Thursday, January 14, 2021

பரிசேயரும், இயேசுவும்.

பரிசேயரும், இயேசுவும்.


இறை மகன் இயேசு அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் மீட்கத்தான் மனுவுரு எடுத்தார்.

அவர் பிறந்தது யூத குலத்தில்தான், ஆனால் அவரது மீட்பு உலகோர் அனைவருக்கும் உரியது.

மனுக் குலத்தவர் அனைவரும்,

 அன்னை மரியாளைத் தவிர,  

ஜென்ம பாவத்துடன் பிறப்பதால் நாம் அனைவரும் பாவிகள்தான்.

தான் பாவிகளைத் தேடி உலகிற்கு வந்ததாக இயேசு கூறினார்.

 உலகில் அனைவரும் பாவிகளே, ஆகவே உலகினர் அனைவரையும் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

பாவிகளுள் இரு வகையினரை பார்க்கிறோம்,

 ஒரு வகையினர் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள்,


 இன்னொரு வகையினர் தாங்கள் தங்களது பாவ நிலையை ஏற்காதவர்கள்.


 தாங்கள் பாவிகள் என்று ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவே வருகையால் பயன்பெறுவார்கள்.

 ஏற்றுக்கொள்ள மறுப்போர் பயன் பெற மாட்டார்கள்.

தனக்கு நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் நோயாளிதான் மருத்துவம் பார்ப்பான், குணமும் அடைவான்.


ஆனால் தன்னிடம் இருக்கும் நோயை ஏற்றுக் கொள்ளாதவன் அதனாலேயே சாவான்.

இயேசு மத்தேயுவில் வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது,

"பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்."


மற்றவர்களைப் பாவிகள் என்று அழைக்கும் இந்த பரிசேயர்கள் யார்?

யூத மக்கள் புற இனத்தவரிடம் அடிமைகளாக இருந்தபோது,

சிலர் புறஇனப் பெண்களை மணந்தார்கள். அவர்கள் பெண்கள் வழங்கிவந்த தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.

கி.மு.3ம் நூற்றாண்டில் புற இனத்தவரின் ஆதிக்கத்தினால் யூத சமயத்துக்கு பிரச்சினை வந்து விடுமோ என்று பயந்த சில யூதர்கள்  

யூத சமய சட்டங்களின்படி  வாழ்வதற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

யூத குருவும், சட்டவல்லுநருமான எஸ்த்ராஸ்
(Esdras) கற்பித்த கருத்துக்களை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

மோயீசன் சட்டங்களின்படி யூதர்கள் வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.

புற இனத்தவரின் ஆதிக்கத்திலிருந்து யூத சமயத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள்.

இவர்கள்தான் பரிசேயர்கள்.


அந்தியோக்கு மன்னனின் கொடுங்கோன்மை காலத்தில்
யூத மதத்தையும் யூத பாரம்பரியங்களையும் காப்பாற்றியவர்கள் இவர்கள்தான்.

அநேகர் மதத்தின் பொருட்டு வேத சாட்சிகளாக உயிரையும் கொடுத்தார்கள்.

அவர்கள் எந்த அளவிற்கு மோயீசனின் சட்டங்களை பின்பற்றினார்கள் என்றால்,

ஒருமுறை சிரியர்கள் ஓய்வு நாளில் படையெடுத்தபோது இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக ஓய்வு நாளில் அவர்களை எதிர்க்க வில்லை.

புற இனத்தவரோடு எந்த உறவையும் வைத்துக் கொள்ளவில்லை.

அவர்களது வீரமான மதப் பற்று காரணமாக மக்களிடையே செல்வாக்கு பெற்றார்கள்.

மக்களை வழி நடத்தும் அதிகாரத்தையும் பெற்றார்கள்.

மோயீசனின் சட்டங்களை மக்கள் எழுத்து தவறாமல் அனுசரிக்க அவர்களைக் கட்டாயப்படுத்தினார்கள்.

ஆனால் காலப்போக்கில் அவர்களது கௌரவமே அவர்களது ஆணவத்துக்கும், கர்வத்துக்கும் காரணமாயிற்று.

அவர்களது பழமைவாதம் தவறான போக்கிற்குக் காரணமாயிற்று.

சட்டத்தின் எழுத்திற்குக் (letter) கொடுத்த முக்கியத்துவத்தை அதன் நோக்கத்திற்குக் (spirit) கொடுக்கவில்லை.

அதுமட்டுமல்ல அநேக ஒழுங்குகளை மற்றவர்கள் மீது திணித்தார்களே தவிற தாங்கள் அனுசரிக்கவில்லை.

வெளிவேடக்காரர்களாக (hypocrites) மாறிவிட்டார்கள்.

இயேசு போதிக்க ஆரம்பித்த பின் மக்கள் கூட்டம் கூட்டமாக ('in multitudes) அவர் பின்னால் சென்றது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

எங்கே அதிகாரம் தங்கள் கையைவிட்டு இயேசுவின் கைக்குப் போய்விடுமோ என்று பயந்தார்கள்.

ஆகவேதான் அவரைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.

 இயேசு அவர்களை,

"பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!"

என்ற கடுமையான வார்த்தைகளால்  சாடும்போது

அவர்களது வெளிவேடத்தையும் (hypocrisy) தவறான போக்கையும்தான் சாடினார்.


இயேசு அவர்களைப் பார்த்து ஐயோ கேடு!" என்று சொல்லியிருப்பதால் அவருக்கு அவர்கள் மேல் கோபம் என்று என்று அர்த்தமல்ல.

நமக்கும் இயேசுவுக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

 அவர் சர்வத்தையும் படைத்த கடவுள்.

அவர் படைத்த அனைத்து மக்களையும் அளவின்றி நேசிப்பவர்.

அது மட்டுமல்ல அவருடைய நேசத்தில் கொஞ்சம் கூட மாறாதவர்.

பரிசேயர்களும் அவரால் படைக்கப்பட்டவர்களே.

அவர்களையும் மீட்பதற்காகத்தான் இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது தவறான செயல்களின் கனாகனத்தின் அளவை வெளிப் படுத்துவதற்காகத்தான். 

தான் பாடுபட வேண்டும் என்ற கருத்துக்கு மாறாக பேசிய இராயப்பரைக்கூட அவர்

" போ பின்னாலே, சாத்தானே"

என்றுதான் அழைத்தார்.

இராயப்பரின் கருத்தைக் கண்டிப்பதற்காகத்தான் அவரை 'சாத்தானே' என்று அழைத்தார்.

இராயப்பர் மீது அவருக்குக் கோபமா?

கோபமாக இருந்தால் அவரைத் திருச்சபையின் தலைவர் ஆக்கியிருப்பாரா?

பரிசேயர் மீது கோபமாக இருந்தால் அவரது மரணத்திற்குக் காரணமாய் இருந்த அவர்களை மன்னிக்கும் படி தந்தையைக் கேட்டிருப்பாரா?

அவர்கள் அவரை விருந்துக்கு அழைத்தபோது போயிருந்திருப்பாரா?

அவர் மத்தேயுவின் வீட்டில் வீட்டில் விருந்து சாப்பிட்டது போலவே, பரிசேயர்கள் வீட்டிலும் சாப்பிட்டிருக்கிறாரே!

"பரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார்."
(லூக்.7:36)

ஆக, பரிசேயரது வெளிவேடக்காரத்தனத்தின் கனாகனத்தை சுட்டிக்காட்டவே அவர்களை நோக்கி அவ்வாறு கூறினார்.

நாம் நமது பிள்ளைகள் பெரிய தவறு செய்யும்போது தவற்றின் தன்மையை சுட்டிக்காட்ட பிள்ளைகளை கடுமையான வார்த்தைகளால் அழைப்பதில்லை?

 அதே மாதிரிதான்.

பிள்ளைகள் திருந்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.

 அதேபோல்தான் பரிசேயர்கள் திருந்த வேண்டும் என்பதுதான் இயேசுவின் நோக்கம்.

அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக சுட்டிக் காட்டிய தவறுகளில் சில:


"வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். உங்கள் உள்ளத்திலோ கொள்ளையும் தீமையும் நிறைந்துள்ளன."

"பத்திலொரு பாகம் செலுத்துகிறீர்கள். ஆனால், நீதியையும் கடவுளன்பையும் பொருட்படுத்துவதில்லை."


''செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்."



இயேசு அவர்களுடைய மக்களை வழிநடத்தும் அதிகாரத்தை மறுக்க வில்லை.

 "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோயீசனுடைய இருக்கையில் அமர்ந்துள்ளனர்.

 அவர்கள் உங்களுக்குச் சொல்லுவதெல்லாம் கடைப்பிடித்து நடங்கள்."
(மத்23:2,3)

அவர்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டியது அவர்களைத் திருத்துவதற்காகத்தானே அன்றி, அவர்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல.

இதற்கு பைபிள் ஆதாரம் உண்டா என்று கேட்கத் தேவை இல்லை.

இயேசு மட்டுமே இதற்கு ஆதாரம்.

இயேசு கடவுள்.

கடவுளால் யாரையும் வெறுக்க முடியாது.

பாவிகளைத் தேடித்தான் வந்ததாக அவரே சொல்லியிருக்கிறார்.

வெளிவேடம் (hypocrisy) ஒரு பாவம்.

ஆகவே பாவிகள் பட்டியலில் பரிசேயரும் அடங்குவர்.

ஆக அவர்களையும் தேடித்தான் வந்தார்.


அவர்களையும் நேசித்தார் என்பதற்கு ஆதாரம் சிலுவையில் தொங்கும்போது தந்தையை நோக்கி செய்த ஜெபம்.

"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை."

இயேசு ஒப்பிற்காக செபிக்கவில்லை.

உண்மையிலேயே செபித்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம்தான்.

அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் மன்னிக்கப் படவேண்டுமென்பதுதான் இயேசுவின் சித்தம்.

அதே சித்தம்தான் தந்தைக்கும்.

தந்தையின் சித்தத்தை, அதாவது, தனது சித்தத்தை, நிறைவேற்றவே பூமிக்கு வந்தார்.

அதற்காகவே தன்னையே பலியாக்கினார்.

தன் சித்தத்தை தானே நிறைவேற்றாமல் இருப்பாரா?

நமக்கொரு பாடம் :

இயேசுவின் இடத்திலிருந்து நம்மை வழி நடத்துபவர்கள் நமது குருக்கள்.


அவர்கள் நமது குறைகளை சுட்டிக் காண்பிக்கும்போது, நாம் திருந்த வேண்டுமே தவிர,

அவர்கள் நம் மீது கோபமாக இருப்பதாக எண்ணி பிரிந்து போய்விடக் கூடாது.

நமது குருக்களிடம் இயேசுவைக் காண்போம்.

அவர்கள் நம்மைத் திருத்தும்போது திருந்துவோம்.

வெளிவேடத்தை விட்டொழிப்போம்.

உள்ளும் புறமும் பரிசுத்தமாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment