Wednesday, December 30, 2020

புத்தாண்டே வருக!

http://lrdselvam.blogspot.com/2020/12/blog-post_50.html

          புத்தாண்டே வருக!

புத்தாண்டே! நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது தொியாமல்,

வேறு வழி இல்லாமல் வரவேற்கிறோம்.

சென்ற ஆண்டை ஆசை ஆசையாய் கற்பனைகள் பலவோடு வரவேற்றோம்.

அது எங்களது கற்பனைகளை எல்லாம் வெறும் கற்பனைகளாகவே விட்டு விட்டு

கொரோனா அரக்கியோடு கோரத்தாண்டவம் ஆடிவிட்டு,

போகிற போக்கில், 
  
"என்னோடு ஆடிய கொரோனா புது வடிவம் பெற்று 21 உடனும் ஆட தயாராக இருக்கிறது என்று சொல்லி
 உலகத்தை பயங்காட்டி விட்டு போயிருக்கிறது.

ஆனால், நாங்கள் "உன்னிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை என்றும். உன்னைப் பார்த்துப் பயப்பட போவதில்லை என்றும்." நேற்றே தீர்மானித்து விட்டோம்.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எங்களுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்த்து,

 "சார் பொதுத்தேர்வுக்கு எதிர்பார்க்கக்கூடிய முக்கியமாக கேள்விகளை சொல்லுங்க,"

 என்று கேட்டோம்.

 ஆனால் அவர் ஒரே மூச்சில் சொன்னார்,

 "எதிர்பாராதவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஏமாற மாட்டார்கள்."
என்று.

 அது இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

சென்ற ஆண்டு நிறைய எதிர்பார்த்ததால் ஏமாற்றம் அடைந்தாலும்,

 அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம்.

 உன்னிடமிருந்து எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, ஏமாறப் போவதுமில்லை.

சென்ற ஆண்டு நாங்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டோம்.

நாங்கள் பயன்படுத்த வேண்டியவற்றை எங்களைப் பயன்படுத்த அனுமதித்து 
விட்டோம்.

பணத்தைப் பயன்படுத்த வேண்டியவன் பணத்துக்கு அடிமையாகிவிட்டால் அதனாலே அழிவான்
.

உணவைச் சாப்பிட பயன்படுத்த வேண்டியவன் அதன் ருசிக்கு அடிமையாகி விட்டால் அவன் ருசித்த உணவாலேயே அழிவான்.

அதிகாரத்தை நிர்வாகத்திற்கு பயன்பட வேண்டியவன் அதிகாரப் போதைக்கு அடிமை ஆகி விட்டால் அதனாலேயே அழிவான்.

இதெல்லாம் தெரிந்திருந்தும்

 நேரத்தை அதைத்
தந்தவருக்காகப் பயன்படுத்தாமல்

அது தன்னை குஷிப் படுத்த  

எங்களைத் தவறாக பயன்படுத்த அனுமதித்து விட்டோம்.

பலன்? பத்து மாதங்கள் கொரோரைவோடு போராட்டம்.

நாங்கள் வாழ்வதற்காக நேரத்தை தந்த இறைவன் சர்வ வல்லவர் மட்டுமல்ல, அளவற்ற அன்பு உள்ளவர்.

 அவர் எது செய்தாலும் அவரது படைப்புகளின் நன்மைக்காகத்தான் செய்வார் என்பதை சென்ற ஆண்டில் உணர மறந்தோம்.

 கொரோனா நிச்சயமாக அவருடைய அனுமதியின்றி உலகத்திற்குள் நுழைந்திருக்க முடியாது.

 அவர் அதற்கு அனுமதி அளித்ததற்கு தகுந்த காரணம் இருக்கும்.

  பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் படிக்காத மாணவர்களை கண்டிக்கும் போது

 மாணவர்கள் ஆசிரியரைப் பற்றி தங்களது பெற்றோரிடம் குறை சொல்வது வழக்கம்.

 பெற்றோரும் எதற்காக தங்களது பிள்ளைகளை ஆசிரியர் கண்டிக்கிறார் என்பதை கண்டு அறியாமல்

 ஆசிரியரிடம் வந்து,

" சார், நீங்கள் எங்கள் பிள்ளைகளை அடிக்கிறீர்கள், பெஞ்சின்மேல் ஏற்றி விடுகிறீர்கள், முழங்காலில் நிறுத்துகிறீர்கள்.

 இதையெல்லாம் செய்யாமல் அவர்களுக்கு பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்"

 என்று ஆசிரியருக்கு புத்திமதி சொல்ல வந்து விடுவார்கள்.

நாங்களும் இதைத்தான் இறைவனிடம் செய்தோம்.

கொரோனா எதற்காக வந்தது என்பதை கண்டு உணராமல், அதைப்பற்றி கவலையும் படாமல்,

" இறைவா, தயவு செய்து கொரோனாவிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்."  

என்று மட்டும் அவரிடம் வேண்டினோம்.

நாங்கள் திருந்த வேண்டும் என்பதற்காக அவர் ஏதாவது செய்தால் நாங்கள் திருந்துவதற்குப் பதிலாக அவரிடம்

"ஆண்டவரே எங்களை காப்பாற்றுங்கள்"

என்று கேட்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தோம். 

இப்போது அதை உணர்கிறோம்.

உலகத்தை திருத்துவதற்காக அனுப்பப்பட்ட கொரோவினால் அதை திருத்த முடியவில்லை.

ஆகவே அது தனது சக்தியை அதிகமாக்கி கொண்டு இந்த ஆண்டும் வரப்போகிறது என்று எண்ணுகிறோம்.

ஆகவே நாங்கள் திருந்துவது என்று தீர்மானித்து விட்டோம்.

அது மட்டுமல்ல. துன்பங்களை எப்படி இன்பமாக மாற்றுவது என்று இறைமகன் இயேசு எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

அதையும் மறந்து விட்டோம். இப்பொழுது ஞாபகத்திற்கு வந்து விட்டது.

எங்களுக்கு வரும் துன்பங்களை அப்படியே இயேசுவுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விட்டால் 

அவர் அவற்றிற்கு சன்மானமாக விண்ணகத்தில் எங்களுக்கு பேரின்பத்தை சேர்த்து வைத்திருப்பார்.

எவ்வளவுக்கு எவ்வளவு துன்பத்தை அவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு எங்களுக்காக விண்ணகத்தில் பேரின்பம் காத்துக் கொண்டிருக்கும்.

இனி கொரோனாவைக் கண்டு அஞ்சமாட்டோம்.

அது வந்தால் அதை அப்படியே இறைவனுக்குக் காணிக்கையாகக் கொடுத்து விடுவோம்.

2020 அதை வைத்து ஆட்டம் போட்டது போல் உன்னால் ஆட்டம் போட முடியாது.

சென்ற ஆண்டில் உலக செளகரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டோம்.

 உடம்பை காப்பாற்றும் முயற்சியில் ஆன்மாவை மறந்துவிட்டோம்.

உனது காலத்தில் உடம்பிற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட அதிகமான முக்கியத்துவத்தை ஆன்மாவிற்கு கொடுப்போம்.

உடம்பை காப்பாற்றுவதை விட ஆன்மாவை காப்பாற்றுவது மட்டும்தான் இனி எங்களது பணியாக இருக்கும்.

இனி உடம்பிற்கு வரும் வியாதி வருத்தங்களை ஆன்மாவை பிடித்திருக்கும் பாவங்களுக்குப் பரிகார மருந்தாக பயன்படுத்துவோம்.  

உன்னையும் ஆண்டவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்த தீர்மானித்து விட்டோம்.

எங்களை ஆளும் அரசுகளைப் பற்றிதான் கவலையாக இருக்கிறது.

கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 

அரசுகள் ஒன்றோடொன்று போரிட்டதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

இதை அரசுகள் உணர வேண்டும்.

அழிவுக்கு பயன்படுத்தும் விஞ்ஞான அறிவை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சமாதானத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசுகள் திருந்தி விட்டதைப் பார்த்து கொரோனா வேலை இல்லாமல் ஓடிவிடும். 

எங்களுக்கு வரும் துன்பங்களை அரசுகள் திருந்த இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க தீர்மானித்திருக்கிறோம்.

புத்தாண்டே உன்னை 
இறைவனுக்காக மட்டும் பயன்படுத்தப் போவதால் நீயும் சுத்தம் அடைவாய்.

நீ எங்களிடம் இருந்து விடைபெறும்போது பரிசுத்தமான உள்ளத்தோடு உனக்கு விடை கொடுப்போம்.

ஏமாற்றங்களோடு அல்ல,

 இறை அன்பில் வளர வேண்டும் என்ற ஒரே உறுதியான தீர்மானத்தோடு உன்னை மனமாற வரவேற்கிறோம்.

ஹலோ 2021,

வருக.

வந்து எங்களது வளர்ச்சியை கண்டு மகிழ்க.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment