Friday, January 8, 2021

"அன்பு கடவுளிடமிருந்து வருகிறது:" "..Love is of God."(1அரு. 4:7)

http://lrdselvam.blogspot.com/2021/01/love-is-of-god1-47.html



"அன்பு கடவுளிடமிருந்து வருகிறது:" 
"..Love is of God."
(1அரு. 4:7)



உலகிலேயே மிகவும் நல்ல வார்த்தை 'அன்பு.' (Love)

உலகிலேயே மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையும்,

'அன்பு.' (Love) தான்.

நாம் சரியாகச் சொன்னாலும், தவறாகப் புரிந்து கொள்ளப் படக்கூடிய வார்த்தையும் 'அன்பு.' (Love) தான்.

"You shall love your neighbour as yourself."
"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"
(மாற்கு. 12:31)

இது இறைவனின் கட்டளை.

உண்மையிலேயே நேர்மையான உள்ளத்தோடு ஒரு 16 வயது பெண்ணைப் பார்த்து,

"I love you." என்று சொல்லுங்கள்.

அவள் எப்படி எதிர்வினையாற்றுகிறாள் (reacts)
என்று பாருங்கள்.

அவளது புரிதல் தெரியும்.

அவள் செருப்பு உங்கள் கன்னத்தில் இருக்கும்!

அவளும் நல்லவள்தான்.
நீங்களும் நல்லவர்தான்.
வார்த்தையும் நல்ல வார்த்தைதான்.

ஆனால் எதிர்வினை (reaction)
நல்லாயில்லையே.

ஏன்?

"அப்போது கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."


கடவுளால் படைக்கப்பட்ட எல்லாமே மிகவும் நன்றாகத்தான் இருந்தன.

ஆனால் 

 கடைசியாக நல்லவிதமாக படைக்கப்பட்ட மனிதன் 

எந்த அளவுக்கு அவற்றை கெடுத்து வைத்திருக்கிறான் என்று இன்றைய உலகைப் பார்த்தாலே புரியும்.

தானும் கெட்டு தனது இருப்பிடத்தையும் கெடுத்து விட்டான் மனிதன்.

அன்பு (Love) என்ற சொல்லையும் கெடுத்தவன் மனிதன்தான்!

கடவுள் அன்பு மயமானவர்.
God is love.

அவர் தான் நல்ல விதமாக படைத்த மனிதனுடன் தனது பண்புகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்.

இதனால் மனிதன் இறைவனின் சாயலை பெற்றான்.

 அவனோடு பகிர்ந்துகொண்ட மிகவும் முக்கியமான பண்பு அன்பு.

கடவுள் நம்முடன் பகிர்ந்து கொண்ட அன்பு தன்னலமற்ற அன்பு.
 

கடவுள் இயல்பிலேயே அன்பு மயமானவர்.

அவரது அன்பு நிறைவானது.

நம்மைப் பொறுத்த மட்டில் நாம் யாரையாவது அன்பு செய்து,

 அவர் பதில் அன்பு செய்யாவிட்டால் நமக்கு அது ஒரு குறை.

பிள்ளைகளால் அன்பு செய்யப்படாமல் பெற்றோர் படுகிற பாட்டையும்,

 கணவனால் அன்பு செய்ய படாமல் மனைவி படும் பாட்டையும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

ஆனால் இறைவனது அன்பு தன்னிலேயே நிறைவானது.

அவர் நம்மை மிகவும் அன்பு செய்கிறார்.

நாம் பதிலுக்கு அவரை அன்பு செய்தால் அதனால் பயன் பெறப் போவது நாம் மட்டுமே, இறைவன் அல்ல.

 ஏனெனில் அவர் ஏற்கனவே நிறைவானவர்.

 நிறைவை இன்னும் அதிகப்படுத்த முடியாது.

 தன் நலன் கருதி நமது அன்பை அவர் எதிர்பார்க்கவில்லை.

 நமது நலன் கருதியே நமது அன்பை அவர் எதிர்பார்க்கிறார்.


மனுக்குலம் முழுவதும் விண்ணகத்தை இழந்துவிட்டாலும் இறைவனுக்கு இழப்பு ஏதும் இல்லை.


நம் மீது கொண்ட அன்பின் காரணமாக நம்மை மீட்பதற்காக இறைவன் மனிதனாக பிறந்து பாடுபட்டு மரித்ததால் இறைவனுக்கு பயன் ஏதும் இல்லை.

தன் பயன் கருதாது நம்மை அன்பு செய்வதால் தான் நாம் இறைவனது அன்பு தன்னலம் அற்றது என்கிறோம்.

நாம் அன்பு செய்யும் நபர் பதிலுக்கு நம்மை அன்பு செய்யாவிட்டால் நாம் அவரை அன்பு செய்வதை நிறுத்திவிட வாய்ப்பு இருக்கிறது.


 ஆனால் நம்மை இறைவன் அன்பு செய்யும் போது, நாம் அவருக்கு பதில் அன்பு செய்யாவிட்டாலும் நம்மீது அவர் கொண்டுள்ள அன்பு இம்மி கூட குறையாது.

 ஆகவேதான் அவரை மாறாதவர் என்கிறோம்.

சாத்தானைக்கூட, இறைவன் இன்னும் அன்பு செய்கிறார்.

 ஏனெனில் அன்பின் காரணமாக படைத்த லூசிபர் சாத்தானாக மாறிவிட்டாலும்,

 கடவுள் அன்பு மாறாத கடவுளாகவே இருக்கிறார்.


 ஆகவேதான் விண்ணகத்தில் உள்ளவர்களை மட்டுமல்ல நரகத்தில் உள்ளவர்களையும் இறைவன் அன்பு செய்கிறார்.

நாம் பாவம் செய்யும்போது இறைவனை அன்பு செய்ய மறுக்கிறோம்.

 நாம் அன்பு செய்ய மறுக்கும் போதும்,

 அவர் தொடர்ந்து நம்மை அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்.

நமது நலன்கருதி நம்மை காப்பாற்ற விரும்பிய கடவுள்

 நமக்காக,

 அவருக்காக அல்ல,

 நமக்காக மனிதனாகி பாடுபட்டு மரித்து,

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார். 


இந்த தன்னலமற்ற அன்பைத்தான் இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஆனால் இறைவன் பகிர்ந்து கொண்ட அன்பை நாம் நமது சுய நலத்திற்காக நமது இஷ்டம் போல் சிதைத்து விட்டோம்.

நாம் இப்போது மற்றவர்களை அன்பு செய்வது அவர்களது நலனுக்காக அல்ல, நமது நலனுக்காக.

இறைவனை இறைவன் என்பதற்காக அன்பு செய்ய வேண்டும்.

 நமது அயலானை நமது சகோதரன் என்பதற்காக அன்பு செய்ய வேண்டும்.

நமது நன்மைக்காக மற்றவர்களை அன்பு செய்யும் போதுதான் நாம் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.

நமது தன்னலம் கலந்த அன்பிற்கு மற்றொரு அடிப்படை காரணமும் இருக்கிறது.

அனேக சமயங்களில் அன்பு என்பது எது என்பதையே நாம் புரிந்து கொள்வதில்லை,

உண்மையான அன்பு நமது புத்தியில் (intellect) இருந்து புறப்பட்டு இருதயத்திற்கு வந்து அங்கிருந்து வெளிப்பட வேண்டும்.

மிருகங்களுக்கு ஆன்மா இல்லை. ஆகவே ஆன்மாவிற்கு சொந்தமான புத்தி அவற்றுக்கு இல்லை. மிருகங்களால் அன்பு செய்ய முடியாது.

 இறைவன் அவைகளுக்கு அறிவித்திருக்கும் உள் உணர்வினால் (instinct) அவை இயங்குகின்றன. 

சிந்தித்து இயங்குவதற்கான புத்தி அவைகளுக்கு இல்லை.

இரண்டு ஆடுகளை ஒன்றாக வளர்த்து, ஒன்று அருகில் வைத்து மற்றதை வெட்டினாலும், மற்றது பார்த்துக்கொண்டுதான் இருக்குமேயொழிய வளர்த்தவன் மேல் பாயாது,

எனெனில் அதற்கு புத்தி இல்லை.

புத்தியுள்ள மனிதன் கூட அநேக சமயங்களில் கவர்ச்சியை அன்பு என்று நினைத்து ஏமாந்து விடுகிறான்.

கவர்ச்சியால் ஏமாந்து விடுகிறவரிடம் தன்னலம் மட்டுமே இருக்கிறது.

காதல் என்பது உண்மையான அன்பு.

ஆனால் நமது இளைஞர்கள் அநேக சமயங்களில் அழகின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அதை காதல் என்று எண்ணி தவறாக எடை போடுகிறார்கள்.

கவர்ச்சி அன்பு அல்ல.

அதை அன்பு என்று நம்மவர்கள் நினைப்பதால் தான் உண்மையான அன்புக்கு கெட்ட பெயர்.

காதலித்து திருமணம் முடிப்பவர்களின் வாழ்க்கை

 தோல்வியில் முடிவது கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்ததனால்தான்.

ஏமாறுவது அன்பினால் அல்ல, கவர்ச்சியால்.

உண்மையான அன்பு வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும்.

உண்மையான அன்பு கவர்ச்சியால் ஏற்படும் நெருக்கம் அல்ல.

 நேர்மையான புரிதலால் ஏற்படும் ஆன்மாக்களின் நெருக்கம்.

உண்மையான அன்பு உள்ளவன் தன் நலத்தை அல்ல,

 தன்னால் நேசிக்க படுகின்றவர்களின் நலத்தை மட்டுமே நாடுவான்.

நம்மை ஆழமாக நேசித்த இயேசு எவ்வாறு நமது ஆன்மாக்களின் மீட்பிற்காக தன்னையே தியாகம் செய்தார் என்பது நமக்குத் தெரியும்.

அதேபோன்றுதான் வேத சாட்சிகளும் இறைவன் மீது கொண்டுள்ள அன்பிற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள்.


இயேசுவின் சீடர்களாகிய நாம் அவருக்காக நம்முடைய உடல், பொருள் ஆவி அத்தனையையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.


இரண்டாவது கட்டளையின் விஷயத்திலும் நாம் நமது அயலானைத் தன்னலமின்றி நேசிக்க வேண்டும் . 

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13) 

நமது பிறரன்பு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை இயேசு இவ்வார்த்தைகள் மூலம் சுட்டிக் காண்பிக்கின்றார்.

  தனது மரணத்தின் மூலம் அதற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார்.

ஏழைகளுக்காக தன் உடல், பொருள், உழைப்பு அத்தனையையும் அர்ப்பணித்த புனித கல்கத்தா தெரேசாவை இப்போது நினைவில் கொள்வோம்.

தன்னலமற்ற அன்பு இறைவன் நமக்குத் தந்த அன்பு பரிசு.

அதை அவரது விருப்பப்படியே பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment