Monday, January 4, 2021

"முன்பு எழக்கண்ட அந்த விண்மீன்," (மத்.2:9)

http://lrdselvam.blogspot.com/2021/01/29.html


"முன்பு எழக்கண்ட அந்த விண்மீன்," (மத்.2:9)


"யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே, அவர் எங்கே ?

 அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு,

 அவரை வணங்க வந்தோம்" என்றார்கள்."

மத்தேயு நற்செய்தியில் இந்த வரிகளை வாசித்ததுமே என்னுடைய மனதில் சில கேள்விகள் என்னையும் அறியாமல் எழுந்தன.

 கீழ்த்திசை ஞானிகள் புதிய விண்மீன் எழுதலைக் கண்டு யூதர்களின் புதிய அரசர் பிறந்திருக்கின்றார் என்பதை அறிந்தார்கள்.

விண்மீனின் வழிகாட்டுதலின்படி தான் அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து ஜெருசலேமை
 நோக்கி வந்திருக்கிறார்கள்.

அவர்கள் ஏன் ஏரோது மன்னனிடம் அவரைப் பற்றி விசாரிக்கச் சென்றார்கள்?

ஜெருசலேம் வரை வழி காட்டிய விண்மீன் அவர்களை நேரே இயேசு பாலன் பிறந்த இடத்திற்கு வழிநடத்தி செய்திருக்கலாமே?

"அவர்கள் அரசன் கூறியதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன், குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது."

என்ற வசனத்தில், "இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன்," 

என்ற என்ற வார்த்தைகளிலிருந்து ஜெருசலேம் வரை வழிகாட்டிய விண்மீன் அங்கு வந்தவுடன் மறைந்துவிட்டது என்று யூகிக்க முடிகிறது.

ஏரோது அரசனிடம் பேசிவிட்டு வந்த பின் அது மீண்டும் தோன்றியிருக்கிறது. 

ஜெருசலேம் வரை வந்த விண்மீன் ஏன் மறைந்தது?


வின்மீன் மறையாமல் ஞானிகளை நேராக இயேசுவிடம் அழைத்துச் சென்றிருந்தால்

 ஏரோது மன்னனுக்கு இயேசு பிறந்திருந்தது தெரிந்திருக்காது,''

' அது மட்டுமல்ல 

 அவன் மாசில்லா குழந்தைகளை கொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இக்கேள்விகளுக்கு விசுவாசத்தின் அடிப்படையில் விடை காண நேர்ந்தபோது என் மனதில் உதித்த எண்ணங்கள்,

வெறும் எண்ணங்கள் அல்ல ஆறுதலான எண்ணங்கள்.

இன்று மனிதன் மனதில் எழும் அநேக கேள்விகளுக்கு விடையாக வந்த எண்ணங்கள்.


விசுவாசத்தின் அடிப்படையில்

 ஏரோது மன்னனிடம் ஞானிகள் சென்று இயேசுவின் பிறப்பைப் பற்றி விசாரித்தது ஏன்?

கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.

என்றென்றும் நிகழ் காலத்திலேயே வாழ்பவர்.

 நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை எல்லாம் இறைவனுக்கு நிகழ் காலமே.

இன்று ஒவ்வொரு வினாடியும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் காலங்களுக்கு எல்லாம் முன்பே இறைவன் மனதில் இருந்தவைதான்.

எல்லாம் அவரது நித்திய கால திட்டத்தின்படிதான் (Eternal plan) நடக்கின்றன.

மனிதன் தனது முழுமையான சுதந்திரத்தைப் பயன்படுத்தி செய்யும் நிகழ்ச்சிகளில் இறைவன் குறுக்கிட மாட்டார்.

இன்று நாம் செய்யும் செயல்கள் இறைவனின் ஞானத்தினால் நித்திய காலமாகவே அவருக்கு தெரியும்.

 ஆகவே நாம் சுதந்திரத்தோடு இன்று செய்கிற  செயல்களையும் நித்திய காலமாகவே அவரது திட்டத்திற்குப்  பயன்படுத்திக் கொள்கிறார்.

இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றது யூதர்களுடைய சுதந்திரமான செயல். 

அதில் இறைவன் குறிக்கிடவில்லை. 

ஆனால் அச்செயலை மனிதனை மீட்பதற்கு தான் பாவப் பரிகாரம் செய்ய பயன்படுத்திக் கொண்டார். 

ஏரோது மன்னன் ஒரு கொடுங்கோலன் என்பது இறைவனுக்கு நித்திய காலமாக தெரியும்.

அவன் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள தனது மனைவியையும் பிள்ளைகளையுமே கொன்றவன்.

"ஏரோதுவிற்கு பிள்ளையாகப் பிறப்பதை விட பன்றிக்கு குட்டியாக பிறப்பது எவ்வளவோ மேல்" என்று அக்காலத்தவர் பேசிக் கொள்வார்களாம்!

அப்படிப்பட்டவன் தனக்கு போட்டியாக இன்னொரு அரசர் பிறக்கப் போகிறார் என்பது தெரிந்தால் அவரை சும்மா விடுவானா?

ஏரோது வைப்பற்றி Webல் தேடிக் கொண்டிருந்தபோது ஒரு வரலாற்றுக் குறிப்பு கண்ணில் பட்டது.

 ஏரோது யூதன் அல்ல, Edomites வம்சத்தை சேர்ந்தவன்.

Edomites யார்?

ஈசாக்கிற்கு இரண்டு பிள்ளைகள் , எசாயூ, யாக்கோபு.

எசாயூ தின்பண்டத்திற்காக
தலைச்சனுக்குரிய தன் உரிமையை யாக்கோபிடம் விற்று விட்டான்.

அது மட்டுமல்ல,

யாக்கோபு அண்ணன் போல் நடித்து, அவன் தந்தையிடமிருந்து பெறவேண்டிய ஆசீர்வாதத்தை களவு செய்து கொண்டவன்.

ஆகவே இருவருக்கும் இடையே பகைமை இருந்தது.

Edomites எசாயூவின் வம்சத்தினர். 

Edomites were descendants of Esau,

ஆகவே, ஏரோது எசாயூவின் வம்சத்தில் பிறந்தவன்.

இயேசு யாக்கோபுவின் வம்சத்தில் பிறந்தவர்.

இந்த வரலாற்று குறிப்பின் உதவியோடு ஏரோதுவை நோக்கினால் அவனது கோபம் நமக்கு புரியும்.

பதவிக்காக தான் பெற்ற மக்களையே கொன்றவன் எதிராளியின் வம்சத்தில் பிறந்த இயேசுவை விட்டு வைப்பானா?

இது எல்லாம் வல்ல இறைவனுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

ஒவ்வொரு வினாடியும் இறைவன் திட்டப்படியே செயல்கள் நடப்பதால்

 கீழ்த்திசை ஞானிகளுக்கு வழிகாட்டிய விண்மீன் ஜெருசலேத்தை அடைந்தவுடன் மறைந்தது இறைவனின் திட்டம் தானே!

விண்மீன் உயிரி அல்ல, அது சுயமாக இயங்க கூடியது அல்ல.

விண்மீன் மறைந்ததால்தான் ஞானிகள் அரசனின் ஆலோசனையை கேட்க சென்றார்கள்.

புதிதாக பிறந்துள்ள யூதர்களின் அரசரைப் பற்றி ஏரோதுவிடம் சொல்லிவிட்டு திரும்பும்போது மறைந்த விண்மீன் இறைவன் திட்டப்படி தோன்றி,

 ஞானிகளை இயேசுவிடம் வழிகாட்டி அழைத்துச் சென்றது.

இறைவன்தான் தன்னுடைய தூதர் மூலமாக ஞானிகளை வேறுவழியே அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

தேவதூதரின் சொற்படி சூசையப்பரும் மாதாவையும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு சென்று விட்டார்.

ஞானிகள் வந்து தங்களது அனுபவத்தை கூறாததால் ஏரோது கோபமடைந்து,

பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.

உலக கண் நோக்கின்படி இறைவனின் இந்த செயல்பாட்டை பார்த்தால்  

தந்தை இறைவன் தனது திட்டத்தால்

 தன்னுடைய ஒரே குமாரனையும் மாசில்லா குழந்தைகளையும் கஷ்டப்படுத்தி விட்டது போல் தோன்றும். 


அவரிடம் சென்று நாம்,

''தந்தையே, ஏன் விண்மீனின் போக்கில் குறுக்கிட்டு
 உங்கள் ஏக குமாரனைக்  
 கஷ்டப்படுத்தி,
சிறு குழந்தைகளின் சாவிற்கு காரணமாக இருந்தீர்கள்"

என்று கேட்டால் அவர் சொல்லுவார்,

"ஒரு நல்ல மருத்துவருக்கு நோயாளிகளை எப்படி குணமாக்குவது என்று தெரியும்.

 மாத்திரை கொடுத்தால் போதுமா, ஊசி போட வேண்டுமா, அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியவர் அவர், நோயாளி அல்ல. 

நோயாளி முழுமையாகக் குணம் பெற வேண்டும் என்பதுதான் மருத்துவரின் ஆசை.

அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நோயாளி குணம் அடைவதை மையமாக வைத்துதான் இருக்கும்.

நான் மனிதனை படைத்தது நித்திய காலமும் என்னோடு பேரின்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

எனது ஒவ்வொரு செயலும் அதை மையமாக வைத்துதான் இருக்கும்.

நோயாளி குணம் அடைந்த பின்புதான் மருத்துவரின் செயலின் மேன்மை புரியும்.

அதேபோல் நீங்கள் விண்ணகம் வந்த பின்புதான் எனது ஒவ்வொரு செயலில் தன்மையும் உங்களுக்கு புரியும்.

எனது மகனை உங்களது பாவங்களுக்குப் பரிகாரமாக கஷ்டப்படுவதற்காகத்தான் அனுப்பினேன்.

என் மகனும் நானும் பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்தான்.

இந்த விசுவாச அடிப்படையில் சிந்தித்தால்தான் உண்மை புரியும்.

இயேசுவுக்கு கஷ்டங்கள் வரவில்லை. அவராகவே அவற்றை மனமுவந்து தேர்ந்தெடுத்தார்.  

உலகப் பார்வையில் மாசில்லா குழந்தைகள் மரித்தார்கள்.

 என் பார்வையில், உலகிற்கு அவர்களை அனுப்பிய நான்தான், திரும்பி அழைத்துக் கொண்டேன்.  

அவர்கள் நித்தியமும் என்னோடு பேரின்பமாக வாழ வேண்டும் என்பதற்காகவே படைத்தேன்.

உண்மையில் ஏரோதுவின் தீச்செயல் குழந்தைகளுக்கு நன்மையில்தான் முடிந்தது!

இப்போது என்னோடுதான் வாழ்கின்றார்கள்."

மனிதர் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலையும் இறைவனது பார்வையின் மூலமாகவே நாமும் பார்க்கவேண்டும்.

விசுவாசப் பார்வையில் பார்த்தால்தான் எல்லாம் நன்மைக்கே என்பது புரியும்.

இயேசு பாலனின் வாழ்வில் அன்று துன்பங்கள் வந்தது போல, இல்லை, துன்பங்களை தந்தை இறைவனே வர விட்டது போல,

நமது வாழ்விலும் துன்பங்கள் வருகின்றன, இறைத் தந்தையின் அனுமதியோடு.

நாம் நினைக்கலாம்: அன்புள்ள கடவுள் நம் வாழ்வில் துன்பங்களே வர விடாமல் நம்மை பாதுகாத்திருக்கலாமே என்று.

இயேசு தான் கடவுளாக இருந்தும் மனித சுபாவத்தில் அவரே தன்மீது துன்பங்களை வரவழைத்து கொண்டதற்கு காரணமே நமக்கு பாடம் கற்பிப்பதற்காகத்தான்.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய இறைவனே மனிதனாக பிறந்து துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டது போல 

நாமும் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக நமக்கு வரும் துன்பங்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவரது துன்பங்கள் நம்முடைய மீட்பு என்ற மகிழ்ச்சியாக மாறியது போல 

நமது துன்பங்களும் விண்ணகத்தில் பேரின்பமாக மாறும்.

இவ்வுலகில் நமது துன்பங்கள் முடிவுக்கு வந்துவிடும்,

 ஆனால் அவற்றின் பயனாக நாம் பெறும் பேரின்பம் நித்தியமாக நம்முடன் நிலைத்திருக்கும்.

சுனாமி, கொரோனா போன்ற துன்பங்களால் ஏற்படும் மரணங்கள்

 இறைவனை பொறுத்தமட்டில் மரணங்கள் அல்ல,

 மாறாக நித்திய பேரின்பத்தின் வாசல்கள்.


நமக்கு பாடம் கற்பிப்பதற்காகத்தான் அன்று மாசில்லா குழந்தைகள் இயேசுவுக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள்.

 வேறு வார்த்தைகளில், இளமையிலேயே நித்திய பேரின்பத்திற்குள் நுழைந்தார்கள்.

நமக்கு வரும் துன்பங்களையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் இறைவனின் கண் நோக்கிலிருந்து பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்..

 அதுதான் விசுவாசம்.

நமக்குள் உண்மையாக விசுவாசம் இருந்தால் நமக்கு வரும் துன்பங்களைக் கண்டு அஞ்ச மாட்டோம்,

அவற்றை நன்றி உணர்ச்சியோடு ஏற்று,

 இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து, 

விண்ணகத்தில் பேரின்பத்தைச் சேர்த்து வைப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment