Tuesday, January 26, 2021

பழமையும், புதுமையும்.

பழமையும், புதுமையும்.



நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எப்படிப்பட்ட நிகழ்காலம்?

நவீனங்கள் நிறைந்த நிகழ்காலம்.

பழையன எல்லாம் ஒதுக்கப்பட தக்கவை என்று எண்ணுகின்ற நிகழ்காலம்.

எதிர்காலத்தை பற்றி கவலைப்படாத நிகழ்காலம்.

ஒழுக்க நெறிகளுக்கு அடங்கி போக விரும்பாத நிகழ்காலம்.

ஏன் ஒழுக்க நெறிகளுக்கு அடங்கி போக விரும்பாத நிகழ்காலம்?

ஒழுக்க நெறிககள் பழைய காலத்தில் வகுக்கப்பட்டவை.

 ஆகவே அவை நிகழ்காலத்திற்குப் பொருந்தாதவை என்ற எண்ணம் அநேகருடைய மனதில் முளைக்க ஆரம்பித்துவிட்டது.

"இப்படித்தான் நடக்க வேண்டும்" என்று கூறுபவை ஒழுக்க நெறிகள்.

"எப்படியும் நடக்கலாம்" என்று கூறுவது நவீனம்.

ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து பழகிய மக்களும்,

 அவற்றிற்கு கட்டுப்பட தேவையில்லை என்று எண்ணுகின்ற மக்களும் ஒன்றாக வாழவேண்டிய அவலம்தான் நிகழ்காலம்!

ஓடுகின்ற தண்ணீரோடு போகிறவர்கள் நிகழ்கால எண்ணம் உடையோர்.

 எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருப்பவர்கள் கடந்தகால எண்ணம் உடையோர்.

ஒரு புகைவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த மூவர் பேசிக்கொள்கிறார்கள்:

"சார் நீங்க எங்கே போகிறீர்கள்?"

"சென்னைக்கு."

"நீங்கள்?"

"திருவனந்தபுரத்திற்கு."

"உலகில் வசதிகள் எவ்வளவு பெருகிவிட்டன!

 எதிரெதிர் திசையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே புகை வண்டியில் பிரயாணம் செய்யக் கூடிய அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறி விட்டது!"

இன்றைய உலகில் நாம் இப்படித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நச்சுத்தன்மை வாய்ந்த, 
ஒழுக்க நெறிகளுக்கு விரோதமான,
இறைநம்பிக்கை அற்ற,
நிகழ்காலத்தில், 

பழையன விரும்பிகள் எதிர்நீச்சல் தான் போட வேண்டியிருக்கிறது.

நவீன உலகினருக்கு பழமை வாய்ந்த கத்தோலிக்க விதிமுறைகள் ஒத்துப் போவதில்லை.

2021 ஆண்டுகளாக கிறிஸ்துவின் போதனைகளை மாற்றமின்றி ஏற்று அனுசரித்து வரும் கத்தோலிக்கர்களின்
 உலகப் பார்வைக்கும்,

கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உலகப் பார்வைக்கும்,

பாரதூர வித்தியாசம் இருக்கிறது.


கிறிஸ்துவின் பார்வையில் உலகம் நமக்காக படைக்கப்பட்டது. 

நாம் உலகிற்காக படைக்கப்படவில்லை.

நாம் விண்ணக வாழ்விற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.

 விண்ணக வாழ்வை அடைய நாம் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி மட்டுமே இவ்வுலகம்.

நாம் இவ்வுலகில் வாழ்கிறோம், ஆனால் இவ்வுலகை சார்ந்தவர்கள் அல்ல.

  விண்ணக பேரின்பத்தை நோக்கி பயணிக்கிறோம்.

                 * * *
ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத உலகோர் உலகை எப்படி பார்க்கிறார்கள்?

உலகில் வாழவும் அதை ஆளவும் மட்டுமே அவர்கள் உலகிற்குள், வந்திருக்கிறார்கள். .

இவ்வுலகில் புகழை நிலைநாட்ட கூடிய அளவிற்கு வாழ வேண்டும்.

  எல்லோரும் இவ்வுலகின் மன்னர்கள்.

இவ்வுலகை சார்ந்தவர்கள் இவ்வுலகிலுள்ள இயற்கை வளங்களை எவ்வளவுக்கு எவ்வளவு பயன்படுத்துகிறார்களோ  


அவ்வளவுக்கு அவ்வளவு
 மகிழ்ச்சியாகவும் வசதிகளோடும் வாழலாம் என்று எண்ணுபவர்கள். அவர்களுக்கு விண்ணகத்தை பற்றி கவலை இல்லை.

இவ்வுலக இன்பங்களை நோக்கியே பயணிக்கிறார்கள். .
         * * *

ஆக, பேரின்பத்தை நோக்கி பயணிப்பவர்களும், சிற்றின்பத்தை நோக்கி பயணிப்பவர்களும் ஒரே உலகில் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது.

உலகமாகிய ஆற்றில் சிற்றின்பத்தை நாடி வேகமாக செல்லும் மக்கள் வெள்ளத்திற்கு இடையே 

பேரின்பத்தை நோக்கி செல்பவர்கள் எதிர்நீச்சல் போட வேண்டியருக்கிறது.

ஏனெனில் இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் உள்ளன.


கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மரணம் விண்ணகத்தின் வாசல்.

ஆகவே அது வரும்போது மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள்.

 ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மரணம்
சிற்றின்பத்தின் முடிவு.

ஆகவே அதை நினைத்து பயப்படுகிறார்கள்.

மரணத்தை கண்டு பயப்படுபவர்களும், மகிழ்ச்சி அடைபவர்களும் ஒரே உலகில் ஒன்றாக வாழ வேண்டி இருக்கிறது.

கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்கள் அவரால் அனுமதிக்கப்பட்ட துன்பங்களை மனதார ஏற்றுக் கொள்வார்கள்.
ஏனெனில் இவ்வுலகத் துன்பங்கள் மறுஉலகில் பேரின்பங்களாக மாறும்.


ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் துன்பங்களை கண்டு பயப்படுவார்கள். ஏனெனில் அவைகள் சிற்றின்பத்திற்கு எதிரானவை.

இரு வகையினரும் ஒன்றாகவே வாழ வேண்டியிருக்கிறது.

மாறாத இறைவனின் மாறாத கட்டளைகளைப் பின்பற்றி வாழ்பவர்களும்,

 மாறிக்கொண்டே இருக்கும் உலகின் மாறிக்கொண்டே இருக்கும் நெறிகளை பின்பற்றுபவர்களும் 

சேர்ந்து வாழ்வதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.

ஒரே அறையில் இரண்டு நண்பர்கள் சேர்ந்து தங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒருவர் Serials, games போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பாதவர். அவரது கடமை சார்ந்த செயல்களை மட்டும் செய்பவர். நிறைய வாசிப்பவர்.

அடுத்தவர் Serials, games போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டும் தனது பொழுதை போக்குவர்.

இப்படி எதிர் எதிர் குணங்கள் உள்ள இருவர் ஒன்றாக தங்குவதில் உள்ள நன்மை, 

பயனுள்ள காரியங்களை மட்டும் செய்பவரைப் பார்த்து காலப்போக்கில் பயனற்ற விதமாய் பொழுதை போக்குவர் திருந்த வாய்ப்பு இருக்கிறது.


அதிலுள்ள தீமை,

  பயன் அற்ற விதமாய், ஜாலியாய் பொழுதுபோக்குபவரைப் பார்த்து, 

அடுத்தவருக்கு  தானும் அதே போல மாற சோதனை ஏற்படவும் , அதில் விழவும் வாய்ப்பு இருக்கிறது.


அதாவது எதிர்நீச்சல் போடுபவர் ஆற்றோடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதை நாம் கண்கூடாகவே பார்த்திருக்கின்றோம்.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் நம்பிக்கை உள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்த்து மனந்திரும்பி கடவுளுக்காக வாழ்வதையும் பார்த்திருக்கிறோம்.

பக்தியோடு வாழ்பவர்கள் கூட  உலகத்தால் பாதிக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment