Sunday, January 3, 2021

"வந்து பாருங்கள்" (அரு.1:38)

http://lrdselvam.blogspot.com/2021/01/138.html



"வந்து பாருங்கள்" (அரு.1:38)

இராயப்பரின் சகோதரரான பெலவேந்திரர் ஸ்நாபக அருளப்பரின் சீடர்.

அவர் மற்றொரு சீடருடன் அருளப்பருடன் இருந்த போது,
இயேசு அந்தப் பக்கம் வர நேர்ந்தது.

அருளப்பர் இயேசுவை உற்று நோக்கி,

"இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.


அதைக் கேட்ட பெலவேந்திரரும், மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு,

 "என்ன வேண்டும் ?" என்று கேட்டார். 

அவர்கள், "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்றனர்

இயேசு அவர்களிடம்,

"வந்து பாருங்கள்" என்றார்.

அருளப்பர் மெசியாவிற்கு முன்னோடி என்று பெலவேந்திரருக்குத் தெரியும்.

ஆகவே இயேசுவின் சீடராகும் பொருட்டே அவர் இயேசுவைப் பின்தொடர்ந்தார்.

இயேசு அவரிடம்,

"என்ன வேண்டும் ?" என்று கேட்டபோது, பெலவேந்திரர் தன்னைப் பற்றி எதுவும் கூறாமல்

இயேசுவைப் பற்றியே விசாரிக்கிறார்.

நம்முடைய அனுபவத்தோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நாம் எதாவது பெரிய மனிதரைப் பார்க்கச் சென்றால் முதலில் நம்மைப் பற்றிதான் கூறுவோம்.

அப்புறம் பார்க்கச் சென்றதின் நோக்கத்தைக் கூறுவோம்.

அவரைப்பற்றி அவரிடமே விசாரிக்க மாட்டோம்.

ஆனால் பெலவேந்திரர் வித்தியாசமாக செயல்படுகிறார்.

அவரது நோக்கம் இயேசுவை அறிவது தான். தன்னை பற்றி அவரிடம் தெரிவிப்பது அல்ல.

குருவை நன்கு அறிந்திருந்தால் தான் அவர் வழி சரியாக நடந்து அவரது உண்மையாக சீடராக வாழ முடியும்.

குருவை பிரதிபலிப்பவன்தான் உண்மையான சீடன்.

அவரை அறியாமல் பிரதிபலிப்பது எப்படி முடியும்?

அவரது அணுகுமுறை மிக சரியானது. 

"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று அவர் கேட்டது மிகவும் பொருள் பொதிந்த கேள்வி.

தனது குருவை வாய் மொழி வழி அல்ல, நேரடியாகவே அறிய விரும்புகிறார்.

குருவிடம் சென்று,

" நீங்கள் எப்படிபட்டவர்கள்?" என்று நேரடியாக கேட்க முடியாது.

அவரோடு தங்கினால் அவரை நேரடியாக அறிய முடியும்.

அவரைப் பற்றி அல்ல, அவரை.

'அவரைப் பற்றி' அறிந்தால் அவரைப் பற்றிய சில புள்ளி விவரங்கள் கிடைக்கும்.

 ஆனால் 'அவரை' அறிந்தால் அவரது அனுபவம் கிடைக்கும்.

 இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் இயேசுவைத் தெரிந்து கொள்வதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

இயேசுவைப் பற்றி தெரியும் என்றால் அவரது வாழ்க்கை வரலாறு தெரியும் என்று அர்த்தம்.

இயேசுவை தெரியும் என்றால் இயேசு எனது வாழ்க்கையோடு ஒன்றித்து விட்டார் என்று அர்த்தம்.

சீடனுக்கு குருவை தெரிய வேண்டும், அவரை தெரிந்து கொள்வதற்காக அவரோடு தங்க வேண்டும், அவரது விருப்பங்களை நமது விருப்பங்கள் மாற்ற வேண்டும். 

அதற்காகத்தான், பெலவேந்திரர்

 "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்.

இயேசு அவரது கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை.

"வந்து பாருங்கள்" என்று மட்டும் கூறுகிறார்.

இயேசுவின் பதிலிலும் பொருள் பொதிந்திருக்கிறது.

நமது உலக அனுபவத்தில் 

நாம் இருக்கும் இடத்தை சொன்னால் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் நம்மை வந்து பார்ப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இயேசு "வந்து பாருங்கள்" என்று சொன்னதில் 

"என்னுடன் வாருங்கள், என்னுடன் தங்குங்கள், என்னை அறிந்து கொள்ளுங்கள், என்னைப் பின்பற்றுங்கள்"

முதலிய அழைப்புகளும் அடங்கி இருக்கின்றன.

பெலவேந்திரரும் இயேசுவுடன் சென்றார், 

இயேசுவுடன் தங்கினார்,

 இயேசுவை நன்கு புரிந்துகொண்டார்,

 அதுமட்டுமல்ல 

தான் மெசியாவை கண்டதை தன் சகோதரரிடம் தெரிவிக்கவும் சென்றார்.


நாம் இறைவாக்கை வாசிப்பது வெறுமனே வாசிப்பதற்காக மட்டும் அல்ல.

பொழுது போக்கிற்காகவும் அல்ல.

விஷய அறிவுக்காக மட்டும் அல்ல.

இறைவாக்கை நமது வாழ்வாக மாற்றிக் கொள்வதற்காக.

நாம் உண்ணும் உணவு ஜீரணித்து, நமது இரத்தத்தோடும் தசைகளோடும் கலந்து, நமது உடலாக மாறினால்தான் உணவினால் நமக்கு பயன்.


அதேபோல இறைவாக்கும், நமது வாழ்வும் ஒன்றித்தால்தான் இறைவார்த்தையை வாசிப்பது பயனுள்ளது.


நாமும் இயேசுவை அறிய வேண்டும்.

இயேசுவை அறிய வேண்டுமென்றால் இயேசுவிடம் தான் செல்ல வேண்டும்.

இயேசுவிடம் செல்வது எப்படி?

அதற்கான வழிவகைகளை அவரே ஏற்பாடு செய்திருக்கிறார்.

தான் விண்ணகம் செல்லும் முன் தன் சீடர்களை நோக்கி "உலகெங்கும் சென்று நற்செய்தியை" அறிவியுங்கள் எங்கு கட்டளை இட்டார்.

இயேசுதான் விண்ணிலிருந்து நமக்காக வந்த நற்செய்தி.

தனது சீடர்களுக்கு மூன்று ஆண்டுகள் அவர் பயிற்சி கொடுத்ததே அவரை உலகெங்கும் சென்று அறிவிப்பதற்காகத்தான்.

இன்று நமக்கு இயேசுவை அறிவித்துக் கொண்டிருக்கும் குருக்கள் இயேசுவின் பிரதிநிதிகளே.

இயேசுவையும், அவர் உலகிற்கு அளிக்க வந்த பாவமன்னிப்பையும் நமக்கு அளிப்பதற்கென்றே இயேசுவினால் நம்மிடம் அனுப்பப்பட்டவர்கள்.

  நம்மில் எத்தனை பேர் பாவமன்னிப்பு பெறுவதற்கென்றே குருக்களை அணுகுகிறோம்?


ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் இலவசமாக தரப்படும் என்று அரசு அறிவித்து விட்டால் அங்கு அதை பெறுவதற்காக கூடும் கூட்டம் மைல் கணக்கில் நீள்கிறது .


ஜவுளி கடைகளில் ஆடி கழிவு அறிவித்து விட்டால் அங்கு ஜனங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

"நான்கு சோப்பு வாங்கினால் ஒரு சோப்பு இலவசம்" என்று ஒரு கடையில் அறிவிப்பு தொங்கினால்,

 ஒரு சோப்பை இலவசமாக பெறுவதற்காக நான்கு சோப்பிற்கு காசு கொடுக்க தயாராக இருக்கும் கூட்டம் கடையையே முற்றுகையிடுகிறது.

ஆனால் இலவசமாக பாவங்களை மன்னிக்க குருக்கள் தயாராக இருக்கிறார்கள். நாட்டில் பாவிகளே இல்லை!!!

பங்கு குருக்களில் முக்கிய பணியே பங்கு மக்களின் ஆன்மீக காரியங்களில் அவர்களை வழி நடத்துவதுதான்.

  நாம் நமது ஆன்மீக காரியங்களில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் நமதுஆன்மீக வழிகாட்டிகளான பங்கு குருக்களின் ஆலோசனை உதவியை நாடவேண்டும்.

இயேசுவே அவர்கள் மூலமாக நமக்கு ஆலோசனைகள் நல்குகிறார்.

"வந்து என்னை பாருங்கள்" என்று கூறி பங்கு குருக்களின் வடிவில் நம்மை இயேசுவே அழைக்கிறார்.

அழைப்பினை ஏற்று இயேசுவை சந்தித்து அவரது வழிகாட்டுதலின்படி விண்ணக பயணத்தை தொடர்வோம்.


அடுத்து இயேசு நம்மை அழைப்பது பைபிள் மூலமாக.

பைபிள் வழியாக இயேசு நம்மோடு பேசுகின்றார்.

பைபிளை ஒவ்வொரு நாளும் வாசித்தால் மட்டும் போதாது.

 இறைச் செய்தியை புரிந்துகொண்டு அதை நமது வாழ்வாக மாற்ற வேண்டும்.

 இறைச் செய்தியை வாழ்வதன் மூலம் இயேசுவையே வாழ்கிறோம்.


தனது பிரதிநிதிகள் மூலமாகவும்,, பைபிள் மூலமாகவும் நம்மோடு பேசுகின்ற இயேசு நம்மோடு நேரடியாக பேசுவது திவ்ய நற்கருணை மூலமாக. 

திவ்ய நற்கருணையை உட்கொள்ளும் போது நாம் இயேசுவையே உணவாக உட்கொள்கிறோம்.


கன்னி மரியின் உதரத்தில் உதித்த அதே இயேசு நற்கருணையாக நம்மிடம் வருகிறார்.

அன்று பெலவேந்திரர் இயேசுவோடு தங்கியது போல இன்று இயேசு நம்மில் தங்குகிறார்.

 அவர் நற்கருணையாக நம்முள் வந்து தங்கும்போது நமது சுக துக்கங்களை அவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருப்பலியின் போது மட்டுமல்ல, 24 மணி நேரமும் நமக்காக கோவிலில் திவ்ய நற்கருணைப் பேழையில் காத்துக்கொண்டிருக்கிறார்.

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்குச் சென்று பேழையில் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் நற்கருணை நாதரோடு உரவாட வேண்டும்.

எதுவுமே பேசாமல் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும், நமக்கு மன அமைதி கிட்டும். 

திவ்ய நற்கருணைப் பேழையில் இருந்துகொண்டு நம்மை நோக்கி,

 "என்னிடம் வந்து என்னைப் பாருங்கள். என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,"

 என்று நம்மை இயேசு அழைக்கிறார்.

கோவிலுக்குப் போக நேரம் கிடைக்காவிட்டாலும் கூட

 நமது உள்ளம் என்னும் கோவிலில் அமர்ந்திருக்கும் அவரோடு நேரம் கிடைக்கும்போதெல்லாம் உறவாட வேண்டும். 

வேலை இல்லாது இருக்கும்போது எதையெல்லாமோ கற்பனை செய்து நேரத்தை வீணாக்குவதை விட்டு விட்டு இயேசுவோடு உறவாடி பயன்பெறுவோம்.

பெலவேந்திரரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது:

1. இயேசுவை அறிய ஆவல் கொள்ள வேண்டும்.

2. அவரைப் பின்பற்ற வேண்டும்.

3. இயேசுவுடன் தங்கி அவரை அறிய வேண்டும்.

4. இயேசுவை வாழ வேண்டும்.


அறிவோம், 

வாழ்வோம் நிலைவாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment