Friday, January 15, 2021

புத்தியைக் கொஞ்சம் பயன்படுத்துவோம்.

புத்தியைக் கொஞ்சம் பயன்படுத்துவோம்.



திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு இயேசுவிடம் வந்தனர்.


கூட்ட மிகுதியால் வாயில் வழியே வர முடியவில்லை.

  அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு

 திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

அங்கே இருந்த மறைநூல் அறிஞர்களுக்கு இயேசு சொன்னது பிடிக்கவில்லை.

கடவுள் ஒருவருக்குதான் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆகவே இயேசு சொன்னதைத் தேவ தூசணம் என்று கருதினார்கள்.

ஆனால் இயேசு

"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"


 திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.


12 என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான்.

மறைநூல் அறிஞர்களுக்கு 
தான் கடவுள் என்பதை உணர்த்துவதற்காக,


தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்று கூறி,

 அதை நிரூபிக்கும் வகையில் திமிர்வாதக்காரனை முற்றிலும் குணமாக்குகிறார். 


புத்தி உள்ள எவரும் புரிந்திருக்க வேண்டும் இயேசு கடவுள் என்று.

ஆனால் மறைநூல் அறிஞர்கள் இதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

புரிந்து கொண்டிருந்தால் இயேசுவின் சீடர்களாக மாறியிருப்பார்கள்.

சரி, அவர்கள் போகட்டும், நாம் எப்படி?

கடவுள் எண்ணிறந்த உயிரினங்களைப் படைத்தார்.

அவற்றுள் மனிதனை மட்டுமே புத்தி உள்ளவனாகப் படைத்தார்.

புத்தி சிந்திப்பதற்காக.

நாமும் சிந்திக்கிறோம். ஆனால் எதை சிந்திக்க வேண்டுமோ அதை சிந்திப்பதில்லை.

ஒரு நாள் ஆசிரியர் மாணவர்களிடம் "நான் கேட்கும் கேள்விக்கு உடனே பதில் சொல்ல வேண்டும் " என்று கூறிவிட்டு ஒரு மாணவனை எழுப்பி அவனிடம் ,

"செங்கல் துண்டை எதற்கு பயன்படுத்தலாம்?"
என்று கேட்டார்.

அவன் உடனே,

"நாயை எறிந்து விரட்டப் பயன்படுத்தலாம்."

எல்லா மாணவர்களும் சிரித்தார்கள்.

 "ஏன் சிரிக்கிறீர்கள்? அவனது அனுபவம் பேசுகிறது."

நமது ஆன்மீக அனுபவத்தில் நாம் நமது புத்தியை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வரும் கடவுள், அவரது பராமரிப்பை நாம் உணர்ந்து செயல்படுவதற்காக பலவித வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்.

அவ்வழிமுறைகளை நாம் கண்டறிந்து செயல்படவே நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறார்.

முதலில் நமது புத்திக்குத் தெளிவைத் தரும்படி அவரிடம் மன்றாட வேண்டும்.

எதையும் அவரிடம் கேட்டு பெற வேண்டும் என்ற நிலையில் நம்மை வைத்திருப்பது 

நாம் எப்போதும் அவரின் உறவில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நாம் நடக்கும்போது எடுத்து வைக்கும் ஏதாவது ஒரு அடியை (Step) மாற்றி எடுத்து வைத்து விட்டால் நாம் போகும் திசையே மாறி விடும்.

வெகுதூரம் நடந்த பின்பு தான் நாம் தவறான திசையை நோக்கி நடப்பதை கண்டு பிடிப்போம்.

இதே தவறு நமது ஆன்மீக பயணத்தில் நடந்தால் விண்ணகத்தைக் கோட்டை விட்டு விட நேரிடும்.

ஆகவேதான் நம்முடனே நடைபோடும் நம் ஆண்டவர் நமது அடியை சரியாக எடுத்து வைக்க பக்க துணையாக இருப்பார்.

தவறான திசைக்கு திரும்பும்போது நம் முன்னால் குறுக்கே நின்று வழிமறித்து நம்மை திருப்பி விடுவார்.

ஒரு உதாரணத்திற்கு:

நல்ல வருமானம் வரும் ஒரு வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறோம்.

வேலையின் உட்பகுதி நாம் விண்ணப்பிக்கும்போது நமக்கு தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் நம்முடன் வரும் இயேசுவுக்கு தெரியும்,  அந்த வேலையில் பணம் சம்பாதிக்க கவர்ச்சிகரமான குறுக்குவழியில் நிறைய இருக்கின்றன என்று.

Interview வுக்குப் போகுமுன் திவ்ய நற்கருணை நாதரைச் சந்தித்து,

"ஆண்டவரே நான் ஒரு முக்கியமான வேலைக்கு Interviewவுக்குச் செல்கிறேன். தயவு செய்து எனக்கு வெற்றி கிடைக்க உதவி செய்யுங்கள்."

என்று வேண்டி விட்டு செல்கிறோம்.

ஆனால் Interview வில் நமக்கு தோல்வி ஏற்படுகிறது.

இப்போது புத்தி சிந்தித்து தோல்விக்கான காரணத்தை கண்டு பிடிக்க முயலும்.

இரண்டு வகையான சிந்தனைகள் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

ஒன்று, "நாம் இயேசுவிடம் உதவி கேட்டோம், ஆனால் அவர் நமக்கு உதவவில்லை. ஆகவே இனி அவரை நம்பி பயனில்லை. வேறு வழியில் வேலையை தேடவேண்டும்."

என்று அதே வேலையை பெற குறுக்கு வழியைத் தேடுவோம்.

அடுத்தது,  நமது விசுவாசத்தின் அடிப்படையில்  சிந்திப்பது. 

""நாம் இயேசுவிடம் உதவி கேட்டோம், ஆனால் அவர் நமக்கு உதவவில்லை. ஏன் உதவவில்லை?

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன நமது ஆண்டவர் கொடுக்கவில்லை என்றால் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.

நாம் உதவி கேட்டோம், 

 இப்பொழுது நம்மைத் தோல்வியடையச் செய்ததே நமக்கு உதவியாகத்தான் இருக்கும்.

 அதாவது இதில் நாம் வெற்றி பெற்றிருந்தால் அந்த வேலையில் நமது ஆன்மாவிற்கு ஏதாவது ஆபத்து இருக்கும்.

 ஆகவேதான் இயேசுவே இந்த வேலையை நமக்கு கிடைக்காதபடி செய்திருக்கிறார்.

 இயேசுவே உமக்கு நன்றி.
 நீரே எனக்கு வழிகாட்டும்."

என்று சிந்தித்து தோல்வியை வெற்றியாக கருதுவது.

முந்தியது உலகைச் சார்ந்த சிந்தனை.

அதற்கு ஆன்மாவைப் பற்றியோ, விண்ணகத்தைப் பற்றியோ கவலை இல்லை.

கடவுளைக்கூட இவ்வுலக நன்மைக்குதான் பயன்படுத்த முயலும்.

பிந்தியது விண் சார்ந்த சிந்தனை. அது கடவுளையும், ஆன்மாவையும் சார்ந்தே சிந்திக்கும்.

நம் வாழ்வில் என்ன நடந்தாலும் இறைவனின் பராமரிப்பினால் நமது நன்மைக்கே என்று சிந்திக்கும்.

இவ்வுலகில் நாம் சந்திக்கும் வெற்றிகளோ, தோல்விகளோ எல்லாம் ஆன்மாவைப் பொறுத்த மட்டில் வெற்றிகளே.

நாம் நினைப்பது நடக்காவிட்டால் இறைவன் நினைப்பது நடந்திருப்பதாக அர்த்தம்.

இறைவன் நடப்பது நடந்தால் அது ஆன்மீக நன்மைக்கே என்று அர்த்தம்.

ஆன்மீக நன்மைக்காக நடப்பதை நாம் நன்றியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

அதனால்தான்

 " என்ன நடந்தாலும் நன்றி கூறுங்கள்"

என்று இறைவாக்கு கூறுகிறது.

அன்னை மரியாள் தன்னை முழுவதும் இறைப்பணிக்கு அர்ப்பணித்தது போல,

நாமும் நமது சிந்தனை, சொல், செயல் அத்தனையையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து விட்டால்

இறைவனைச் சார்ந்தே சிந்திப்போம்,

இறைவனைச் சார்ந்தே பேசுவோம்,

இறைவனைச் சார்ந்தே செயல்படுவோம்.

இறுதியில் இறைவனோடு மட்டுமே இணைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment