Wednesday, December 16, 2020

"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" (லூக்.7:43)

http://lrdselvam.blogspot.com/2020/12/743.html


"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" 
(லூக்.7:43)


வாழ்நாள் முமுவதும் நல்லவனாய் வாழ்ந்த ஒருவன் மரித்தவுடன், உத்தரிக்க ஸ்தலம் வழியாக விண்ணகம் சென்றான்.

சாவியும் கையுமாய் உட்கார்ந்திருந்த இராயப்பரைத்தான் முதலில் பார்த்தான்.

அவருக்கு ஒரு Good morning salute போட்டு விட்டு, வாசல் பக்கம் போனவன் வேகமாக இராயப்பரிடமே திரும்பி வந்தான்.

"என்ன உள்ளே போகலியா?"

"நான் போவது இருக்கட்டும். அதோ வாசல் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் அந்த பெண் யார்?"

"ஹலோ! இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. இப்போ மோட்சத்திற்கு தான் பிரச்சனை."

"என்ன ஆச்சு உங்களுக்கு? நீங்கள் நின்று கொண்டிருப்பது மோட்சத்தில்தான். உங்களுக்கு எதுவும் ஆகிவிடவில்லையே!"

."எனக்கு எதுவும் ஆகாது.
 ஆனால் மற்றவர்களுக்கு?"

"யாருக்கும் எதுவும் ஆகாது பேசாமல் உள்ளே போங்கள்."

"அந்தப் பெண் யார் என்று தெரிந்தால் அவளை உள்ளே விட்டிருக்க மாட்டீர்கள். 

 அவள் எங்கள் ஊரிலேயே மிகப்பெரிய விபச்சாரி. வாழ்நாள் முழுவதும் விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்தியவள்.

ஊர் முழுவதுக்கும் அவளைப்பற்றி தெரியும். உங்களுக்கு எப்படி தெரியாமல் போயிற்று?"

"ஹலோ! யார் மோட்சத்திற்கு வரவேண்டும் என்று தீர்மானிப்பது நான் அல்ல, கடவுள் மட்டும் தான்."

"கடவுள் சர்வ ஞானம் உள்ளவர் ஆயிற்றே! இவளை எப்படி மோட்சத்திற்குள் அனுமதித்தார்?"

"இங்கேயே இப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டு நின்றால் எப்படி?

உள்ளே போய்ப் பாருங்கள், இவளைப் போல் ஒரு பெரிய கூட்டமே இருக்கு.

விவசாரிகள், திருடர்கள்| கொள்ளையர்கள், கொலைகள் செய்தவர்கள், இப்படி பெரிய பெரிய பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்கள்.

உள்ளே அகுஸ்தினார் என்ற பெயரில் ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார்.

 அவரிடம் போய் கேளுங்கள்,

' நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்' என்று.

 அவரது வாழ்நாளிலே பெரிய பாவியாய் வாழ்ந்தவர் அவர்தான்.

மற்றவர்களை விடுங்கள், என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.

 மூன்று ஆண்டுகள் ஆண்டவர் கூடவே அவர் சென்ற இடமெல்லாம் சென்றுவிட்டு,

அவரது நற்செய்தியை கேட்டுவிட்டு,

அவரே இறை மகன் என்று மற்றவர்கள் முன் அறிக்கை செய்து விட்டு,

 

கடைசியில் இயேசுவைக் கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது

 ஒரு சாதாரண ஊழியக்காரியிடம்

"எனக்கு அவரைத் தெரியவே தெரியாது" 

என்று மூன்று முறை சத்தியம் செய்தவன் நான்.

இதைவிட பெரிய பாவம் யாரும் செய்திருக்க முடியாது.

என்னையே நம் ஆண்டவர் மன்னித்து,
 அவரது திருச்சபைக்கு தலைவராக ஆக்கினார்.

எவ்வளவு பெரிய பாவத்தையும் எத்தனை முறைகள் செய்திருந்தாலும் ஒரே வினாடியில் மன்னிக்கக் கூடியவர் நம் ஆண்டவர்.

"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"

என்று இயேசு யாருக்காக தன் தந்தையிடம் ஜெபித்தார்?"

"தன் பாடுகளுக்கும் மரணத்திற்கும் காரணமாய் இருந்தவர்களுக்காகத்தான்." 

"தந்தை மகனின் சொற்களுக்கு செவிசாய்த்திருப்பாரா, மாட்டாரா?"


"கட்டாயம் செவிசாய்த்திருப்பார்.

 அதுவும் தனது ஆசை மகனின் உலக வாழ்வில் இறுதி ஆசையை அவர் நிறைவேற்றாமல் இருந்திருப்பாரா!

 கட்டாயம் நிறைவேற்றி இருப்பார்"

"உள்ளே போய் பாருங்கள் எல்லோரும் உள்ளே தான் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

ஒருநாள் ஆண்டவரிடம் கேட்டேன்,

" ஆண்டவரே உம்மைக் கொன்றவர்களை மோட்சத்திற்குள் எப்படி விட்டீர்கள்?"

 அதற்கு அவர் சொன்னார்,

 "உங்களது மீட்பிற்கு அவர்களும் உதவியாய் இருந்திருக்கிறார்கள். 

அவர்கள் என்னை கொன்றிருக்காவிட்டால் நான் எப்படி உங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்திருக்க முடியும்?

 அவர்களுக்கும் சேர்த்து தான் பரிகாரம் செய்தேன்."

ஒருமுறை பத்து குருக்களை கொலை செய்து விண்ணகத்திற்கு அனுப்பிய ஒரு கயவன் 

மனம் திரும்பியவுடன் அவனுக்காக விண்ணுலகில் ஒரு பெரிய விழா எடுத்தார்கள் .
தெரியுமா?

 அந்த விழாவில் அவனால் கொல்லப்பட்ட பத்து குருக்களும். மிகவும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள்!

இப்போது உள்ளே போய் பார். அவனும் அந்த பத்து பேரோடு தான் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறான்!"

"மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

அது எப்படி இயேசுவால் மட்டும் இப்படி நடந்து கொள்ள முடிகிறது?"

"ஏனெனில் அவர் வற்றாத அன்பின் ஊற்று.

ஒரு முறைபரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். :

அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார்.

நாங்களும் அவருடன்தான் இருந்தோம்.


அப்போது அந்நகரிலே இருந்த பாவி ஒருத்தி பரிசேயனுடைய வீட்டில் அவர் உணவருந்தப் போகிறார் என்று அறிந்து அங்கு வந்தாள்,

 பரிமளத்தைலம் நிறைந்த படிகச்சிமிழ் ஒன்றை எடுத்து வந்தாள்.

அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து,

 அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து 

அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு

 அப்பாதங்களில் தைலம் பூசினாள்.

இயேசுவின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பவர்கள் பரிசேயர்கள்.

விருந்துக்கு அழைத்த பரிசேயன்

" இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். 

இவளோ பாவி" 

என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

ஆனால் ஆண்டவர் ஒரு உவமை மூலம்

யார் அதிகமாக அன்பு செய்கிறார்களோ அவர்களுக்கு அதிகமான பாவங்கள் மன்னிக்கப்படும் என்று விளக்கி விட்டு அந்த பெண்ணை நோக்கி 

" உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார். 

அந்தப் பாவி மாதாவிற்கு அருகில் அமர்ந்துகொண்டு கடவுளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்."

"வாழ்நாள் முழுவதும் பாவிகளாக வாழ்ந்துவிட்டு
கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி பாவமன்னிப்பு பெறுபவர்கள் அன்பு செய்ய நேரம் எங்கே இருக்கிறது?

உதாரணத்திற்கு, நல்ல கள்ளன் மனம் திரும்பியவுடன் இயேசு அவனை நோக்கி.

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

இயேசு மரித்த அன்றே அவனும் இறந்து விட்டான்.

அவன் அன்பு செய்து வாழ எங்கே நேரம் இருந்தது?''

"அன்பின் வல்லமை தெரியாமல் நீ பேசுகிறாய். 

ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் போதும், அன்பு செய்யவும் மன்னிப்பு பெறவும்.

 வாழ்நாளெல்லாம் பாவியாக வாழ்ந்த ஒருவன் தற்கொலை செய்வதற்காக கிணற்றுக்கு போகிறான்.

 தற்கொலையும் பாவம்தான்.

உள்ளே குதித்து விட்டான். குதித்த பிற்பாடுதான் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்ற எண்ணமே மனதில் உதிக்கிறது.

எண்ணத்தை உடனே செயல்படுத்துகிறான்.

விழுந்து கொண்டிருக்கும் போதே அன்பும் மனஸ்தாபமும் ஒருசேர வருகிறது.

அந்த வினாடியில் அவனது வாழ்நாள் செய்த அத்தனை பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. 

A fraction of a second is enough to repent and to be forgiven.

அவனது உடல் கிணற்றுக்குள் விழும் அதே வினாடியில் ஆன்மா விண்ணகத்திற்கு பறந்து விடுகிறது.

  ஒரு வினாடி அன்பு போதும் ஒருகோடி பாவங்களுக்கு மன்னிப்பு பெற."

"அப்போ விண்ணகம் கூட பாவிகளின் கூடாரம்தானோ?"

"மன்னிக்கப்பட்ட பாவிகளின் கூடாரம், அதாவது பரிசுத்தர்களின் கூடாரம்.

யாரை அதிகமாக அன்பு செய்கிறோமோ அவர்களுடைய மனது நோகும் படி ஒருபோதும் நடக்க மாட்டோம்.

 அப்படி நடக்க நேரிட்டால் அதற்காக மனம் வருந்தி அவர்களிடம் மன்னிப்பு கேட்போம்.

 நாம் அன்பு செய்பவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக எந்த தியாகமும் செய்ய தயங்க மாட்டோம்.

உலக வாழ்க்கையில் உள்ள இந்த நடைமுறை ஆன்மீக வாழ்க்கைக்கும் பொருந்தும்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனை அன்பு செய்கிறோமோ 

அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனோடு நமது உறவு நெருக்கமாக இருக்கும்.

இறைவன் மாறாதவர். நம் மீது அவர் கொண்டுள்ள அன்பு எந்த சூழ்நிலையிலும் குறையாது.
 
அவர் மீது நமக்குள்ள அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு."

"ஹலோ! இராயப்பரே,நாம ரெண்டு பேருமே மோட்சத்லதான் இருக்கோம்

 இனிமேல் எதையும் அதிகரிக்கவும் முடியாது, குறைக்கவும் முடியாது."


"ஆமால்ல! சரி, நீங்க முதல்ல உள்ள போங்க.
 அப்பபுறமா பேசிக்கொள்வோம்." 

"நேர நல்ல கள்ளங்கிட்ட போகப்போகிறேன்."

"போய்?"

"இது வந்து சொல்கிறேன். ......
ஹலோ! நல்ல கள்ளன்!" 


(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment