் இருந்தன.

 அவருக்கு கோபம் வந்தது. தங்கத்தைச் சாப்பிடவா முடியும்!

 அவற்றை கொட்டித் தீர்த்து விட்டு, பையை மடித்து pants pocket ல் வைத்துக் கொண்டு,
(எதுக்கு? ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது)

தொடர்ந்து நடந்தார்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சில மரங்கள் தெரிந்தன.

மரங்கள் நின்றால் கட்டாயம் தண்ணீர் இருக்கும்.


 ஆகவே கூடியமட்டும் வேகமாக மரங்களை நோக்கி நடந்தார்.

அது ஒரு பாலைவனப் பசுஞ்சோலை.

 மரங்களை நெருங்கியதும் அருகே நீர் நிறைந்த குட்டை ஒன்று இருப்பதை கண்டார்.

 தொடர்ந்து நகர முடியவில்லை.

 கீழே விழுந்து குட்டையை நோக்கி உருண்டார்.

உருண்டு தண்ணீருக்குள் விழுந்தார். அப்படியே வாயால் தண்ணீரைக் குடித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக தெம்பு திரும்யது.

மரங்களை நோக்கி நடந்தார்.

நல்ல பசி. அகப்பட்ட பழக்களைப் பறித்து சாப்பிட்டார்.

உற்சாகம் வேகமாக திரும்பியது. கைக்கு எட்டிய தூரம் எல்லா பழங்களையும் பறித்து பாக்கெட்டில் இருந்த பையில் போட்டுக்கொண்டார்.

 தங்கத்தினால் பயன் இல்லாவிட்டாலும் 

பையினால் பயன் இருந்தது!

தொடர்ந்து நடக்கும்போது அவர் அதுவரை நினைத்திராத அனேக எண்ணங்கள் அவரது மனதில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்தன. 

"கடவுள் நமக்கு ஒரு உடலையும் ஒரு ஆன்மாவையும் தந்திருக்கிறாரே.

இரண்டையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆயிற்றே.

 ஒரு வேளை உணவு கிடைக்காமல் நமது உடல் இவ்வளவு சங்கடப் படுகிறதே.


உடலை மட்டும்தானே இதுநாள் வரை பேணிக் கொண்டிருந்திருக்கிறோம். 

நமக்கு ஆன்மா என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டோமே.

அதை ஞாபகப்படுத்த தான் இந்த பாலைவனப் பயணத்தை இறைவன் ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆண்டவரே உமக்கு நன்றி.

இனிமேல் எனது முழு கவனமும் ஆன்மாவின் மேல் தான் இருக்கும்.

ஆன்மாவை இழந்து உடலை பாதுகாப்பதினால் எனக்கு என்ன பயன்?

இனி என் உடல் ஆன்மாவிற்குச் சேவை செய்யும்.

இறைவா, இனி என் ஆன்மா உமக்கு மட்டுமே சேவை செய்யும்.

இது சத்தியம்."

இது போன்ற எண்ணங்கள் எல்லோருடைய மனதிலும் அவ்வப்போது வரும்.

அதாவது, தங்களுக்கு ஒரு ஆன்மா இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கு.

நாம் நம்புகிறோம். நம்புவதால்தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் சீடர்களாக மாறினோம்.

ஞானஸ்நானம் நமது விண்ணக பயணத்தின் தொடக்கம்.

விண்ணக பயணத்தில் நடை போடுவது நமது ஆன்மா.

நமது ஆன்மா ஆன்மீகப் பயணத்தில் வீர நடை போட வேண்டுமென்றால் அதற்குரிய ஆன்மீக உணவு ஒழுங்காக கிடைக்க வேண்டும்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நாம் ஞானஸ்நானம் பெற்றிருப்பதால் நமது ஆன்மா திரியேக தேவனின் அருள் வரங்களால் ஊட்டம் பெற்றிருக்கும். 

கடவுளின் அருள் வரங்கள்தான் நாம் தொடர்ந்து ஆன்மாவிற்கு ஊட்ட வேண்டிய ஆன்மீக உணவு ஆகும்.

அவை இறைவனின் வரங்கள், ஆகையால் அவரிடம் இருந்துதான் பெற முடியும்.

துவக்கத்தில் நாம் கேளாமலேயே நமக்கு அருள் வரங்களை நிறைய தந்திருப்பார்.

தொடர்ந்து அந்த ஆன்மிக உணவை இறைவனிடமிருந்து கேட்டு பெற வேண்டும்.

இதைப் பெறுவதற்காகத்தான் 

இயேசு, "கேளுங்கள் கொடுக்கப்படும் ''

என்று சொன்னார்.

நாம் அதை மட்டும் கேட்காமல் தேவை இல்லாதவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

ஜெபத்தினால் மட்டுமல்ல,

  நமது தவ முயற்சிகளினாலும்,

நற்செயல்களாலும் நிறைய அருள் வரங்களைப் பெறலாம்.

நமது ஜெப, தப, நற்செயல்களுக்கும்

இறைவனின் அருள் வரங்களுக்கும் இடையில் ஒரு விசேச உறவு இருக்கிறது.

இறைவனின் அருள் வரங்கள் நமது ஜெப, தப, நற்செயல்களுக்கு உதவியாக இருக்கும்.

நமது ஜெப, தப, நற்செயல்கள் இறைவனின் அருள் வரங்களைப் பெற உதவியாக இருக்கும். 

தண்ணீரால் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின்சாரத்தால் தண்ணீரை எடுப்பது போல,

ஒரு முறை அருள் வாழ்வை ஆரம்பித்துவிட்டு, இறைவனின் சந்நிதானத்தில் நாம் வாழ ஆரம்பித்தால்

 நமது வாழ்வில் அருள் மழை கொட்டிக்கொண்டே இருக்கும்,

 நற்செயல்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அடுத்து,

 அனைத்து தேவத் திரவிய அனுமானங்களும் நமக்கு அருள் வரங்களை அள்ளித் தருவதற்காகவே இயேசுவால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒப்புரவு அருட்சாதனமும், திவ்ய நற்கருணையும் நாம் அடிக்கடி பெறவேண்டிய தேவத் திரவிய அனுமானங்கள்.

ஒப்புரவு அருட்சாதனத்தால் நமது ஆன்மா பரிசுத்தமடைகிறது.

திவ்ய நற்கருணையில் இறைமகன் இயேசுவே தனது உடலையும் இரத்தத்தையும் நமது ஆன்மீக உணவாக நமக்குத் தருகிறார்.

திவ்விய நற்கருணையை ஏதோ ஒரு தின்பண்டத்தை வாங்குவது போல வாங்கி வாயில் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கக்கூடாது.

நம்மை படைத்த இறைவனை நமது உள்ளத்தில் வரவேற்கும் உணர்வோடு இறை இயேசுவை உட்கொள்ள வேண்டும்.

உண்மையான உணர்வோடு உட்கொண்டால், நமக்கு விண்ணக வாழ்வின் முன் சுவை கிட்டும்.

 திவ்விய நற்கருணை உட்கொள்ளும் போது இறையருளின் ஊற்றே நமக்குள் வந்துவிடுகிறது.

ஜெப, தப, நற்செயல் முயற்சிகளோடு நற்கருணை நாதரும் சேர்ந்து கொண்டால்

நம்மை நோக்கி வரும் அருள் 
 வெள்ளத்திற்கு 

 நன்றியாக ஒரு நாள் பொங்கல் திருவிழா கொண்டாடினால் போதாது.

ஆண்டு முழுவதும் நன்றி பெருக்கால் வரும் பொங்கல் திருவிழாதான்.

இறைவா உமக்கு என்றென்றும் நன்றி!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment