எழுத ஆரம்பிக்கும்போதே உயர்நிலைப் பள்ளி அனுபவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
Hostel வில் Director சுவாமியிடம் பேச வேண்டும் என்றால் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்.
ஒன்பதாவது வகுப்பில் பள்ளியில் வந்து சேரும் மாணவர்களுக்கு ஆரம்பநிலையில் ஆங்கிலத்தில் பேச வராது.
ஆகவே என்ன பேச வேண்டுமோ அதை பழைய மாணவர்களின் உதவியால் ஆங்கிலத்தில் எழுதி, மனப்பாடம் செய்து கொண்டு சுவாமியிடம் செல்வோம்.
மனப்பாடம் செய்ததை சுவாமியிடம் சொல்வோம்..
அவர் ஏதாவது விளக்கம் கேட்டால்,
அவர் கேட்டதை அப்படியே மனப்பாடம் செய்துகொண்டு
வெளியே வந்து பழையபடி அதற்காக பதிலை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொண்டு சுவாமியிடம் செல்வோம்.
இப்படி திரும்பத் திரும்ப சென்று வந்து
ஒரு சிறு அனுமதி பெற அரை மணி நேரம் ஆகும்..
இது ஆரம்ப நிலையில்,
ஒரு ஆண்டு கழித்து எங்களால் மற்றவர்களுக்கு உதவ முடியும்.
இறைவனோடு பேச வேண்டும் அவரை வாழ்த்த வேண்டும். அவருக்கு நன்றி கூற வேண்டும். நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்க வேண்டும். நமது உணர்வுகளை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சுருக்கமாக இறைவனிடம் ஜெபிக்க வேண்டும்.
எவ்வாறு ஜெபிக்கிறோம்?
சுயமாக ஜெபிக்கிறோமா?
பிறர் உதவியுடன் ஜெபிக்கிறோமா?
எழுத வாசிக்க தெரியாதவர்களுக்குக் கவலை இல்லை.
அவர்கள் சுயமாகத்தான் ஜெபிப்பார்கள்.
மனதில் உள்ளதை அப்படியே இறைவனிடம் கொட்டுவார்கள்.
வார்த்தைகள் கிடைக்காவிட்டால் இறைவனே நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் செய்வது தான் உண்மையான ஜெபம்.
ஜெபிப்பதற்கு ஜெப புத்தகத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு தான் பிரச்சனை.
புத்தகத்தில் உள்ள ஜெபங்களை வேறு யாரோ எழுதி இருப்பார்கள்.
அவர்களது உணர்வுகளை கொட்டி எழுதி இருப்பார்கள்.
அதைப் பார்த்து ஜெபிப்பவர்கள் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை வாசித்து மட்டும் விட்டு போவார்களானால் அவர்கள் செய்வது ஜெபம் அல்ல.
ஜெப வார்த்தைகள் உள்ளத்திலிருந்து உணர்வு பூர்வமாக வெளிவர வேண்டும்.
அவற்றோடு நமது இதயமும் ஒன்றித்திருக்க வேண்டும்.
புத்தகத்தை உதவிக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே தவிர ஜெபத்தை நாம்தான் உணர்வு பூர்வமாக சொல்ல வேண்டும்.
அதுதான் உண்மையான ஜெபம்,
புத்தகத்தின் உதவி இல்லாமலேயே நமது உணர்வுகளுக்கு நாமே சொந்தமாக வார்த்தைகளைக் கொடுத்து
உணர்வுகளையும் வார்த்தைகளையும் கலந்து இறைவனிடம் சமர்ப்பிப்பது தான் உண்மையான உணர்வு பூர்வமான ஜெபம்.
நாடகங்களில் பேசுபவர்கள் வசனகர்த்தா எழுதிக்கொடுத்த வார்த்தைகளை மாறாமல் அப்படியே பேசுவார்கள்.
பேசுவதை உணர்ச்சிகரமாக பேசினால் நாடகத்தை பார்ப்பவர்கள் ரசிப்பார்கள்.
ஆனால் நண்பர்களுடன் நாம் இயல்பாக பேசும்போது யாரும் எழுதிக்கொடுத்த வசனங்களை பயன்படுத்துவது இல்லை.
உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளை மட்டும் தான் பயன்படுத்துவோம்.
இறைவனிடம் பேசும் போதும் அதே முறையைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
இறைவன் நமது வார்த்தைகளின் அழகை அல்ல, அவை வெளிப்படுத்தும் உணர்வுகளைத் தான் விரும்புகிறார்.
உணர்வுபூர்வமான ஜெபம்தான் உண்மையான ஜெபம்.
இறைவனை நோக்கி ஜெபிக்கும்போது ஒரு அடிப்படை இறை உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணக தந்தையை நோக்கி ஜெபித்தாலும்,
இயேசுவை நோக்கி ஜெபித்தாலும்,
பரிசுத்த ஆவியை நோக்கி ஜெபித்தாலும்
நாம் மூவொரு கடவுளை நோக்கிதான் ஜெபிக்கிறோம் என்கிற உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும்.
"விண்ணகத் தந்தையே உமது நாமம் தூயது என போற்றப்பெறுக."
என்று நாம் ஜெபிக்கும்போது தந்தைக்குள் மகனும் இருக்கிறார், தூய ஆவியும் இருக்கிறார் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
"இயேசுவின் திரு இருதயமே" என்று ஆரம்பித்து இயேசுவை நோக்கி ஜெபிக்கும்போது இயேசுவினுள் தந்தையும் இருக்கிறார், தூய ஆவியும் இருக்கிறார் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
அவ்வாறே,
"பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும்." என்று துவங்கி தூய ஆவியை நோக்கி ஜெபிக்கும்போது.
தூய ஆவிக்குள் தந்தையும் இருக்கிறார், மகனும் இருக்கிறார்,
என்ற உணர்வு இருக்க வேண்டும்.
ஒரே கடவுள்தான் மூன்று ஆட்களாக இருக்கிறார்.
கடவுளைப் பங்கு போட முடியாது.
ஒரு நாளை ஆரம்பிக்கும் போதும்,
முடிக்கும்போதும்,
இரவில் தூங்க ஆரம்பிக்கும் போதும், தூங்கி கண் விழிக்கும் போதும்,
நாளினுள் ஒவ்வொரு வேலையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும்,
"தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்."
எனக்கூறி திரியேக தேவனை நம்மோடு இருக்க அழைக்கிறோம்.
எதற்காக அவரை அழைக்கிறோம்?
அவரை அழைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு நமது இஷ்டம் போல் செயல்படவா?
நமது ஒவ்வொரு செயலையும் அவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தானே அவரை அழைக்கிறோம்!
அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு,
அவருக்கு விருப்பம் இல்லாத ஒரு காரியத்தை செய்து கொண்டு,
அவரை நோக்கி
"ஆண்டவரே, நான் செய்வதை ஆசீர்வதியும்" என்று கேட்டால்
அது அவரைக் கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவது போல் இருக்காதா?
காலையில் எழுந்தவுடன் திரியேக தேவனை நோக்கி "என்னோடு வாரும்'' என்று அழைத்துக் கொண்டு,
நேரே மனைவியிடம் போய்,
"ஏண்டி காலையில் டீ கொண்டு வரவில்லை?"
எங்கு சண்டை போட ஆரம்பித்தால்,
"ஏண்டா, உன் மனைவி கூட சண்டை போடுவதற்கா என்னைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வந்தாய்?"
என்ற அவரது கேள்வி நமது காதில் விழ வேண்டும்.
நாமும், "ஆண்டவரே நீர் என்னுடன் இருப்பது ஞாபகம் இல்லாமல்
தெரியாத்தனமாக எனது மனைவியுடன் சண்டை போட்டு விட்டேன்.
மன்னிக்கவும்.
இதோ அவளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனிமேல் எக்காரணத்தை முன்னிட்டும் மனைவியுடன் சண்டை போட மாட்டேன்."
என்று அவரிடம் வாக்குக் கொடுக்கவேண்டும்.
'"இங்கே பார், இன்று முழுவதும் நான் உன்னோடுதான் இருக்கிறேன். எங்கு சென்றாலும் எனக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது."
என்று அவர் கூறுவது நமது காதில் விழ வேண்டும்.
அதை அன்று முழுவதும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதே போன்று நாம் தப்பு செய்யும் போதெல்லாம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதற்கும்,
நம்மை நாமே திருத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்க தான் காலையில் எழுந்தவுடன் அவரை நம்மோடு இருக்க அழைக்கிறோம்.
நாம் சாப்பிட ஆரம்பிக்கும் போது அவரை அழைத்து பக்கத்தில் அமர வைத்துக் கொள்கிறோம்.
அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவர் தந்த உணவை குறை சொல்லிக் கொண்டிருந்தால் அவர் மகிழ்ச்சி அடைவாரா?
திரியேக தேவனை நாம் அழைக்கும் போது நமது இருதயத்திற்குள் வரும்படி அமைக்கவேண்டும்.
இருதயம் நமது அன்பின் இருப்பிடம்.
நம்முடைய ஒவ்வொரு செயலின் தன்மையும் நம்முடைய அன்பை பொருத்தே இருக்கும்.
மிகுந்த அன்புடன் செய்யப்படும் ஒரு செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
அன்பு குறைய குறைய செயலின் நல்ல தன்மையும் குறைந்து கொண்டே வரும்.
இதயம் வெறுமையாய் இருக்க முடியாது.
அன்பே இல்லாத இடத்தில் அதன் எதிர்க் குணம் இருக்கும்.
அன்பின் எதிர்க் குணத்தோடு செய்யப்படும் செயல் புண்ணியத்திற்கு எதிர்ப் பதமாக இருக்கும், அதாவது, பாவமாக இருக்கும்.
இறைவன் நமது இருதயத்தில் இருந்து, அவரோடு நாம் நெருக்கமான உறவோடு இருந்தால் நம்மிடம் அன்பு மிகுதியாக இருக்கும்.
மிகுதியான அன்போடு செய்யப்படும் செயல் அன்பில் வாழும் இறைவனுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
நமது செயல் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இறைவனை நமது இருதயத்திற்குள் வரவேற்க வேண்டும்.
இருதயத்திலிருந்து தான் நமது செயல்களுக்கான தூண்டுதல்கள் (Inspirations) எழும்.
நமது இருதயத்தில் இறைவன் இருந்தால் நம்மை நற்செயல்கள் செய்யும்படி தூண்டிக் கொண்டே இருப்பார்.
நம்மால் அவரது தூண்டுதல்களை தட்ட முடியாது.
ஆகவே எப்போதும் நாம் நற்செயல்கள் புரிந்து கொண்டே இருப்போம்.
அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நற்செயலாக மாறிக்கொண்டே இருக்கும்.
நற்செயல்கள் அன்பின் விளைவு.
அன்பு இறைவனிடம் இருந்து வருவது.
இதயத்தில் இறைவன் இருந்தால் நமக்கு .அன்புக்கு பஞ்சமே இருக்காது.
ஆகவே,
இதயத்துள் வரவேற்போம் இறைவனை!
அன்புடன் வாழ்ந்திடுவோம்
என்றென்றும்!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment