Tuesday, December 29, 2020

பழையன கழியட்டும்.

பழையன கழியட்டும்.


"ஹலோ! நண்பா! ஆழ்ந்த சிந்தனையில இருப்பது போல் தெரிகிறது."

"ஆமா. வெறும் ஆழ்ந்த அல்ல. மிகவும் ஆழ்ந்த.

 இவ்வளவு ஆழத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை. கொஞ்சம் தூக்கிவிடேன்."

"கொஞ்சம் என்ன, முழுவதுமே தூக்கிவிடுகிறேன். 

முதலில் நானும் உள்ளே வந்து விடுகிறேன். இப்போ சொல்லு."

"என்னுடைய அறையைக் கொஞ்சம் பார். எப்படி இருக்கிறது."

"எந்த அறை?"

"நான் வசிக்கும் அறை."

"உனது வாழ்க்கைக்குத் தேவை இல்லாத பொருட்களால் அதை நிரப்பி வைத்திருக்கிறாய்."


"ஆமா. எங்கு சென்றாலும் விநோதப் பிரியத்தால்

 'இது புதிதாகத் தெரிகிறது, பயன்படும்' 
'
என்று எண்ணி பயன்படாத பெருட்களை எல்லாம் வாங்கி வந்து அறையை நிரப்பி வைத்திருக்கிறேன்."  


"இப்போ உண்மையிலேயே பயன்படக்கூடிய பொருட்களை வாங்கி வந்திருக்கிறாய். அவற்றை எங்கே வைப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாய். அப்படித்தானே?"

"அப்படியேதான். ஏதாவது ஒரு வழி சொல்லேன்."

"ஏதாவது அல்ல. அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மனதை கல்லாக்கிக் கொண்டு பயன்படாத பெருட்களை எல்லாம் அப்புறப் படுத்து.

அப்புறம் அறையை விளக்கு மாற்றால் சுத்தப்படுத்து.

அப்புறம் பயன்படக்கூடிய பொருட்களை மட்டும் உள்ளே எடுத்து வந்து, அழகுற வைக்க வேண்டிய இடத்தில் வை.

அப்புறம் விநோதப் பிரியத்துக்காக வேண்டாதவற்றை வாங்குகிற பழக்கத்தைக் கைவிடு. அவ்வளவுதான்."

"இது எனக்குத் தெரியாதாக்கும். இப்போ பிரச்சனையே இருக்கிற பொருட்களை அப்புறப் படுத்த மனமில்லாததுதான்."

"இதைத்தான் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பார்கள்.

மீசையில் படாமல் கூழ் குடிக்க வேண்டுமென்றால் ஒன்று மீசையை அப்புறப் படுத்த வேண்டும். அல்லது கூழ் குடிக்கக் கூடாது.

இரண்டுமே வேண்டுமென்றால் அது முடியாத காரியம்"

"சரி. நண்பன் சொல்லி விட்டாய், முதலில் பழைய பொருட்களை அப்புறப் படுத்து கின்றேன். சரி வெளியே வா."

"பொறு. இங்கே உள்ளே ஒரு அறை இருக்கிறது, உனது மன அறை. இப்போ அங்கேதான் நின்று கொண்டிருக்கிறேன்.

அறை awkward ஆ இருக்கு. வேண்டாத குப்பைகளால் நிறைந்திருக்கிறது. 

குப்பைகளை அப்புறப்படுத்தாவிட்டால் நல்ல எண்ணங்கள் எப்படி வரும்?"

"அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். உன்னை உள்ளே விட்டதே தப்பு.

நண்பன் என்ற முறையில் உள்ளே விட்டால்...."

"என்ன சொன்னாய்?

 நண்பன் என்ற முறையில்தானே உள்ளே விட்டாய்.  

இனித்தாலும், கசந்தாலும் உண்மையைச் சொல்வபன் தான் உண்மையான நண்பன்.

சால்றா போடுபவன் துரோகி"

"இப்போ என்ன சொல்ல வருகிறாய்?"

"உள்ளும் புறமும் சுத்தமாக இருப்பவன்தான் நேர்மையாளன்.

உள்ளுக்குள் ஆயிரம் குப்பைகளை வைத்துக் கொண்டு நல்லவன் போல் நடிப்பவன் நம்பிக்கைத் துரோகி.

முதலில் உனது மனதைச் சுத்தப் படுத்து. அறையை எப்படிச் சுத்தப்படுத்துவது என்று தானாகவே தெரியும்.

இதோ வெளியே வந்துவிட்டேன். வரட்டுமா?"

"கொஞ்சம் பொறு. கோபமா?"

"உண்மையான நண்பன் உண்மையை மட்டும்தான் சொல்வான். நான் உனது உண்மையான நண்பன்.

இன்றோடு பழைய ஆண்டு முடியப் போகிறது.

நாளை புதிய ஆண்டு பிறக்கப் போகிறது.

முதலில் நம்மிடம் இருக்கும் தேவை இல்லாத, அசுத்தமான எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் விட்டுவிட்டு 

நாம் புதிய மனிதனாய் மாற வேண்டும்.

அப்புறம் புதிய மனிதனாய் புத்தாண்டை வரவேற்க வேண்டும்.

நாம் மாறாவிட்டால் ஆண்டும் மாறாது."

"நாம் மாறாவிட்டாலும் ஆண்டு மாறிவிடும், தெரியுமா?"

"பெயர் மாறுவதுதான் மாற்றமா?

கழுதைக்குக் குதிரை என்று பெயர் வைத்து விட்டால் அது குதிரை ஆகிவிடுமா?"

"சரி, நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

முதலில் நான் மாறுகிறேன் அப்புறம் என் அறையை மாற்றுகிறேன்."

"Very good. We cannot change the world unless we change ourselves first.

நாம் எல்லோருமே உலகத்தை மாற்ற ஆசைப்படுகிறோம்,

 ஆனால் நாம் மாற மறுக்கிறோம்.

உயிரே இல்லாத கொரோனா கூட, "நான் மாறிவிட்டேன்'' என்கிறது!"

"உண்மையில் எல்லோரும் மாறிக்கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் சிலர் வளர்ச்சியை நோக்கி மாறுகிறார்கள்.

சிலர் தளர்ச்சியை நோக்கி மாறுகிறார்கள்.

All are changing. Some for the better, some for the worse."

"இறைவன் மட்டுமே மாறாதவர்.

ஏனெனில் அவர் நிறைவானவர்.

நாம் குறைவானவர்கள். நிறைவை நோக்கி மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தளர்ச்சி ஏற்படுமானால் அதற்கு உரிய காரணத்தை ஆய்ந்து அறிந்து திருத்த வேண்டும்.

அதற்காகத்தான் ஒவ்வொருநாளும் படுக்கப் போவதற்கு முன்னால் சுயபரிசோதனை செய்கிறோம்.

இறை வார்த்தையின் அடிப்படையில் சிந்தித்து, தியானித்து செயல் படுபவர்கள்தான் ஆன்மீகத்தில் வளர முடியும்.

மனம் போனபோக்கில் செயல்பட்டால் வளர முடியாது.

ஆகவே இவ்வாண்டு முடியுமுன்னாலேயே,

சிந்தித்து, இந்த ஆண்டில் நாம் செய்த தவறுகளை திருத்தி,

 வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தோடு

  புத்தாண்டில் கால் எடுத்து வைப்போம்.

பழைய மனிதனை கழைந்து, புதிய மனிதனாக புத்தாண்டை ஆரம்பிப்போம்.

 வளர்வோம்,

 வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment