Thursday, January 21, 2021

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா?"(மாற்கு.3:4)

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா?"
(மாற்கு.3:4)

 "ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."

"அவ்வேழாம் நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்."
(ஆதி.2: 2,3)

என்ற இறை வாக்குகள் நமக்கு தரும் இறை செய்தி:

 ஓய்வு நாள் இறைவனுக்கு உரிய பரிசுத்தமான நாள்.

ஓய்வு நாளின் நோக்கம் நாம்   இளைப்பாறுவது அல்ல.

அது முற்றிலும் இறைவனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.


தினமும் சாப்பிடுகிறோம், ஆனால் திருவிழா காலங்களில் சாப்பிடுவதற்கும், தினமும் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா,


அதேபோல,

எல்லா நாட்களையும் ஆண்டவருக்காகத்தான் வாழ்கிறோம்.

எல்லா நாட்களிலும் செபிக்கிறோம்.

எல்லா நாட்களிலும் பைபிள் வாசிக்கிறோம்.

அதோடு வாழ்வதற்கு வருமானம் தேடி ஆற்றும் கடமைகளையும் நிறைவேற்றுகிறோம்.

மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கூடம் போகிறார்கள்.

வியாபாரி கடைக்குப் போகிறான்.
'
விவசாயி வயலுக்குப் போகிறான்.

அரசியல்வாதி கட்சிக் கூட்டங்களுக்குப் போகிறான்.

etc. etc.

ஆனால், ஓய்வு நாளில் வருமானம் தேடி ஆற்றும் கடமைகளை பொட்டலம் கட்டி பரணில் போட்டுவிட்டு, பக்தி முயற்சிகளை மட்டும் செய்ய வேண்டும்.

பைபிள் வாசித்தல், தியானித்தல், திருப்பலிக்குச் செல்லுதல் ஆகியவற்றோடு,

அந்த வாரத்தில் யாரோடாவது சமாதானக் குறைவு ஏற்பட்டிருந்தால் வலிய சென்று சமாதானம் செய்து கொள்ளுதல்,

தேவைப்படுவோருக்கு உதவுதல்,

நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல்,

நற்செய்தி அறிவித்தல்,

கோவிற்பணி,

ஞானவாசகம்

போன்ற முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிகளை மட்டும் செய்ய வேண்டும்.

பெற்றோர் அன்று பிள்ளைகளிடம் ஞான காரியங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.

நாம் வழக்கமாக செய்வது என்ன?

திருப்பலி முடிந்தவுடன் கசாப்புக் கடைக்குப் போய் mutton வாங்கி சமையலுக்குக் கொடுத்துவிட்டு,

ஹாயா உட்கார்ந்து

TV. பார்த்தல்,

தியேட்டருக்குப் பகல் காட்சிக்கு செல்லுதல்,

Smart phone ஐ நோண்டுதல்,

 அரட்டை அடைத்தல்,

தூங்குதல்

போன்ற ஆன்மீகத்திற்குச் சம்பந்தம் இல்லாத, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மட்டும் நேரத்தை வீணாக்குகிறோம், அதாவது, பயன்படுத்துவது இல்லை.

இப்பொழுதெல்லாம் திருமணங்கள் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கின்றன.

ஆண்டவருக்காக செலவழிக்க வேண்டிய நாளை

 விருந்து உண்ணவும், 

வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், 

நண்பர்களோடு அரட்டை அடிக்கவும் செலவழிக்கிறோம்.  

அதுவும் கிறிஸ்மஸ், புத்தாண்டு, ஈஸ்டர் போன்ற திருநாட்களில் நடுச் சாம பூசைக்குப் போனால், அன்று பகல் முழுவதும் தூங்குவோம், சாப்பிடும் நேரம் தவிர.

நடுச் சாம பூசைக்குப் போய் விட்டு

பகல் முழுவதும் தூங்கினால்,

நடுச் சாம பூசைக்குச் சென்றதில் அர்த்தமே இல்லை.

தூங்குவாற்காகவா இயேசு பிறந்தார்?

சாப்பிடுவதற்காக மட்டுமா இயேசு உயிர்த்தார்?

சுருக்கத்தில்,
ஆண்டவருக்கான ஓய்வுநாளை நமக்கான ஓய்வுநாளாக, பொழுது போக்கு நாளாக ஆக்கிக் கொள்கிறோம்.

கேட்டால், "வாரத்தில் ஆறு நாட்களும் உழைத்து விட்டு, ஒரு நாள் ஓய்வு எடுத்தால்தானே அடுத்த ஆறு நாளும் உழைக்க முடியும்!" என்போம்.

பைபிளில் 

"ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்." 

என்று போட்டிருப்பது, அன்று நாமும் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு,

அவருக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற செய்தியை நமக்கு அறிவிப்பதற்காகத்தான்.

உண்மையில் கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.

அவர் ஒவ்வொரு வினாடியும் 
தான் படைத்தவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கடவுள் ஓய்வே எடுக்காமல் அவரால் படைக்கப்பட்ட நமக்கு நன்மையை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்.

நாம் ஓய்வு நாளை மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Sundays must be utilised for doing good works.

பரிசேயர்கள் ஓய்வு நாளில் வேலை செய்ய கூடாது என்பதில் மட்டும் குறியாக இருந்தார்களே தவிர நன்மை செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஒரு நாள் இயேசு செபக்கூடத்திற்கு வந்தபோது அங்கே சூம்பிய கையன் ஒருவன் இருப்பதைப் பார்த்தார்.


பரிசேயர்கள் அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வுநாளில் குணமாக்குவாராவென்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அவர்கள் முன்னாலேயே சூம்பிய கையனைக் குணமாக்கினார்.

இதனால் கோபம் அடைந்த 
பரிசேயர்கள் வெளியே போய், ஏரோதியரோடு சேர்ந்து 

அவரை எப்படித் தொலைக்கலாமென்று அவருக்கெதிராக உடனே ஆலோசனை செய்தனர்.

ஆண்டவர் ஓய்வுநாளில் ஒரு நல்ல காரியம் செய்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டினார்கள்.

ஓய்வு நாளுக்கு ஆண்டவரே அவர்தான்.

அவரால் நல்லது மட்டுமே செய்ய முடியும்.

நாம் யாருடைய பக்கம்? 

நன்மை செய்த இயேசுவின் பக்கமா?

நன்மை செய்வது பாவம் எனக் கருதிய பரிசேயர்கள் பக்கமா?

நாம் ஓய்வுநாளில் பிறர் பணி எதுவும் செய்யாமல் ஓய்வு மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் 

நாம் பரிசேயர்கள் பக்கமே நிற்கிறோம்.

பரிசேயர்கள் ஓய்வுநாளில்  நன்மை செய்வதைப் பற்றி அக்கரை காட்டவில்லை.

நன்மை செய்த இயேசுவையும்  விரும்பவில்லை.

அதாவது இயேசுவின் செயல்பாடுகளில் குற்றம் காண்பவர்களாக மட்டுமே இருந்தார்கள்.

ஓய்வுநாளை ஆண்டவருக்காக செலவழிக்காதவன் அவருக்கு எதிராக செலவழிக்கிறான்.

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."
(மத்.12:30)

ஓய்வுநாளில் ஆண்டவரோடு மட்டுமே நாம் இருக்க வேண்டும்

 ஆண்டவரோடு இல்லாவிட்டால் அவருக்கு எதிராக இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

ஆன்மீக வாழ்வில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

 முன்னேறாதவன் பின்னால் செல்கிறான்.

ஆண்டவர் ஓய்வு நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

நாமும் பரிசுத்தத்தனத்தில் வளர அதை பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment